சனி, 29 செப்டம்பர், 2012

ஆலயத்தின் அவசியமும் அர்த்தமில்லா வழிமுறையும் (கட்டுரை)

ந்தக் காலத்தில்  நோயாளிகளுக்கு வைத்தியமனைகள் போல கெட்ட மனிதர்களுக்குத்தான்; பெரும்பாலும் கோவில்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன போல் தெரிகின்றது.

ஆலயத்துக்குப் போகும் நல்ல மனிதர்களுக்கு வரும் துன்பங்களும் துயரங்களும் குறைந்தபாடில்லை. ஆனால் அவை நம்மைப் புடம்போடக் கடவுள்தரும் சோதனைகள்தான் என்று சொல்லிக்கொண்டு  அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள். மனதை ஆற வைத்துக் கொள்கிறார்கள்.

இந்த ஆலயங்கள் கெட்டவர்களுக்கு எப்படிச் சாதகமாக இருக்கின்றன என்று தேடிக் கவனித்தால்….

இருட்டடிப்புகளுக்கெல்லாம் ஏற்ற  சாதகமான இடங்களாகவே ஆலயங்களை அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றார்கள் என்பது நமக்குப் புரியும்.

பாவிகள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரமும் அப்பாவிகள் தங்களின் துன்ப துயரங்களுக்கு ஆறுதலும் தேடிப் போகின்ற அந்த இடத்தை  படுபாவிகளே பெரும்பாலும் நிரப்பிக் கொண்டு  வெளித் தோற்றத்துக்கு பக்தி என்கின்;ற கம்பளத்தைப் போர்த்திக் கொண்டு  பக்குவமாக அதற்குள்ளிருந்து கொண்டு செய்கின்ற அட்டகாசங்கள் பலவும் அளவுக்கு மீறிய விதமாகவே எங்கணும் நடந்து கொண்டிருக்கின்றன.

அர்த்தமே இல்லாமல் அது பற்றிய அக்கறையும் இல்லாமல் வெறும் பழகிப்போய்விட்ட சம்பிரதாயங்களுக்காகத் தாங்கள் சார்ந்திருக்கும் மத ஆலயங்களுக்குப்  போய்வரும் அப்பாவி மக்கள்தான் பெரும்பாலும் எல்லா மதங்களிலும் பரவலாக பெரும்பான்மையினராக இருக்கின்றார்கள்.

இவர்களிடம் பக்தியும் கிடையாது நம்பிக்கையும் கிடையாது. ஏதாவது தமக்குப் பாதகமாக நடந்துவிட்டால் மட்டும் ஆண்டவனை நினைப்பதும் எதையாவது செய்து அதற்கு நிவர்த்தி தேடிக் கொள்வதற்கு முயல்வதும் திருநாட்கள் பெருநாட்கள் என்று வந்துவிட்டால் சம்பிரதாயத்துக்காக அவற்றை அனுசரித்து நடந்து கொள்வதும் மற்றப்படி ஆண்டவனை வெறும் ஆகாயத்தில் வசிக்கின்ற ஓர் ஆகாயவாதியாக நம்பிக் கொண்டு அவ்வப்போது வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொள்வதுடன் அவனை மறந்துவிட்டு தத்தமது சுய வேலைகளைப் பார்த்துக் கொள்வதுமாகவும் மட்டுமே இருப்பவர்கள் இவர்கள்.

ஆபத்தேதுமே இல்லாத இந்த அப்பாவிகளின் பக்தி மீதான அலட்சியமானது எவ்விதமாக பொருள் சுருட்டிகளுக்கு மதத்தைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பேற்படுத்திக் கொடுத்து விடுகின்றது என்பதை அவர்கள் கவனத்தில் எடுக்காத வரைக்கும் கடவுள் பக்திக்கும் கள்ளர் பரம்பரைக்கும் இருக்கின்ற இணைப்பின் முடிச்சை யாராலுமே அவிழ்த்துவிட முடியாது என்பதுதான் உண்மை.

ஆண்டவனை வைத்துப் பிழைப்பவர்கள் இவர்களை முதலீடாக வைத்தே முன்னேறுகின்றார்கள். இவர்களின் பலவீனத்தை அவர்கள் மிகவும் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பதால் ஆண்டவனை விடவும் இவர்களுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

இதனால்தான் கோவில் பூனை தேவனுக்கு அஞ்சாது என்று சொல்லியிருக்கின்றார்கள் போலும்.

ஆலயத்துக்குப் போவது தவறென்று சொல்வதல்ல இதன் நோக்கம். ஆலயத்தை என்ன நோக்கத்துக்காக வைத்து நடத்துகின்றார்கள் என்பது எந்தளவுக்கு உண்மையாக மக்களுக்குப் புலப்படுத்தப்படுகின்றது என்பது கவனித்தற்பாலது என்பதை அழுத்திச் சொல்வதே இக்கருத்தின் நோக்கம்.

கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்பும் மனிதர்களின் பக்தியுணர்வையும் இதய சுத்தியான அப்பாவித்தனத்தையும்  நன்கு கற்று  வழி அறிந்த துறவறக் கள்வர்கள் எத்துணை துச்சமாக நினைத்து அவமதித்துத் தங்களின் சுயநல திருப்திக்காக அந்த மக்களைப் பிழையாக வழிநடத்திக் கொண்டு வருகின்றார்கள் என்பதைப் பொதுமக்கள் முன் எடுத்து வைத்து  அவர்களை விழிப்பூட்டி வைப்பதுவும் கூட தற்காலத்தில் மிகப் பெரிய கடமைதான். பொதுப்பணிதான். சமுதாய சேவைதான்.

நாத்திகர்கள் என்று கணிக்கப்படுபவர்கள் இந்த ஆத்திகர்களின் அந்தகார அத்திவாரங்கள் அம்பலப்படுத்தப்படும் போது ஆண்டவனை நினைப்பதுவும் கூட பிழைதான் என வாதிட்டால்? அது பிழையா? சரிதானே!

இப்படிச் சொல்வது கசக்கிறதல்லவா? ஆம!; பச்சையான உண்மைகள் அப்படித்தான் இருக்கும்.

எப்போதோ நடந்தேறிய புதுமைகளாகப் புனைந்து விடப்பட்ட கதைகளை நம்பிக் கொண்டு  எதையோ எதிர்பார்த்துக் கொண்டு தேடி அலையும் அப்பாவிகளால் பொய்யர்களுக்குச் சாதகமான பொருளீட்டும் வழிதான் திறந்துவிடப்பட்டிருக்கின்றதே தவிர  ஆணித்தரமாக நிமிர்ந்து சொல்லத்தக்கதாகஇ எதுவுமே உண்மையாக இருப்பதாகத் தெரியாமல் இருக்கின்றதே! இது கவலை தர வேண்டிய விடயமல்லவா?

இக் கயவர்களால் அது நடக்கிறது; இது நடக்கிறது என்று புதுமைகள் நடப்பதாகப் பரப்பப்படுகின்ற கதைகள் பலவும் கூட  கடலலையோரம் நடப்பட்ட வெறும் தடிக் கொடிமரங்களைப்போல  அத்திவாரம் இல்லாதவையாகவே அவ்வப்போது ஆடிக் கழன்று விழுந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் அவர்கள் அஞ்சாமல் சளைக்காமல் தங்களின் தகிடுதத்தங்களைத் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள்.

மிகப் பெரிய புண்ணியத் தலங்களிலும் கூட  பக்தர்களின் உண்மையான பக்திக்கு உரிய மதிப்பு இல்லை.

ஏதோ அங்குள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் சொல்லுமாப்போலத்தான் கடவுளே நடந்து கொள்வார் போலும் என்ற மாயையே செயற்கையாகவும் பலமாகவும் பிரச்சாரங்களாகப் பிரதிபலிக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எந்த பக்தனும் “இதயத்தால் மட்டுமே இறைவனை நெருங்குவேன்; பணத்தால் அவனை வாங்க முயலவே மாட்டேன்; அதற்கு என்னால் ஒப்புக் கொள்ள முடியாது” என்று உணர்ந்து  துணிந்து சொல்லும் காட்சியைக் காணவே முடிவதில்லை.

அந்தளவுக்குப் பிஞ்சு வயதிலிருந்தே மனிதனின் மனதுக்குள் கடவுள் பற்றி ஒருவிதமான அர்த்தமற்ற பயவுணர்வை ஊட்டி  ஊட்டி வளர்த்து விட்டிருக்கின்றார்கள். மதிப்பையும் மரியாதையையும் பாசத்தையும் நம்பிக்கையையும் வைக்க வேண்டிய இடத்தில் மனப்பயத்தையல்லவா வைத்துப் பதித்து நம்மையெல்லாம் மனக்கோழையராய் வளர்த்து விட்டிருக்கிறார்கள்?

ஆலயத்தை வைத்து ஆண்டவன் பெயரில் பிழைப்பு நடத்தும் கைதேர்ந்த மதவாதிகள் பலரும் இந்த பலவீனத்தில்தானே தமது கூடுகளை பலமாகக் கட்டிக் குடியிருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்திப்பதும்
கண்டிப்பதும் பாவமென்றால்... அது நாத்திகமென்றால்…அது எப்படிச் சரியானதாகும்?

ஆண்டவனுக்கு பூசை செய்பவனை பக்தர்கள்தான் காக்க வேண்டும். அது கடமையும்கூட. ஆனால்....

அது பக்தனின் மனதால் எழுந்து  கரத்தால் செயல்பட்டு  பூசை செய்பவனை அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லச் செய்ய வேண்டும்.

அப்படி பக்தனின் மனம் ஏற்றுச் செய்யும் கடமையாக இருந்தால்தான் அதில் உண்மை பக்தியின் வெளிப்பாடு பதிவாகி இருக்கும்.

மாறாக  எடுத்ததற்கெல்லாம் பணம் வழங்கி  ஆண்டவனைச் சரிக்கட்டும் கலையை நம்பி நின்றால்  ஆண்டவன் பேரால் அக்கிரமக்காரர்களையே வளர்த்துவிடுவோம் என்பதைப் படித்தவர்களும் கூட உணர்வதாகத் தெரியவில்லையே!

பணம் பத்தும் செய்யும் என்ற கருத்தானது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது. அதுவே கடவுளுக்கும் பொருந்துமென்றால் கடவுள் கப்பம் வாங்கிப் பணி புரிகிற  வெறும் மாமூல் தேடியலையும் மனிதனை விடவும் கீழாகி விடுவாரே! அது சாத்தியப்படத்தக்க  ஏற்கப்படத்தக்க உண்மைதானா?

ஆலயம் மனிதனுக்கு அவசியம். மிகவும் அவசியம். இதயத்துக் கவலைகளைக் களைந்து விடுவதற்கு அதுவே ஏற்ற இடம். அதைச் சரியாக உணர்ந்த மக்களாக நாம் வழிபடுவதில் தெளிவு கொண்டிருக்க வேண்டும்.

தெய்வத்துக்குப் பணத்தைக் கொட்டி வழிபட மறுத்து  மனதைக் கொட்டி வழிபட்டு  நமது பக்தியை உறுதி செய்யத் தீர்மானமாகத் தொடங்க வேண்டும்.

இதயத்தில் இருக்க வேண்டிய ஆண்டவனை அவ்வப்போது இரக்கமின்மைக்கு இடம் கொடுப்பதாலும் சுயநலத்துக்கு இடம் கொடுப்பதாலும் மனிதாபிமானத்தை மறுப்பதாலும் வெளியேற்றிவிடும் மனித பலவீனத்துக்கு ஆலயங்களே நல்ல மருத்துவமனைகள் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால்…மனங்களை மட்டுமே ஒப்புக் கொடுக்க முன்வரும் மக்கள்தான் அவற்றிற்குள் நிறைய வேண்டும். அதனைத்தான் ஆலயங்களில் செயலாக்க வேண்டும். அதற்கு பக்தனை விடவும் பக்த வழிகாட்டிகளுக்கு அறிவு அதிகமாகவும் நேர்மை நிறைவாகவும் இருக்க வேண்டும்.

இது நடக்கிற காரியமா என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் ஏன் அப்படி நடக்க வேண்டியவைகளை நடக்க முடியாதவைகளாக நினைக்கின்றோம் நாம்? நாம் ஊறி வளர்ந்திருக்கின்ற அஞ்ஞான பக்திதானே இந்நிலைக்குக் காரணம்? இப்படிக் கேட்டால் அது நாத்திகமா?

இறைவன் விரும்புவது மனங்களையேயன்றிப் பணத்தையல்ல என்பது நமக்குத் தெட்டத் தெளிவாகப் புரிந்திருந்தால் இறைவனின் இல்லங்களை இருளிதயர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றுவது கடினமல்ல.

பணம் சேகரிக்கும் உண்டியலுடன் இறைவனின் சிலை இருந்தால்  அதற்குப் பின்னால்  அதைத் திறப்பதற்கென்று இன்னொரு மனிதன் மட்டுமே இருப்பானென்றும் அவன் கடவுளுமல்ல  கடவுளின் அனுமதிபெற்ற அவனது முறையான பிரதிநிதியுமல்ல என்றும்; மக்களைப் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

மக்களின் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள  இதய சுத்தியுள்ள சக மக்களின் ஒத்துழைப்பும் உறுதுணையும் இல்லாதபடியால்தான்  அந்த மனிதாபிமான உணர்வு பொதுவாக சமுதாயத்திலே தளர்ந்திருக்கிறபடியால்தான்  மக்கள் தங்களின் மனதைத் திறந்து பேச யாருமின்றித் தவிக்கின்றார்கள்.

யாரிடமாவது தம் துன்பத்தைச் சொல்லி ஆறுதல் தேடிச் சென்றால் அதைக் கேட்பவர்கள் ஆறுதலையா அளிக்க முன்வருகின்றார்கள்?

அந்தப் பாதிக்கப்பட்ட  அனுதாபத்துக்கு உரிய  இதயத்துக்குரியவரின் மரியாதைக்கும் கௌரவத்துக்கும் சந்தர்ப்பம் வரும்போது எப்படி உலைவைக்க அவற்றைப் பிழையாகப் பாவித்துவிடலாமென்றல்லவா வழி தேடிக் கொண்டிருக்கின்றார்கள்?

இந்நிலையில் ஆண்டவன் ஒருவனைத்தானே அவர்கள் நம்பி ஓடவேண்டி இருக்கின்றது? அந்த ஆண்டவனின் இல்லம் என்றமையும் ஆலயமும் இல்லாவிட்டால் வேறே எங்கேதான் அவர்களால் போக முடியும்?

ஆனால்;…

அதையே ஒரு பலவீனமாகக் கணித்துக் கொண்டு  ஆறுதலுக்குக் கட்டணம் வசூலிக்கும் கைகண்ட கயமைத்தனத்தை நிர்வாகங்கள் கடைப்பிடித்தால் அதில் புண்ணியத்தின் அத்திவாரத்தில் எழுப்பப்பட்ட பாவத்தின் மாளிகையை அல்லவா காண நேரிடும்? இது எத்தகைய நன்மையை எவருக்கும் பெற்றுத் தர முடியும்?

மக்கள் கடவுளை நேசிப்பதும் கடவுள் மக்களை நேசிப்பதும் உண்மையில் உண்மையே என்றால் இடையில் பணம் என்ற கவர்ச்சிப் பொருளின் அவசியத்துக்கு இடமே இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.

அப்படியென்றால்?

கோயில் உண்டியலுக்குள் கொட்டும் பணத்தை உங்களைச் சுற்றிலும் பசியால் வாடும் ஏழைகளுக்குக் கொடுத்துதவிப் பாருங்கள். கல்விக்காக ஏங்கும் ஏழைக்குழந்தைகளுக்கு உதவிடக் கொடுத்து ஒத்துழைத்துப் பாருங்கள்.

வறுமை என்ற கருங்குகைக்குள் மனிதாபிமானம் என்ற கடவுளின் பிம்பம் சிக்கிக் கொண்டு தவிப்பதைக் கண்டுகொள்ள முயலுங்கள்.

கொடுப்பதை  மற்றவர்களின் நன்மைக்காகக் கொடுப்பதில் மனநிறைவடையும் பழக்கத்தை விரும்பி  விழைந்து  கைக்கொள்ள முன்வாருங்கள்.

நாம் உண்ணும் உணவில் மிஞ்சும் அளவில்கூட சில இடங்களில் ஒரு முழுக்குடும்பமே பசியாற முடியாதா என்று தத்தளித்துக் கொண்டிருப்பதை உங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் உணர்ந்து பார்க்க முயன்று பாருங்கள்.

உங்கள் உள்ளம் விழைந்தால்  புண்ணியம் உங்களின் உள்ளங்கையிலிருந்தே உருவெடுத்தோடும் ஊற்றாகக் கொப்புளிக்க முடியும் என்பதை நாம் சரியாக உணர்ந்து கொண்டால்தான் ஆலயம் மனிதனுக்கு அவசியம்; அதுவே தத்தமது இதயமதில் இருப்பது மிக அவசியம் என்பது தெரியவரும்.

ஓவ்வொரு இருதயமும் மனிதாபிமானத்தை ஏற்றுக் கொண்டால் சொர்க்கத்தை இறைவன் வேறெங்கோ வைத்திருந்தால்  அதை விட்டுவிட்டு இங்கேயே வந்தாலும் வந்து விடுவார்! அல்லவா!


கல்லினால் கட்டுண்ட மண்டபங்கள் எல்லாம் கடவுளின் இல்லமாய் ஆக வேண்டின்
இல்லமாய் இதயமே இறைவன் வாழும் மக்களால் நிறைவுறல் ஆக வேண்டும் 
பல்லாயி ரம்மக்கள் கூடிநின்று எங்கும் பன்னூறு மணிநேரம் பாடி னாலும்
இல்லையேல் இதயத்துள் உண்மை பக்தி இறையில்லம் வெறுங்கல்லாய் மட்டும் நிற்கும்

மாந்தருள் பேதமும் பிரிவும் வைத்து ஆண்டவன் பாதையே அதுதானென்று
வந்திருந் தாள்பவன் பொய்யுரைத்தால் அதைமறுத் தெதிர்த்துநில் துணிவு வேண்டும்
பந்தமும் பகைமூட்டும் சாத்திரங்கள் வேதங்கள் உள்ளத்தில் உண்மையில்லேல்
எந்தவொரு காலமும் இறைவனின்பால் எமைச்சேர்க்க உதவாது! உணரவேண்டும்

பொய்யதாய் கௌரவம் தந்துநிற்பான் தன்சுயம் காக்கவே அதனைச் செய்வான்
மெய்யதாய் அதைநம்பி நாம் இணைந்தால் பாவத்தின் துணைநாமே என்பதாகும்
கைமேலே பலன்தரும் தெய்வமென்று கையூட்டு தரச்சொல்லும் சாமிகள்தாம்
மெய்யாக இறைவனின் எதிரியென்றே தெரியாயின் நம்பக்தி பொய்யில் சாரும்

நலம் செய்யும் நல்லெண்ணம் வந்துவிட்டால் பேதங்கள் பார்ப்பதைத் தவிர்த்து நிற்போம்
பலம் என்றும் நீதியில் சார்ந்து நிற்றல் எனுமுண்மை ஏற்றெம்மை நிமிர்த்தி நிற்போம்
கலம் கடல் கடந்துமே போகவேண்டின் கலத்தினுள் சிறுதுளை என்றுநாமும்
அலட்சியம் செய்திடில் கலமும் தாழும் ஆபத்தை மறுக்கிறோம்; மறக்க வேண்டா!



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக