புதன், 10 அக்டோபர், 2012

பிழம்பை அழகெனத் தொடுவாயோ?

ம்பித் துணைசென்றால் நடுவழியில் கைவிடுவார் நமைச்சுற்றும் சூழலிலே
தம்பி, தங்கையென நம்பியெவர் நெருங்கிடலும் ஆபத்தாய் இருக்குதடா!
வெம்பி அழும்குழந்தைக் காறுதல் எனவருவார் நிழலெனத் தீதுவரும்.
நம்பி எவரருகும் நம்பொறுப்பைக் கொடுப்பதுவே தற்கொலையாய் ஆகிவிடும்.

பாலைக் கொடுக்கையிலே சின்னஞ்சிறுதுளியாய் விடமதனைக் கலப்பதுவே
நாளைத் துவங்குகையில் நாநிலத்தின் நாற்திசையும் தொடர்கதையாய் இருக்குதடா!
தோளைத் தொடுபவனும் தேள்போல் கொட்டிடவே வழிவிழையும் காலமடா!
காலை வருடுபவன் காலை வாருதற்கே கங்கணங் கொள் சூழலடா!

நித்தம் ஒருவிதமாய் நிரந்தரமாய் அழகுதரும் இயற்கையிலே இருந்தெவரும்
நித்தம் ஒருவிதமாய் நல்வழியைத் தவிர்த்தெதற்குத் தீவழியைத் தொடருகின்றார்?
நித்தம் ஒருவிதமாய் இதயம் வளர்வதற்கே தீவழிதான் மருந்து என்றா?
புத்தம் புதுவிதமாய்த் தீதுகளில் அழகிருக்கும் எனத்தேடும் முயற்சி அதா?

இருட்டில் நின்றுகொண்டு ஒளிபற்றிப் போதிக்கும் குருடர்களே தலைவர்களாய்
வெருட்டி,பயமுறுத்திப் பணம்வீசி ஏமாற்றி வாக்குசேர்க்கும் கயவர்களாய்
பழிசொல்லிப் பகைவளர்த்து வெறியுணர்வை வளர்க்கிறவர் தேசத்துத் தலைவர்களாய்
மொழிசொல்லிப் புகழ்பாடிப் பணம்சேர்க்கும் கயவர்களே ஆள்பவராய்! கவனம் கவனம்.

உனைநீயே உணராமல் உலகத்தில் நடமாடின் உலகுன்னை ஏய்த்துவிடும் எச்சரிக்கை!
பனைபோல உயர்ந்தாலும்  பொய்யான புகழ்என்றும் நிலைக்காது நிலைசாய்க்கும், எச்சரிக்கை!
உனைத் தட்டி எப்போதும் விழிப்பாக வைக்காயின் உனைத்தட்டி மடக்கியே அடக்குவார்,  எச்சரிக்கை!
வினைசெய்வோர் நாடகம் விளங்காமல் இருந்தாயோ வாழ் க்கையே இல்லையென்று ஆகலாம்,  எச்சரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக