வியாழன், 4 அக்டோபர், 2012

தொட்டெழுதின் பட்டிருக்கும்

விரல்நுனிகள் எழுத்தினை உருவாக்கும் போது
நிரல்வைத்து நலன்விழைந் தெழுதிடல் நன்று
சிரத்தினுள் சிந்தனை உருவாகும் போது
சீர்செய்து உண்மைக்கு உரம்சேர்த்தல் நன்று.

பந்தியில் அமர்மக்கள் சுவைகாண லின்றேல்
பந்திக்காய்ச் சமைத்தவர் தரம்அற்றுப் போகும்
பந்திகள் படைக்கையில் எழுத்திலே நேர்மை
சந்திக்கத் தவறினால்  படைப்பென்ன வாகும்?

வடிவான அமைப்பினால் சுவைகூடி டாது
வடிவான பாத்திரம் அதைச்செய்தி டாது
முடிவாகும் வரையிலே குறையாத வண்ணம்
அடிநாக்கும் சுவைவண்ணம் சமைத்தலே வெல்லும்

அறிவாற்றல்  சிந்தனை எனச்சேரும் மையை
சரியாகப் பேனைவழி செலுத்தினா லன்றிச்
சரியான பலனதை மைதந்தி டாமல்
சரியான தாளையும் பழுதாக்கல் நேரும்

சிந்தையில் தட்டுதல் எழுத்தாக்கம் என்றால்
சிந்தையில் தட்டிஅதை முதல்காண வேண்டும்
சிந்தைக்குள் தட்டாமல் சந்தைக்குள் வைத்தால்
மந்தைகள் கால்சிக்கி இல்லாமல் போகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக