வெள்ளி, 12 அக்டோபர், 2012

நான் போகப் போகிறேன் (சிறுகதை)


ம்மா எண்ணெய் தாத்தா வந்திருக்கிறார்.எண்ணெய் தாத்தா வந்திருக்கிறார்“

தன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நரேஷ் வீட்டுக்குள் தலையை நுழைத்துக் கத்தி விட்டு மீண்டும் விளையாட ஓடிவிட்டான். 

குசினிக்குள்ளிருந்த அம்மா “தாத்தாவை வந்து இருக்கச் சொல். நான் ஒரு நொடிக்குள் வந்து விடுகிறேன்” என்று பதில் கொடுத்தார். அதைக் கேட்க அவன் இருந்தால்தானே!

அவன் சார்பில் தாத்தாவே பதில் கொடுத்தார். “நான் இருந்து கொள்கிறேனம்மா! நீ மெதுவாக உனது வேலைகளை முடித்து விட்டு வந்தால் போதும்.”

“அவனெங்கே தாத்தா?” குசினிக்குள்ளிருந்து கேள்வி வந்தது.






“அவனுடைய உலகத்துக்கு அவன் ஓடி விட்டான். நம் வயசுக்கு அது இப்போதெல்லாம் சரிப்படாத இடம்.”

தாத்தா ஏதோ பெரிய “ஜோக்” அடித்துவிட்டதைப் போல் அம்மா குசினிக்குள்ளிருந்து சிறிது சத்தமாகவே சிரிக்கவும் தாத்தா தமது நகைச்சுவை எடுபட்டுவிட்ட திருப்தியில் முறுவலித்தவாறே அருகிலிருந்த மேசையில் கிடந்த வீரகேசரி பத்திரிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

தாத்தாவுக்கு வயது எழுபத்தி ஐந்தைத் தாண்டிவிட்டது. ஆனால் இன்னும் கண்ணாடி அணியாமலே வாசிப்பார். புகை பிடித்தல், வெற்றிலை, மது, அது இதுவென்று எந்தப் பழக்கமுமே இல்லாதவர் அவர்.

அந்த வயதில் அவ்வட்டாரத்தில் அவரை விடவும்  வயதில்  மிகக் குறைந்திருந்த பலருக்கும் வாய்கள் பல்லில்லாக் குகைகளாகவும் பல பொய்ப்பற் கட்டிடங்களாகவும் வேறு பல காவி படிந்த கல்லுடைந்த பொந்துகளாகவும் மாறியிருக்க, தாத்தா மட்டுமே மெதுவாக மென்று உண்ணும் அளவுக்கு பல்லுள்ள சாதனையாளராகத் தமது பற்களைப் பத்திரமாகக் காத்து வைத்துக் கொண்டிருந்தார்.

வாரத்தில் ஒருநாள்தான் அவர் அந்த வட்டாரத்துக்கு வருவார். கடைகளில் கலப்படம் செய்து பணம் கறக்கும் சூழ்நிலையை உணர்ந்திருந்த பல நடுத்தரக் குடும்பங்கள் தாத்தாவின் நல்லெண்ணெய்யை நம்பி வாங்கும் அளவிற்கு அவரது நாணயமும் சுத்தமான நடவடிக்கைகளும் அப்பகுதி மக்களின் மனங்களை ஆகர்ஷித்துக் கொண்டிருந்தன.

ஆனால் தாத்தா அந்த வட்டாரத்துக்கு வந்தால் நரேஷின் வீட்டுக்கு வந்தால்தான் சற்றுத் தங்கி ஓய்வெடுப்பார். வேறு எங்குமே தங்காது வாசலில் நின்றபடியே எண்ணெய் ஊற்றிக் கொடுத்துவிட்டு, காசு வாங்கிக் கொண்டதுடன் நகன்று விடுவார்.

கடனுக்கு யாருக்காவது எண்ணெய் கொடுத்தாரென்றால் அவர்கள் குறிப்பிடும் நாளைக்கு வர முடியாதென்றால் அந்த நாளில் அக்காசை நரேஷின் அம்மா கையில் கொடுத்துவிடும்படியும் தான் பிறகு எடுத்துக் கொள்வதாகவும் சொல்லிவிடுவார்.

அவருக்கே நம்பிக்கை இல்லாதவர்களாக யாரையாவது கருதினாரென்றால் நரேஷின் அம்மா சொன்னால்தான் தரமுடியும் என்று விடுவார். இதனால் நரேஷின் அம்மா ஒரு சின்ன “கமிஷனர்” மாதிரி.

பக்கத்து வீட்டு அம்மாக்கள் வந்து “அக்கா இந்தக் கிழமை கொஞ்சம் “டைட்” டாக இருக்கிறது. அடுத்த கிழமை கொடுத்திடலாம். தாத்தா கிட்டே சரியென்று சொல்லி விடுங்கள். இல்லையென்றால் கிழம் கடனுக்குத் தராமல் போய் விடும்.” என்று சிபாரிசுக்கு நிற்பதுண்டு.
அதைக் கேட்கும்போது நரேஷின் அம்மாவுக்குக் கொஞ்சம் பெருமையாகக் கூட இருக்கும்.

“நீங்கள் பயமில்லாமல் போங்கள். நான் தாத்தாவிடம் உங்களுக்குக் கடனுக்கு கொடுக்கச் சொல்றேன்”

அம்மா உத்தரவாதம் கொடுத்த பிறகு சில அம்மாமார் கேலியாக “அக்கா கிழவருக்கு உங்களுக்கு மட்டும் தலையை ஆட்டும்படி என்ன சொக்குப் பொடி போட்டிருக்கிறீர்களோ தெரியவில்லையே...!” என்று இழுப்பார்கள்.

அம்மா சிரித்துக் கொண்டே பதில் சொல்லுவார்.“சும்மா பொடியல்ல.. காரம், குணம், மணம் நிறைந்த மிளகாய்ப் பொடி. ஏனென்றால் ... தாத்தா மூக்குப் பொடி போட மாட்டாரே!” ஒரு பெரிய “கலகலகலா” வுடன் அவர்கள் கலைந்து செல்வார்கள்.

இந்த “மினி” நாடகம் நரேஷ்க்கும் நன்றாகப் பிடிக்குமாதலால் யாராவது “ஆன்ட்டி ” மார் வந்தால் அவனும் அழையா விருந்தாளியாக பக்கத்தில் நின்று அவர்களின் உரையாடலை இரசித்துக் கொண்டிருப்பான். மாலையில் அப்பா வீடு திரும்பியதும் தாத்தா பற்றிய அம்மாமார் கதையை அவரிடம் அளந்து அவரும் இரசிப்பதை இரசிப்பதில் அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுவது வழக்கம்.

அதை நன்றாகவே உணர்ந்திருந்த அம்மா “டேய் நரேஷ்! அப்பா வந்ததும் சும்மா போய் தொண தொணன்னு எதையாச்சும் சொல்லிட்டிருக்காதே!” என்று சும்மா ஒரு பொய் எச்சரிக்கை விடுவார்.

அவனுக்கும் அது தெரியுமாதலால் அதற்கேற்ற பதிலையும் தயாராய் வைத்திருப்பான்.

“நான் சொல்லாட்டாலும் அப்பா விட மாட்டாரே! அது தெரியுமா உங்களுக்கு? இந்த ஐயா கிட்டே கதை கேட்கிறதுக்கு அப்பாவுக்கு அவ்வளவு ஆசையாக்கும். தெரியுமா?” என்று சொல்லிச் சிரிப்பான்.

அம்மா அவனைச் செல்லமாக விரட்ட, அவன் ஓடியோடி  விளையாட்டுக் காட்ட சில நொடிகள் மகிழ்ச்சியாகக் கழியும். பிறகு வழமை போல அம்மாவின் பொழுதும் அவனின் பொழுதும் திசைமாறிக் கழியத் துவங்கி விடும்.



நமது வாழ்க்கையில் மிகச் சிறியதாக நடந்திடும் பல சம்பவங்களுக்குள் இனம் புரிந்து கொள்ள முடியாத ஆழமான சக்திகள் புதைந்திருப்பதுண்டு.அவை பின்பு காலத்துக்குக் காலம் நினைவில் வந்து வந்து விடுபடாத நினைவலைகளாக அசையாடும்போது ஏற்படுகின்ற உணர்வுகள் தருகின்ற இன்பமும் துன்பமும் நெகிழ்ச்சிகளும்தான் இறைவனின் நிழலாக நம்மை ஒருவித மனநிறைவுடன் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனவோ?

நம்மை அறியாமலே நாம் நம்மை மனிதத்துக்குள் இணைத்துக் கொள்வதற்கு இயற்கை தந்திருக்கும் இந்தப் புரிந்து கொள்ளக் கடினமான, விநோதமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில்தான் மகிழ்ச்சிகளின் அத்திவாரங்கள் அமைந்து இருக்கின்றன என்றுகூடச்  சொல்லலாம்.                                 
                                                          ...........................................

ந்த எண்ணெய் தாத்தா அந்த வட்டாரத்துக்கு வந்த ஆரம்பத்தில் அவரை எவருமே வரவேற்றதில்லை. அவர் தெரு வழியாக நடந்து கொண்டே “எண்ணெய்...நல்..லெண்ணெய்..” எனக் கத்திக் கொண்டிருப்பார்.குருவிக் கூட்டம்போல் சிறுவர்கள் பட்டாளமொன்று அவரைச் சூழ்ந்து கொண்டு கூடவே ஓடிக் கொண்டிருக்கும்.

ஆனால் அவரை யாருமே கூப்பிட மாட்டார்கள். பார்க்க பரிதாபமாக இருக்கும். எனினும் அவர் தளராமல் சோர்வில்லாமல் தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பார். வியர்வை வழிய வழிய நடந்து விட்டு சோர்ந்து போய் ஓரிடத்தில் அமர்ந்து சிறிது ஓய்வெடுத்துக் கொண்ட பின் மீண்டும் தமது பணியைத் தொடர்வார்.

நரேஷ் அறிந்தவரைக்கும் அவர் பல வாரங்களாக அந்த வட்டாரத்தில் அலைந்தும் ஒருநாளும் எண்ணெய் விற்றதாகத் தெரியவில்லை. சில்லறைக் கடைகளை நம்பிய அளவிற்கு அந்தக் கிழவரில் நம்பிக்கை வைக்க தைரியமற்ற சமூகமாக அந்த வட்டாரம் இருந்தது.

இந்த நிலையில் ஒரு நாள் நரேஷின் வீட்டில் அவனும் அவனது அக்காவும் இரு தங்கைகளுமாக அம்மாவுடன் பகலுணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ....
வாசல் கதவை யாரோ தட்டுகின்ற சத்தம் கேட்டது. எழுந்து சென்று எட்டிப் பார்த்த நரேஷ் கத்தினான்.

“அம்மா, அம்மா! அந்த எண்ணெய் விக்கிற தாத்தா வந்து நிக்கிறாரம்மா!”

என்ன நடந்ததோ தெரியாது. அம்மா சாப்பிட்ட எச்சில் கையுடனேயே  வாசல் பக்கமாக எழுந்து ஓடினார்.

“ஐயா வாருங்கள். என்ன வேணும்?”

“அம்மா கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? ரொம்ப தாகமா இருக்குதம்மா!”

அம்மா மடமடவென்று தனது கையைக் கழுவிவிட்டு தண்ணீரை ஒரு கண்ணாடிக் குவளையில் எடுத்துக் கொண்டு ஓடினார். அதை அவரிடம் நீட்டிக் கொண்டே விசாரித்தார்.

ஐயா நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?”

"இல்லையம்மா.. இனிமேல்தான்...”

“ஐயா உங்கள் எண்ணெய் “கேனை” ஒரு பக்கமா இங்கே வைத்து விட்டு உள்ளே வாருங்கள்”

நரேஷ்ம் மற்றவர்களும் மலைத்திருக்க அம்மா அவரை அழைத்துக் கொண்டு உள்ளறைக்குள் நுழைந்தார்.

“டேய் நரேஷ்! நீ கொஞ்சம் தள்ளி உட்கார். தாத்தாவுக்கு இருக்க இடம் வேண்டும்.  ஐயா நீங்கள் இப்படி இருங்கள்”

கிழவர் ஏனோ சிறிது தயங்கி விட்டு பேசாமல் வந்து அமர்ந்து கொண்டார். எல்லார் முகத்திலும் இனந்தெரியாத ஒரு மகிழ்ச்சி சேர்ந்து சாப்பிடுவதில் தெரிந்தது. ஆனால் சாப்பிட்டு முடிகிற வரைக்கும் எவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.

ஏன்?  தெரியவில்லை.

சாப்பிட்ட பிற்பாடு அம்மா கேட்டார். “வெற்றிலை வேண்டுமா? தரட்டுமா?”

“வேண்டாமம்மா நான் அதெல்லாம் பாவிப்பதில்லை” நரேஷ் குறுக்கிட்டான்.

“அப்போ சுருட்டு வாங்கி வரட்டுமா தாத்தா?” கிழவர் அவன் பக்கமாகத் திரும்பிச் சிரித்தார்.

“நீ பிடிக்கிற சுருட்டு இருந்தால் கொடு. புகைக்கிறேன். கடையிலே வாங்கி வருவதென்றால் வேண்டாம்;

”“சீசீ. நான் சுருட்டு குடிக்க மாட்டேன். அது கெட்ட பழக்கம்.”
கிழவர் மீண்டும் சிரித்தார்.

“அப்ப நீ மட்டும் கெட்ட பழக்கம் பழகக் கூடாது. நான் பழகணும்னு சொல்கிறாயா?”

நரேஷ் புரியாமல் விழிக்க, அவன் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு தவிப்பதை அவனது சகோதரிகள் இரசித்துச் சத்தமாய் சிரித்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“அம்மா, இங்கே பாருங்கம்மா!” அம்மாவும் சேர்ந்து கொண்டு சிரித்தார்.
தாத்தா தொடர்ந்தார்.

“சின்னப் பையா! நான் இவற்றையெல்லாம் தொடுவதே இல்லை. நீயும் தொட்டு விடாதே! ஏனென்றால்.... கெட்ட பழக்கங்கள் நம்மோடு ஒட்டிக்கொண்டு விட்டால் இலேசிலே கழன்று போகாது. நாம்தான் ஜாக்கிரதையாக இருந்து வர வேண்டும்”

நரேஷ்  ஒன்றுமே சொல்லாமல் பெட்டிப் பாம்பாகத் தனது தலையை மட்டும் ஆட்டினான்.

அம்மா சொன்னார்.

 “இந்தப் பயல் வாயை அடக்கி வைத்த முதல் ஆள் நீங்கள்தான். எதுக்கெடுத்தாலும் எதிராகவே பேசுகிற வாயாடி. இன்றைக்குத்தான் முதல் தடவையாக வாயடங்கிப் போய் நிக்கிறார், துரை”

வீடே சிரித்தது. நரேஷ்க்கு இப்போது கோபம் வரவில்லை. அவனும் சேர்ந்து சிரித்துக் கொண்டான்.சாப்பிட்டபின் கிழவர் எழுந்து கொண்டு நன்றி சொன்னார். பிறகு

“அம்மா இத்தனை வாரமாக நான் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறேன். ஒருத்தர் கூட எண்ணெய் வாங்குகிறார்களே இல்லியே! ஏன் யாருமே இந்தப் பகுதியில் நல்லெண்ணெய் பாவிக்கிறதில்லியா?”

“எல்லாரும் கடைகளிலே கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கிறதாலேதான் உங்களிடம்  வாங்க வில்லை போலிருக்கிறது.”

“ஏன் நீங்களும் கூட வாங்குவதில்லையே!” கிழவர் ஆதங்கத்தோடே சொன்னார். அப்போதும் நரேஷ்  குறுக்கிட்டான்.

“அதில்லை தாத்தா! நீங்கள் நல்ல எண்ணெய் விற்கவில்லை. கடைக்காரர்கள்தான் நல்ல எண்ணெய் விற்கிறார்களென்று எல்லாரும் நினைக்கிறார்கள்”

“வாயை மூடடா முந்திரிக் கொட்டை. எப்போது பாத்தாலும் பெரியவர்களுக்கு இடையிலே புகுந்து புகுந்து வாயடிக்கிறதே இவனுக்கு வேலை” அக்கா பௌர்ணமி கடிந்து கொண்டாள்.

கிழவர் அவள் பக்கமாகத் திரும்பினார்.

 “பொதுவாக சின்னக் குழந்தைகள் தெரிந்து, பொய் பேச மாட்டார்களம்மா. யாராகிலும் அந்த மாதிரி பேசியிருப்பார்கள். அவன் கேட்டிருக்கக்கூடும்.”

நரேஷ்க்கு தைரியம் வந்துவிட்டது. “ஆமாம் தாத்தா! அந்த ஜானகி ஆண்ட்டியும் சின்னக்கா ஆண்ட்டியும் அப்படித்தான் பேசிக்கொண்டார்கள். நான் என் காதாலே கேட்டேன்.

“பாத்தியாம்மா? இதற்குத்தான் நெருப்பில்லாமல் புகையாது என்பது”

அக்கா மறுக்க முடியாமல் முகத்தைச் சுளித்தவறே நரேஷைப் பார்க்க அவன் வெற்றிச் சிரிப்புச் சிரித்து அவளைப் பழி வாங்கிக் கொண்டான்.

முன்பின் தெரிந்திராத தன்னை முதல் நாள் வரவேற்பிலேயே சாப்பிட அழைத்து உபசரித்தமையை அந்தப் பெரிய மனிதர் வெகுவாகவே பாராட்டி நட்புறவைத் தொடங்கி விட்டார்.

படிப்படியாக  தண்ணீர் கேட்டு வந்த கிழவர் அம்மாவின் அறிமுகத்தினாலும் உத்தரவாதத்தினாலும் அந்த வட்டாரத்தில் நம்பிக்கைக்கு உரிய வர்த்தகராக ஆகிவிட்டார்.

எல்லாரும் அவரிடம் வாங்கி அவரது எண்ணெய்யின் தரம் உயர்ந்தது என்றும் கலப்படமற்றது என்றும் கண்டு கொண்டதால் அவருக்கும் வர்த்தகம் பிரகாசமாக நடந்து வந்தது.

எண்ணெய் விற்க அப்பகுதிக்கு வருகின்ற நாட்களிலெல்லாம் நரேஷின் வீட்டுக்கு மட்டும் தாத்தா வராமல் போகவே மாட்டார். அத்துடன் அவ்வப்போது இனிப்புப் பலகாரங்களும் இதர சைவக்கடை வடை வகையராக்களும் வரும்.

சுருங்கச் சொன்னால் படிப்படியாக ஒரு குடும்ப உறவினர் போன்ற உரிமையுள்ளவராகவே அவர் நரேஷின் குடும்பத்தினருடன் மாறி விட்டார்.

அதற்கு அடையாளமாக எல்லாரின் சார்பாகவும் அவருக்கு “எண்ணெய் தாத்தா” என்ற நாமமும் அமைந்து விட்டது.சில மாதங்கள் கடந்திருந்தன. நரேஷின் வீட்டில் ஒரு புதிய கவலையான சூழ்நிலை உருவாகத் தொடங்கியிருந்தது. நரேஷின் அக்கா பௌர்ணமிக்கு வருகின்ற வரன்களையெல்லாம் யாரோ பின்னணியில் பிழையாகக் கோள் சொல்லிக் கலைத்து விடுவதாக நம்ப வேண்டியிருந்ததுதான் காரணம்.

அப்படிச் செய்து வந்தவர்களும் மிகக் கிட்டிய சில உறவினர்கள்தான் என்ற செய்திதான் நரேஷின் பெற்றோரின் மனங்களை மிகவும் பாதித்து விட்டிருந்தது. இத்தனைக்கும் அவர்கள் இவர்களிடம் அவ்வப்போது சிறு சிறு உதவிகளுக்கு வருவதும் பெற்றுக் கொள்வதும் கூட வழமையாக இருந்தது.

நேரில் எதையாவது கேட்டு வீண் பகையை இழுத்துக் கொள்வானேன் என்று இவர்கள் பொறுக்கப் பொறுக்க, அதையே ஒரு பலவீனமாக அவர்கள் எடுத்துக் கொண்டதை உணர்ந்து பெரும் கவலையுடன் நரேஷின் தாயார் கலங்கிக் கொண்டு இருந்தார்.ஏன் அவர்கள் அப்படிச் செய்கின்றார்கள் என்றுதான் எவருக்குமே புரியவில்லை.

கழுகுகள் இயற்கையாகவே பிணத்தையே விரும்பி உண்ணும். பழத்தையல்ல. இது ஓர் இயற்கையான பலவீன மனநிலையின் மனிதகுண வியாதி என்பதுதான் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.

இந்த நிலையில் ஒரு நாள் எண்ணெய் தாத்தா வந்து நுழைந்தார். அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் எதையோ உணர்ந்தவராய் “அம்மா உன்  இடது உள்ளங்கையைக் கொஞ்சம் காட்டம்மா!” என்றார்.

அம்மாவுக்குத் திக்கென்று இருந்தது.இவர் என்னவோ நம்மில் கண்டு கொண்டாரோ என்று பதறியவாறே சுதாரித்துக் கொண்டு முறுவலித்தவாறே  “ஏன் தாத்தா என்ன விஷயம்?” என்றார்.

“இல்லை... நீ மனங்கலங்கிப் போய் இருக்கிறாயே! மகளைப் பற்றித்தானே கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறாய்! பயப்படாதே! முதலில் உன் கையைக் காட்டு”

அம்மா வசியப்பட்டவரைப் போல கையை நீட்டினார். சிறிது நேரம் அதையே உற்றுப் பார்த்தவர் பிறகு சொன்னார். “அம்மா நமக்கு யார் என்னதான் கெடுதிதான் செய்தாலும் நமக்கு மேலே இருக்கிறவன் அனுமதிக்காமல் எதுவுமே நடக்காது. நமக்கு கெட்டதாகத் தெரிகிறது அவனுக்குத்தான் எதற்கு என்று தெரியும். நீ நம்புகிறாயா?”

அம்மா கல்லாகவே இருந்தார். அவர் தொடர்ந்தார்.“இன்றைக்கு நான் சொல்றேன். அடுத்த தடவை நான் வரும்போது உனது  மகள் கழுத்திலே மாங்கல்யம் இருக்கும். அப்படி நடக்கவில்லையென்றால் என் தொழிலையே நான் விட்டுவிடுகிறேன். நம்புகிறாயா?”

அம்மா பதில் சொல்லவே முடியாமல் தடுமாறினார். பிறகு தனது குடும்ப நிலைமையை எடுத்துச் சொன்னார். அவருடைய கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைக் கண்டு விட்டுப் பெரியவர் சொன்னார்.

“நாம் அழுவதும் சிரிக்கிறதும் ஆண்டவனை அசைத்துவிடாதம்மா! ஏனென்றால் அவன்தான் நம்மையெல்லாமே அசைத்து ஆட்டிக் கொண்டிருக்கிறவன். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ”

“உங்கள் சொல் பலித்தால் அதுவே போதும் தாத்தா”
தாத்தா சொன்னார்.

“அம்மா நாம் எங்கே இருந்தாலும் நம்மை இழந்திடாமல் இருக்க வேண்டும். உதாரணமாக, நான் இந்தியாவிலே இருந்து, அதுதான் பாளையங்கோட்டை என்கிற இடத்திலே இருந்து வந்தவன்.இங்கேதான் உழைத்துப் பிழைத்து வாழ்கிறேன். இருந்தாலும் என் தாய்நாட்டை நான் மறக்கவில்லை. அதற்காகத்தான் நான் தங்கியிருக்கிற இடத்தையும்கூடப் பெயர் பார்த்து எடுத்து வைத்திருக்கிறேன். தெரியுமா?”

“எங்கே தாத்தா?”

“செட்டித் தெருவிலே இருக்கே! அதுதான் அந்த பாரதமாதா பில்டிங். அதிலேதான் இருக்கிறேன். அங்கே எனது நாடு பாரத மாதா. இங்கே எனக்கு வீடு அவள். எப்படியோ அவளை நான் மறக்கவில்லை. இங்கேயும் அவளை விட்டு விலகவில்லை. கவனித்தாயா?”

அம்மாவுக்கு அப்போதுதான் தான் கேட்க மறந்த ஒரு கேள்வி நினைவுக்கு வந்தது.

 “தாத்தா நீங்கள் சாஸ்திரம் பற்றி நிறைய படித்திருக்கிறீர்களா?”

“எனக்குக் கொஞ்சம் தெரியும் என்பதுதான் சரி. கடல் நீரை வாய்க்குள்ளே ஊற்றிக் குடித்துவிட  முடியாது. அது போலத்தான் கல்வி சார்ந்த இவையும். என்று பலரும் சிந்திப்பதில்லை. அதனால்தான் பொய்காரர்கள் இதிலே பணம் பண்ண பட்டம் விடுகிறார்கள்.
எதிலுமே ஆழம் தெரியாமல் அபிப்பிராயம் சொல்வதுதான் பிரச்சினையாக இருக்குமே தவிர, கணிப்பு கணிப்புத்தான். கணக்கு கணக்குத்தான். அதில் சிறிது பிழையானாலும் பிழைதான். அது குற்றம்தான்.”

அவர் தொடர்ந்தார்:

“நான் அங்கே ஆசிரியராக இருந்தவன். எனக்கென்று பரம்பரை சொத்தும் இருக்கிறது. இன்றைக்கும் என் சொத்துக்களை என் பிள்ளைகள் தான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேனென்று யோசிக்கிறாயா? சாகிற வரைக்கும் என் கையை நம்பியே வாழவேண்டும் என்று  சத்தியம் எடுதது வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்”

அம்மா ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அவர் மேலும் தொடர்ந்தார்.

 “சரியானவன் சரியாக கணக்குப் பார்த்தால் எல்லாமே சரியாகத்தான் வரும். ஆனால் கள்ளன் கள்ளத்தனமாகக் கணக்குப் பார்த்தால் எல்லாமே தவறாகத்தான் வரும். இன்றைக்கு இந்த அரிய சாஸ்திரங்களுக்கும் அதுதான் நடந்திருக்கின்றது.”

எண்ணெய் தாத்தா தனது தோளில் கிடந்த துண்டை எடுத்துக் கழுத்திலும் முகத்திலும் வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்துக்  கொண்டார்.

“என் வழி சுதந்திரமாகவே இருந்து கொள்வது. அதற்கு தொழில் செய்து சம்பளத்துக்குக் காத்துக் கொண்டிருக்கிறது ஒத்துக் கொள்ளவில்லை. அதனாலே சொந்தமாக இறங்க முடிவெடுத்தேன். அவனுக்குத் தெரியும் என்னை எங்கே, எப்போது, எப்படி வைக்கிறதென்று. அதனாலே நான் கவலையே படுவதில்லை. ஆனால் மற்றவர்கள் கவலையிலே இருக்கிறதைப் பார்த்தால்தான் எனக்குக் கவலையாக இருக்கும்.”

“நீங்கள் சாஸ்திரம் பாத்தாலே நல்ல வருமானம்  வருமே தாத்தா! இப்படிக் கொடும் வெய்யிலிலே அலையத் தேவையில்லையே!”

“அம்மா, இந்த சாஸ்திரம் என்கிறது சும்மா ஒருத்தர் தனது  வயிற்றை நிறைத்துக் கொள்ள  வந்த கலையல்ல அம்மா! இது மற்றவர்களுக்கு உதவி செய்யத்தான் வந்தது. என்றைக்கு கள்ளப் பயல்களெல்லாம் சாமி, சன்னியாசியென்று வேடம் போட்டுக் கொண்டு இதைக் கையிலே எடுத்தார்களோ, அன்றிலிருந்து இதற்கு மரியாதையும் இதன் மீது நம்பிக்கையும் குறைந்து போய் விட்டது.”

அவர் தன்னைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து கொண்டார்.

"சொன்னால் நம்புவாயோ என்னவோ...நானறிய உண்மையான சாஸ்திரி என்று சொல்லிக்கொள்ள எவனுமே இன்றைக்கு இல்லை. இருக்கலாம். ஆனால் நான் சந்தித்ததே இல்லே. இப்போது பார். உன் கையை பார்க்க நான் காசா கேட்டேன்? அப்படிக் கேட்டா அது சேவையில்லை. ஏமாற்று. புரிகிறதா?”

அம்மா வாயை மேலும் திறக்கவே இல்லை. அன்று விடை பெற்றுச் சென்ற எண்ணெய் தாத்தா அதன் பிறகு கொஞ்சக் காலம்  வரவே இல்லை.
                                                           
                                                   .............................

க்கத்து சனங்களும் அவர் வருவது தவிர்ந்ததன் பலனாகப் படிப்படியாகப் பழையபடி சில்லறைக் கடைகளையே நாடத் துவங்கியிருந்தனர். சில மாதங்கள் கடந்து விட்டன. அதற்கிடையில் திடீரென்று ஒரு சம்மந்தம் கைகூடி வந்து பௌர்ணமியின் திருமணமும் நடந்து விட்டது.

நரேஷ் வீட்டில் எல்லாருக்குமே ஒரே மலைப்பும் அதிசயமுமாக இருந்தது. நரேஷின் அப்பா பாரதமாதா பில்டிங்ஙிற்குப் போய் தாத்தாவைப் பற்றி விசாரித்ததில் அவர் இந்தியாவுக்குச் சென்று விட்டதாகத் தெரிந்தது. தாத்தாவின் எண்ணெய் வசூல் பணமும் கொஞ்சம் நரேஷின் அம்மாவிடம் இருந்ததால் அவர் பெரிதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தத்துடன் “சின்னப் பையா! சின்னப் பையா!” என்றும் கேட்டது.

“ஹையா! அம்மா...எண்ணெய் தாத்தா வந்திருக்கிறார்கள். ஓடி வாருங்கள்”

அம்மா பௌர்ணமியை சட்டென்று அழைத்து காதில் குசுகுசுத்தார்.“பௌர்ணமி, நீ கழுத்தை மூடிக் கொண்டு நில். தாத்தா கண்டு பிடிக்கிறாரா என்று பார்ப்போம்.”

தாத்தாவை வரவேற்று உபசரிக்கையில் அவர் பௌர்மியைப் பார்த்தார். பிறகு சிரித்தார்.“கண்ணாடிப் பெட்டிக்குள்ளே கள்ளப்பயலுக்கு ஒளிந்து கொள்ள முடியாதம்மா. சும்மா உனது தாலி தெரிய முந்தானையை சரி செய்து கொள். மாங்கல்யம் விளையாட்டுச் சாமானல்ல.”

பௌர்ணமி நாணிக் குறுகி நிற்க, அம்மா வந்து தான்தான் சும்மா விளையாட்டுக்காக அப்படி வரச் சொன்னதாகச் சொல்லிச் சமாளித்தார். அம்மா அவருக்கு நன்றி சொன்னபோது நாத் தளுதளுத்து அழுதே விட்டார்.

தாத்தா சிரித்தவாறே சொன்னார். “அம்மா! ஐந்தும் ஒன்றும் என்றைக்குமே ஏழாக மாற முடியாதம்மா. தலைவிதியும் அப்படித்தான். தனியாகவோ கூண்டோடேயோ எழுதினபடிதான் நடக்கும். இதிலே நம் கையிலே எதுவுமே இல்லை”

சிறிது நேரம் கழித்து அவர் புறப்பட்ட போது அம்மா அவருடைய எண்ணெய் வசூல் பணத்தை அவரிடம் ஒப்படைத்தார். தாத்தா விடைபெறுமுன் ஓர் அதிர்ச்சியான செய்தியைத் தெரிவித்தார். தான் இனி தொழில் செய்வதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகவும் ஓய்வு எடுக்கப் போவதாகவும் சொன்னவர் விடைபெறுமுன் கடைசியாகச் சொன்னார்.

“இன்றைக்குப் போகிற நான் இனிமேல் வரமாட்டேன். சரியாக இன்னும் மூன்று வாரத்திலே இருபத்தி மூன்றாந்தேதி நான் போய் விடுவேன்.”

“ஏன் தாத்தா இவ்வளவு நன்றாகப் பழகி விட்டு திடீரென்று போகப் பார்க்கிறீர்கள்? இன்னும் கொஞ்ச நாள் இருந்து விட்டுப் போங்களேன்!”
அம்மா ஆதங்கத்தோடே சொன்னார்.

 “நம் கையிலே எதுவுமே இல்லையம்மா எல்லாம் அவனோடே சித்தம். அதனாலே வருத்தப்படாதே! நான் போனாலும் உங்களையெல்லாம் மறந்து விட மாட்டேன். நம்பு”

எல்லாருமே கவலையுடன் நிற்க அவர் விடைபெற்றுப் போய்விட்டார்.
இவ்வளவு காலமும் நன்றாகப் பழகி விட்டு, இப்போது திடீரென்று தங்களைப் பிரிந்து தாய் நாட்டுக்குத் திரும்பிப் போகின்றாரே என்று எல்லாருக்கும் ஒரே கவலையாக இருந்தது.

மனித உணர்வுகளில் இறைவன் கலந்திருந்து வாழ்வதை இப்படிப்பட்ட அனுபவங்கள்தான் உறுதி செய்கின்றன என்று நம்பலாமா? பழுக்கும் பருவத்தில் பறித்தெடுக்கும் தாக்கத்தின் அனுபவம் எத்துணை கொடுமையானது?
                                                                 ..................................
நாட்கள் கடந்து கொண்டிருந்தன. இருபத்தி இரண்டாம் தேதி. நரேஷின் அம்மா திடீரென்று அப்பாவை அழைத்தார்.
“அந்த தாத்தா  நாளைக்கு ஊருக்குப் போயிடுவேன் என்று சொன்னாரே! மறந்து விட்டோமே! நம் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய உதவியைச் செய்த பெரிய மனிதர் அவர். போய்ப் பார்த்துவிட்டு வருவோமே!”

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் முழுக் குடும்பமும்  பௌர்ணமியின் கணவரையும்  சேர்த்துக் கொண்டு பாரத மாதா பில்டிங்கிற்குள் நுழைந்து தாத்தாவை விசாரித்தது. அவர் சுகமில்லாமல் படுத்திருப்பதாக அறையைக் காட்டியவர் ஒரு செய்தியையும் தெரிவித்தார். அனைவரும் உள்ளே நுழைந்தார்கள்.

தாத்தா ஒரு மரக்கட்டிலில் படுத்திருந்தார். இவர்களைக் கண்டதும் இலேசாக இருமியபடி வரவேற்றவர், மாப்பிள்ளை பக்கமாகத் திரும்பி “தம்பி எப்போ அம்பாறையிலே இருந்து வந்தீர்கள்?” என்று விசாரித்தார்.அவர் அம்பாறையில் கல்லோயா அபிவிருத்திச் சபையில் வேலை பார்க்கும் செய்தியுட்பட பலதையும் அம்மா மூலம் கடைசியாகச்  சந்தித்த அன்றே தாத்தா அறிந்திருந்தார்.

“நேற்றுத்தான் ஐயா. உங்களைப் பற்றி எல்லாருமே ரொம்பவும் சொன்னார்கள். இப்படி சுகமில்லாமல் இருக்கும்போது ஏன் ஊருக்கு அவசரப்பட்டு போகப் போகிறீர்கள்? சுகப்பட்ட பிறகு மெதுவாக ஒரு மாதம் கழித்துப் புறப்பட்டால் என்ன தாத்தா?”

தாத்தா சிறிது இருமினார். பிறகு... “நான் ஊருக்குப் போகப் போகிறேனென்று சொல்லவே இல்லையே! யார் சொன்னது அப்படி?”  என்று புத்தம் புது குண்டொன்றைப் போட்டார்.

அம்மா பதறியே விட்டார். தன்னைப் பொய் சொன்னதாக அவர் மருமகனிடம் சொல்லி விடுவாரோ என்ற பயம் அவரிடம் சூழ்ந்து கொண்டது. படபடவென்று...

.“என்ன தாத்தா ! நீங்கள்தானே எங்கள் எல்லார் முன்னாலும் சொன்னீர்கள். இப்போது இல்லையென்கிறீர்களே!”

தாத்தா ஊருக்குப் போக மாட்டார் என்ற செய்தி எல்லாருக்குமே ஒருவிதத்தில் ஆறுதலாகவே அப்போதைக்கு இருந்தது.

ஆனால்....அடுத்து பெரியவர் சொன்ன பதிலால் முழுக் குடும்பமே பதறிப் போய் விட்டது.

“அம்மா நான் போகப் போகிறேன் என்று சொன்னது எனது ஊருக்கில்லை  அவன் கிட்டே. ஏனென்றால் எனது உலக வாழ்க்கை இன்றுடனே  முடிந்து விடும். நாளைக்கு நான் போய் விடுவேன். புரியவில்லையா? உன் பாஷையிலே சொன்னால் இன்றைக்குத்தான் எனக்குக் கடைசி நாள். நாளைக்கு நான் இறந்து விடுவேன்.”

நம்புவதா? மறுப்பதா? இது நடக்குமா? நடக்கக் கூடியதா?

ஒருவேளை பெரியவர் ஏதாவது குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருந்தாரா?

 “தாத்தா தப்பாக எதையாவது செய்து விடாதீர்கள். நாங்கள் நல்ல டாக்டரிடம்  உங்களைக் கொண்டு போய்க் காப்பாற்றுகிறோம். கவலைப் படாதீர்கள். நாங்கள் இருக்கிறோம். எங்களோடேயே வேண்டுமென்றாலும் தங்கிக் கொள்ளலாம் நீங்கள்.”

நரேஷின் அம்மா உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சற்று சத்தமாகவே பேசினார். அவருடன் அனைவரினதும் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன. தாத்தா ஒருவிதமான இனம்புரிய முடியாத கவலையுடன் முறுவலித்தார்.

“அம்மா நாம்தான் தப்பு செய்வோம். அவன் சரியாத்தான் எல்லாமே செய்வான். நம்மாலே அவனைப் பற்றி  சரியாப் புரிந்து கொள்ள முடியாதென்கிறபடியால்தான் சும்மா பயப்படுகிறோம். என் கணக்குப்படி என் உலகத் தலையெழுத்து நாளையோடே நிறைவு பெறும் என்று இருக்கிறது. அதை அவனாக மாற்றுவானென்று நான் நம்பவில்லை. பார்ப்போம். எனக்கென்றால் அவன் விரும்புவது எப்படியிருக்குமோ என்று சந்தேகப்படுவது சரியெனப் படவில்லை.”

ஏனோ பெரியவரின் கண்கள் கலங்கிக் கொண்டன. மனம் நிறைந்த பாசத்துடன் அவரை அனைவரும் அழுதவாறே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 “எல்லாரும் நிம்மதியாகப் போய் விட்டு நாளைக்கு வாருங்கள். நான் ஊருக்கும் தெரிவித்து விட்டேன். அவர்கள் யாராவது வந்தால் கண்டிப்பாக சந்தித்துக் கொள்ளுங்கள். சரியா?”

அமைதியாக சில நிமிடங்கள் முழுக்குடும்பமுமே சிலையாகி நின்றது. பிறகு எல்லாரும் விடை பெற்றார்கள். ஒவ்வொருவராக அவர் அழைத்து ஆசீர்வதித்த போது அங்கே ஒரு பாச நதி கண்ணீராக வடிந்து ஓடிக் கொண்டிருந்தது.

வெளியே வந்த போது, அவரது அறையை அடையாளங்காட்டிய மனிதரை நரேஷின் தந்தை அழைத்துப் பெரியவரைக் கவனித்துக் கொள்ளும்படியும் காலையில் வருவதாகவும் தெரிவித்தார்.

பொழுது விடிந்து பத்து மணியாகியது. அப்பா அன்றைக்கு வேலைக்குப் போகவில்லை. ஏனோ எல்லாரின் மனங்களையும் ஒருவிதமான பதட்டம் ஆட்கொண்டு அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

அம்மாவின் உதடுகள் வெளிப்படையாகவே “ தெய்வமே! தெய்வமே!” என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.

எல்லாருமே புறப்படுகையில் மணி பதினொன்றரை. அனைவரும் பெரியவர் இருந்த இடத்தை நெருங்கியபோது முன் சன்னலில்  வெள்ளைக் கொடியொன்று பறந்து கொண்டிருந்தது தெரிந்தது.

சமாதானத்துககான அடையாளமான அதைத்தானே மரண செய்திக்கும் துக்கத்துக்கும் அடையாளமாக....?

ஆம்,  பாரத மாதாவின் இலங்கை மடியில் அந்த இந்தியக் குழந்தையின் உயிர் பிரிந்த வயதான உடலம் ஓய்வாகப் படுத்திருந்தது. மிகவும் எளிமையுடன் வாழ்ந்து மறைந்த அந்தப் பெரிய மனிதரின் உடலின் அருகில் இருவர் மட்டுமே இருந்தார்கள். உலகிற்கு அன்னியமாகி விட்ட அவருக்கருகில் நரேஷின் குடும்பமும் சூழ நிற்கையில் அவர்களில் ஒருவர் சொன்னார்.

“நாளைக்குத் தகனம் செய்ய ஊரிலிருந்து இரு மகன்கள் வருகிறார்களாம்”

ஓர் உயர்ந்த அனுபவ சகாப்தம் அன்று முழுவதும் ஊர் உணராத  தன்னந்தனியான சவமாக  இருந்து விட்டுஈ மறுநாள் தீயுடன் சங்கமமாகித் தனது குடும்பத்தாரின் கரங்களுக்குள் அமைதியாக அமர்ந்து தனது சொந்தத் தாய் நாட்டுக்கு  “அஸ்தி” என்ற பெயருடன் சாம்பலாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

தான் காலத்துடன் கலந்து போகப் போவதை முன்னமே உணர்ந்த அந்த அனுபவத்தின் பிம்பம் காட்டிச் சென்ற உண்மை என்ன?

கல்லில் காரணம் தேடலாம். கடவுளில் அது ஆகுமா?

நம்மைச் சுமக்கும் காலமே அதைச் சொல்லட்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக