செவ்வாய், 16 அக்டோபர், 2012

வதைத்து நியாயம் இழிந்ததில்லை சிதைத்து நியாயம் அழிந்ததுமில்லை (கவிதை)









இத்தனை இன்னுயிர்கள் எதற்காக இறந்தார்கள்?
இத்தனை பொதுமக்கள் எதற்காக இறந்தார்கள்?
இத்தனை பொதுச் சொத்தை எதற்காக அழித்தார்கள்?
இத்தனை பொறுமைக்கும் எதை பதிலாய்த் தந்தார்கள்?



பச்சைக் குழந்தைகளையும் பள்ளி செல்லும் கன்னியரையும்
இச்சை எதில் கொண்டு சிதைத்துஅதில் மகிழ்ந்தார்கள்?
கொச்சைத் தமிழில்சில சொல்சொல்லி உலகமெல்லாம்
மிச்சம் இருப்பவரை இணைத்திடவா நினைத்தார்கள்?

நியாயம் கொல்வதற்கு நியாயம்போல் பேசுவதால்
நியாயங் களிலையம் ஊட்டிஎதில் வென்றார்கள்?
பாவங் களைச்செய்தால் பாதகர் தமைவளர்த்தால்
யாவும் சரியெனவே எவ்விதத்தில் உணர்ந்தார்கள்?

கள்ளிச் செடிகளினால் படுக்கை தனையமைக்கும்
கள்ளத் தனவழியில் ஏதிலியாய் வகுத்தார்கள்
முள்கம்பி வலைமைத்தும் துவக்குடனே சூழநின்றும்
எள்ளளவும் இரக்கமின்றி ஏனிவ்வண் வதைத்தார்கள்?

எதற்கும் நல்முடிவு நீதியுடன் சேர்ந்துவரும்
எவர்க்கும் செய்பழிக்கு பலன்பழியாய்ச் சூழ்ந்துவரும்
உவர்க்கும் விதம்நடத்தி உவக்கும் பாதகர்க்கு
உலகம் விளங்கும்விதம் இறைவழியில் இழிவுவரும்

நசுக்கிச் சிதைத்தாலும் நீதியது சாகாது
கசக்கிப் பிழிந்தாலும் நீதியது சாகாது
தீவைத்துத் தீயினையே அணைப்பதற்கு முடியாது
நீதிக்கு அநீதியினால் அழிவிழிவு கிடையாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக