ஞாயிறு, 14 அக்டோபர், 2012

காலம் அனுமதிக்க மறுத்தால்.... (சிறுகதை)


 


ளமைக் காலக் கண்ணோட்டத்தில் என் கனவாய்; நினைவாய் வந்து போகும் எத்தனை எத்தனையோ அனுபவங்கள். இளமையின் நெகிழ்ச்சியில் அதன் கிளுகிளுப்பில் அன்று அனுபவித்த சின்னஞ்சிறு அனுபவ சுகங்களின் மின்மினிப்பூச்சியொளிக் காட்சிகளைக் கூட இதயம் இன்று அசை போடும்போது  சில அனுபவங்களால் என் கண்கள் பனிக்கத் தொடங்குவதை உணர்கிறேன்.

என்னைத் தாக்கிய அந்தச் சின்னஞ்சிறு அனுபவங்களை மீண்டும் ஒரு தடவை  அனுபவித்துப் பார்த்துவிட என் இதயம் துடியாய்த் துடித்தாலும் அது முழுமையாக நினைவில் வராமல் என்னை அலட்சியப்படுத்துவதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாமலிருக்கின்றது.



அழுவதா அதற்காக? கூடவே கூடாது.

இது வீரமா? இல்லவே இல்லை. வெறும் பம்மாத்து.

ஆம்! நடக்க முடியாததையும் அடைய முடியாததையும் இப்படி வெறுப்பதுபோல் காட்டிக் கொண்டால் வென்று விட்டதாக என்னை நானே திருப்திப் படுத்திக் கொள்ள முடியும் என்று என் பலவீனமான மனம் சொல்லுகின்றதை நம்புவதுபோல் நான் அதனிடமே நடிக்கின்றேன்.

மனம் பலவீனமானதல்ல. ஆனால் பலவீனமான மனிதர்கள் தமது மனங்களின் சக்தியை அமுக்கி வைத்து விடுகிறார்கள்.அதனால் அவர்களின் மனங்களும் அவர்களைப்போலவே  தைரியமிழந்து நிற்கின்றன என்பதை என்னையே உதாரணமாக வைத்து நான் சிந்திக்கையில் எனக்கே வெட்கமாகவிருக்கின்றது.

எனது இளமையில் நானிழந்த ஓர் அரிய அறிமுகத்தை அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

நான் படித்துக் கொண்டிருந்த அந்த இனிய நாட்களில் நடந்த ஒரு சம்பவமது.
எங்கள் பள்ளிக்கு அருகிலேயே பெண்கள் பயிலும் கான்வென்ற்றும் இருந்தபடியால் தினசரி பசுமையாகப் பொழுது போய்க் கொண்டிருந்த காலம் அது.

எங்களுக்கு  இடைவேளை கிடைத்த அரைமணி நேரத்தில் அவர்களுக்கு இடைவேளை வரும்.

என் வகுப்பின் மாணவர்களில் சிலருக்கு மிக நல்ல உடல்வாகு. நான் சர்வசாதாரண உடலன்.

என் போன்ற சாதாரண குரூப்பிற்குள் சொத்திகளை விரும்பி ஏற்றுக் கொள்வோம். ஏனென்றால் அவர்களையும்விட நாங்கள் மேலென்று மனதிருப்தி  கொள்ள முடியுமல்லவா! அதற்காகத்தான்.
அது அன்றைய எங்கள் மன பலவீனத்தின் வெளிப்பாடு.

இந்த "பொடிபில்டர்" பயல்களின் கண்களும் ராஜ நடைகளும் எங்கள் இடைவேளை நேரத்தில் இரு பள்ளிகளுக்கும் பொதுவாக இருந்த விளையாட்டு மைதானத்தில் வளைய வரும்போது எனக்கெல்லாம் பெரிய ஏக்கமாக இருக்கும்.

கௌதமியும் தர்ஷினியும் மிகவும் கலகலப்பாக இவர்களின் நடைகளை ரசித்துப் பேசுவதை நான் எரிச்சலுடன் அவதானிப்பேன். இரண்டு அறை விட்டு அடித்துத் துரத்த வேண்டும் போலிருக்கும். ஆனால் அது நடக்கப் போவதில்லையே என்று எனக்குள் குமைந்து கொண்டிருப்பேன்.                                                                                                                                                                              

என் வகுப்பிலிருந்த செல்வராஜ்  என் பக்கத்து மாணவன்.  வாட்டசாட்டமான உடலமைப்பு கொண்டவன். அவன் நடந்தாலே  அந்த நாளிலே "சிவாஜியின் ராஜ நடை. அவன் தோற்றத்திலும் சிவாஜிதான்.

அப்படியொரு கதாநாயகக் கவர்ச்சி. என்னால் சகித்துக் கொள்ள முடியாத ஒருவித கோபம் என் உடம்பையே அதிர வைத்துக் கொண்டிருக்கும். மனதுக்குள்ளும்  ஒரே வேளையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்.

அவன் நல்ல கலகலப்பானவன். நட்புறவும் அப்படித்தான் ஆனாலும் எனது கோழை மனதுக்கு அவனில் இனந்தெரியாத ஓர் எரிச்சல். அது பொறாமையினாலா! அல்ல. வெறுப்பினாலா? அல்லவே அல்ல. அப்படியானால்?

அவனது கவர்ச்சியில் பெண்கள் பள்ளியின் கவனம் விழுவதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அடிக்கடி கண்ணாடி முன் நின்று கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் என் உடலழகை அவதானிப்பேன்.

குரங்கிற்கும் தன்னழகு பேரழகுதான் என்ற உண்மை அப்போது நிதர்சனமாகும். கூடவே மனம் சொல்லும் "உனது உடம்பு புடலங்காயுடம்பு. இதை செல்வராஜோடே  ஒப்பிட்டுபபார்ப்பது மொட்டைத் தலையன் தன் தலையைச் சந்திரனுடன் ஒப்பிடுவது போன்றது. எதற்கும் சரியான ஒற்றுமை வேண்டாம்? "

எரிச்சலுடன் சிந்திப்பேன். இந்த உடம்பு என் பிறப்புடம்பு. அதாவது  அப்பாவுக்கு புடலங்காய் உடம்பு ஆகவே எனக்கும் அப்படித்தான் இருக்கும்.

ஆனால் செல்வராஜின் அப்பாவுக்கு உடம்பு அப்படியில்லையே! அவரும் சொத்திதானே! பிறகெப்படி?

மனம் ஆராய நான் இடம் கொடுக்க மாட்டேன். இடம் கொடுத்தால் இரவெல்லாம் தூக்கம் கெட்டுவிடும். ஆகவே என்னை  ஆசுவாசப்படுத்திக் கொள்வேன்.                                                                                                                                

எப்படித் தெரியுமா?

அவனுக்கு வெறும் மாட்டுடம்பு மட்டும்தான். மூளையே கிடையாது. நமக்குத் தான் சுப்பர் மூளை. ஆகவே அவனைவிட நாம்தான் மேல்.

என்னை நானே ஆற்றிக்கொள்ள நல்ல ஐடியாவல்லவா! அத்தோடே திருப்திப்பட்டுக் கொள்வேன்.

                                                              ………………..

ன்றைக்கு திங்கட்கிழமை. வகுப்பு சற்று பயத்தினால்  சலசலத்துக் கொண்டிருந்தது.        

முதல் பாடம் கணக்குப் பாடம். வெள்ளிக்கிழமை தந்திருந்த கணக்குகளை இன்றைக்கு ஒப்படைக்க வேண்டும். செய்யாமல் வந்திருந்தாலோ... செம்மையாகக் கிடைக்கும்.

செல்வராஜ் என் காதில் குசுகுசுத்தான.;

"டேய்  ரமேஷ்! எனக்கொரு உதவி செய்வியாடா?"

நான் கணக்கில் புலி. ஜோசப் மாஸ்டர்தான் கணக்கு மாஸ்டர். செல்வராஜ் வீக். அவர் எடுத்த எடுப்பிலேயே "கையை நீட்டடா!" என்று விட்டு விளாசி விடுவார். அவர் உருவத்தில் சொத்திதான் என்றாலும்  இந்த பலசாலிகளுக்கெல்லாம் அவரென்றால் ஒரே கிலிதான.; ஆகவே அவ்வப்போது காப்பியடித்துக் கொள்ள என் கொப்பியை வலம்வர விடுவது வழக்கம். படிப்பில் எப்படியோ காப்பியடிப்பதில் மட்டும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இயங்குவார்கள் இந்த பொடி பில்டர்கள்.

எனவே தைரியமாக நான் கேட்டேன்                                                                                                                                          

ஹோம் வேர்க் செய்யலையா? என் கொப்பி வேணுமா?"

"அதில்லைடா. நான் எல்லாக் கணக்கையும் செய்திட்டேன். ஒரேயொரு சின்னப் பிரச்சினை. அதாவது...இந்த... லெட்டரை நீ...எனக்காக..."

எனக்குத் திக்கென்றிருந்தது.
அதெப்படி இவன் தனியாகக் கணக்கெல்லாம் செய்திருக்க முடியும்? அதுவும் சரக்கு முதல் கணக்கைச் செய்ய இவனால் எப்படி முடியும்? அதோடே… ஏதோ போஸ்ட்மேன் வேலைக்கு வேறே அழைப்பு விடுக்கிறானே! ஏன்;?

அவனது முகம் சிவப்பதை அவதானித்தேன். குற்றவுணர்வு உந்தித் தள்ள அவன் மெதுவாக நடுங்கினான்.

"என்ன லெட்டர்? யாரிடம் கொடுக்கணும்?" அவன் விரலை வாயில் வைத்து எச்சரித்தான்.

உரக்கப்பேசாதே என்று பொருள். ஆகவே… அவன் காதருகில் என் தலையைச் சரித்தேன்.

„அந்த கௌதமி கிட்டே கொடுத்திடுவாயாடா? ப்ளீஸ். எனக்கு உன்னைத்தவிர நம்பிக்கையான நண்பன் இல்லைடா"

அதை வாங்கிக்கொண்டேன். ஒரு  முழுக் கொப்பித்தாள். சின்னஞ்சிறு  பொட்டலமாக மடிக்கப்பட்டு மினியுருவில் என் உள்ளங்கையில்.

ஆகா! ஓர் அரிய சந்தர்ப்பம.; இனி நாமும் வனிதையர் பக்கம் வலம்வர வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் எங்கே  எப்படி அவளிடம் கொடுப்பது?                                                                                                                                                                    

அவனே சொன்னான்.
"வகுப்பு முடிய வெளிகேற்றுக்கருகில் இருக்கும் பலாமரத்தடிக்கு அவள் வருவாள் அப்போது கொடுத்துவிடு"

இவன் எப்படி  இப்படிப் பிளான் பண்ணினான்?
தலையை அரித்தது எனக்கு.

கடிதத்தை என் பாக்கற்றுக்குள் திணித்துக் கொண்டேன். அவன் நன்றியுடன் சிரித்துக் கொண்டான்.                          

மதிய இடைவேளையின்போது ஒரு சீனி பன்னும் டீயும் ஒரு வாழைப்பழமுமாக ஒரு மினி பார்ட்டியே எனக்காக நடந்தது.

இடையில் ஒருதடவை பாத்ரூம் போகிற சாக்கில் போய் நுழைந்துகொண்டு அவனெழுதிய கடிதத்தைப் பிரித்துப் பார்த்துவிட பெரிய ஆவல். மனசாட்சி குத்தியது. பயமாகவும் இருந்தது.

சில குற்றங்களைச் செய்ய நேரிடும்போது  மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் செய்யவேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும். இவ்வாறு  என் பிழைக்கு நானே சமாதானம் வழங்கிக் கொண்டேன்.

பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டு  கடிதத்தைப் பிரித்தேன்.

வாசிக்க வாசிக்க மனம் கிளுகிளுத்தது. ஒரே "எடல்ட்ஸ் ஒன்லி“  வசனங்கள். ஆனால் கடைசியில்....எனக்காகக் கணக்குகளைச் செய்து தந்ததற்கு நன்றி என்று நல்ல தமிழில் முடித்திருந்தான் பாவி.

என்னையறியாமலே நான் சத்தமாகச் சிரித்துக் கொண்டேன்.

„மொக்குப் பயலுக்குக் கணக்குப்பாடம் செய்து கொடுக்க ஒரு காதலியா! ஆகா!“ என்று சிரித்துக் கொண்டே திரும்பி வந்தேன்.

செல்வராஜின் கண்கள் சந்தேகத்தோடே என்னை வட்டமிடுவது தெரிந்தது. உடம்பு இலேசாக நடுங்.....

இருந்தாலும் காட்டிக் கொள்ள முடியுமா என்ன?

"ஏனடா சிரித்துக் கொண்டிருக்கிறாய்?" அவனே கேட்டுவிட்டான். நான் ரெடிமேடாக பதில் வைத்திருந்தேன்.

"இல்லே இந்தக் கடிதத்துக்குப்பின் தர்ஷினியும் அவளும்  சண்டைபிடிக்காமலிருந்தால் சரிதான்"

அவன் சிரித்தான். நானும் எனது தற்காப்பு நடவடிக்கையை மேலும் தொடராமல் வைத்துக் கொண்டேன்.

பள்ளி நேரம் முடிந்தது.

பலாமரத்தடியில் நான் நின்று கொண்டிருந்தேன்.                                                                                                                                                                                                                                 பெரும் படையாக வெளியேறத் துவங்கிய மாணவ  மாணவியர் பட்டாளம் படிப்படியாக ஒன்றிரண்டாக மெலிந்து கொண்டே வந்தது.                                                                                    

செல்வராஜைக் காணவேயில்லை. முழு வட்டாரமும் அமைதியான பிறகு ஓரிருவராக ஆசிரியர்கள் வரத்துவங்க...

எனக்குப் பதட்டமாகவிருந்தது.

தற்செயலாக எவராவது ஏன் தனியாக இங்கே நிற்கிறாய் என்று கேட்டுவிட்டால்?

ரெடிமேட் பதிலுக்காக  என் மூளை பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது.                                                            

அப்பப்பா! எவனுக்காகவோ நான் குற்றவாளிபோல இப்படி நடுநடுங்க வேண்டியிருக்கிறதே என்று  என்னையே சபித்துக்........

"நீங்கதானே ரமேஷ்?"  மென்மையான  இனிமையான ஆனால் அழுத்தமான ஒரு குயில் குரல்.

சடக்கென்று திரும்பினேன்.

அவள்தான். மிக நிதானமாக என்னருகில் வந்து நின்றவள் என்னை நேருக்கு நோராகப் பார்த்துச் சிரித்தாள்.

எனக்கு.....எனக்கு...
பார்வையொன்றே போதுமே..பல்லாயிரம் சொல் வேண்டுமா..

இவள் செல்வராஜின் பிரண்ட் என்றால் என்னைப்பார்த்து ஏன் இப்படிச் சிரிக்கிறாள்? இனந்தெரியாத உணர்ச்சிகளின் உந்துதல்கள். என் நெஞ்சு படபடத்தது.

"அவர் தந்தாரா?"

"ஆமாம். இதோ..." நான் உள் பனியனிலிருந்து எடுக்கப் போனேன். அப்போது….

 "கொஞ்சம்; பொறுங்கள்.இப்போது வேண்டாம்."

என் கண்கள் பரபரத்தன.அவள் குரல் குசுகுசுத்தது.

"அந்தச் சனியன் மீனா வந்து கொண்டிருக்கிறாள். அவள் முதலில் தாண்டிப் போகட்டும். அதன் பிறகு தாருங்கள்"

மீனாவா? யாரது? எனக்கு நானே கேட்டுக் கொண்டு அவள் திரும்பிய திசையைப் பார்த்தேன்.                                          

மிகவும் நிதானமாக  எங்களைத் தாண்டிக் கொண்டு  அவள் போய்க் கொண்டிருந்தாள்.

அவளது கண்களில் ஒருவிதமான ......என்னால் விளக்கமுடியாத சந்தேகம் கலந்து ஒளிர்ந்தது. ஒளிர்ந்ததா? பற்றியெரிந்து கொண்டிருந்தது.

தாண்டிச் சென்றவள் கேற்றுக்கு வெளியே சென்றதும்  சட்டென்று திரும்பி எங்களைப் பார்த்தபோது  நான் செல்வராஜின் கடிதத்தை நடுங்கும் விரல்களுடன் கௌதமியிடம் நீட்டிக் கொண்டிருந்தேன்.

அவள் மறைந்துவிட்டாள். இவள் சொன்னாள்.

"அவள் பெரிய ஒழுக்கம்  கலாச்சாரம் அது இது என்று சின்ன வட்டத்துக்குள் சுத்துகிற ஒரு கேஸ். அதுசரி... நீங்கள் நல்லா கணக்கு செய்வீர்களாமே! அவர்தான் சொன்னார்."

"நீங்களும்தானே!"

அதெப்படி உங்களுக்குத் தெரியும்?"

"அவன் ஒரு கொப்பி மெஷின். வழமையாக என் கொப்பியைப் பார்த்து அடிப்பவன். இன்றைக்கு செய்து கொண்டு வந்திருந்தானே! அது கின்னஸ் ரெக்கார்ட் அல்லவா!"

அவள்" க்ளுக";கென்று சிரித்தபோது எனக்குப் புல்லரித்தது புளகாங்கிதத்தால்.

தூரத்தில் சில வெள்ளை வேஷ்டிகள்..அசைந்து அசைந்து.....

ஓகோ! ஆசிரியர்கள் சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். இனியும் நின்றால் ஆபத்து. ஓடிவிட வேண்டும்.

அவளே முந்தினாள்.
"நாளைக்கு இந்த நேரம் வாங்கோ. பதில் எழுதிக் கொண்டு வருவேன். சரியா?"

"ம்" என்றவன்; களவாய்க்; கள்ளருந்திவிட்டுப் பனைமரத்திலிருந்து இறங்கிய கள்ளனைப்போல விடுவிடென்று  நடந்தேன்.

சிறிது தாமதித்த பின்  அவள் என்னைத் தொடர்வது தெரிந்தது.

வேகமாக வெளியேறிய நான் மடமடவென்று  நடையைக் கட்டினேன். உடல் வியர்த்து பாதியுடை நனைந்து விட்டிருந்தது.

செல்வராஜ்?
அவனைக் காணவே இல்லை. புத்திசாலி. முன்னெச்சரிக்கை மிக்கவன். நான் நேராக வீட்டுக்குப்  போய்விட்டேன்.

அதன்பிறகு...சில காலமாக.....
ஒவ்வொரு மறுதினமும் மரத்தடியில் கடிதப்பரிமாற்றம் நடைபெறும் நான் போஸ்ட்மேனாக காதல் தூது செய்து கொண்டிருந்தேன். ......

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. எனக்கும் புதிய பழக்கம் பழகிப் போகத் தொடங்கிவிட்டது.

ஒரு நாள்.........
வழமைபோலவே மரத்தடியில் நின்று  காத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது.....
கௌதமிக்குப் பதிலாக ....
மீனா வந்து  கொண்டிருந்தாள்.

கௌதமிக்குச் சளைத்தவளல்ல ஒரு படி மேலாகவே அழகு கொழிக்க அவள் இருந்தாள்.
சலனம்....சபலம்...
முதலில் மனம் படபடத்தது. என்றாலும் படுவேகமாக மூளை இயங்கத் துவங்கியது.

செல்வராஜின் முறையிலே கௌதமியும் நடக்கத் துவங்கியிருக்கிறாள் போலும்;. இருவரும் பரஸ்பரம் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இடையில் நான்.என் முன் மீனா.                                                                                                                

இவள் மீது ....வலை போட்டால்?                                                                                                                                                  

பெரிய  ஆர்வமும் கிளுகிளுப்பும் என்னை ஆட்டிப் படைத்தன.
                                                                                                 
நமக்கென்று ஒரு பறவை வருகின்றது. வரவேற்போம். வலைக்குள் வீழ்த்துவோம் என்று  மனம் உற்சாகப்படுத்தியது.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பார்களே அதை நடைமுறையில் நமக்காக நாம் ஆக்கிக் காட்டுவதென்றால் நமது அறிவின் மேன்மையை இவள் வாயைத் திறக்கு முன் நாமே சொல்லி அவளை மலைப்பில்  அயர வைத்துவிட வேண்டியது முக்கியம்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று எனது மேதைமையைக் காண்பிக்க என் வாயைப் பிளந்தேன்.

"இன்றைக்கு கௌதமி உங்களிடம் கடிதத்தைத் தந்து விட்டாளா? நாளையிலிருந்து நீங்கள்தான் கொண்டு வருவீர்களா? பலே..."

அவள் சொன்ன பதில்?

ஆயிரம் வால்ட் மின்சாரக் கம்பியில் ஈரக்கையை வைத்துவிட்ட அதிர்ச்சியில்  என்னைத் தூக்கிவாரிப் போட்டது.

"அந்த மாதிரி நாய்வேலை செய்யும் பழக்கம் எனக்கில்லை."

நான் நடுங்கத் துவங்கிவிட்டேன். ஏதோவொரு பொறிக்குள் சிக்கிவிட்ட  அதிர்ச்சி.

அவளே பேசினாள்.

" இன்றைக்கு அவள் பள்ளிக்கு வரவில்லை. அதனால்தான் நான் உங்களை எச்சரிக்க வந்தேன்"

"ஏன்? என்ன நடந்தது?

மீனாவின் கண்களுக்குள் தீப்பற்றிக் கொண்டிருந்து. சிவந்திருந்த விழிகளுடன் அவள் சொன்னாள்.

"ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் நமது பண்பாடு. அவள் உங்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு அந்தச் செல்வராஜோடும் கும்மாளமடித்துக் கொண்டிருக்கிறாள். உங்களின் நடவடிக்கைகளைக் கவனித்த நான் உங்களைப்பற்றி விசாரித்ததில் நல்ல ஒழுக்கமுள்ள பையன் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.

நீங்கள் இப்படி பலாமரத்தடியில் போட்டுவரும் நாடகம்  தெரியவராத வரைக்கும்  சரி. தெரிய வந்தால்.? அதனால்தான் எச்சரித்து வைக்க வந்தேன். அவளோடு பழகுவது கவனம்"

"வந்து...வந்து..நான் அவளை...."

"எல்லா உத்தமர்களும் அகப்படும் வரைதான் உத்தமர்கள்.நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒழுக்கத்தைப் பெண்களிடம் எதிர்பார்க்கும் ஆண்களுக்கும் அது நடைமுறையில் வராத வரைக்கும் சமுதாயம் உருப்படவே வாய்ப்பில்லை.

நீங்களாவது மற்றவர்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை உண்மையோடு காப்பாற்றப் பாருங்கள்.

உங்களை மற்றவர்கள் மதித்தால் அது உண்மையாகவிருக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.                                                                                                                                                    

இது எனக்குத் தேவையற்ற விவகாரம். ஆனால் நமது சமுதாயம் என்ற கண்ணோட்டத்தோடு யோசித்தேன்.

அப்போது இப்படிச் செய்வதுதான் சரி எனப்பட்டது. அதனால்தான் ரிஸ்க்தான் என்றாலும் பரவாயில்லை சொல்லி வைப்போம் என்று காத்திருந்து சொல்லிவிட்டுப் போகிறேன்.குட் பை.. நான் போகிறேன்.இனியாவது மரியாதையாக வாழப் பாருங்கள்."                                                                                                                                                                                          

விடுவிடுவென்று அவள் நகர்ந்து கொண்டிருந்தாள்.                                                                                                                    

கிடுகிடுவென்று நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என் கால்களுக்குக் கீழே நிலமே நகர்வது போன்ற அதிர்வு எனக்கு.                                                                                                          

அவளுருவம் மறையும் வரைக்கும் நான் களிமண் சிலைபோல செயலற்று நின்று அசையாமல் கொண்டிருந்தேன்.

விளக்கஞ் சொல்லி என் குற்றமின்மையை நிரூபிக்க நிறைய ஆசையும் ஆர்வமுமாகவிருந்தாலும்...

அதற்காகக் காலமும் சம்பவங்களும் எல்லா நோமும் அனுமதியளித்துக் கொண்டிருப்பதில்லை என்ற உண்மை அப்போதுதான் எனக்குப்  புலனாகிக் கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக