ஞாயிறு, 14 அக்டோபர், 2012

எல்லை எது? இல்லை அது! (கட்டுரை)






என்றும் ஒன்றே பலதாய்க் காணும் என்னும் உண்மை புரியாமல்
என்றைக்கும்நம்அறிவை வைத்து இறையை உணரல் இயலாது
ஒன்றேஎங்கும் பலதாய்ஆட்டும் பரிணாமம்தனைப் புரியாமல்
என்றும்இழப்பின் ஏக்கம்தொடரும் பரிதா பங்கள் என்றும்குறையாது

தினமும் ஒரே விதமாய்ப் பொழுது புலர்ந்தாலும் தினமும் ஒரே விதமாய் வானம் இருப்பதில்லை. வண்ணங்களில்  அமைப்புக்களில்  வடிவங்களில் அதனது தோற்றம் மாறுபட்டுக் கொண்டேதான் இருக்கும்.


ஆனாலும் வானம் அடிப்படையில் மாறாது வானமாகவே இருக்கும்.
பளிச்சென்ற நீல வானம் கார்மேகங்களால் கறுப்பாகி விட்டது போலத் தெரியும். பயமுறுத்தும். ஆனால் அது அதன் கீழ் மிதக்கும் நீர்தானென மழைதான் விளக்கும். அது விலகியபின் வானம் தனது நிரந்தரமான நிலையான உருவில் தொடர்நது தெரியும்.

மேகங்களின் தோற்றங்கள் நிலையானவையாக இருப்பதில்லை. காற்றின் தள்பலத்துக்கு ஏற்ப  அவை பலப்பல வடிவங்களாக உருமாறிக் கொண்டே இருக்கும்.

முதலில் மலைபோலத் தெரியும் மேகமே சிறிது நேரத்தில் மனித முகம்போல உருமாறும். அதுவே ஒரு சிங்கத்தலையாகவும் மரக்கொப்பாகவும் மாறி மாறி மருவுருங்களெடுக்கும்.

ஒன்றாகத் திரண்டிருந்தால் ஓருருவமாகப் பருத்து விளங்கும் ஒரே மேகம்தான் காற்றழுத்தினால் சிதையச் சிதையப் பலப்பல உருவங்கள் என்று பல மேகக் குவியல்களாக மாறிக் கொண்டிருக்கும்.

கால ஓட்டத்தின் தாற்பர்யங்களுக்கு ஏற்ப சூழ்நிலைகள்  சம்பவங்கள்  பிரச்சினைகள் என்பனவும் இப்படித்தான் பரவும் விதங்களின் தாக்கங்களினால் ஒன்றே சிலவாகிப் பிறகு பலவாகிப் பல வடிவங்களை எடுத்து விடுகின்றமை நடக்கின்றது.

2009ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் ஒன்பதாம் தேதியன்று காலை ஒன்பது மணி ஒன்பது நிமிடம் ஒனபது விநாடிகள் ஆகும் போது  ஆண்டின் கூட்டிலக்கத்தையும் வைத்தால் அது அனைத்துமே ஒன்பதொன்பதாக அதிசயமாக  அற்புதமாகத் தொடர்ந்து அமைகின்றதென்ற செய்தியை வீரகேசரி நாளேட்டில் படித்தேன்.

இது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இப்படி வருமாம். அதிசயமாகவும் அதே சமயம் அது உண்மையாகவும் இருப்பதிலிருந்து என்ன தெரிகின்றது?

இயங்குகின்ற அனைத்துமே இயங்கவில்லை  இயக்கப்படுகின்றனவென்பதும்
அதன் திட்டமிடப்பட்ட பாதை திசைமாறுவதில்லை என்பதும் திசைமாற்ற முற்படுவனவே தடுமாறுகின்றன என்பதுவும்தானே!

ஆளுருவில் ஆண்டவனைத் தேட முனையும் மனிதனுக்குத்தான் அடையாள அணிவகுப்புப் பிரச்சினையேயன்றி ஆண்டவனுக்கல்ல. அவன் திட்டமிட்டு அமைத்த அனைத்துமே செவ்வனே நடப்பதும் அதற்கு இடையூறு விளைத்தால் பயனை அனுபவிக்க வைப்பதும்தான் இயற்கையின் விளையாட்டின் விருவிருப்பான அங்கங்கள்.

ஒரு வழியில் பலமிகுந்து தெரிவது இன்னொரு வழியில் பலமிழந்து இருக்கும்.
ஒரு பூச்சியைத் தனது நாக்கினால் இழுத்து விழுங்கும் பூச்சிக்கு எதிரான தவளையின் பலம் பின்னிருந்து அந்தத் தவளையை விழுங்கும் பாம்பிடம் தோற்றுப் போகின்றது. இவற்றுக்குள்ளான இடைவெளியைக் காலம்தான் நிர்ணயிக்கின்றது.

பசிப்பதும் உண்பதும் தவிர்ப்பதும் ஏற்பதும் சார்வதும் விலகுவதும் ஏற்பதும் எதிர்ப்பதும் துணிவதும் தயங்குவதும் அடக்குவதும் அடங்குவதும் காலப்புத்தகத்தின் எழுத்துத் தொடர்பின் பக்கங்களே!

ஒன்றில் துவங்கி ஒன்றில் முடிந்து  அதினின்று துவங்கி இன்னொன்றில் முடிந்து இப்படியே முடிந்தும் முடியாத தொடர் கதைதான் காலச் சக்கரமாகும்.

அதனை உணர்ந்தவர்கள்தான் அதற்கு விதியெனப் பெயர் வைத்தார்கள். அதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் அதனை மதியால் வென்று விடலாம் என்றார்கள். ஆனால் இவ்வாறு அவர்களால் நிரூபிக்க முடிந்ததே இல்லை. ஏனெனில் அவர்கள் முனைந்த அல்லது விழைந்த அத்தனை முறைமைகளும் இந்த “விதி” முறைக்குள்ளிருந்து தப்பிவிடும் சக்தியற்று  இயல் வழமையான சுழல் வழமைக்குள்ளேயே சிக்கிக் கொள்பமைதான்.

அறிந்து கொண்டமையின் தெளிவு நிலையை அறிவு என்கிறோம். நிறைவே பெறாமல் என்றும் தொடர வேண்டிய தேவையை அது எப்போதுமே அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றது. அதனால்தான் வெல்ல முடியாத பலவீனத்தைக் கற்றது கைம்மண்ணளவு என்று குறிப்பிடுகிறோம்.

எல்லாம் அறிந்தவராக ஒருவரை இவ்வுலகம் இதுவரைக்கும் கண்டதுமில்லை  காணப் போவதுமில்லை. காரணம்  எல்லா உயிர்கட்கும் ஏதோ ஓர் சக்தி (இறைவன்) தெரிந்தியங்கும் உயிருரிமையை ஓர் அளவு அளந்து வைத்தே கொடுத்து வைத்திருக்கின்றமைதான்.

எதிலும் வெல்ல நினைக்கலாம்  முயலலாம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியப்படல் நடக்காது. அதற்குள் காலம் வாழ்வின் புதுப்பக்கத்தைப் புரட்டிவிடும்.

இந்த விளங்கிக் கொள்ளப் புதிரான இயற்கையின் சக்தியினால்தான் மனித சக்தியின் அத்தனை அறிவும் ஆற்றலும் முயற்சியும் கண்டு பிடிப்புக்களும் இன்றைக்கும் புதுப்புதுப் பாதைக்கு வழி திறப்பதாகவும் முழுமையான முடிவெடுக்க இடமே தராதனவாகவும் தொடர்ந்து வருகின்றன.

இத்தனையும் வென்ற மனிதனால் நிம்மதிக்கு ஒரு வழி தர சக்தி ஏன் இன்றைக்குமில்லை? ஏனென்றால் அச்சக்தி அவனுக்கு என்றைக்குமில்லை. அதுதான் உண்மை.

சாதகங்களுக்கு மட்டும் துள்ளும் உள்ளம் பாதகங்களில் பதுங்கி நிற்கும்.
உடல் பலமும் படை பலமும் அறிவு பலமும் ஆதிக்க பலமும் அநீதியின் பலமும் பாதகங்களின் பலமும் கபடங்களின் பலமும் ஏமாற்றுக்களின் பலமும் காலத்தின் இழுப்பினால் எப்படியும் தளர்ந்து  துவண்டு  உலர்ந்து உதிர்ந்தேதான் போகும். அதனைத் தொடர்ந்து புதிய சந்ததி அதனைப் பொறுப்பேற்கும் நிலை வரும். அனைத்துமே மாற்றமடையும்.

ஏனெனில் அதுவே நியதி அதாவது விதி அதாவது இயற்கையின் நடைமுறை. நிரந்தரமின்மையின் உத்தரவாதத்தை நிரந்தரமாக வைத்து வழி நடத்துவதே இயற்கை. அதை நடத்தும் சக்தியையே நமது சிற்றறிவுக்கேற்ப இறைவன் என்கிறோம்.

அந்த மாபெரும் சக்தியின் அச்சொட்டான  சரியான நடவடிக்கைக்கான தவணையையைத்தான் காலம் பொறுப்பேற்று நடத்துகின்றது. இயற்கையை மதிக்கும் விலங்குகளும் பறவைகளும் இனிதாகவே வாழ்கின்றன. மனிதனின் அறிவு செய்யும் பிழைகளினால் மட்டுமேதான் அவை பாதிப்படைகின்றன.

அளவை மீறிடும் அவல நினைவுகளால்தான் வறுமையும் நிம்மதியின்மையும் தடங்கல்களும் பகைமைகளும் பழிவாங்கல்களும் வாழ்வியலாக மாறிட அனுமதிக்கும் அதிபுத்தி சீவிகளாக மனிதர்கள் நாம் அலைக்கழிந்து கொண்டு இருக்கிறோம்.

இன்றைய உலகில் தைரியமாகவும் தெளிவான  உத்தரவாதம் தரத்தக்க எதிர்கால சிந்தனையுடனும் வழிகாட்டும் ஒரு முழுமைபெற்ற மனிதனையாவது எவராலும் எங்கேனும் காட்ட முடியுமா? முடியவே முடியாது. காரணம்  இயற்கையில் அதற்கு அனுமதி இல்லை.

எங்கணுமே பொய்களே மெய்களாகப் பாசி படர்ந்து கிடப்பதும்
சரியும் நீதியும் மனிதாபிமானமும் ஒற்றுமையுணர்வும் இன்றைக்குப் பின்பற்றுதற்கு உயிராபத்தான குணங்களாக இலக்கணம் வடிக்கப்பட்டிருப்பதும் இயற்கையின் நியாயத்துக்கான வெற்றியின் பக்கங்கள் புரட்டப்படும் காலம் நெருங்குவதைத்தான் நமக்கு உணர வைக்க வேண்டும்.

நிரந்தரத்தையும் நிரந்தரமின்மையையும் நிர்ணயிப்பது காலமேயன்றி நாமல்ல.காலமே இயற்கையின் செயற்படுத்தும் இயந்திரம். அதனை என்றுமே அந்த சக்தி சரியாகவே செய்து வரும் என்பதால் நியாயம் சார் மனிதர்களும் நீதி சார் உள்ளங்களும் நல்லதை விழைகின்ற மக்களும் தளர்வதும் சோர்வதும் விடுத்து  தத்தம் கடமையைத் தாமே செய்து வரல்தான் இயற்கைக்கு நமது நன்றியாக அமையும்.

மண்ணும் விதையும் நீரும் உனக்கென தரப்பட்டவை. மண்ணைக் கிளறி  விதையைப் புதைத்து  நீரை விட்டு வளர்ப்பதே உன் கடமை. அதுவே பலவாகப் பயிராகி உன் பசி தீர்க்கும்.

உன் கடமை நீ உணர்ந்தால் உன்னிறைவனுன் னுடனிணைவான்
உன்பொறுமை அதில் தொடர்ந்தால் உன்னுடனே அவன்வருவான்
உன்உள்ளம் உன்அறிவில் உன்கருத்தில் சரி உணர்த்தின்
உன்சக்திக் கேற்பஉனது பணிதொடர்ந்தால் இறை தருவான்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக