திங்கள், 22 அக்டோபர், 2012

"நம்ம மவராசா எங்கே போயிட்டாராம், தம்பி ?" (சிறுகதை)


   



1983

காலை வெய்யில் சுட்டெரிக்கத் துவங்கிக் கொண்டிருந்தது. கலவரத்தால் எரிந்தழிந்த தமிழர்களின் உடைமைகளின் சூடு கூட இன்னமும் தணியவில்லையே! அதற்குள் இந்தச் சூரியன் இரக்கமில்லாமல் இப்படி  வந்து நடந்து கொள்கிறதே!

அமலனும் லூயியும் அவர்களோடு வந்திருந்த சாரதியும் ஏதோ நடந்து விட, இருந்த ஆபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பி விட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே அந்த வாகனத்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.



ஒரு பொலீஸ் நிலையத்தில் அப்படியானதொரு ஆபத்தான வேளையில் பொலீஸ்காரராக வேடமிட்டு நின்று ஒரு முழு இரவும் அகப்படாமல் பாதுகாப்பாகத் தங்கியிருந்துவிட்டு, தப்பி வந்து விட்ட அவர்களின் அனுபவமானது ஒரு வித பயம் கலந்த பதட்டத்தையும் ஒருவிதமான ஆறுதலையும் அவர்களுக்குள் ஓடவிட்டுக் கொண்டிருந்தது.

கண்டியை நெருங்கிக் கொண்டு இருக்கையில் ஒரு சந்தியில் வாகனம் கொஞ்சம் தாமதித்தது. வாகன நெரிசல்தான் காரணம். சிங்கள சாரதி கத்தினார்.

“மஹாத்தயோ! எஹே பலான்ட?” ( ஐயாமார்களே! அங்கே பாருங்கள்)

அமலனும் லூயியும் அவர் காட்டிய திசையில் பார்த்தார்கள்.

நேர் எதிராக ஒரு பாதை வளைந்து சென்று கொண்டிருந்தது. இவர்களின் வாகனத்துக்கு நேர் எதிரே அப்பாதையில் ஒரு பாரிய மலைக்குன்று. அது மலைப்பிரதேசமான பகுதி.

அந்தக் குன்றின் மேல் பெரிய கொட்டை எழுத்துக்களில் ஒரு நீண்ட வாசகம். மக்களை வரும்படியாகவும் வந்து சேர்ந்து ஒத்துழைக்கும்படியாகவும் சிங்களத்தில் அழைத்துக் கொண்டிருந்தது.

எப்படித் தெரியுமா?

“தெமலுன் மறமு..மவ் பிம பேறா கனிமு”

அமலனின் வாய் உடனடியாகவே தமிழில் அவ்வார்;த்தைகளை மொழி பெயர்த்தது.

“தமிழரைக் கொல்வோம்! தாய் மண் மீட்போம்!”

ஓரு தேசத்தின் மக்களை ஒரு மொழியின் அடிப்படையில் அழித்துவிடுவதே தேசபக்தி என்பதாகும் என்பதாக உபதேசித்துக் கொண்டிருந்த அந்த வரிகளில் துவேஷமும் பகைமையுணர்வும் வெறுப்பும் பலியெடுக்கும் வைராக்கியமும் பாவத்துக்கஞ்சாத கொலை வெறியும் கண்ணாடி ஆடைக்குள் உள்ளாடையற்றுத் தென்படும் உள்ளுடம்பாக, அன்றைய சிங்கள இனவெறியின் பச்சை நிர்வாணத்தை பறைசாற்றி, வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

ஏதோ ஓர் இனந் தெரியாத ஆத்திரமும் கோபமும் அதே சமயம் பயவுணர்வும் தங்களுக்குள் எழுவதை அமலனும் லூயியும் உணர்ந்தார்கள்.

அந்த நல்லவரான சிங்கள சாரதியின் முகத்தில்…

அந்த வார்த்தைகளை அவர் முற்றாகவே வெறுப்பதும் அவை அவ்விருவரையும்  புண்படுத்தி விட்டதை அவதானித்து மனவருத்தப் படுவதும் தெரிந்தது.

“மடையன்களும் பேய்களும் மாபாவிகளும் சேர்ந்து, எங்கள் இனத்தையும் நாட்டையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைக்கு அவர்களில் ஒருவனான எனக்கும் என் குடும்பத்துக்கும் சோறு போடுவதே ஒரு தமிழன்தான் என்பதை இவன்கள் அறிவான்களா? எத்தனை ஆயிரம் பேர் அவர்களால் வாழ்கின்றோம் என்பதை நினைக்கின்றார்களா? எங்கள் பசி பற்றியோ கஷ்டம் பற்றியோ என்றைக்காவது விசாரித்து இவர்கள் உதவியிருப்பார்களா? நாசமாய்த்தான் போவான்கள்; நாய்கள்”

அந்த சிங்கள மனித உள்ளம் உண்மையாகவே மனமுருகித்தான் பேசிக் கொண்டிருந்தது.

இவர்களுக்கே கண் கலங்கவில்லை. அவரது கண்கள் சிவந்து கொண்டிருந்தன.

இன்னும் எத்தனை நல்ல சிங்கள இதயங்களும் இவரைப் போலவே மனம் நொந்து, கடவுளிடம் அந்த நாட்களில் தங்கள் இனத்துக்காகப் பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தனவோ?

வாகனம் அக்குன்றைத் தாண்டி நகர்ந்த பொழுது, அமலன் சன்னலூடாக அந்த வாசகங்களை அருகில் இருந்தே பார்க்கவேண்டித் தலையை நீட்டினான்.

“அதைப் பார்க்காதீர்கள் ஐயா. பார்ப்பதுகூடப் பாவம்.”

சாரதியின் வார்த்தையில் ஒருவித கடுமையும் சேர்ந்தே இருந்தது.
உடனடியாகவே அமலன் என்ற ஆமை தன் தலையைத் தனது தோட்டுக்குள் இழுத்துக் கொண்டது.

ஒரு மேடான பாதையினூடாக வாகனம் குறிப்பிட்ட ஒரு மடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

பச்சைப் பசேல் என்ற அருமையான இயற்கை வளம் கொழிக்கும் இயற்கையான காட்சிகள்.

சூழ்நிலை மனிதனில் பாதிப்பேற்படுத்தும் என்பார்களே! இத்தகைய நல்ல, இதமான, இனிமையான சூழ்நிலையில் வாழ்பவர்கள் அன்பிலும் நட்புறவிலும் அல்லவா ஊறியிருக்க வேண்டும். ஏன் இப்படிக் கொலைக்கருவிகளாக…?
பயங்கரவாதத்தின் பக்க வாத்தியங்களாக....?

அமலனுக்குப் புரியவே இல்லை.

மனிதாபிமானத்துக்குக் கொலைவெறித்தனம்  சகோதரனா?
அப்படித்தான் போலும்.

வாகனம் அம்பிட்டியவில் இருந்த அந்த மடத்தின் முன்பாகப் போய் நின்றது.

அது நின்றதும் இறங்கி, மடத்தின் உள்ளே நுழைந்தார்கள் அமலனும் லூயியும் அவர்களின் தோழர்களும்.

துறவிகளுக்கான கல்விப் பயிற்சியகம் அது. அதன் பரந்திருந்த மண்டபங்களில் ஈக்கள் போல மனித உயிர்கள். ஓவ்வொன்றின் உடம்பிலும் ஏதோ ஒரு காயம். ஒருவருமே தப்பியிருந்ததாகத் தெரியவில்லை.

காயம் என்று உடலுக்கும் ஒரு சொல்லுண்டாமே! அதைக் கண்டு பிடித்த தமிழரும் இப்படித்தான் அனுபவப் பட்டிருப்பாரோ!

இவர்கள் ஏற்ற ஏற்பாடுகளை உரிய பொறுப்பாளர்களுடன் பேசி ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கையில் ஒரு குரு மாணவன் வந்தார்.

“ஃபாதர் இவர்கள் வந்து விட்;டார்கள்தானே! இப்போ நான் தூங்கப் போகலாமா?”

எங்களுடன் பேசிக் கொண்டிருந்த சுவாமியார் தலையசைத்தார். வந்தவர் ஆடி, ஆடித் திரும்பி நடந்தார்.

“என்ன ஃபாதர் இவருக்கும் சுகமில்லையா? அல்லது….”

“இரண்டு நாட்களாக இரவும் பகலும் தூக்கமே இல்லாமல் இந்த அகதிகளுக்காகவே சேவை செய்ததில் மிகவும் களைத்துப் போய்விட்டார். நேற்று நீங்கள் வந்ததும் ஓய்வெடுக்கலாம் என்று சொல்லியிருந்தேன். காத்துக் கொண்டே இருந்தார். வரவில்லை என்றதும் பேசாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே  இருந்தார். அதுதான் உங்களைக் கண்டதும் முடியாமல் ஒடி வந்து விட்டார்.”
                                             
மனிதாபிமானம் மனித உருவத்தில் அங்கே துயிலப் போய்க் கொண்டிருந்தது புரிந்தது.

மெழுகுவர்த்திகள்.

எவரோ எங்கோ பெற்ற பிள்ளைகள் இறைவனுக்காகத் துறவறத்தை ஏற்று, அங்கே அது பற்றிக் கற்க வந்தவர்கள், வந்த இடத்தில் ஆதாயம் கருதாமல் மனிதாபிமானப் பணியில் தம்மை உருக்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையறிய அனைவருமே மிகவும் நெகிழ்ந்து போனார்கள்.

அந்த இளம் துறவற மாணவரைப் போலவே இன்னும் பலரும் அவ்வாறு பணி புரிந்து கொண்டிருந்தார்கள். அன்பால் இறைவன் அங்கே முழுமையாக வதிந்ததை அமலனும் லூயியும் மனதார உணர்ந்து இதயம் வெம்மினார்கள்.

அங்கே மத பேதம் புதைந்து போயிருந்தது, இனபேதம் அழிந்து போயிருந்தது, பிரதேச பேதம் பறந்து போயிருந்தது, சாதிப் பிரிவினை எண்ணம் செத்தே போயிருந்தது.

அன்பென்னும்  விளக்கும் மனிதாபிமானம் என்ற தென்றலும் மட்டுமேதான்
அங்கே நிறைந்து நின்று, ஒளியையும் அமைதியையும் பரப்பி விட்டுக் கொண்டிருந்தன.

இறைவா! நீ இவ்வாறே எப்போதும் எங்கேயும் இருந்து கொண்டிருந்தால் என்ன? ஏன் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொள்கிறாய்?

தெய்வமே! மதத்தாலும் மொழியாலும் மனிதாபிமானமே கொலையுண்டு போகின்ற இந்தக் கொடுமையை என்றைக்குத்தான் நீ ஒரு முடிவுக்குக் கொண்டு வருவாய்?

கொண்டு வந்திருந்த பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் பணி ஆரம்பமாகியது. அமலனின் இயக்க இளைஞர்கள் ஒவ்வொரு வரிசையாகப் பொறுப்பேற்று செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சிங்கள சாரதியாரும் தம் பங்குக்கு ஓடியாடி ஒத்துழைத்துக் கொண்டிருந்தார்.

அமலனும் லூயியும் நடப்பதைக் கண்காணித்த வண்ணம் இருந்தார்கள். வரிசையில் வந்து நின்றவர்களைத் தவிர, எழுந்து, நடந்த வர முடியாதவர்களாகப் பலர் ஆங்காங்கே படுத்தே இருந்ததை இருவரும் கவனித்தார்கள்.

ஆகவே அவர்களுக்குத் தாங்களே நேரில் சென்று விநியோகிப்பது என்று முடிவெடுத்தவர்களாய் இருவரும் செயல்படத் துவங்கினார்கள்.

பரிதாபம்! பச்சைக் குழந்தைகள் முதல் முதிய பெரியவர்கள் வரை நையப் புடைக்கப்பட்டு, இரத்தம் காய்ந்ததும் காயாததுமான காயங்களுடன் முக்கி, முனகிக் கொண்டிருந்தார்கள். ஆடு, மாடு வெட்டப்படும் இடங்களிலிருந்து இழுத்துவரப்பட்ட சில ஆடுகளாகவும் மாடுகளாகவுமே அவர்கள் இருந்தார்களேயன்றி மனிதர்களாக இல்லவேயில்லை.

அவர்களது நிலைமை கண்களை மட்டும் கலக்கவில்லை. முழு இதயத்தையுமே உலுக்கியது. அந்தக் குருத்துவ மாணவர் துயிலாமல் பணி செய்தமைக்குக் காரணம் அமலனுக்குப் புரிந்தது.

உண்மைக் கிறிஸ்தவத்தை உண்மையாகப் புரிந்தவர்கள்; அப்படித்தான் நடந்து கொள்வார்கள். அதுதான் சாத்தியம்.


ஓர் வயதான தாயை நெருங்கினார்கள். அவர் சுருண்டு படுத்திருந்தார். கைகளில் கட்டுக்கள்.

“அம்மா உங்கள் கையிலே என்ன காயம்?”
தன் உள்ளுணர்வைக் காட்டிக் கொள்ளாமல் அமலன் கேட்டான்.

“கத்தியாலே கொத்தினாங்க சாமி. தப்பப் பாத்தேன். முடியலை. கைகளைத்தான் வெட்டினாங்க. அதுக்குள்ளாற வேற யாரையோ அடிக்க ஓடிட்டாங்க. அதனாலதாங்க உயிரோடே இருக்கேன்.”

“ஏன் உங்களை வெட்டினார்களாம்?”

“தெரியல்லீங்களே! ஓங்களுக்குத் தெரியுமா? எதுக்காகவுங்க அவங்க எங்கள வெட்டினாங்க? நாங்க ஒண்ணுமே செய்யலீங்களே!”

“இந்த சாமியார் கிட்ட கேட்டிருக்கலாமே!”

அந்த இடத்திலும் தனது வழமையான கேலிப் பேச்சை விடமுடியவில்லை அமலனுக்கு.லூயி முட்டியால் இடித்தான். ஏதோ தொட்டில் பழக்கமென்பார்களே!

அந்த அம்மா சொன்னார்;:
“அவங்க பெரிய மனுசங்க. எப்படிக் கேக்கிறது? ஒங்களப்பாத்தா எங்க புள்ளைங்க மாதிரி இருக்கீங்க.”

தனது தவறை உணர்ந்த அமலன் தலையைக் குனிந்து கொண்டான்.

தனது பிள்ளைகளாகத் தங்களைப் பார்க்கும் அந்தத் தாயிடம் கால நேரம் தெரியாமல் கேலி பேசி விட்டோமே!

“எல்லாம் சில சிங்கள மடையன்களாலே வந்த வினைதானம்மா. பயப்படாதீர்கள். எல்லாம் சரியாகி விடும்.”

அந்தத் தாய் தலையை அசைத்தார்.

அந்தத் தாய் அமலனிடம் திருப்பிக் கேட்டிருந்த காரணக் கேள்வியில் அவனே அதிர்ந்து விட்டிருந்தான்.

நடந்தது ஏன் என்றே தெரியாத அப்பாவிகள். அநியாயமே செய்தறியாத அப்பாவிகள். வெறும் ஏழைகள்.

ஐயா கௌதம புத்தரே! உமது பெயரில் உலா வருபவர்களைப் பார்த்தீரா? இவர்கள்தானா உமது பக்தர்கள்? உம்மைப் பின்பற்றுபவர்கள்? உமக்கே வெட்கமாயில்லை? உமது மஞ்சள் அங்கியை உரிகின்ற உமது பிக்குகளை பௌத்த துச்சாதனர்கள் எனலாமா?

இருவரும் இன்னும் சற்று நகர்ந்தார்கள். ஒரே அவலமான முனகல்களும் அழுகுரல்களும்.

ஓரிடத்தில் இரு பெண்கள். ஒரு வயதான அன்னை. அவரருகில் ஓர் இளம் பெண். வயது இருபதுக்குள்தான் இருக்க முடியும்.

அந்தப் பெண் துவைக்கப் போட்ட கந்தல் துணிபோலச் சுருண்டுபோய்க் கிடந்தாள். இரு சேலைகளைக் கொடுத்தவாறே அமலன் பேச்சுக் கொடுத்தான்.

அம்மா உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் இந்தப் பெண் இப்படி…?

அந்த அன்னை ஓவென்று கதறத் துவங்கவும் தூரத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்த ஓரிரு பெண்கள் ஓடி வந்தார்கள். அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டார்கள்.

„சாமி இவங்க குடும்பத்தையே அழிச்சிப்புட்டாங்கய்யா! அந்தப் பொண்ணுக்கு மூணு நாளக்கி முந்தித்தான் கலியாணம்னு இருந்துது. அன்னிக்கித்தான் எங்கப் பக்கம் கலவரம் தொடங்கிச்சி.“

„மாப்பிள்ளையையும் அவ மாமனாரையும் நாற்காலியிலே கட்டிப்போட்டுட்டு, கலியாணப் பட்டு வேட்டியையே பெட்ரோலிலே முக்கி, திரியா கிழிச்சுப் பத்தவச்சி எரிச்சிப்புட்டாங்க. வீடே எரிஞ்சி போயிட்டுது.“

„எங்க கவலையெல்லாம் மிஞ்சி இருக்கிற இந்த ரெண்டு சீவன்களுக்கும் பைத்தியம் புடிச்சிடாம இருக்கணுமேங்கிறதுதாங்க.“

„பெரிய பாவமுங்க. எல்லாருக்குமே நல்லது செய்ற நல்லவங்க இவங்க.“

„இந்த நாசமாப்;போற கடவுளுக்குக் கண்ணென்ன பொட்டையாவா போச்சு?“

„ஒண்ணுமட்டும் சொல்லுறோம். ஆண்டவன் சாட்சியா சொல்லுறோம். நாங்க கும்புடுற முருகன்அவன் கை வேலாலேயே குத்திக் குத்தி அவங்க கொடல எடுக்காமே வுடவே மாட்டானுங்க! வேணும்னா பாருங்களேன். இது அவன் மேலே சத்தியமா நடக்கத்தான் போவுது“

அவர்களை மீண்டும் வரிகையில் போய் நிற்கச் சொல்லிவிட்டு இன்னும் சற்றுத் தள்ளிப் போனார்கள் இருவரும்.

ஒரு பாட்டி தலையில் பெரிய கட்டுடன் படுத்திருந்தார்.

பாட்டி உங்களுக்கு ஒரு சேலை கொணாந்திருக்கிறோம். வாங்கிக் கொள்ளுங்கள்!

கிழவி எங்களை நிமிர்ந்து பார்த்தார்.

கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

„அழாதீர்கள் பாட்டி. எல்லாம் சரியாய்ப் போய்விடும்.“

„தம்பீ... இவ்வளவு அநியாயமும் அக்கிரமமும் நடந்திரிச்சே! நம்ம ராசா எங்கே போயிட்டாராம்? பட்டாளத்த வச்சிக்கிட்டு தூங்குறாரா? வந்து அடிச்சித் தொரத்தி இருக்க வாணாம்? என்ன ராசா இவரு? பொறுப்பே இல்லாமே இப்படி நடந்துக்கிறாரே?“

அமலனால் துக்கத்தைத தாங்கவே முடியவில்லை.
ராசாவாமே!

அட கடவுளே!

இன்றைய உலகம் பற்றிக் கூட அறிந்திராத இத்தகைய அப்பாவிகளைக் கொல்லவும் அழிக்கவும் விட்டு விட்டு, வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறாய்?

எனக்கு மட்டும் பலம் இருந்தால் முதலில் உன்னைத்தான் நான் தண்டிப்பேன்.

„பாட்டி, நீங்கள் ஓட்டு போட்டிருக்கிறீர்களா?“

„அதென்னது தம்பி?“

„தெரியாதா? பரவாயில்லை. இதை வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் போய் வருகிறோம் பாட்டி.“

பாட்டி கும்பிட்டு விடை கொடுத்தார்.

திரும்பி நடந்த அமலனின்….நடை ஏன் தள்ளாடுகின்றது?

கண்கள் ஏன் பனிக்கின்றன?

நெஞ்சை ஏன் அடைக்கின்றது?

பேச்சு ஏன் வர மறுக்கின்றது?

அன்று மாலை ஆனதும் உணவருந்த வரும்படி குருமடத் தலைவர் அழைத்தார். அமலனும் மற்றவர்களும் சென்று அமர்ந்தனர். உணவு பரிமாறப்பட்ட வேளையில் இளைஞர்களுக்கு இடையில் சிறிய சலசலப்பு.

தாங்கள் அகதிகளுடன் இருந்து சாப்பிட விரும்புவதாகச் சொன்னதும் முதலில் ஒரு விதமாகப் பார்த்த தலைவரிடமிருந்து மறுப்பேதும் வரவில்லை.

தட்டுக்களுடன் சிலர் வெளியேறினார்கள். அமலனும் அவர்களுடன் இருந்தான். சில நிமிடங்களின் பின்னர் அவர்கள் அகதிகளுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மகாராசாவைத் தேடிய பாட்டியுடன் அமலன் உணவருந்திக் கொண்டிருந்தான்.

அவனுக்கும் அவனுடன் இருந்த இளைஞனுக்கும் பாட்டி தனதுணவில் கொஞ்சத்தை எடுத்துக் கொடுத்துப் பகிர்ந்தபோது, தன் கண்களின் நீர் நிறைவதை அமலனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தனது கையால் ஒரு மீன்துண்டை எடுத்து பாட்டியின் தட்டில் வைத்தான்.

தாயற்ற அவனுக்கு அந்த வினாடியில் எழுந்த உணர்ச்சிகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அழுகை ஒன்றைத்தானே இறைவன் ஆறுதலின் கருவியாய்ப் படைத்து விட்டிருக்கிறான்?

அந்த அறை முழுவதும் இருந்த மக்கள் அனைவரும் தாங்கள் அனாதைகளல்லர் என்றும் தங்களுக்காக என்று உடன் பிறவாத உறவுகள் இருக்கத்தான் செய்கின்றனவென்றும் உணர்ந்து, ஆறுதல் பெற்றதை, அனுபவமாக உணர்ந்த அமலனால் இறைவனுக்கு நன்றி சொல்ல மட்டுமே அப்போதைக்கு முடிந்தது.

மறுநாள். மீண்டும் கொழும்புக்குத் திரும்ப வேண்டிய வேளை வந்தது.
குருமட முதல்வரான குருவானவர் அமலனிடம் வந்து நன்றி சொன்னதுடன் ஒரு கடிதத்தையும் அவனிடம் கொடுத்தார். அவன் அதை வாசித்தான்.

தங்கள் இயக்கத்தின் சார்பாக எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பாராட்டி நன்றி செலுத்தும் ஒரு நற்சான்றிதழை ஒப்ப மடல் அது. அமலன் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்தான்.

„ஃபாதர் நாங்கள் செய்தது இதற்காகவல்ல. எங்கள் கடமையைத்தான் செய்தோம். அதற்கு நற்சான்று தந்து அதன் பெறுமதியை தயவு செய்து குறைத்துவிடாதீர்கள். இதைத் தரவேண்டியவர் ….“ அமலனின் கைவிரல் மேல் நோக்கிக் காட்டிவிட்டு நின்றது.

எல்லாரிடமும் அனைவரும் சென்று விடை பெற்ற பிறகு, வாகனம் கொழும்பு மாநகர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது.

போலீஸ் உடையில் சென்றிருந்த அமலன் ஓர் அகதிக்கான சாரம் எனப்படும் லுங்கியுடன் தலைநகரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

தேசத்தை முன் வைத்து இணைய மறுத்து இனமென்றும் மொழியென்றும் மதமென்றும் மக்கள் பிரிந்தால்…

மனிதன் தனது மனிதத்துவத் தகுதியை ஏதோ ஒரு விதத்தில் இழந்துதான் போகின்றான்.

தலைவர்கள் பிழைவழி தெரிந்து நடந்தால் நாடும் மக்களும் தீக்குழிக்குள்தான் விழுவார்கள் என்பதை உணர்ந்து வழிகாட்டும் நல்ல தலைவர்கள் என்றைக்குத்தான் பிறப்பார்களோ?



மக்களின் தனித்துவம் கெட்டிடாமல் 
     மனிதாபி மானமாய் வாழ விட்டால்
மக்களின் இன்பமே நிறைந்திருக்கும் 
     மகத்தான உலகமே இங்கிருக்கும்
மக்களில் கூடியோர் பெருமை கொண்டு 
     மதியாமல் பிறராள முனையும்போதே
மக்களின் இயல்பான உரிமையுள்ளம் 
     உரித்ததை ஈட்டிடற் கெண்ணத் தோன்றும்

வாழ்ந்திடும் உரிமையைப் பறித்துவிட்டு, 
      வறுமையை, வியாதியைப் பரப்பிவிட்டு
ஆள்பவர் அடக்கியே ஆணவத்தால் 
     மக்களை ஒடுக்குதல் ஒழிய வேண்டும்
சுதந்திரம் எனும் சொல்லே கொடிதுபோலக் 
     கொடிகட்டிப் பழிவாங்கல் மறைய வேண்டும்
மதந்தரும் மொழிதரும் நன்மையெல்லாம் 
     மனிதரின் சுதந்திரம் பேண வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக