வியாழன், 18 அக்டோபர், 2012

உண்டா? இல்லை! இல்லையா? உண்டு! (சிறுகதை)





னுபவங்களை அசைபோட்டு உண்மைகளை உணர்ந்து கொள்ள முயலும்போது சில சமயங்களில் நம்மை நாமே நம்பிக் கொள்ள முடியாதபடிக்கு சில சம்பவங்களில் உதாரணங்கள் மிதப்பதை உணர முடிவதுண்டு. 

உண்மைதானெனத் தெரிந்தாலும் உண்மைதானென உணர்ந்தாலும் அதைக் கேட்பவர்கள்  நம்புவார்களோ இல்லையோ என்கின்ற ஐயம் எழுகையில் மனம் மிகமிகச் சிரமப்படுவதையும் தவிர்க்க இயலாது.அத்தகைய ஓர் இககட்டான அனுபவத்தையே ஒரு சிறிய கதை வடிவில் இப்போது தர விழைகிறேன்.

நம்புவீர்களா இல்லையா என்பதைப் பற்றிய கவலையை விட்டு விடுகிறேன். இநதச் சம்பவம் 1960 அல்லது 61ற்கு இடைப்பட்ட கால வெளிக்குள் நடந்ததாக ஞாபகம். பெயர்கள் (எனதுட்பட) கற்பனை.

                                                                 ..............................

குப்பு நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் முத்துராசா ஏதோ முக்கிய அலுவல் காரணமாக அரை வகுப்பில் எல்லாரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுவிட்டுத்  தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்றிருந்தார். 

அந்தச் சிறுநேரச் சுதந்திரத்தையும் அனைத்து மாணவர்களும் கலகலப்பாகக் கதைத்து மகிழ்நதவாறே முழுமையாக அனுபவித்துவிட முயன்று கொண்டிருந்தார்கள்.

சுதந்திரன் சுமன் கமலன் மூவரும் ஒன்றாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். 

"டேய் புதிய சீரியல் படம் ஒன்று ரிலீசாகி இருக்கிறதாமே! கேள்விப்பட்டீர்களா?" சுமன் கேட்டான்.

"என்ன படம்டா?" மற்ற இருவர் குரல்களும் இணைந்து கேட்டன.

"பெட் மேன். (Bat Man) படம் முழுக்க ஒரே சண்டைகளும் பறக்கிற சாகசங்களும் கார் ரேசோட்டமுமாக ஒரே  "த்ரில்"தானாம். அப்படியொரு படமாம்டா!"

"எங்கேடா ஓடுது?"

"மினர்வா தியேட்டரில்"
குப்பென சிலிர்த்து நிமிர்ந்தார்கள் சுதந்திரனும் கமலனும். 

மினர்வாவா!

"அது ரொம்ப டேஞ்சரான இடத்திலிருக்குதுடா! அந்தப்பக்கமெல்லாம் காடையர்களும் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும்தான்  இருப்பார்களாம். பாதுகாப்பே இல்லாத இடம்டா" சுதந்திரன் சொன்னான்.

"வீட்டிலே அனுமதிக்கவே மாட்டாங்கடா!" கமலன் அங்கலாய்த்தான்.

மூவரும் ஒன்றாக ஏதாவது திட்டம் தோன்றாதா என முயன்று கொண்டிருக்க ஆசிரியர் மீண்டும் வந்துவிட்டார். பேச்சுவார்த்தையைப் பாடசாலை முடிந்ததும் மீண்டும் தொடரலாம் என்று விட்டு மூவரும் படிப்பில் கவனம் செலுத்தினார்கள்.

மதியம் தாண்டி மணி 1.45. இன்னும் பதினைந்து நிமிடங்களில் பாடசாலை.... நண்பர்கள் மூவருக்கும் கடிகார முள் மிகமிக மெதுவாக நகர்வதுபோல ஒரு நினைப்பு. படபடப்புடன் நெளிந்து கொணடே அந்த நிமிடங்களைக் கழித்தார்கள்.

இரண்டு மணிக்குப் பாடசாலை விட்டதுமே மூவரும்  பள்ளி மைதானத்தின் ஓரமாக நின்றிருந்த ஒரு மரநிழலில் நின்று கொண்டு திட்டம் தீட்டினார்கள்.

மினர்வா என்ற அந்தத் திரைப்பட காட்சியகம் பாலத்துறை என்ற பகுதியில் பெரிய கள்ளுக்கடையொன்றுக்குப் பின்னால் பரந்துகிடந்த ஒரு சேரிப்பகுதியில் இருந்தது. பொதுவாக ரவுடிகளும் சேரிவாசிகளுமே போகுமிடமாதலால் அசுத்தம் மிகுந்ததாகவும் ஓழுங்கற்ற சூழல் நிறைந்தும் திகழும் தியேட்டர் அது. அந்த மாதிரி இடங்களில்தான் அந்நாளில் ஆங்கில சீரியல் சண்டைப்படங்கள் இடம் பிடித்து வந்தன. மொழி புரிந்த எவருமே இல்லாத நிலையில் போனவனெல்லாம் ஆங்கிலக் கதையை அவனவன் அறிவுக்கேற்றபடி படம் போகையில் விளக்குவதும் அதற்கேற்ப விசிலடித்தும் ஆவூவென்று கத்திக் கும்மாளமடித்தும் இரசித்து மகிழும் படு அடிமட்ட வீசிலடிச்சாங் குஞ்சுகளின் சங்கம மாளிகை அது.

கள்ளடித்த கும்பலும் அதற்கருகில் விற்கப்படும் கள்ளச் சாராயம் கசிப்பு இத்தியாதிகளை விழுங்கிய நாற்றவராயர்களுமாக மட்டுமே நிரம்பி வழியும் அத்தகைய இடங்களுக்குள் நுழைய வீட்டில் அனுமதி கேட்பதும் தூக்குக் கயிற்றில் கழுத்தை நுழைத்துவிட்டுக் குதித்துப்பார்ப்பதும் ஒன்றுதான் என்பது மூவருக்குமே நன்கு புரிந்திருந்த படியால் திட்டம் தீட்டுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

சுதந்திரனின் வீடு வாசல ரோட் என்ற இடத்திலிருந்தது. சுமனின் வீடு புளுமென்டால் ரோட் என்ற இடத்திலும் கமலனின் வீடு அளுத்மாவத்தை ரோட் என்ற இடத்தினருகிலும் இருந்தது.மினர்வா தியேட்டருக்கு புளுமென்டால் ரோட் வழியாகவே அவர்கள் செல்ல வேண்டும். மூவரின் வீடுகளின் தெருக்களுமே சில நூறு யார் தூரவித்தியாசத்துடனே இருந்தாலும் ஒன்றையொன்று தொட்டுச் செல்லக்கூடியவைதான். வாசல ரோட்தான்  சற்று அதிக தூரம். மற்ற இருவர் வீடுகளும் ஒன்றைத்தாண்டி ஒன்றாக சில நூறு யார்களுக்குள்தானிருந்தன. இவர்களில் கமலனின் வீ டு மட்டும் கிட்டத்தட்ட ஒரு குடிசைபோல ஏழைகள் அதிகமாக வசிக்கும் ஒரு வட்டாரத்திலமைந்திருந்தது.

மூவரும் பேருந்து நிறுத்துமிடத்துக்குச் சென்றதும் ஒரு முடிவைக் கண்டு பிடித்தார்கள். மூவரும் தங்கள் வீடுகளுக்குத் தெரியாமல்வெள்ளிக்கிழமை இரவு 9.30 காட்சிக்கு சைக்கிளில் போவதென்றும் சுதந்திரன் தனியாக முதலில் வந்து சந்தி திரும்புமிடத்தில் இருந்த ஆலமரததடியில் இரவு 8.30கக்கு வந்து நிற்பதெனவும் மற்ற இருவரும் ஒருவன் வீட்டுக்கு மற்றவன் செல்வதாகச் சொல்லிவிட்டு வந்து சந்திபப்பதென்றும் சேர்ந்தே தியேட்டருக்குப் போவதென்றும் முடிவெடுத்தார்கள்.

சுதந்திரனின் வீட்டு வட்டாரம் சற்று வசதி மிக்கவர்கள் வாழும் வட்டாரம். ஆதலால் பிள்ளைகள் அடிக்கடி பக்கத்து வீடுகளுக்குப் போய்வருவதும் சற்று தாமதமாக வந்தாலும் தாங்களாகவே கதவைத்திறந்து கொண்டு உள்நுழைந்து கொள்ளப் பெற்றோரின் அனுமதி பெற்றிருப்பதும் வழமையாக இருந்தது. அதனால் சுதந்திரன் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு விரைந்த போது அதிகம் பதட்டமிருக்கவில்லை. அவனது பயமெல்லாம் மினர்வர் பக்கமாக எவராவது கண்டுவிட வாய்ப்பு வந்துவிடக்கூடாதே என்பதாக மட்டுமே இருந்தது.

சுதந்திரன் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று மரத்தடியில் காத்திருந்தான். சில நிமிடங்களில் மற்ற இருவரும் வந்துசேர மூவரும் மினர்வா தியேட்டரை நோக்கிப் பறந்தார்கள். அங்கே சைக்கிளைக் காவல் காக்க ஒருவர் இருந்தார். உரிய கட்டணத்தை மூவருக்குமாகச் சுதந்திரனே கட்டினான். தியேட்டரில் ஏகப்பட்ட நெரிசல். என்றாலும் இரண்டாம் வகுப்புக்கு டிக்கட் கிடைத்தது. உள்ளே நுழைந்தால் வெறும் பலகை ஆசனங்களும் ஆங்காங்கே குடிகாரர் கத்தல்களும் மது நெடியும் சில இடங்ளில் வாந்தியெடுத்த நாசியடைக்கும் நாற்றமுமாக ஒரேகெட்ட கமகமாவாகவே இருந்தது.

சீரியல் பட தாகத்தினால் மூவரும் அவற்றைப் பொறுத்துக் கொண்டே படத்தைப்பர்த்து மகிழ்ந்தார்கள். படத்தின் கதையோ மொழியோ எதுவுமே புரியாதபடிக்கு ஏகப்பட்ட இரைச்சலும் விசிலடிப்புக்களும். இருந்தாலும் அதையும் மீறி மூவரும் படத்தை விழுந்து விழுந்து இரசித்தார்கள் என்றே சொல்லலாம்.

படம் முடிந்து வெளியே வந்தார்கள். பிரதான பாதை மட்டும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தபின் ஏறி மிதிக்கத் தொடங்கினார்கள். தெருவெல்லாம் முழு இருட்டு. சுமார் இருநூறு யார் துராத்துக்கால் தெரு ஓரத்தில் விளக்கென்ற பெயரில் ஒரு தூணிலிருந்த ஒளி மிகவும் மங்கலாக விழ முயன்று  கொண்டிருந்தது. அது மின் விளக்குமல்ல. அக்காலத்தைய கேசு விளக்கு. வெகு தூரத்தில் இன்னொன்று. தங்களின் சைக்கிள்  விளக்கொளியை மட்டுமே நம்பிச் செல்ல வேண்டிய கட்டாயமான நிலை. என்ன செய்வது?

எல்லா சனமும் அங்குள்ள அக்கம்பக்கத்திலுள்ளவை போலும். சில நிமிடங்களுக்குள்ளே தெருவே ஓய்ந்து கிடந்தது. 

"டேய் வேகமாய் போய்விடுவோம். ரவுடிகள் கிட்ட மாட்டிவிடக் கூடாது.!"
  மூவரும் புறப்பட்டார்கள். சுமார் 400 மீற்றர் தூரத்தைக் கடந்துகொண்டிருக்கையில் சுமன் சொன்னான். 

"மச்சான் எனக்குச் சரியான வயிற்றுவலியாய் இருக்கிறதடா! சற்று நின்று விட்டுப்போவோமே!"

என்னடா இந்த நேரத்தில் சொல்கிறாய். பார் பாதையில் எப்படி இருப்பாய்?" இயற்கையின் உபாதையில் நெளிந்த சுமனைப் பார்த்து சுதந்திரன் கேட்டான்.

ஓரு ஐந்து நிமிடம்போதும்டா! நான் டக்கென்று முடித்து விட;டு வந்துவிடுகிறேன். என்னாலே தாங்கவே முடியவில்லைடா!"

அந்தச் சந்தியில் தெரிந்த சிறிய குறுக்குப் பாதையில் ஒரு தெருவிளக்கு மெலிவாக எரிந்து கொண்டிருந்தது. பயனே இல்லாத அதாவது வெளிச்சமே இல்லாத வெளிச்சம்.

ஆனால் அந்த இடம்...அங்கிருந்த சவச்சாலையின் வாசல். 
காரணமே இல்லாமல் சுதந்திரனின் மனதுக்குள் பக்கென்றிருந்தது. என்றாலும் பயமாக அது தெரியவில்லை.

"சரி சீக்கிரம் இருந்துவிட்டு வா. நாங்கள் இப்படி நிற்கிறோம். தங்களுக்கும் அவனுக்குமிடையில் இருந்த அந்த பதினைந்தடி தொலைவில் கூடக் கடும் இருட்டில் பார்ப்பது கடினமாக இருந்தது. எனவே சத்தமாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நின்றனர் இருவரும்.

"மச்சான் இருந்திட்டேன். இப்ப கழுவணுமே! தண்ணீர் இல்லையே! என்ன செய்வது?"

சுதந்திரன் தைரியமாகச் சொன்னான். 

"டேய் சற்று எட்டி மையவாடிக்குள் பார். சுவரோரமாக ஒரு சின்ன பைப் இருக்கும் அதில்தான் பிணங்களைப் புதைத்தபின் வருபவர்கள் கை கழுவுவார்கள். டக்கென்று கழுவிவிட்டு ஓடிவா"

"சரி மச்சான்"

சுமன் போய் தன் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். இருட்டில் அவனது அசைவு சுதந்திரனுக்குத் தெரிந்தது. சைக்கிளைத் திருப்பி அதில் ஏறினான்.

"கமலா நீயும் ஏறுடா!"  திடீரென்க் கமலன் தடதடவென்று நடுங்குவது தெரிந்தது.

"என்னடா? என்ன நடந்தது ?

அங்கே பார்டா! சுமன் கூட இன்னுமொரு சுமனுருவமும் வருது. எனக்குப் பயமாயிருக்குடா!"

சுதந்திரன் திரும்பிப் பார்த்தான் சுமன் மட்டுமே வருவது தெரிந்தது. மனப்பயத்தால் கமலன் உளறுவதை உணர்ந்து சிரித்தான். 

"டேய். சவச்சாலையென்றாலே பேய்தான் நினைவுக்கு வருமா? மடையா அவன் மட்டும்தான் வருகிறான். சைக்கிளில் ஏறு."

சுமனும் வர மூவரும் வேகமாக சைக்கிளை மிதித்தார்கள். ஆலமரச் சந்தி வந்ததும் இடப்புறமாக சுதந்திரன் திரும்பினான். அதே தெருவில் நேராகவே போனால் முதலில் சுமனின் வீடு வரும். அதன்பின் கமலனின் குடிசைவரும்.

சுதந்திரன் நேராக வீட்டிற்குப் போய்விட்டான். மறுநாள் சனிக்கிழமையாதலால் பள்ளி விடுமுறை. எனவே முதல் நாள் காட்சி பற்றி அரட்டையடிக்கலாம் என்று பிற்பகல் சுதந்திரன் சைக்கிளில் சுமனின் வீட்டிற்குப் போனான். அவனுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

சுமன் வெறிபிடித்தவனைப்போல தன் வீட்டில் அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தான். அழுது அழுது கண்கள் சிவந்து கிடந்தன. அவனது வீட்டில் எல்லாருமே மிகக் கவலையாகவும் கோபமாகவும் இருந்தது புரிந்தது சுதந்திரனுக்கு.

"ஏண்டா சுமன் என்னடா நடந்தது?"

சுமனின் தாயார் குறுக்கிட்டார்கள். 

"என்னப்பா மூன்று பேரும் வீட்டுக்குத் தெரியாமல் இப்படியா செய்வது! சினிமா பார்க்க மையவாடிக்கா போகணும்? அந்தப் பிள்ளை கமலனுக்குப் பேய் அடிச்சு சீரியசாக கிடக்கிறான். இவனைக் கண்டதும் பேய் பேய் என்று கதறி மயங்கி விழுந்து விட்டான். ஏனப்பா இப்படி நடந்து கொண்டீர்கள் மூவரும்?"

சுதந்திரன் விக்கித்து நின்றான். நேற்றிரவு கமலன் சுமனைப் போலவே இன்னொரு உருவமும் அவனுடன் சேர்ந்து வருவதாகச் சொல்லிப் பயந்தானே! அந்தப் பயம்தான் அவனை இப்படி ஆக்கி விட்டதா?

இனி மறைப்பதற்கென்ன இருக்கின்றது? சுதந்திரன் சுமனின் தாயிடம் இரவு நடந்ததை விபரித்துச் சொன்னான்.சொல்லாமல் கொள்ளாமல் படம் பார்க்கப் போனதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டு கமலனின் மனப் பயத்தைத் தான் எப்படியும் தீர்த்து வைப்பதாகச் சொல்லிவிட்டு கமலனின் வீட்டுக்குப் பறந்தான்.

                                                                        ...................................

மலனின் வீட்டிற்குள் அவன் நுழைந்தபோது முழு வீடுமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. கமலன் ஓரு ஒடிந்து விழுந்த மரக்கிளைபோல ஒரு பாயில் சுருண்டு கிடந்தான். சுற்றிலும் சாம்பிராணிப் புகை மணமும்பலவிதமான மனதைப் பயமுறுத்தும் பூசைச் சாமான்களும்.

சுதந்திரன் ஓடிச் சென்று கமலனைத் தனது கைகளில் ஏந்தி மடிமேல் வைத்துக் கொண்டு கதறினான்.

"கமலா! ஏண்டா வீணாக அஞ்சினாய். அது வெறும் மனப்பயம்தான் என்று நான் சொன்னேன்தானே!" 

சுருண்டு கிடந்த உடல் நிமிர முயல்வது தெரிந்தது. கமலனின் கண்கள் திறந்து சுதந்திரனைப் பார்த்தன.இரத்த ஓட்டமே இல்லாத வெளிறிப்போன வெள்ளைக் கண்களாக அவை இருந்தன. ஆனால் அவன் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் பேசினான்.

"சுதந்திரா! நான் சத்தியமாகக் கண்டது சுமனின் அடுத்த உருவத்தைத்தானடா! நீ போனபின் சுமனும் நானும் வந்து சுமன் விடைபெற்ற பிறகு நான் எனது வீட்டுக்கு வரும்போது எனக்குப் பின்னால் யாரோ வருவதுபோல இருந்தது.திரும்பினால்.. ..சுமனின் அதே உருவம் இன்னெரு சைக்கிளில் என்னைத் துரத்திக் கொண்டே வந்ததடா. நம்படா!" விக்கி விக்கி அழுதான் கமலன்.

"பிறகு?" 
அவனது வார்த்தைகள; பொய்யாகத் தெரியவில்லை. எனவே அவன் சொன்னதை நம்பியவனாக சுதந்திரன் தொடர்ந்து கேட்டான். 

"நான் வேகமாக வீட்டுக்கு வந்து கதவைத் தள்ளிக் கொண்டு சைக்கிளைப் போட்டுவிட்டு கதவை சாத்தினேன். அப்போது கதவிடுக்கில் அந்து உருவம் மிகவேகமாக சைக்கிளுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அது எங்ககள் வீட்டுக் கதவோடு வந்து சைககினோடு மோதியது.ஆனால் மோதியது காற்றுமாதிரி இருந்தது"

"காற்று மாதிரியா என்னடா சொல்கிறாய்"

அடுதத கணமே கமலன் மயங்கிவிட்டிருந்தான். சுற்றி நின்ற கமலனின் குடும்பத்தார்களின் கதறல் சத்தத்தில் சுய நிதானமடைந்த சுதந்திரன் எழுந்து நின்று கொண்டான். முதல் நாளிரவு நடந்த சம்பவத்தை ஒன்றுவிடாது அவன் விபரித்த போது அவனையும் அறியாமல் அவன் அழுது கொண்டிருந்தான்.

அன்று இரவு பத்தரை மணியளவில் கமலனின் கண்கள் நிரந்தரமாக மூடிக் கொணடன.

சவ ஊர்வலத்தின்போது அவனது சவப் பெட்டியை முன்நின்று சுமந்தனர் இரு நண்பர்களும்.சவச்சாலைக்குள் நுழைகையிலும் வெளிவருகையில் கைகழுவுகையிலும் இருவர் மனங்களுமே சுக்குநூறாகிட கதறியழுது கொண்டே வந்தனர்

எத்தனையோ வருடங்கள் எப்படியோ கடந்து விட்டன. ஆனால்....காரணத்தைக் காண இன்னுமே முடியவில்லை.

உண்மையில் கமலன் கண்ட காட்சி பொய்தானா? அப்படியென்றால் அப்படி அவன் காண என்ன காரணம்?
அது மெய்யென்றால் அது ஏன் அந்த நல்ல அப்பாவியைக் குறிவைத்துத் தாக்க வேண்டும்?

அது பேயா? கெட்ட ஆவியா? உண்மையா அல்லது பொய்யா?

சிந்தித்தால் சிரிப்பு வரும்..மனம் நொந்தால் அழுகை வரும்
சிந்தனை எதையும் தெளிவு படுத்தலையேல் ஐயங்கள் தொடர்ந்து வரும்


இல்லை என்றால் உண்டு. உண்டு என்றால் இல்லை. அப்படியா? அது சரியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக