ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மன வடிவங்கள் (கவிதை)




வருத்தத்தைத் தருகின்ற வலியதனை
   வேதனை என்கின்றார் உணர்ந்தவர்கள்
கருத்துக்குச் சரியாகப் படுவதனைச்
    சிறப்பென்று போற்றுவார் படித்தவர்கள்
உருவுக்கு உயிர்கூட்டும் உழைப்பதனை
    உயிர்மைகொள் கலையென்பார் (இ)ரசிப்பவர்கள்
உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்தால்
    உருவாகவே தேடுவார் பாமரர்கள்


வருமானம் வருதலில் மகிழ்ச்சியினை
    விரும்பியே உணருவார் உழைப்பவர்கள்
வருமானம் பெருகலில் பெருமையினை
    அகமதில் கொள்ளுவார் இழியவர்கள்
வருமானம் பிழையாயினும் ஏற்பவர்கள்
    வருவாய்க்கு மேல்விழையும் தீயவர்கள்
வருமானம் தன்மானம் என்பவர்கள்
    வருவாய்க்கு நேர்மையை நம்புவர்கள்

வருமாயின் தலையாட்டிச் செல்பவர்கள்
    வருவாய்க்கு இனம்விற்கும் துரோகியர்கள்
வருவாய்க்குப் பொதுநோக்கில் முயல்பவர்கள்
    வருவாய்க்காய் அரசியலில் இருப்பவர்கள்
வருமென்று இறைவன்பின் ஓடுவர்கள்
    வறுமையில் மட்டுமே வாழ்பவர்கள்
வருமென்ற கனவின்றி வாழ்பவர்கள்
    வரும்விதம் தனில்திட்டம் வைப்பவர்கள்


வருவதன் பயம்கொண்டு பதறுவர்கள்
    வரவதனை எதிர்கொள்ளப் பயந்தவர்கள்   
வருமென்றால் “அதற்கென்ன” என்பவர்கள்
    வரும்விதத்தை அறிந்துவெல்லத் துணிந்தவர்கள்
வருமென்று செலவதிகம் செய்பவர்கள்
    சூதாட்டம் தனில்செலவு செய்பவர்கள்
வருமெதுவும் நலம்பயக்கும் என்பவர்கள்
    இயன்றவரை பிழைநெருங்கா திருப்பவர்கள்  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக