ஞாயிறு, 14 அக்டோபர், 2012

யாரப்பா அது யாரப்பா? நாமப்பா அது நாமப்பா!







யாதும்ஊரே என்பன் யாவரும் கேளிர் என்பான்   
சாதியை வைத்துத்தூண்டித் தன்னினம் குனியவைப்பான்
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்றுசொல்லிச் சென்று கொண்டே
துண்டுதுண்டாய் இனம்பிரித்துத் துரோகஞ்செய்து உயரநிற்பான்.



எவரெவரோ சொன்னதெல்லாம் சேர்த்துவைத்துப் பேசிப்பேசி
அவனைவிடப் பெரியவனாய் அறிஞனில்லை என்று நிற்பான்
உலகமொழி அத்தனையில் நம்மொழிதான் உயர்ந்ததென்பான்
உலகமொழி அத்தனையும் கலந் ததைத்தான் தமிழ்என்பான்.

தன்னினத்தான் சந்தித்தால் தன்மொழியில் தான்கதைப்பான்
தன்மொழியா? அவனவன்வாழ் ஊர்மொழிதான் அவன்வழக்கம்
தன்மொழிசேர் மக்களின்முன் பிறர்மொழியால் பெருமையென
தன்மொழியைத் தவிர்த்திடுவான் அன்றேலதில் கலப்பிடுவான்.

தன்னினத்தைக் காப்பவரைத் தன்னெதிரி அழிப்பதற்கும்
தன்னினமே தவறுஎன தம்மவர்க்கே அறிவுரைப்பான்
பலமிருக்கும் வேளையிலே பக்கம்வந்து ஒட்டுவதும்
பலமிலையோ! எதிரியின்பின் ஓடிக்கால் நக்குவதும்?

சங்கங்களும் மன்றங்களும் ஒன்றியமும் கோடிகோடி
தங்குமிடம் கட்டியாடி மக்களேய்த்து ஆடிப்பாடி
அங்குமிங்கும் கூடிக்கூடிப் படமெடுத்து விட்டுவிட்டு
எங்குமெம்போல் சிங்கங்களா? இல்லையில்லை என்பவர்கள்.

மூழ்குகின்ற கப்பலுக்குள் தீன்பொறுக்கித் தின்றுமகிழ்
சீழ்பிடித்த சுண்டிடெலிகள் வாய்கிழிந்த இந்நரிகள்
பாழ்பிடித்த சனியன்இனம் எனச்சபிக்க வைத்தவைகள்
நாள்கடந்தும் திருந்திடுமோ? நாரைக்கல்லில் இருந்துஉரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக