ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

கல்லறைகளே! (சிறுகதை)


1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாத நடுப்பகுதி.

இலங்கை.

இயற்கையாகவே அழகு செழித்து ஓங்கும் அந்தச் சின்னஞ்சிறு தீவின் எங்கோ ஒரு பகுதியில் தொற்றிக் கொண்ட வகுப்புவாத வன்செயல் என்னும்  தீ படிப்படியாகப் பரவி வந்து அத்தீவின் முழு மண்ணும் செந்நிறமாக மாறத் துவங்கியிருந்தது.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் அமலன்.
இருந்தொரு தடவை பகலில் துயிலும் சுகத்தில் அவனுக்கு மிகுந்த ஆர்வம். அதனால் அலுப்பும் வெய்யில் வழங்கிக் கொண்டிருந்த வெக்கையின் தாக்கமும் அழுத்த, தன்னையே மறந்தவனாக தூங்கிக் கொண்டிருந்தான்.

பொதுவாகக் கலகலப்பாகவே இருக்க விரும்பும் அவனுக்கு இப்படியான சந்தர்ப்பத்தில் எவராவது அவனை எழுப்பினாலோ அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. எரிந்து  விழுந்துவிடுவான். அதனால் அவனது மனiவியும் அவ்வேளைகளில் அவனை எழுப்புவதை முற்றாகவே தவிர்த்து விடுவாள்.

திடீரென வாசல் கதவில் மணி ஒலித்ததைக் கேட்டு கதவைத் திறந்த அமலனின் மனைவி அதிர்ச்சியால் உறைந்து நின்றாள். வந்தவர்களை உள்ளே வரச் சொல்லி விட்டு அமலனை அவள் தட்டி எழும்பினாள்.

"உடனே எழும்புங்கள். யார் வந்திருக்கிறார் என்று பாருங்கள்."

திரும்பிப் படுத்த அவன் முணுமுணுத்தான். அலுப்புடன் தூங்கும் போது எழுப்பினால் எரிச்சல்தானே வரும்?

"தயவு செய்து கொஞ்சம் அமைதியாகத் தூங்க விடேன்?  சதா…சும்மா.. நச்சரித்துக் கொண்டு…இராத்திரியிலும் கரைச்சல் பகலிலும் கரைச்சல். என்ன இது?"

அவனது மனைவி விடுவதாக இல்லை. நச்சரிப்பு தொடர்ந்தது.
                                         
 "அந்த ராஜா ஸ்டோர்ஸ் முதலாளி இரண்டு மூன்று பேருடன் வந்து பத்து நிமிஷமாகக் நின்றுகொண்டிருக்கிறார். ஏதோ முக்கியமான விஷயமாம். உடனே எழும்புங்கள்."

அவ்வளவுதான்! அலுப்பினால் எரிச்சலுடன் முனகிக் கொண்டிருந்தவன் வந்திருந்தவரின் பெயரைக் கேட்டவுடன் பதறிக் கொண்டு எழுந்தான். அவனுக்கு மிக வேண்டியவர் அவர். கொழும்பிலிருந்த பிரபல வர்த்தகர்களில் ஒருவர்.

அவரது பெயரைக் கேட்டதும் அதற்குமேல் அவனால் படுத்திருக்க முடியவில்லை. அவசர அவசரமாக ஒரு ஷேர்ட்டை எடுத்து உடுத்திக் கொண்டு  முன் வரவேற்பறையை நோக்கி விரைந்தான்.

அங்கே.....
ராஜா ஸ்டோர்ஸ் முதலாளியும் இன்னும் சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் கூட உட்கார்ந்திருக்காமல் நின்று கொண்டிருந்தமை அவனை என்னவோ செய்தது.

"என்ன முதலாளி  வீட்டுக்குள்ளே வந்து விட்டு  இருக்காமல் நின்று கொண்டிருக்கிறீர்களே! உட்காருங்கள்.."

அமலனின் உபசரணை அவரை உட்கார வைக்கவில்லை. மாறாக...

"என்ன தம்பி நீங்கள்? ஊரே பற்றி எரிந்து சனங்களின் உயிர்களும் சொத்துக்களும் நாசமாகிக் கொண்டு இருக்கின்றன. நீங்கள் என்னவென்றால் நிம்மதியாகப் படுத்து தூங்கிட்டிருக்கிறீர்களே! இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?"

அதிர்ந்து நிமிர்ந்த அமலனின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.

ராஜா ஸ்டோர்ஸ் முதலாளி பத்மநாதன் விபரங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

சிங்களவர்களின் வெறிச்செயலாக இனக்கலவரம் ஆரம்பமாகி, அது தீவு முழுவதும் விரைவாகப் பரவி வருவதும் ராஜா ஸ்டோர்ஸ் எரிந்து சாம்பலாகிவிட்டதும் அவருடன் வந்திருந்தவர்களில் ஒரு சிலரின் கடைகளும் கூட அழிக்கப்பட்டிருந்ததும் தான் தூங்கிப் போயிருந்த அந்த சிலமணி நேரத்திற்குள் பரவலாக நடந்துவிட்டிருக்கும் செய்திகளாக அவனுக்குத் தெரிய வந்ததும் அவனுக்குப் பெரிய பதற்றமாக இருந்தது.

ஏதோ சிறிய கலவரங்கள் ஆங்காங்கே நடப்பதாகத்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் அவையே அத்துணை விரைவாக எல்லர்த் திசைகளிலும் பரவிவிட்டதா?

நம்பவே முடியாத, நம்பிக்கைக்குரிய ஆபத்தான செய்திகள்.

அவனுக்கு மூத்த மகன் பிறந்து இரண்டே வாரங்கள்தான் ஆகியிருந்தன அப்போது.

மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் கற்பனைகளோடும்... அமலனின் உள்மனம் ஒரு கணம் பயத்தினால் குலுங்கியது.

கலவரம் பரவித் தன் குடும்பமும் பாதிக்கப்பட்டுவிடுமோ?

கடவுளே!

விதிதான் விளையாடுகின்றதா? அல்லது.. விதியை இந்த வினைவாத இனவாதிகள் தாங்களாக விளையாட இழுத்து வைக்கின்றார்களா?

மனக்குழப்பத்தில் அவன் பேசுவதையே மறந்திருந்தான் சில விநாடிகள். பத்மநாதன்தான் மீண்டும் அவனைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தார்.

"தம்பி! இந்த முதலாளிகளின் கடைகளும் மலையகப் பகுதியிலே எரிந்து போய்விட்டன. இப்போது கொழும்பிலே இருக்கிற கடைகளும் பாதிக்கப்படும் ஆபத்து நெருங்கிக் கொண்டு வருகிறாற் போலத் தெரிகின்றது. அதற்கு முன்னாலே..."

அமலனுக்கு சுயநினைவு  இப்போதுதான் திரும்பி வந்தது.

இழந்தது போக தங்களிடத்தில் மிகுந்திருக்கும் பாதியையாவது அவை அழிக்கப்படுமுன் அகதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள, உதவிட வேண்டும் என்றும் அதற்காகவே அவனுடைய உதவியை நாடி அவர்கள் வந்திருந்தார்கள் என்றும் புரிந்தது.

கொள்ளையடிக்கப்படுவது உறுதி என்று தெரிந்த நிலையில் மக்களுக்குத் தங்கள் பண்டகங்களிலிருந்த பொருட்களை கொடுத்துதவ அவர்கள் மனமுவந்து விருப்பம் தெரிவித்தார்கள்.

கொள்ளை போகப்போவது மக்களின் பசிக்காகவும் மானத்தைக் காக்கவும் போவதை அவர்கள் மனப்பூர்வமாகவே விரும்பிச் செய்ய முன்வந்திருந்தமை தர்ம தேவதையின் பன்முகங்களில் ஒன்றாக அமலனுக்குத் தெரிந்தது.

தொடர்நது நடந்த கலந்துரையாடலில் ஏராளமான தமிழ் மக்கள் எல்லாப் பக்கங்களிலும் அகதிகளாக உடுத்த உடையோடும் கைக்குக் கிடைத்த ஒரு சில பொருட்களோடும் மட்டும் கிடைத்த கிடைத்த இடங்களில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் இன்னும் பலர் அவ்வழிக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள் என்றும் தெரிந்தது.

அமலன் அப்போது ஓர் இளைஞர் இயக்கத்தில் தலைவனாக இருந்தான். அதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட செயற்குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டான். சுமார் ஒரு மணிநேர இடைவெளிக்குள் அமலனின் வீடு நிரம்பி வழிந்தது.

பல்வேறு பணிகளுக்கான குழுக்கள் அமைக்கப்பட்டு  பொறுப்புக்களும் பகிரப்படல் தொடங்கியது.  அமலன் ஒரு பிரபல பத்திரிகைச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு உதவி கேட்டான்.

அதன் பொறுப்பாளர் தலைமை வகித்து வந்த இன்னொரு சங்கத்தில் அமலனே செயலாளராகவும் இருந்தான்.  அதனால் பல விடயங்களும் கிடுகிடுவென நடக்கத் தொடங்கி விட்டன. உடனடியாக ஒரு வாகனத்துக்கு அந்தப் பத்திரிகை நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டது.

பத்மநாதன் முதலாளியின் முகத்தில் பூரண திருப்தி என்ற அடையாளம் படமாகி நின்றது.

சில கி.மீ. தொலைவிலிருந்த ஆலயத்திலும் அகதிகள் இருப்பதாக அறிந்த அமலன்  அங்கு தொடர்பு கொண்டான்.

அங்கே எற்கனவே உதவி சேகரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அமலனின் உதவியையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் செய்தி கிடைத்தது.

அமலன் தான் அனுப்பி வைக்கும் பொருட்களை மறுநாள் தனது இயக்கம் வந்து இதர ஏற்பாடுகளைச் செய்யத் துவங்குகிற வரைக்கும் அங்குள்ள ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைக்க அனுமதி கேட்டான்.

உடனே சம்மதித்த ஆலய நிர்வாகம்  அதற்காக ஓர் அறையையும் அளித்து அதற்கான சாவியையும் கையளிக்க முன்வந்ததும் அமலன் முதலாளியிடம் சொல்லி அவரது காரிலேயே இருவரை அனுப்பி அறையைப் பார்த்து சாவியையும் எடுத்துவரச் சொல்லி அனுப்பினான்.

சிறிது நேரத்தில் பத்திரிகை நிலைய வாகனம் வந்து நின்றது.

முதலாளிமாரோடு சில இளைஞர்களுடன் அமலன் புறப்பட்டான். இதர குழுவினர் புதிய தகவல்களைச் சேகரிப்பதிலும் பொதுமக்களுக்கான உதவித் திட்டங்களைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டனர்.

அழைத்துச் சென்ற முதலாளிகள்  முதலில் ஒருவரின் கடைமுன் வண்டிகளை நிறுத்தினார்கள். அனைவரையும் உள்ளே அனுமதித்த பின் கதவுகளை மூடி விட்டார்கள்.

அந்தப் பகுதியில் எல்லாக் கடைகளுமே மூடிக்கிடந்ததால் அச்செய்கை வித்தியாசமாகத் தென்பட வாய்ப்பில்லை.

ஒரு புடவைச் சமுத்திரமே இருந்தது அக்கடைக்குள். எதுவித சலனமும் இன்றி அனைத்தையும் அள்ளிக் கொள்ளும்படி அந்தக் கடையின் உரிமையாளர் சொன்னபோது அவரது முகத்தில் இனந்தெரியாத விரக்தியும் பற்றற்ற நிலையும் நெளிந்தோடுவதை அமலனால் நன்றாகவே உணர முடிந்தது.

ஒரு முதலாளிக்கு இன்னொரு கடையும் வீடும் கண்டியில் இருந்தனவாம். அவரது கடையும் வீடும் தீக்கிரையாகிவிடடதாகவும் குடும்பம் முழுவதுமே அகதிகளாக அங்கே ஒரு மடத்தில் இருப்பதாகவும் சொன்னவர்  எல்லாமே போனாலும் தனது குடும்பம் தப்பியதே போதும் என்று சொல்லிக் கலங்கியபோது  அமலனுக்கு அதைச் சகிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

அமலனால் கண்டி நகருக்கும் பொருட்களைக் கொண்டு சென்று உதவிட ஏற்பாடு செய்து தர முடியுமா என்று பரிதாபமாக அவர் கேட்டபோது புல்லரித்தது அவனுக்கு.  

மிக உயர்ந்த இடத்தில் நின்ற அந்த மனிதர் இவ்வளவு தூரத்துக்கு அவசியமும் காரணமும் இல்லாமல் மனித விரோதிகளால் தள்ளி விழுத்தப்பட்டுத் துடிக்கின்றாரே என்று பெருங் கவலையாக இருந்தது.

தான் ஏதாவது ஏற்பாடு செய்து தர முயல்வதாக அமலன் சொன்னான். மனதுக்குள்  சரிவந்தால் தானே போய்ச் செய்து கொடுப்பது என்று தீர்மானமும் எடுத்துக் கொண்டான்.

அந்த வசதிமிக்க மனிதர்களில் எவருமே அழுவதற்கு வெட்கப்படவில்லை. தாக்கங்களின் அழுத்தம் அப்படியானதாக இருந்தது அவர்களுக்கு.

எல்லாமிருந்த மனிதர்கள் ஒரு நொடிக்குள் எல்லாமிழந்த மனிதர்களாக மாறிவிட நேர்வதும் அந்த இழப்பின் மத்தியிலும்கூட நிம்மதியை உணர்வதற்கு முயற்சிப்பதும் விதியின் விசித்திரமான விளையாட்டின் அங்கமாகவே அமலனுக்குப் பட்டது.

நேரம் முக்கியமானது என்பதை ரேடியோ வலியுறுத்தியது. மாலையில் ஊரடங்குச் சட்டும் அமுலுக்கு வருகிறதாம்.

மடமடவென்று ஆடைகளும் புடைவைகளும் எடுத்தடுக்கப்பட்டு  வாகனத்தில் ஏற்றப்பட்டன. இரண்டு மூன்று தடவைகள் போய் வந்ததும் அடுத்த கடை. அதன்பின் அடுத்தது இப்படிப் பொருட்கள் சேகரித்து அனுப்பப்பட்டபின் அமலன் வீடு திரும்பினான். மறுநாள் கோவிலுக்குப் போய் ஆவன செய்வதென்ற முடிவெடுப்போடு இளைஞர் குழுவும் விடைபெற்றுப் பிரிந்து சென்றது.

அமலன் வசித்த வட்டாரத்திலும் பெரும் உணவுப் பொருட்தட்டுப்பாடு நிலவியதால் வாகனத்தில் உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு அவையும் பரவலாக விநியோகிக்கப்பட்டன.

ஊரடங்குச் சட்டம் அமுலான பின் தொலைபேசியில் மட்டுமே தொடர்புகள் தொடர்ந்தன.

                                            ......................................

றுநாள் பொழுது விடிந்து  ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டதும் முக்கிய உறுப்பினர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கூட்டிக் கொண்டு  முந்திய தினம் சேகரித்த பொருட்களை எடுத்து ஆவன செய்யத் தீர்மானித்தபடி அமலன் கோவிலுக்குப் புறப்பட்டுப் போனான்.

கோவில் வளாகத்திலும் சுற்றிலும் ஒரே அகதிகள் மயமாகவே இருந்தது. என்ன அநியாயம் அவர்களில் ஒருவர் கூட வேற்று மொழியினரில்லை. மனதையே இறுக்கிவிடத்தக்க தாக்கத்தைத் தந்த காட்சிகள்.

கவலை மனதைச் சூழ தயங்கிய சில கண தாமதத்தின் பின் அவர்களுக்குரிய அறைப்பக்கமாக அவர்கள் நடந்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு நபர் குறுக்கே நின்று வழி மறித்தார்.

"அங்கேயே நில்லுங்கள். யாரும் உள்ளே போக முடியாது. ஃபாதர் சொன்னால்தான் விட முடியும்."

"நாங்கள்...."

"நீங்கள் யாராயிருந்தாலும்  எனக்குக் கவலையில்லை. உள்ளே அனுமதிக்க முடியாது. முதலில் ஃபாதரிடம் லெட்டர் வாங்கிக் கொண்டு வாருங்கள்."

வழி மறித்தவரின் பேச்சில் கடமையின்றி ஒருவிதமான ஆணவமே கொப்புளித்தது அப்போது.

ஆபத்திலிருக்கும் அகதிகளுக்கு உதவி செய்வதாக வந்து  தொண்டர்களாக நுழைந்து கொண்டு  அதிகார ஆட்டம் போட முனையும் இத்தகைய சவடால்களை அமலனும் அவனது குழுவினரும் ஏற்கனவே நன்கு அறிந்து பழகி, மோதி அனுபவபபட்டவர்களாதலால் அலட்சியமாக நந்தி ஐயாவின் அட்டகாசத்தை ஒதுக்கித் தள்ளினார்கள்.

எஜமானை விடவும் அவன் வீட்டு நாய்தானே அதிகம் துள்ளும்? அந்தக் கதைதான்.

அமலன் தனது சக இளைஞர்களை ஒரு தடவை திரும்பிப் பார்த்தான். அவர்களின் கைகள் துறுதுறுப்பது தெரிந்தது. "பிடரியில் பிடித்து இரண்டு சாத்து சாத்தலாமா?" ஒரு சிறு குரல் கேட்டது.

இலேசாகச் சிரித்தவாறே பொறுமையாக இருக்கும்படி சைகையால் சொல்லிவிட்டு  வழி மறித்தவரின் கைகளை விலக்கியவாறே உள்ளே நுழைந்தான அமலன்;.

அவன் அவரது கைகளை விலக்கிய விதத்திலிருந்து "இன்னும் அடம் பிடித்தால் உதைத்துத் தள்ளிவிட்டுத்தான் போவோம். ஜாக்கிரதை!" என்று சாடையாகப் புரிய வைத்தமையை அந்த நபர் நன்றாகவே உணர்ந்து கொண்டதாகத் தெரிந்தது.

சத்தற்ற அதிகாரத்துடன் நின்று வழி மறித்த அந்த தொந்தித் தடியர் அப்படியே வாயை அகலத் திறந்தபடியே நிற்க அமலனும் இளைஞர் குழுவும் மடமடவென்று தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தனர்.

தங்களிடம் எதுவித வேண்டுகோளும் விடுக்காமல் அனுமதிகூட கேட்காமல் தான்தோன்றித்தனமாகத் தம்மிஷ்டப்படி நடந்து கொள்கிறார்களே என்று சரியான கோபம் கொண்டிருந்தார்கள் அனைவரும்.

தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் அவர்கள் நுழைந்தபோது....
பொதுப்பணி  அங்கே புதுவுரு எடுத்துக் கொண்டிருந்தது.

ஓர் அம்மணி இவர்கள் சேகரித்து, அனுப்பி வைத்திருந்த ஆடைகளைத் தரம் பிரித்துக் கொண்டிருந்தார். நல்ல பட்டு ரகம் மற்றும் உயர் ரக நவநாகரீக ஆடைகள் ஒரு பக்கமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டு  ஒரு தனிப் பெட்டிக்குள் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அவரை அணுகிய அமலன் அவ்வாறு ஏன் பிரித்து வைக்கப்படுகின்றன என்றும் யார் அவ்வாறு செய்யச் சொன்னவர் என்றும் கேட்டான்.

வெள்ளவத்தை அகதி முகாமில் இருக்கும் ஒரு பெரிய குடும்ப மனிதர்களுக்காக அவை பிரிக்கப்படுவதாகவும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதருக்கு (பெண் துறவி ) உறவினர்கள் என்றும் அவரது பெயரைச் சொல்லி விளக்கினார் அந்த அம்மணி.

எதையோ எடுத்த பெருமாளிடமிருந்து எதுவோ பறித்த கதை போலில்லை? இளைஞர்கள் கொதித்துப் போய் விட்டார்கள்.

அகதிகளிலும் அந்தஸ்துப் பாகுபாடு காட்டும் பணியில் உத்வேகத்துடன் ஈடுபட்டிருந்த அந்த அம்மணியை நெருங்கிய அமலன்  தாங்களே அவற்றைச் சேகரித்தவர்கள் என்றும் அவற்றைத் தங்களின் இயக்கத்துக்கே பகிர்ந்தளிக்க அதிகாரம் உள்ளது என்றும் அந்த அதிகாரம் வேறு எவருக்குமே தங்களால் ஒருபோதும் வழங்கப்படவில்லையென்றும் ஆகவே வேலையை உடனே நிறுத்தி விட்டு வெளியேறும்படியும் பணித்தான்.

திடீரென வந்து நுழைந்தவர்கள் தன்னை அதிகாரத்துடன் வெளியேறச் சொல்வதைத் தாங்கிக் கொள்ள அந்த அம்மணிக்குப் பெரும் சிரமமாக இருந்தது புரிந்தது. அது இயற்கைதானே!

தான் பெரிய சுவாமியிடம் முறையிடப் போவதாக அழுத்தமாகச் சொல்லியவர் அவர் பற்றிய பயத்தை இளைஞர்களிடம் எதிர்பார்த்து சற்று நின்றதுபோல் தெரிந்தது.

சில வினாடிகளுக்குள்ளேயே அது சரி வராது என்றும் இளைஞர்கள் பனங்காட்டு நரிகள் என்றும் புரிந்துவிட்டது அவருக்கு. அவரது சலசலப்பு வேலை செய்யவில்லை அல்லவா!

படபடவென்று வெளியேறி விட்டார் அந்தத் தொண்டம்மையார். அதன்பிறகு என்ன தொடர்ந்து வரும் என்பதும் அதை எப்படி எதிர் கொள்வது என்பதும் அவர்களுக்குத் தெரியுமாதலால் பொறுமையாகத் தங்கள் பணியைத் தொடங்கினார்கள்.

சில நிமிடங்கள்தான் கழிந்திருக்கும். படபடவென வேகமாகக் கதவு தட்டப்படும் சப்தம் அறையே உலுக்குவதுபோலக் கேட்டது. ஓர் இளைஞன் போய்க் கதவைத் திறந்தான்.

ஒரு சுவாமியார் அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

முகத்தில் அப்பளம் பொரிந்து கொண்டிருந்தது.

"என்ன தம்பி! இவர்களை வேலை செய்ய விடாமல் இடைஞ்சல் செய்கிறீர்களாமே! இங்கே எதுவும் எங்கள் பொறுப்பின் கீழேதான் நடக்க முடியும். எங்களைக் கேட்காமல் யார் யாரோ வந்து நுழைந்து கொண்டு எங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுப்பதை அனுமதிக்க முடியாது. நீங்கள் யார்? உங்களை யார் உள்ளே அனுமதித்தது?"

பாதை தெரியாதவர் சாலைப் போக்குவரத்துக்குத் தாம்தான் பொறுப்பு என்கிறார். என்னே பரிதாபம்!

அமலன் அமைதியாகச் சொன்னான்.

"சுவாமி  நாங்கள் யார் என்பதே தெரியாமல் எங்கள் பொருட்களை நீங்கள் எடுத்தது முதல் பிழை. முதலில் பெரிய சுவாமியாரிடம் எங்களைப் பற்றிக் கேளுங்கள். இவை எங்கள் இளைஞர் இயக்கத்தினால் சேகரிக்கப்பட்டவை. நேற்று போனில் இங்கு வைத்து  எடுக்க அவரிடம் அனுமதி கேட்டுப் பெற்றிருக்கிறோம். இதோ இருக்கிறது இவ்வறையின் சாவி. இதன் மற்ற திறப்பை நீங்கள் எங்களைக் கேட்காமல் பாவித்து இவ்வறையைத் திறந்ததுதான் பிழை. எங்கள் அனுமதியின்றி எவருமே எங்கள் உடைமைகளைக் கையாட எங்கள் இயக்கச் சட்டத்தில் இடமில்லை. மன்னிக்க வேண்டும். அதனால்தான் எங்கள் அனுமதி பெறாதவர்களை நாங்கள் வெளியேற்ற வேண்டிய கட்டாயம் எழுந்தது."

அமலனின் பதிலில் மரியாதை குறைவற்று  ஆனால் அழுத்தம் நிறைவுற்று இருந்தது.

அமலன் அவருடன் வாதிடுவதை அந்தப் பெண்மணியும் மனித நந்தியான வழி மறிப்பியும் அதற்குள் அங்கே சூழ்ந்துவிட்ட இன்னும் சில கோவில் பந்தங்களும் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டு நின்றனர்.

சுவாமியாரின் புஸ்வாணப் பயமுறுத்தலை அலட்சியப்படுத்தியபடி அமலன் சொன்னான்..

"சுவாமி  இவற்றைச் சேகரித்ததும் நாங்கள்தான். அகதிகளுக்குப் பகிர்ந்து கொடுக்க இருப்பதும் நாங்கள்தான். இந்தக் கோவிலுக்கும் இவற்றில் ஒரு பகுதியைக் கொடுத்துதவத்தான் நினைத்திருந்தோம். ஆனால் இங்கே வந்து பார்த்தால் யாரோ மதர் சொன்னதாக இந்த அம்மா ஆள் பார்த்து வேலை செய்வது தெரிந்தது. பொது சேவையில் இதெல்லாம் பெரிய தவறு அல்லவா?"

போதகருக்காவது ஒரு சின்னப்பயல் போதிப்பதாவது!

"தம்பி எதை எப்படிச் செய்வதென்பது எங்களுக்குத் தெரியும். உமக்கு..."

"சுவாமி எங்களுடன் ஒத்துழைக்க முடியாவிட்டால் நாங்கள் எல்லாவற்றையும் வேறிடத்துக்குக் கொண்டு போக ஏற்பாடு செய்து கொள்கிறோம். இங்கே பணக்கார அகதி சொந்தக்கார அகதி, ஊர் அகதி, வேறு அகதி என்று பாகுபாடு காட்டும் வேலை நடக்கிறதாகத் தெரிகிறது.  இதைக் கட்டளைக் குருவினதும் பொதுமக்களினதும் கவனத்துக்கும் பத்திரிகைகளின் பார்வைக்கும் கொண்டு வரப் போகிறோம்."

சூரிய கிரகணம் வந்ததும் பகலே சட்டென்று இருளாதைப் போல ஒருவிதமான நள்ளிரவு இருட்டு அதிகார உருவில் வந்த குருவானவரின் முகத்தை 'டக்'கென்று மூடுவது தெரிந்தது.

ஆத்திரத்தினாலோ என்னவோ அவரது உடம்பு சிறிது அதிர்ந்தும் கொண்டது.
ஏதோ விபரீதம் இந்த இளைஞர்களால் நடந்து விடப்போகிறதை அவர் உணர்ந்து அச்சமுறுவது போலவும் அதனால் என்னவோ நடக்கக் கூடாதது நடக்கப் போகின்றதோ எனப் பதட்டப்படுவது போலவும் அவரது முகததின் ரேகைகளின் பல்லினச் சுருக்க நெளிவுகள் உணர்த்தின.

"நீங்கள் செய்வதைச் செய்து கொள்ளுங்கள்."

ஒரே வரியில் இளைஞர்களுடனான பேச்சை முடித்துக் கொண்டவர்  அப் பெண்மணியைப் பிறிதொரு அறைக்கு அனுப்பி விட்டுத் தாமும் வெளியேறினார்.

அடுத்த சில நிமிடங்களில் அமலன் பெரிய குருவைச் சந்தித்து அனைத்துச் சம்பவத்தையும் விபரித்தான். அவர் நம்ப முடியாமல் அதிர்ச்சியடைந்தது தெரிந்தது. அவரோ சிங்களவர். ஆனால் உண்மையான துறவி. அதை அமலன் முன்பே நன்கு அறிவான்.

துள்ளிக் குதித்த குருவோ ஒரு கருப்புத் தமிழர். ஆனால் துறவிதானா…?

ஒரே குட்டைக்குள்தான் எத்தனை விதமான மட்டைகள்!

தங்கள் அறைக்குரிய சாவியை மீண்டும் வேறெவரும் பாவிக்காதபடிக்குக் கவனம் எடுக்கும்படி அமலன் கேட்டுக் கொண்டான்.

அன்று பகல் அவர்கள் உடைகளுடன் சென்ற அகதிகள் மண்டபத்தில் இயக்க இளைஞர்கள் உடைகளைப் பகிர்ந்து கொடுத்துக் கொண்டு வந்தபோது  சுமார் பதின்மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியின் கையில் ஒரு நல்ல சட்டையை அமலனுடன் வந்த இளைஞன்  ஒருவன் வழங்கினான்.

அந்த அவலமான நேரத்திலும் அதைக் கண்டு தன் விழிகளை அகலத் திறந்து அச்சிறுமி இரசித்ததை அனுதாபத்துடன் அமலன் அவதானித்தான்.

அதே சமயம் சற்று தொலைவில் இருந்த ஓர் அம்மணி அந்தச் சிறுமியைப் பெயர் சொல்லி அழைத்த விதம்?

ஓகோ! இந்தச் சிறுமி அவர்களின் வீட்டு வேலைக்காரப் பெண்.

அமலன் அவர்களை அறியாமலே அவர்களை நெருங்கி சற்று தள்ளி நின்று கவனித்தான்.

அந்தச் சிறுமியிடமிருந்த ஆடையை அந்தப் பெரிய மனுஷி கேட்டு வாங்கிக் கொண்டிருந்தாள்.

அதே வேளை அவளது வாய் உதிர்த்த வார்த்தைகள்?... வார்த்தைகளா அவை? நஞ்சுத் துளிகள்.

"அடியேய் மீனா! அதை இங்கே கொடடி. உனக்கு இந்த சாதாரண கவுன் போதும். வேலைக்காரிக்கு என்ன பட்டும் பவிசும். லீலா அதை உடுத்தட்டும்."

தனது ஒரு கண சந்தோஷத்தை ஒரேயடியாய் இழந்துவிட்ட துக்கத்தை அந்தப் பிஞ்சு மனம் ஒரே வார்த்தையில் வெளிப்படுத்திய விதமானது அமலனை அப்படியே உலுக்கி விட்டது.

"சரீங்கம்மா."

அந்தக் குழந்தையின் கண்கள் சிந்திய ஏக்கம்! அது கொட்டிய துயரம்! அப்பப்பா!
ஆயிரம் ஈட்டிகள் ஒன்றாக அமலனின் இதயத்தைத் துளைத்தன.

அடிபட்டு ஓடிவந்து அகதியாக நிற்கும் நிலையிலும் கூட ஆணவம் மாறாத அந்த அம்மையாரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட மதிக்க அமலனால் முடியவில்லை.  இவர்களுக்காக இரக்கப்படுவது கூடப் பெரும் பாவம் போல தெரிந்தது அவனுக்கு.

குறுக்கே புகுந்து அந்தப் பட்டுடையைப் பறித்துவிட மனம் துடித்தது. ஆனால்... அப்படிச் செய்தால் அதற்காக அந்த அப்பாவிப பிஞ்சுக் குழந்தையை அந்தப் பேய் பழி வாங்காது என்பது என்ன நிச்சயம்?

அவர்களுக்கு அகதிகள் என்று இடம் கொடுத்து வைத்திருந்த மனிதாபிமானமே அங்கே படுமோசமாக அவமானப்படுத்தப்படுவதாக உணர  அமலனுக்குப் பெருங் கவலையாகவும் தனது தமிழினத்திலேதானே இந்தத் தறுதலைகளும் இருக்கின்றன என ஒரே எரிச்சலாகவும் இருந்தது.

அவ்விடத்தை விட்டு மெதுவாக அகன்ற அவன் ஓர் இளைஞனை மெதுவாக அனுப்பி அவர்களுக்கு அந்த மதரைத் தெரியுமா என்று கேட்;டனுப்பினான்.

அவர்கள்தாம் அந்த  மதரின் மிக நெருங்கிய உறவினர்கள் என்று பதில் கம்பீரமாக வந்தது.

அந்த அம்மையார் அங்கிருந்து அதைச் சொல்லிவிட்டு பெரிய பெருமையுடன் பார்த்த பார்வை?

"நாங்கள் சாதாரண ஆட்களல்ல. அந்த மதரின்... சொந்தக்காரர்களாக்கும்!" என்று இவர்களைப் பார்த்து ஏளனமாகச் சொல்வதைப் போலிருந்தது.

நீங்கள் எங்களுக்கு உதவ வந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற ஆணவத்தை அம்மனித விலங்குருவம் உமிழ்ந்து கொண்டிருந்தது.

"அட கல்லறைகளே!
எதிலெல்லாம் பெருமையைத் தேடி அலைகின்றீர்கள் நீங்கள்! அகதி நிலையிலும் கூட அந்தஸ்து ஆணவமும் அகங்கார எக்காளமும். அதையும் ஒரு துறவியின் தகைமையின் இரவல் பெருமையை முதலீடாக வைத்தல்லவா செய்கின்றீர்கள். உங்களால் முழுக் கிறிஸ்தவ மார்க்கமுமே இன்றைக்கு அவமானப்படுகின்றதே! நீங்கள்தான் தினசரி ஏசுவைச் சிலுவையில் அறைந்து வரும் பிசாசுகள்.. வெட்கக் கேடு."

அமலனின் வாய் மெதுவாக முணுமுணுத்தது. அருகில் நின்ற இளைஞன் விடயம் புரியாமல் முழித்தான்.

அவன் சொன்னான்: "அமலன் இந்த அம்மா அந்த மனுஷி சொன்ன அந்த மதருக்கு சொந்தக்காரராம் என்ன?"

அமலன் பதில் சொன்னான்:
"ஆமாம். அதனால்தான்... நீ அதைக் கவனிக்கவில்லையா?"

இளைஞன் விழித்தான்:

"என்னதை?"

"அந்தம்மாவுக்கு மூன்று கால்கள் இருந்ததை!"

"ஆங்......?"

இளைஞன் திரும்பி பார்த்தான்.

"இரண்டு கால்கள்தானே தெரிகின்றன?"

"நன்றாகக் கூர்ந்து பார்."

முறுவலித்தவாறே அமலன் முன்னே நடக்க- அவன் சொன்னதைப் புரிந்து கொள்ள முடியாமல் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே மற்றவன் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.

அகங்காரங்கள் அகதிகளானாலும் அடிப்படையில் மாறவே மாட்டாவோ?
அமலனால் விடை காணவே முடியவில்லை.

காலம் கடந்துதான் ஓர் உண்மை அவனுக்குப் புரிகிறதாம்.

அதாவது அதறகுப் பதில்…

நாய் வால்கள் நிமிர்வது சாத்தியமாகட்டும் முதலில்.

தலையதில் விடம் நிறை பாம்புகள்கூட தலைக்கனம் கொண்டதாய்க் கதைகளிலில்லை
இலையென்ற நிலையிலும் மனிதருக்குள்ளே இதயமே இல்லாரில் குறைவுமே இல்லை
மலைபோலச் செல்வமே குவிந்திருந்தாலும் கணப்போழ்தில் அவை அழிந்துமே போயும்
நிலைமாறித் தவித்திடும் நிலையில்கூட நிலைமாறா நிலையர்க்கும் குறைவவே இல்லை.

புண்ணியம் பாவத்தைச் சொல்லிச் சொல்லிப் பணம்  பண்ணும் மனிதர்கள் மிகப்பலர் உண்டு

எண்ணியும் எவர்க்குமே தீமை செய்யாரும் அவர்களின் மத்தியில் இருப்பது உண்டு
உண்ணவும் உறங்கவும் வழிகளே இன்றித் தவித்திடும் நிலைவரும் நிலையிலும்கூட
எண்ணத்தில் சிறிதும் திருந்திடல் அல்லார் இருப்பதன் உண்மை இயற்கையேதானோ?

மேடுகள் ஒரு நாள் பள்ளங்களாகும் பள்ளங்கள் மேடாய் ஆவதும்கூடும்

நாடுகள் தோறுமே  நம்செய் விதத்தில் நன்மையும் தீமையும இலக்கணம் ஆகும்
வீடுகள் புண்ணியம் செய்தததில் நின்றால் நாடுகள் புண்ணியம் செய்ததுவாகும்
நாடுகள் நன்மையே நாடிடுமென்றால் நாநிலம் சொர்க்கமாய் மாறிபயே போகும்.


இரக்கத்தை இதயத்தில் கொண்டு நின்றான் இறைவனின் மறுவுரு என்று கொண்டால்
இகமதில் இறைவனோ டிணைந்துபேயும் மனிதராய் இணைந்தாடும் உண்மை காண்போம்
அகமதில் நீதியும் அன்புமின்றி ஆணவம் கொண்டாடும் மனிதர் எங்கும்
ஏழ்மைசூழ் நிலைவந்து வாடும் போதும் மாறாத கொடுஞ்சூழல் கொடுமையன்றோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக