புதன், 10 அக்டோபர், 2012

விழியிழந்தும் வாழலாம்; மொழியிழந்து வாழமுடியுமா?

குறைகள்சொல்லும்  மனிதர்விட்டு விலகிநின்று  வாழலாம்
வரையறுத்து வாழ்க்கைதன்னை  அமைத்துஎங்கும் வாழலாம்
தரமுணர்ந்து நண்பர்சேர்த்து உயர்ந்திணைந்து வாழலாம்
விழியிழந்தும் வாழலாம் மொழியிழந்து வாழமுடியுமா?

பலமிழந்த நிலையில்கூடப் பிறர்துணையில் வாழலாம்
புலமிழந்த போதும்வேறு நாட்டில்சென்று வாழலாம்
கலவரங்கள் பரவும்போது பதுங்கித்தப்பி வாழலாம்
விழியிழந்தும் வாழலாம் மொழியிழந்து வாழமுடியுமா?

நண்பரில்லா நிலைகள்வரின் தனித்திருந்து வாழலாம்
நன்றியில்லா மனிதர்களைத் தவிர்த்துவிட்டு வாழலாம்
வலிசுமந்தும் இடமிழந்தும் உடல்தளர்ந்தும் வாழலாம்
விழியிழந்தும் வாழலாம் மொழியிழந்து வாழமுடியுமா?

தடைநிறைந்த சூழல்களைத் தாண்டிவென்று வாழலாம்
படைகள் செய்யும் கொடுமையிலும் முயன்றுமீண்டு வாழலாம்
அறிவைச்சேர்த்து வறுமைவென்று வெற்றிபெற்றுக் கொள்ளலாம்
விழியிழந்தும் வாழலாம் மொழியிழந்து வாழமுடியுமா?

மொழியிழந்து  மனிதர்களின் இரக்கமற்ற செய்கையால்
இதயம் நொந்து துயர்சுமந்தும் மனபலத்தால் வாழலாம்
பழிசுமக்கும் நிலைமைவரின் தைரியத்தால் வாழலாம்
விழியிழந்தும் வாழலாம் மொழியிழந்து வாழமுடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக