திங்கள், 8 அக்டோபர், 2012

இது கலிகாலமா அன்றில் ஒளிர் காலமா?

ந்த நூற்றாண்டின் உலகம் தனது சரித்திர அத்தியாயங்களின் மிகமிக மோசமான அத்தியாயத்தை இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கின்றது போலும்.

மனிதாபிமானத்தை வலியுறுத்துகின்ற, மனித உரிமைகளைக் காப்பாற்றுகின்ற, நியாயங்களைச் சரியாக உணர்த்துகின்ற எல்லா நல்ல உணர்வுகளும் வழிகளும் படிப்படியாக மழுங்கி, மழுங்கி இப்போது சாதாரண மனித மனங்களில் கூட இரக்க உணர்ச்சிகள் மறக்கடிக்கப்பட்டு
வருகின்றன.

நாற்றிசைகளிலும் சூழ்நிலைகள் தீமைகளை அடையாளங் காட்டுவதை விடுத்து, தீமைகளோடு ஒத்தூதி ஓடுவதுதான் தப்பிவாழ உகந்த வழியென்று மக்கள் பாடம் பயிலத் தொடங்குவதே தெரிகின்றது.

மனித மனருசியில் கொலைகளும் கொள்ளைகளும் கடத்தல்களும் கற்பழிப்புக்களும் வரவர மிகவும் சாதாரண செய்திகளாகக் கூட பதிவு பெறாமல் வெறும் அலட்சிய செய்திகளாகிக் கொண்டு வருகின்றமையைக் காண மனித மகத்துவத்தின் எதிhகாலம் பற்றிய சந்தேகமே வலுவாகிக் கொண்டு வருகின்றது.

இன்று நடந்த படுகொலைகளை „நேற்று நடந்தவையை விட குறைவாகத்தானே இன்று நடந்திருக்கின்றது“ என்று ஒப்பிட்டு ஆறுதலைத் தேடி திருப்தி கொள்ளுமளவிற்கு மனித மனங்கள் மரத்துக் கொண்டு வருகின்றன.

விபச்சாரிகள் கூடி நல்லொழுக்க மாநாடு நடத்துகின்றமை போன்ற கேவலங்களே உலக அரசியல் மாவட்டங்களில் மிக மலிந்த சரக்குகளாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

தீ வைப்பவனே தீயணைக்கும் படை நிர்வாகியாகப் பணி செய்கின்றான். எங்கணும் தர்ம தேவதையை உள்ளாடையுடன் நிறுத்திவிட்டு, அநீதியே அரங்கேற்றம் நடத்திக் கொண்டு இருக்கின்றது.

உதாரணங்கள், மதிப்பீடுகள் என்று தேடவே வேண்டாம். சும்மா செய்திகளைப் புரட்டிப் பார்த்தாலே போதும். இரத்த வாடை வீசாத செய்தியைச் சுமக்காத ஓர் ஏடாவது இருந்தால் அதை எடுத்துப் பூஜை அறையில் வைத்துக் கும்பிடலாம்.

பத்திரிகைகள் பொய்யையன்றி வேறொன்றுமறியோம் பராபரமே என்றே பாடுகின்றன.

அரசாங்கம் எவன் கையில் இருக்கிறதோ அவனுக்குப் பக்கப் பாட்டு பாடுவதையே சனநாயகமாக இலக்கணம் வகுத்துக் காட்டிக் கொண்டு, தத்தனது ஆதாயத்துக்கு  ஏற்ப கொள்கைகள் என்ற பெயரில் கொள்ளைத் திட்டங்களுக்கும் கொலைகாரத் திட்டங்களுக்கும் ஒத்தூதுகின்றன பலமிக்க பணஉறிஞ்சி நாடுகள்.

வல்லரசுகள் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் அராஜக அரசுகளுக்கு அவர்களுக்கேற்ப ஆதரவு வழங்கிக் கொண்டு, அடிபடும் மக்களை அனாதரவாகக் கைவிட்டுக் கொண்டு, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதாகவும் பயங்கரவாதத்தை ஒழிக்கக் கங்கணங் கட்டிச் செயல்படுவதாகவும் போடுகின்ற பொய் விளம்பர இரைச்சல்களால் காதே அடைக்கின்றது.

உண்மையில் நீதியை இழந்து அதற்காகத் தவிக்கும் ஏழைகளுக்கும் நீதியை மிதித்து அதை வைத்துப் பிழைக்கும் பணசக்திகளுக்குமான போராட்ட களமாகவே இன்றைய உலகம் மாறிக்கொண்டு வருகின்றது.

கொடுமைகளும் பலாத்காரங்களும் தந்திரக்காரர்களின் தர்மங்களாகக் கொடி கட்டிப் பறக்கின்றன. பொய்கள், பொய்கள், பொய்கள்.

அவைகள்தான் மெய்யைக் காக்கும் காவலர்கள்தாம்தானென பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றன.

மனித சுதந்திரத்தின் பெயரால் அம்மணக் கலாச்சாரங்களுக்கே அதிக இடம் வழங்கப்படுவதால், கட்டவிழ்ந்த மாடுகளாக மனிதர்கள் ஒழுக்கங்கெட்டு அலைகின்றார்கள்.

கேவலங்களை நாகரீகங்களாக்கி கோவணங்களைத் தலையில் கட்டி ஆடுகின்றார்கள் அநாகரிக நாகரீகர்கள்.

இதற்குள்தான் ஜனநாயக சுதந்திரம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றதாம்.

எத்துணை பக்குவமாக தீயொழுக்கங்களுக்குப் பச்சைக் கொடி கட்டுவது என்பதை ஆடைகளில் கண்ணியவான்கள் என்கின்ற ஒரு பணக்கார, பகட்டு வர்க்கம் வரையறை செய்கின்றது என்பதைச் சுட்டுவது கூட குற்றமாகின்றது.

வருங்காலத்தின் அத்திவாரங்களாகிய இளஞ் சந்ததிக்கு நல்லதை விடவும் அசிங்கமே அழகாகவும் பெருமையாகவும் தென்படுமளவிற்கு மனங்களைக் கெடுக்கின்ற வழிகளே பரவ விடப்படுகின்றன.

அறிவுரைகளை அலட்சியம் பண்ணிவிட்டு, புத்தி கெட்டவரும் புத்தி கெடுப்பவரும் அப்பாவிப் பொதுமக்களின் அறிவைத் திசை திருப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

சந்தர்ப்பவாதிகளால் உருவாக்கப்படும் சட்டங்களும் கொள்கைகளும் மனித குல எதிர்காலத்துக்கு எதுவித நம்பிக்கையையும் அளிக்காமல் காற்றடிக்கும் பக்கமெல்லாம் அசைந்தாடும் சந்தர்ப்பவாதமே சிறந்தது என்று நம்பிக்கை ஊட்டிட விழைந்து கொண்டு இருக்கின்றன.

மனித உரிமை விடயத்தின் புத்தம்புதிய பாகமாக பழைய மாபாதகம் ஒன்று புதுப் புண்ணிய உருவெடுத்து வேறு வர தொடங்கியிருக்கின்றது.

ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் ஓரினச் சேர்க்கையில் வாழ்வதை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதும் இந்த இழிவறத்தையும் இல்லறம் என்று அங்கீகரிக்க வேண்டுமென்பதுமே அது.

இதனை எதிர்ப்பவர் காலத்தை அனுசரித்து வாழத் தெரியாத யதார்த்த விரோதியாம். படித்த பாமரர்களின் புதிய உரிமை முழக்கம் சாதாரண பாமரனைக் கூட விழி சுளிக்க வைக்கின்றது.

உலகின் சில பகுதிகளில் சட்டங்கள் இதற்கு வளைந்து கொடுத்து நிற்க, இன்னும் சில இடங்களில் மதகுருக்களே அதனை முன்னின்று பூஜை நடத்திச் செய்து முடிக்கின்றார்களாம்.

இந்த நிர்வாண குழுமத்துள் ஆடையணிவதை வலியுறுத்த முடியாதபடிக்கு நாகரீக மூடத்தனம் வளர்ந்து நிற்கின்றது.

பலவீனர்கள் தமக்கேற்ப காலத் தட்டினை மாற்றிப் போட முனைவதை சமுதாயத் தலைவர்களின் தனிப்பட்ட நேர்மையின்மையும் ஒழுக்கமின்மையும்  மறைமுகமாக அங்கீகரிக்கத் தொடங்கி வருகின்றன என்பதால் செருப்பினது அளவுக்கேற்ப காலை அறுக்கின்ற அறிவீனம் புதிய சனநாயக உரிமையாக மனித குலத்தின் அத்திவாரத்தையே அசைக்கத் தொடங்கி வருகின்றது.

விஞ்ஞானம் செய்து வந்த அத்தனை அநியாயம் சார்ந்த அறிவுபூர்வ அறிவீனங்களாலும் படிப்படியாக இயற்கையின் போக்கிலும் உணவுகளின் வழிகளிலும் நோய்களின் விதங்களிலும் பாரிய மாற்றம் மிகுந்த கேடுகள் விளையத் தொடங்கி விட்டன.

பறவைகளையும் விலங்குகளையும் அடியோடு அழித்தாவது தன்னைக் காத்துவிட மனிதன் ஆரம்பித்து விட்டான். அழிவின் கதவகள் படிப்படியாகத் திறந்து கொண்டு வருகின்றன.

மனித அறிவுலகமானது ஆக்கங்களுக்காகச் செய்வதாக ஒரு சிறு பகுதியைக் காட்டி விட்டு, அழிவுக்கான வழிகளிலேயே அதிகம் ஈடுபட்டு, செயற்கைகளையும் ஆயுதங்களையும் அதிகரித்து வந்தது என்ற மர்மத்தின் பலன்தான் இப்போது அதனை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.

ஓராயிரம் அணுகுண்டுகளை வைத்துக் கொண்டு அவற்றிலும் நவீனம் தேடி புதியவைக்குக் கோடிக்கணக்கில் செலவழிக்கும் வல்லரசுகள் அதில் ஒன்றைச் செய்து விடவும் தமது எதிரி நாடுகளுக்கு அனுமதிக்காமையை உலக நன்மைக்காக என்பதா ஆதிக்க நிரந்தரத்துக்காக என்பதா என்று உலகமே இன்றைக்கு மூளையைக் குழப்பிக் கொண்டு கிடக்கின்றது.

ஒரு குடமென்றாலும் ஒரு துளியென்றாலும் நஞ்சு நஞ்சுதானே!

தனக்கு சார்பானவனின் பிழைகளை ஊக்குவிப்பவர்க்கு மாற்றார் பிழைகளைக் கண்டிப்பதற்கு என்ன உரிமை இருக்க முடியும் என்ற தர்க்க ரீதியான சிந்தனைக்குக் கூட இடமளிக்க பயந்து நடுங்கும் ஐ.நா. ஐயாமார்கள் நியாயமான சுதந்திர உணர்வுகளுக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் பயங்கரவாத பட்டம் சூட்டும் ஆதிக்க சந்தர்ப்பவாதங்களை எதிர்;க்காமல் இரண்டுங்கெட்டான் அறிக்கைகளை விட்டு உலகை ஏமாற்றிவிட்டு அதில் திருப்தி கொள்ளுகின்றார்கள்.

ருவண்டா நாட்டில் இலட்சோப இலட்சம் சிறுபான்மை இனமக்கள் இனவெறியர்களால் கண்டதுண்டங்களாகவும் எரிந்த விறகுகளாகவும் கொல்லப்பட்டுக் குவிகையில் கைகட்டி வாய்மூடி நின்று விட்டு, எல்லாம் முடிந்தபின் தாங்கள் தவறிழைத்துவிட்டதாக வருத்தம் தெரிவித்த அதிநாகரீக ஒழுக்கசாலிகளின் ஐ.நா. மன்றமானது அங்கே அழிந்தொழிந்த மனிதர்கள் கறுப்பர்கள் என்றுதானா பணக்காரர் பேருலகம் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்ததா என்று உலகம் சந்தேகித்தபோது வாயடைத்து நின்றதும் உண்டு. அல்லவா?

எங்கே மனிதகுல அவமதிப்பு சிறுபான்மையினர்க்கும் வேற்றினத்தவர்க்கும் இன, மத, மொழிப் பூதங்களாக வெறியுணர்வாளர்களால் கையெடுக்கப்படுகின்றன எனப் பார்த்தால் இந்த வலதுசாரி வர்க்க வெறியினர்களின் ஆட்சிகளே அதற்குள் இருப்பதும் ஆதிக்க நிலைப்பாட்டின் உறுதியை அவர்கள் மட்டுமே வலியுறுத்தி வருவதும் அதனையே சனநாயகம் என்று அடையாளம் காண வேண்டுமென ஏமாறறுவதும்தானே தெரிகின்றது?

இவர்கள் என்றைக்கு பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி வழங்க முன்வருவார்கள்?

சிங்கத்துக்கு மானின் துடிதுடிப்பிலா அல்லது அதன் மாமிசத்தின் ருசியிலா அக்கறை இருக்கும்?

அந்த இனத்தின் பாதுகாப்புக்hக உழைப்பது பயங்கரவாதமாம். அதைத் தடுத்துவிட வேண்டுமாம்.

ஆனால் நான்கு மாத, ஐந்து வயது குழந்தைகளைத் துயில்படுக்கையிலேயே தாயின் கரங்களுக்கிடையிலேயே சுட்டுத் துவம்சம் செய்வதைக் கூடக் கண்டிக்கத் தெரியவில்லை. கையெடுத்துக் கும்பிடக் கும்பிடக் கொன்று குவித்து கொலைகாரiர்களைக் கண்டிக்க துப்பில்லை. விசாரிக்க வேண்டுமாம். எதற்கு? காற்று வீசவா?

கள்ளனே தனது களவுக்குத் துப்பறிந்தால் நீதி தேவதை சத்தியெடுத்துச் சக்தியின்றி சரிவதுதானே நடக்கும்?

இவர்களா சனநாயகத்தைக் காப்பாற்றித் தருவார்களாம்?

எரிமலைகள் நீர் கக்கட்டும். அப்போது நம்பலாம்.

எதிர்காலம் பற்றி சோதிடம் சொல்லுபவன் கேட்பவனின் நலனைக் கருத்தில் இருத்திச் சொல்ல மாட்டான். இருக்கும் சில்லறையைச் சுரண்டி எடுத்துக் கொள்வதற்காகவே சொல்லுவான்.

அவனுக்குப் புலி செத்தாலும் சிங்கம் செத்தாலும் குழந்தைகள் செத்தாலும் குடும்பங்களே அழிந்தாலும் ஒன்றுதான்.

உடன் பிறப்புக்களைக் கொன்றொழிக்க ஊரவனைத் துணைக்கழைக்கும் மூடர்களே!

நீங்கள் மக்களை ஏய்க்க இறைவனைத் தொழுவதாக நடிக்கையில் அவன் தனது தன்மான ஆடையே உரிகிறதாக உணர்ந்து அவமானத்தால் நாணிக் கோணுகின்றான்.

ஏனெனில் அவன் தன் பிள்ளைகளை ஒன்றையொன்று கொன்று மகிழப் படைப்பவனல்லன்.

அநீதியின் வேடங்களே உங்களை உணர்வதில் உலகம் தவறலாம்.

இறைவன் தவறுவானா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக