ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

சிந்தையைத் தட்டின் சிந்தனை திறக்கும்

தாவிடும் மனதினை ஓடவே விடுவது
  தவறுக்கு வழிவகுக்கும்
நாவினை அதன்வழி சுவைத்திட விடுவது
  நோய்களுக் கழைப்புவிடும்
தாவிடும் உணர்வுகள் தடமதை மீறினால்
  தரமது தகர்ந்துவிடும்
ஆவியும் உடலமும் நீதிக்காய் உழைத்தால்
  யாவிலும் திடம் பிறக்கும்.

நேர்வழி செல்பவன் பாதையை மாற்றினால்
  சீர்நிலை அகன்றுவிடும்
பார்வையில் பாவத்தைப் புதைத் ததைவீசினால்
  பார்கெடும் பாதை வரும்

ஊர்தனை ஏய்ப்பதில் வெற்றியை விழைவமேல்
  கார்நிலைக் கதை பதியும்
வேர்என வாழ்க்கையில் நல்வழி தேறினால்
  வேதனை களுமினிக்கும்

உயிர்களைப் பிரித் ததில் உயர்வினை விழைந்தால்
  ஊழ்வினை தேடி வரும்
துயிலுறு நிலையிலும் தீமையை நினைத்தால்
  துன்பத்தின் வழி திறக்கும்
வயிறதன் பசிதான் உயிரதன் ஊற்று
  விருப்பமே விதியாகும்
கயிறெனப் பாம்பினை இழுத்திட முனையாய்!
  கடிபட்டு உயிர் தொலையும்

காலத்தின் மாற்றம் உடலது காட்டும்
  இலட்சியம் அதை வெல்லும்
ஞாலத்தின் சூழல் சோதனை செய்தால்
  மனபலம் அதைத் தடுக்கும்
வேலினைப்போலே கூர்ந்தகன் றாழமாய்
  நீதியை நீ உணர்ந்தால்
வேலிகள்போலே தடைபல வரினும்
  வெல்பவன் நீ! உணர்வாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக