வியாழன், 11 அக்டோபர், 2012

இயற்கைபோல் காட்டப்படும் செயற்கையும் இறைவனை அதற்குள் வைக்கும் வஞ்சகமும். (கட்டுரை)

ல்ல இதயங்கள் எப்போதும் மற்றவரின் நன்மைகளிலேயே நாட்டங் கொண்டிருப்பது இயற்கை.

நல்ல பெற்றோரும் நல்ல ஆசிரியர்களும் நல்ல நண்பர்களும் அமையப் பெற்றதாக ஒரு வாழ்க்கை கிடைக்குமென்றால் அப்பேற்றுக்கு உரியவர்தான் கொடுத்த வைத்தவர் எனப்படத்தக்கவர்.

நல்லவையென்பன வாழ வைக்கவும் தீயவை என்பன நாசஞ் செய்யவும் என்ற இருவித இயக்க அடிப்படையிலேயே
அனைத்தின் இயக்கங்களும் இறைவனால் வகுக்கப்பட்டு அளிக்கப்பட்டிருக்கின்றன.

அதனால்தான் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.இவற்றில் நல்லவை எவையென்றும் தீயவை எவையென்றும் கண்டுணர்ந்து, தீர்வெடுத்துக் கைக் கொள்கின்ற விதத்தைப் பொறுத்துத்தான் நல்லவர்களும் கெட்டவர்களும் தெரிவாகுகின்றார்கள்.

அதே சமயத்தில் இக்குணங்களைக் காவிக் கொண்டு இயற்கையாகவே இக்குணங்களில் பிறக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். உண்மையில் இவர்கள்தான் உண்மையான கெட்டவர்களும் நல்லவர்களுமாக இருக்கின்றவர்கள்.

சிறுபான்மையினராகிய கெட்டவர்களிடமிருந்து தொற்றுகின்ற குணப்பரவல்களே சாதாரண நல்ல மக்களின் மேல் தீயவர்களை ஆக்குகின்ற தாக்கங்களாகப் படிகின்றன என்று நினைக்கின்றேன்.

இப்படிக் கருதுவதற்கொரு நியாயம் இருக்கின்றது. ஞானிகளாகவும் மகாத்மாக்களாகவும் சத்தியவான்களுமாகவும் கொடுங்கோலர்களாகவும் மாபாதகர்களாகவும் பெருங் கயவர்களாகவும் சரித்திரத்தில் பதிந்திருப்பவர்கள் யார் என்று தேடினால் மிகச் சொற்பமானவர்களே அதற்குள் இருக்கின்றார்கள்.

ஆனால் அவர்களினால் பாதிப்புற்றவர்கள்தான் கோடிக் கணக்கில் இருந்தார்கள், இருந்து வருகின்றார்கள். ஆக, விதைகளாக இயற்கையாகவே நல்லவையும் கெட்டவையும் இருந்து வருவதும் அவைகளின் தொடர்புகளினால் வளர்ந்து விட்டவையே மீதி என்பதுவும்தான் உண்மை. அல்லவா?

இந்த வறுமையை அதாவது ஏழ்மையைச் சற்று பார்ப்போம். உண்மையில் அது தேவைக்கேற்ப, தேவைப்படுவன கிடைக்காமையினால்தான் உருவாகுகின்றது என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் சற்று ஆழமாகப் பாருங்கள்!

கிடைக்காமையினாலா கிடைக்க விடப்படாமையினாலா? எது சரி?

முதல் வரிதான் விடைபோலத் தெரிந்தாலும் இரண்டாவது வரிதானே அடிப்படையாக இருக்கின்றது? ஆதிகால பண்டமாற்று முறைகளின் சிரமத்தைத் தவிர்க்கத்தான் பணம் மனிதரால் உருவாக்கப்பட்டதே தவிர, அது இறைவனால் தரப்பட்ட வழியல்ல. அந்த மனித வழியில் பிறந்ததே வறுமை. அல்லவா?

விலங்குகளும் பறவைகளும் மரங்களும் புல் பூண்டுகளும் கூட ஒரு நியதிப்படிப்படி, உறுதியிலும் உறுதியாகக் காலம் காட்டும் வழிகாட்டலுக்கு ஏற்ப மட்டுமேதான் வாழுகின்றன. அவை நமது வறுமை சூழ வாழ்வதே இல்லை. தத்தனது தேவைக்காக அததற்கு உரிய வழிகளில் மட்டுமே அவை உழைத்து வாழுகின்றன.

அவற்றுக்குள் ஒன்றினால் மற்றொன்று வாழ்ந்து கொள்ளும் ஓர் அரிய சீவ ஓட்ட சக்கரமே விதியாய்ச் சுழன்று வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றது.

அவை கோயில் கட்டிக் கடவுளைத் தேடிக் களைக்காமல் தம் கடமையினால் அவனோடே இணைந்து வாழுகின்றன. கடவுளை மதித்து நடப்பதே சரியான வழிபாடு என்று அதிலிருந்து கூட நாம் கற்றபாடில்லை.

தனது வசதிக்காகப் பணத்தைப் படைத்த மனிதன்தான் தனது சொந்த சுகத்துக்காக அதனையே துர்ப்பயன் செய்து சுயநலத்தில் வீழ்ந்து, ஒதுக்கிப் பதுக்கிப் பிறர்க்குக் கிடைக்காமல் செய்து தனது சுயநலத்தால் மற்றவர்களுக்கு வறுமையைத் தானாகவே வலிந்து வரவழைத்துக் கொடுத்தான்.

அவனால் வரவழைக்கப்பட்ட வறுமை தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் தாக்கி விடாமல் அதிலிருந்து தப்பிக்க அவன் தொடர்ந்து பலம் பெற்றிருக்க வேண்டிய தேவை எழுந்ததால் தன்னிலும் பலம் குறைந்தவர்களே நிறைந்த ஒரு சூழ்நிலையை அவன் உருவாக்கத் தொடங்கினான்.

அதற்கு அவனுக்குத் தனக்கும் கீழ்ப்பட்ட ஒரு மனித சமுதாயம் தேவைப்பட்டது. அதை அமைக்கவும் அதையே தொடர்ந்து காத்துக் கொள்ளவும் அவன் வகுத்த சதிதான் இந்த வறுமையும் அதை வளர்க்கவும் காத்து வரவும் அவன் கடைப்பிடிக்கத் தொடங்கிய முதலாளித்துவக் கொள்கைகளும்.

இந்தச் சுயநல வடிவத்தின் வலைக்குள் விழுந்து விட்டதால்தான் மதத்துக்குள்ளும் சாதி ஏற்றத் தாழ்வுகளும் ஆண் பெண் ஏற்றத் தாழ்வுகளும் இறைவனின் பக்தியை வலுப்படுத்தும் வழிகளாகச் சேர்க்கப்பட்டுத் தொகுக்கப்பட்டன.

வேத நூல்களை எழுதியவர்கள் நீதியை மறைக்க முடியாமல் தவித்தாலும் தங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் தந்திரங்களை மிகவும் சாதுர்யமாகவே சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் கலந்து விட்டுத் தங்களைப் பாதுகாத்துக் கொண்டடு இருக்கின்றார்கள்.

அதைச் செவ்வனே செய்து கொள்ளத்தான் இறைவனைப் பற்றிய பயவுணர்வுகள் ஊட்டப்பட்டுள்ளன எனலாம். தனது இறைவனைத் தானே நெருங்க முடியாத சூழ்நிலை இருப்பது ஏன் என்று கூட சிந்திக்காதபடிக்கு ஏழ்மையை அழுத்தமாகப் பரவ விட்டு இருப்பதால் சிந்திக்கும் உரிமையைக் கைவிட்டு விட்டு, அதுதான் தனது தலைவிதி என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றது சமுதாயங்களின் பெரும் பகுதி.

மிகவும் பக்குவமாக ஏழைகளின் மதப் பற்றினை வெறியுணர்வாக உருவாக்கி வைத்துக் கொண்டு, சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப,ஏழைகளை ஏவிவிட்டுக் காரியங்களைச் சாதித்தவாறே இந்த மதமுதலாளித்துவம் தனக்கு அரணமைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த இரகசியத்தை உடைக்கும் சிந்தனைவாதிகளைத் தான் நாத்திகர்கள் என்று பட்டம் கட்டி அவர்கள் சொந்த கைவிரலைக் கொண்டே கண்ணைக் குத்திக் கொள்ள வழி உருவாக்கப் பார்க்கின்றார்கள்.

இதில் இந்த வழிகாட்டவரும் நாத்திக சிந்தனாவாதிகள் செய்கின்ற மாபெரும் தவறு என்னவென்றால் நரிகளை விட்டு விட்டு அவை ஆடுகளிடமிருந்து பறித்திருக்கும் நம்பிக்கை வேலிகளையே உடைக்க முனைவதுதான்.

இதனால் ஆடுகளுக்கே இவர்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த இலட்சணத்தில் ஆங்காங்கே அரைகுறைகள் வேறு எழுந்து சிந்தனாவாதிகளாகப் படம் காட்டிப் பெயரெடுக்க, சும்மா நம்பிக்கைத் தகர்ப்புக் கருத்துக்கள் என்ற பெயரில் அட்டைக்கேடய  மேதாவிகளாக முற்படுகின்றார்கள்.

எந்த அரசியல்வாதியும் வறுமையிலிருந்து நாடு விடுபட ஒத்துழைப்பதே இல்லை. காரணம் அதில்தான் அவனது பிழைப்பே இருக்கின்றது. அந்த அளவிற்கு ஊழல். மதங்கள் எல்லாம் முதலில் மக்களுக்கு ஏற்றத் தாழ்வு இல்லாமல் செய்ய தங்களின் சட்டங்களையே கிண்டத் தொடங்க வேண்டும்.

பழைய கயமைகளைக் களைந்து, புதிய மறுமலர்ச்சியுடன் மதங்கள் முதற்கண் ஏழைகளுக்கெல்லாம் கல்வியில் நாட்டத்தையும் சுய நம்பிக்கையில் ஆர்வத்தையும் மதக் கடமைகளாக அழுத்திச் சொல்ல வழி செய்ய வேண்டும். பணக்காரனின் ஆடம்பர விழாச் செலவுகளின் ஒரு பாகத்தை இதற்காகச் செலவழிக்க முன்வந்தாலே அடுத்த தலைமுறை தலை நிமிர்ந்துவிடும்.

இறை பக்தி நிலைக்க வேண்டுமென்றால் ஏழ்மையை ஒழிக்கும் தைரியமுள்ளவர்களையே மதத் தலைவர்களாக அங்கீகரிக்க வேண்டும். வசதியுள்ளவர்களின் திருபதிக்காக வசதியற்றவர்களை அவமதிக்கும் மதக் கலாச்சாரங்களை அள்ளிக் குப்பையிலே போட வேண்டும்.

இங்கே வெளிநாடுகளிலே கீழ் சாதிமக்கள் என்று எந்தத் தெர்ழிலுக்காக ஏழைகளைச் சாதிகளின் பெயரால் தங்களின்  சொந்த ஊர்களில்எவரெவர்  இகழ்ந்தார்களோ, அவர்களே அதே தொழிலை வேறு வழியே இல்லாமல் செய்து கொண்டிருப்பதை நாம் அறிய வேண்டும்.

மக்களைத் தாழ்வு மனப்பான்மையுடன் பழக்கி வந்த பாவத்தால்தான் அவர்கள் மனதாலும் செயலாலும் தரம் தாழ்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களைத் தரம் கூடும் விதத்தில் படிப்படியாக வழிகாட்டி, வழி நடத்தி, வளர்த்து விட்டால் அனைவரும் சம கௌரவத்துடனான தலை நிமிர்ந்த சமுதாயமொன்று உருவாகி விடுமே!

ஆனால் அப்படி நடந்தால் தங்கள் பரம்பரை வழி வந்த போலி கௌரவத்தை இழந்த விட நேருமே என்ற பயமே இதற்குத் தடைகளை விதிக்கின்றது.

நல்லொழுக்கத்தைச் சரியாக வரையறுத்து, வழி வகுத்து, அதையே மதத்துக்குள் நெறிப்படுத்திச் சரியாகவும் கடுமையாகவும் பயன்படுத்தாமல் கடந்த கால கற்பனைக்கெல்லாம் காரணங்கள் தேடி நியாயப்படுத்தி, தம் மதத்தை உயர்த்திக் காட்டிப் பிற மதங்களைத் தாக்குகின்ற நெறிகளினால் மக்கள் மனங்களில் மதம் பிடிக்குமா அல்லது மதப்பற்று  வளருமா?   சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஓரின மக்கள் நாலினமாகப் பிரிவதற்கு ஏதாவது காரணமாக இருந்தால் அது ஆபத்தாகத்தான் இருக்குமேயன்றி அறிவாகவோ நம்பிக்கையாகவோ சரியாகவோ என்றைக்குமே இருக்காது.

யானைக்குப் பிடிப்பதைத்  தம் தலைகளுக்குள் இழுத்தலையும் சமுதாயங்கள் இதனை உணர்ந்து திருந்தும் நாள் பிறக்க இயன்ற வரையில் அனைவருமே ஏதாவதொரு விதத்தில் பணி செய்தாக வேண்டும்.

அதற்குச் சங்கப் பட்டாளங்கள் தேவையில்லை. தனிமனித மனமாற்றமும் கருத்துத் தெளிவு ஆர்வமுமே முக்கியம். இயல்பாகப் பிள்ளை பிறக்க முடியாத நிலை எழுந்தால் அதற்காகத் தாயையும் பிள்ளையையும் சாக விடுவதில்லை. தாயின் வயிற்றைக் கிழித்தாவது குழந்தையைக் காத்து தாயையும் மீட்டு விடவே முயலுவார்கள்.

அறிவாளிகள் கூடி என்றைக்கு மதங்களுக்கும் சிந்தனை “சிசேரியன்”  செய்ய முன் வருவார்களோ அன்றிலிருந்துதான் போலி நாத்திகத்தை மக்கள் மனங்களிலிருந்து அகற்றலில் வெற்றி கிடைக்கும்.

பக்தா! நீ தேடிடும் தெய்வம் ஏன் உன் முன் இல்லை?

பக்தா! அவன் உன்னில் உள்ளான் வெளியில் இல்லை.


பக்தா! நீ தேடும் புண்ணிய மெல்லாம் சடங்கில் இல்லை.

பக்தா! நீ பிறர்மேல் வைக்கும் அன்பினும் புண்ணியம் எதிலும்  இல்லை.


பக்தா! உன் உள்ளம் தெளிந்தால் உலகத்தின் எல்லை

பக்தா! உன் தெய்வமே காட்டும் நம்புஇச் சொல்லை.


பக்தா! நீ மதவெறியாலே மருள்வதன் தொல்லை

பக்தா! இம்மனிதத் திற்கே இழுக்குது தொல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக