புதன், 17 அக்டோபர், 2012

தர்மமெல்லாம் தர்மமில்லை (சிறுகதை)






லங்கைத் தாயின் மனிதாபிமான சேலையை சிங்கள இனவெறியர்கள் உரித்து அவளைக் கதறியழ வைத்துக் கொண்டு இருந்தார்கள். அன்பென்னும் ஆடை அவிழ்ந்து விழ, அவள் அழுது குழறிக் கொண்டிருந்த அவலங்கள் பரவி வழிந்து கொண்டிருந்த இனவெறிக் கலவர வேளை அது.



சிறு பிழம்பாகத் துவங்கிய இனக்கலவரத் தீயானது  பெரு நெருப்பாகி இலங்கை வாழ் தமிழ் மக்கள் பலரினதும் ஊர்களையும் உயிர்களையும் உடைமைகளையும் விழுங்கி  மகிழ்ந்து கொண்டிருந்தது.

ஏனென்றே தெரியாமலும் என்னவென்றே புரியாமலும் எத்தனையோ அப்பாவி உயிர்கள் மரணக் குழிகளுக்குள் ஈவிரக்கமற்ற மனித விலங்குகளால் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தன.

மனித நேயமும் மனித மரியாதையும் மனித உரிமையும் மண்ணோடு மண்ணாகிப் போய்விடுமோ என்கின்ற அச்சத்தின் கருமேகமே எங்கணும் படர்ந்து, விரிந்து, வளர்ந்து கொண்டு இருந்தது.

தமிழர்களின் பொருளாதாரப் பாதுகாப்புச் சுவர்கள் திட்டமிட்ட விதத்தில் இனவெறியர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டு, அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அடிபட்டோடும் ஆதரவற்ற தமிழர்களுக்கு அடிபட்டோ, படாமலோ தப்பி இருந்த இதர தமிழர்கள்தான் அபயம் கொடுத்துக் காப்பாற்ற வேண்டுமென்ற அவலமான நிலைமை.

சிங்கள இனவெறியின் முன்பு தாக்குப்பிடிக்க முடியாத சிறுபான்மைச் சிங்கள நல்லிதயங்கள் வேறு வழியெதும் தெரியாத நிலையில் கைகட்டி வேதனையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

அவைகளுக்குள் இருந்த சுயநலச் சாதாரணங்கள் பலவும் தமிழர்க்கெதிராக இயங்கிக் கொண்டிருந்த வெறியர்களின் கொள்ளைகளைப் பயன்படுத்திக் கொண்டு, மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் தமிழர்களின் உடைமைகளைச் சுருட்டியெடுத்துச் சேகரித்துத் தங்களின் எதிர்காலப் பொருளாதார வளத்துக்கு அத்திவாரம் போட்டுக் கொண்டிருந்தன.

மனிதாபிமானத்தின் இதயங்களுக்கு சட்ட உதவிக்கும் மருத்துவ உதவிக்கும் இனவெறியினால் அனுமதிக் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தபடியினால் மனித நேயம் அங்கே மரணப் படுக்கையில் கிடந்து, துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது.

பரிதாபத்துக்குரிய நிலைமையில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்க மறுத்து வெள்ளாடுகளைச் சுற்றி வளைத்து நின்ற ஓநாய்களின் தலைமை விலங்கைப்போல  “யுத்தமென்றால் யுத்தம்; சமாதானம் என்றால் சமாதானம்” என்று வீர வசனங்களை மொழிந்து கொண்டிருந்தார்  அந்நாட்டின் தலைவர் ஜே: ஆர். ஜெயவர்தன அவர்கள்.

இகழ்ச்சியும் ஆணவமும் இடும்பும் அகங்காரமும் இதயமற்ற அரக்கத்தனமும் மிகுந்திருந்த தமிழர்களுக்கு எதிரான, அந்தத் தேசத் தலைவரின்  இன . வெறிக்கு உற்சாமூட்டும் உரையினால் தமிழர் விரோத உணர்வுகள் அதிஉரம் பெற்று வளர, அது, இரத்த வெறி பிடித்துக் கூத்தாடிய காடையர்களின் செயல்களுக்கு மேலும் மேலும் உத்வேகம் வழங்கிக் கொண்டு இருந்தது.

அவரது வாரிசுகளான இதர மநதிரிகளும் அரசியல்வாதிகளும் அவ்வழியில் அவரை விடவும் ஒரு படி மேலே போக முடியாதா என்று பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள்.

நல்லதைச் செய்வதும் ஆபத்துக்கு உதவுவதும்கூட தண்டனைக்குரிய குற்றங்களோ என்ற பயமூட்டும் ஐயத்தினால் மக்கள் மத்தியில் எழுந்து கொண்டிருந்த, நீதி தேவதையின் கரங்கள் முறிந்து கிடந்த, கொடுமை நிறைந்த நேரமது.

இதற்கிடையில்…புயலுக்கிடையில் ஏற்படும் சிறிய  திடீர் அமைதியைப் போன்று  சில நாட்கள் அமைதி திரும்புவது போல இருந்தபோதுதான் தப்பி இருந்த தமிழர்கள் ஆங்காங்கே பரவலாகப் பல ஊர்களிலும் பாதிக்கப்பட்டிருந்த தமது மக்களுக்காக எதையாவது செய்துதவ ஏற்பாடுகள் செய்வதற்குத் தங்களால் இயன்ற விதங்களில்  முயன்று கொண்டிருந்தார்கள்.

நெருப்பின்  ஊடாக மெழுகுவர்த்தியைப் பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதற்கு ஒப்பாக சிங்கள ஊர்களுக்கு ஊடாக நகர்ந்து ஆங்காங்கே அகதிகளாகி இருந்த தமிழர்களுக்கு உதவி செய்தாக வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருந்தது அப்போது.

கொழும்பிலிருந்து உயிரைப் பணயம் வைத்து உதவி செய்ய ஒரு சின்னஞ்சிறு இளைஞர் குழு முனைந்து, செயற்பட்டுக் கொண்டு இருந்தது.

சொந்த வீட்டிற்குக் கூட விபரம் சொல்லிச் செயல்பட முடியாத நிலை. ஏனெனில் அதைச் சொன்னால் உடனடியாகவே  “வீட்டோ” செய்து பயணத்தைத் தடை செய்து விடுவார்கள். காரணம், உயிருக்கு அதாவது தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதமோ பாதுகாப்போ நம்பிக்கையோ இனி இல்லையென்பதாகவே அன்றைய நிலைமை மாறிக் கொண்டிருந்தமைதான்.

குடும்பத்தில் ஒருவரை தவற விட்டாலோ இழக்க நேர்ந்தாலோ எவரிடமும் எதுவிதமான உதவியும் கிடைக்கலாம் என்ற உத்தரவாதமே அப்போது எங்கும் இருக்கவில்லை.

பொலீசில் முறையிட்டால் அது முறையிட்டவனையே அடித்து, நொருக்கி, அடைத்து, உதைத்து, வதைத்துவிடும்.

அரசிடம் முறையிட்டால்? அதுதானே அத்தனையையும் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது!

கள்வனை மறித்தால் வேலியை நம்பலாம். வேலியே மேய்ந்தால் எவரைத்தான் நம்புவது?


                  ...........................................................................................


ப்படியான ஒரு சூழ்நிலையில்தான்.......

கொழும்பிலிருந்து கண்டி நகரத்தை நோக்கி அந்த வாகனம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

முன் ஆசனத்தில் அமலனும் அவனது நண்பன் லூயியும் அமர்ந்திருந்தார்கள். வாகன சாரதியாக ஒரு பௌத்த சிங்களவர் இயங்கிக் கொண்டிருந்தார்.

வாகனத்துக்குள் எராளமான ஆடைகளும் உபகரணங்களும் நிறைந்திருக்க  அவற்றுக்கிடையே எட்டு இளைஞர்களும் அமர்ந்திருந்தார்கள். அதாவது பதுங்கி இருந்தார்கள்.

எங்கோ அடிபட்டு, உதைபட்டு, காயப்பட்டு, அகதிகளாகக் கிடந்த சில தமிழ் மக்களுக்கு உதவுவதற்காகத்தான் அவ்வண்டிக்குள் அவர்கள் சத்தமின்றிப் பதுங்கியிருந்தார்கள். ஒரு பொதுநல சேவையைக் கூட கிரிமினல்களைப் போல செய்தாக வேண்டிய துக்ககரமான நிலைமை.

அவர்கள் கொழும்பிலிருந்த தமிழ்க் கடைகளிலிருந்து அன்பளிப்பாகக் கிடைத்திருந்த பொருட்களையே கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.

அவற்றைக் கண்டிப் பகுதியில் பாதிக்கப்படடிருந்த தமிழ் மக்களுக்குப் பகிர்ந்தளித்து உதவுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

அவ்வாகனத்தை ஒரு பிரபல தமிழ்த் தினசரியின் நிர்வாகம்தான்; கொடுத்துதவியிருந்தது.

அதன் நிர்வாகி அமலன் செயலாளராக இருந்த இன்னொரு இயக்கத்திற்குத் தலைவராக இருந்தார். அதனால்தான்; அவர் மூலமாக அந்த உதவி அவர்களுக்குச் சாத்தியமானது.

அதே சமயம் நல்ல உலக அனுபவம் நிறைந்திருந்தவரான அந்தப் பெரியவர், வாகன சாரதியாக ஒரு பௌத்த சிங்களவரே இருப்பது நல்லது என்றும் ஏதாகிலும் ஆபத்து அல்லது பிரச்சினை என்று வந்தால் சமாளிப்பதற்கு அதுவே உதவியாக இருக்கும் என்றும் கூறியதுடன் தமது நிறுவனத்தில் பணி புரிந்து வந்த அவருக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்த ஒரு பௌத்த சிங்கள வாகன சாரதியையும் தந்து உதவினார்.

நல்ல நோக்கங்கள் நல்ல மனிதர்களால் நல்ல விதத்திலே நடைமுறைப்படுத்தப்பட்டால் இறைவன் கூடவே இருந்து வழிகாட்டி உதவுவான் என்று நம்பலாமா?

நம்பலாம் என்றுதான் அமலனுக்கு அப்போதைக்குப் பட்டது.

வழியெல்லாம் காணப்பட்ட சூழ்நிலைகளின் தோற்றம் தீ அணைந்ததுபோல இருந்தாலும் சூடு தணியாத அடுப்பின் சூழ்நிலையே இன்னும் நிலவிக் கொண்டு இருக்கின்றது என அச்சுறுத்துவதைப் போல இருந்தது.

ஆபத்து கழுத்துக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தாலும் அமலனும் அவனது இளைஞர் இயக்கமும் இயன்றதைச் செய்து மக்களுக்கு உதவிட முடிவெடுத்து விட்டதாலே ஒரு வித அசாத்திய தைரியம் அவர்களை ஒருவித மன திருப்தியுடனும் துணிச்சலுடனும் வழி நடத்திக் கொண்டிருந்தது.

கொழும்பிலிருந்த புறப்படுமுன் அவர்கள் சில முன்னேற்பாடுகளுடன் புறப்பட வேண்டி இருந்தது.

வழியில் சிங்களக் காடையர் கும்பல்களினால் மறிக்கப்பட நேர்ந்து  தமிழர் எனக் கண்டு பிடிக்கப்பட்டால் உயிருக்கே கூட ஆபத்து உருவாகலாம் என்பதால் நன்கு சிங்களம் பேசக் கூடியவர்களாக இருந்த அமலனும் இயக்கத்தின் உபதலைவனாக இருந்த லூயியும் முன் ஆசனத்தில் அமர்ந்து கொள்ளவும் ஏனைய உடன் வரும் இளைஞர்களை வாகனத்துக்குள் பதுக்கி வைத்து  அழைத்துச் செல்லவும் முடிவெடுத்து இருந்தார்கள்.

அதற்கிடையில் இன்னுமொரு புதிய யோசனை.
ஒருவர் போலீஸ் உடையில் இருந்தால் எப்படி இருக்கும்?

அது ஆபத்துத்தான் என்றாலும் காக்கிக் காற்சட்டை அணிந்து வெள்ளை மேற்சட்டை அணிந்திருந்தால் அப்படியொரு அபிப்பிராயத்தைத் தோற்றுவிக்கலாம். அத்துடன் காடையர் கும்பல்கள் எதிர்ப்பட்டாலும் பாதுகாப்பாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பில் பாவித்த உடைகளை விற்கின்ற கடைகள் சில அப்போது இருந்தன. அங்கே போலீஸ் உடைகளும் கிடைக்கும் என்று சாரதியான சிங்களப் பெரியவரே  “ஐடியா”  தந்தார்.

ஒரு கடைக்குப் போய் போலீஸ் காற்சட்டையொன்றை வாங்கிக் கொண்டார்கள். அமலனுக்கு அது சரியாகப் பொருந்தியது. போலீஸ் அதிகாரியென்றே பொதுவாகப் பார்க்கும் எவரும் கருதிவிடும்படி அவனது தோற்றமும் ஒத்துழைத்தது.

“இன்ஸ்பெக்டர்” அமலனும் லூயியும் சாரதியருகில் முன்னாலே அமர  அனைவரும் புறப்பட்டார்கள்.

வழியெல்லாம் இலங்கைத் தாய் படுகாயப்பட்டுக் கிடந்தாள். லங்கா மாதாவின் உடம்பெல்லாம் ஒரே எரி காயங்களும் முறிவுகளும் இரத்த ஒழுக்குகளுமாகவே படர்ந்து கிடந்தன. ஆங்காங்கே சனங்கள் நடமாடினாலும் அதில் செயற்கையே தெரிந்தது.

அவர்கள் கண்டிக்கு அருகிலிருந்த ஒரு மடத்தை நோக்கியே சென்று கொண்டிருந்தார்கள்.

மதியம் நெருங்கிய வேளையில் எல்லாருக்கும் உணவு தேவைப்பட்டது.

வாகன சாரதியை அமலன் உதவி கேட்டான். வழியில் ஓரிடத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. ஒரு சிறிய உணவகம். அவரே எல்லாரையும் இறங்கச் சொல்லி, ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றார்.

அது ஒரு சிங்கள உணவகமாதலால் இடியப்பமும் மாசிச் சம்பலும் தேங்காய்ச்; சொதியும் (ஒரு வகைக் குழம்பு) ஆர்டர் கொடுத்து விட்டுக் காத்திருந்தார்கள்.

அதற்கிடையில் கூட வந்திருந்த இளைஞர்கள் தங்களை மறந்து விட்டார்கள். தங்களுக்குள் கடகடவென்று தமிழில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சாரதி அமலனின் காதில் மெதுவாகக் குசுகுசுத்தார்:

“ஐயா இவர்களை முதலில் வாயை மூடச் சொல்லுங்கள். அவர்கள் நினைத்தால் எதுவும் செய்துவிடலாம். சட்டமும் உங்களுக்கு உதவாது இப்போது. பேசாமல் சாப்பாட்டில் நஞ்சைக் கலந்து தந்து விட்டால் என்ன செய்வீர்கள்? அதனால் தயவு செய்து அவர்களை எச்சரித்து வையுங்கள்”

அதைக் கேட்டதும் அமலனே பயத்தினால் கலங்கிப் போனான். தற்செயலாக அப்படி ஒரு விபரீதம் நடந்து விட்டால் சவம் கூட வீடு திரும்ப முடியாத சங்கடமான சூழ்நிலையல்லவா?

அப்படியே அத்தனை சவங்களையும் குவித்து வைத்துத் தீமூட்டி எரித்துவிட்டு, அரைகுறையாக எரிந்த சடலங்களை அயலூர்களுக்குக் தூக்கிக் கொண்டு போய்க் காண்பித்து, அவை தமிழர்களால் கொன்று எரிக்கப்பட்டுவிட்ட சிங்களவர்களின் சடலங்கள் என்று வதந்தி பரப்பிப் புது இனவெறிப் படுகொலைக்கு அத்திவாரமே போட்டுவிடுவார்களே!

குசுகுசு மொழியில் அமலனால் அனைவர்க்கும் கடும் எச்சரிக்கை பரப்பி விடப் பட்டது. அடுத்த சில விநாடிகளுக்குள் அத்தனை மேசைகளுமே மயான அமைதி காத்தன.

சாப்பிடச் சாப்பிட சாரதியின் வாக்கு உண்மையாகிவிடுமோ என்ற பெரிய அச்சம். தற்செயலாக அப்படியொரு அசம்பாவிதம் ஏதாவது நடந்து விட்டால் அவர்களின் வீடுகளுக்கு எப்படி  எதைச் சொல்லிச் சமாளிப்பது?

மூளை குழம்பிக் கொண்டிருந்தது அமலனுக்கும் லூயிக்கும்.

கடவுளே!

அந்த ஏக்கமும் பரிதவிப்பும் சாதாரணமான சூழ்நிலையில் எவருக்குமே புரிந்து கொள்ள முடியாதன.

அனுபவத்தால் மட்டுமே அனுபவித்து, உணர வேண்டியன. அவ்வளவுதான் சொல்லலாம்.

ஏனோ அதிர்ஷ்டவசமாக அப்படியொன்றும் நடக்கவில்லை. கடைக்காரரின் முகம் மட்டும் அவரது அகத்தினுள் வெறுப்பின் புகை கொழுந்துவிட்டுப் பரவுகின்ற அசைவினைக் காட்டிக் கொண்டு இருந்தது.

தான் தன் இனத்தவர் ஒருவரின் வேண்டுதலுக்காக ஏதோ செய்யக் கூடாத பாவத்தைச் செய்துவிட்ட மாதிரி வெளிறிப் போயிருந்தது அது.

கேவலம், பணத்துக்காகத் தமிழருக்கு நல்லதைச் செய்ய நேர்ந்துவிட்டதே என்று புழுங்கிக் கொண்டிருந்தார் அந்தப் புண்ணியவான் என்பது இலைச் சோற்றில் புதைந்த அழுகிய பூசணிக்காயாகத் தெரிந்து கொண்டிருந்தது.

அமலனை மட்டும் பார்த்தபோது இலேசாக முறுவலித்துக் கொண்டார். நமது சாரதி முன் யோசனையாக, அவனது பொலிஸ் ஆடையை அறிமுகத்தோடு இணைத்து, அஸ்திரத்தையும் தொடுத்திருந்தது புரிந்தது.

அவர்கள் புறப்பட்ட நேரம் பிற்பகலாக இருந்தது. எனவே பாதைகளில் அதிக வேகமின்றிப் போனதில் நேரம் வெகு விரைவாகவே கழிந்துவிட்டது.

இருட்டு சூழ்ந்து விட்டது.
ஒரு காட்டுப்பாதை போன்ற வழி இடையில் வந்தது. அதனூடாகப் போய்க் கொண்டு இருக்கையில்…

“டபக்” கென்று ஒரு சத்தம்.

வண்டி குலுங்கியவாறே சற்று சரிந்தாற் போல் நின்றுவிட்டது.

என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்குள் சாரதி வேகமாகச் சொன்னார்.
”ஓருவரும் இறங்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். உள்ளுக்குள் இருப்பவர்களைப் பேசாமல் கப்சிப்பென்று இருக்கச் சொல்லுங்கள்”

அமலனும் லூயியும் உள்ளிருப்பவர்களை உடனடியாக எச்சரித்தார்கள்.

அந்த நேரம்….

திடீரென வண்டியைச் சுற்றி ஏராளமான தீப்பந்தங்கள் நகர்ந்து வரத் தொடங்கின.

பல கறுப்பு உருவங்கள். இருட்டில் நிழலுருவங்களாக வண்டியைச் சூழ்ந்து கொண்டன.
அமலனுக்கும் லூயிக்கும் ஒன்று மட்டும் புரிந்தது.

கலவரக் காற்றுள்ளபோதே அயலவர் உடைமைகளைத் தூற்றிக் கொள்ளும் காடையர் கூட்டம்தான் வருகின்றது!

கொள்ளையடித்துவிட்டு ஓடவென்று வந்து, வண்டியைச் சூழ்ந்து கொள்ளப் போகிறது என்பது புரிந்தது.

வாகன சாரதி சிங்களத்தில் சற்று பலமாக அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“வந்திருப்பவர் யாரென்று தெரிகிறதா? கொழும்பு கோட்டை பெரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக்கும். இங்கே அருகில் எங்கே பொலிஸ் ஸ்டேஷன் இருக்கிறது? உடனடியாக அவர்களை அழைக்க வேண்டும்.”

எந்த இனம் நெருப்பாகி எரித்தழித்துக் கொண்டிருந்ததோ அந்த இனத்திலிருந்தே ஒரு நெருப்பு  விளக்காகத் தன்னையே ஆபத்தில் இருத்திக் கொண்டு  அவர்களைக் காப்பாற்றிடக் கைம்மாறு கருதாது உதவிட முன்னின்று முயன்று கொண்டிருந்தது. மனிதாபிமானத்தின் புன்னகையது அல்லவா?

ஆம் மனிதாபிமானம் மறுபிறவி எடுத்துக் கொண்டிருந்தது. இறைவன் தன்னை அந்தப் பெரியவரில் பிரதிபலித்துக் கொண்டிருந்தார்.

நல்லவர்கள் எங்குமே இருக்கத்தான் செய்கின்றார்கள். உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஒருவரையொருவர் ஒரேயடியாக வெறுத்து ஒதுக்குவது எவ்வளவு பெரிய தவறு?

அகதியாக இருந்து கொண்டும் ஆணவமாக நடந்து கொண்ட பணக்காரத் தமிழ்ப் பெண்ணொருத்தியின் கதையே அப்போது அமலனின் நினைவுக்கு வந்தது. அவளோடு ஒப்பிட்டால் இந்த மனிதர் மாணிக்கம். அவள் வெறும் கூழாங்கல். சீ! அதுகூட சரியில்லை. வெறும் சேறு.

மனிதாபிமானமே! நீ தைரியமாக இரு. உன்னைக் கொல்ல எவராலுமே முடியாது என்பதுதான் நிரூபணமாகிக் கொண்டிருந்தது அங்கே.

வாகன சாரதியின் வார்த்தைகளால் வந்திருந்த கூட்டத்திற்குள் திடீர் மாறுதல் ஏற்படுவது தெரிந்தது. சிலர் வாகனத்துக்கு முன்னால் நின்று மரியாதையாகப் பார்த்தார்கள். வாகனத்துக்குள் இருட்டு என்றாலும் பந்தங்களின் வெளிச்சத்தில் முகம் தெரியுமல்லவா!

அமலனும் லூயியும் தங்கள் முகங்களை ஒருவித முறைப்பு தவழும் விதமாக வைத்துக் கொண்டார்கள்.

அங்கிருந்த ஒருவன் கத்தினான்.

“பொலிஸ் நிலையம் இங்கிருந்து கால் மைல் தூரத்தில்தான் இருக்கின்றது.”

“யாரையாவது அனுப்பி பொறுப்பதிகாரியை வரச் சொல்ல முடியுமா?”
சாரதி அவர்களைக் கேட்டார். அத்துடன் பொறுப்பதிகாரியின் பெயரையும் கேட்டுக் கொண்டார்.

அமலனும் லூயியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
ஆபத்து நெருங்குகிறதா அல்லது இவர்கள் அதை நெருங்குகிறார்களா?

ஒருவன் கட்டளையிட, இன்னொருவன் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தது தெரிந்தது.

நெஞ்சு படபடத்தாலும் காட்டிக் கொள்ள முடியாத நிலை.

கொஞ்ச நேரம் கழிந்தது. அமலனும் லூயியும் ஒரு முடிவெடுத்துக் கொண்டார்கள். அப்போதைய நிலையில் எவ்வளவு திறமையாக சிங்களத்தில் பேசினாலும் தமிழன் என்று கண்டு பிடித்துவிட வாய்ப்பிருப்பதால் விபரீதமாக எதுவும் நடந்து விடலாம். ஆகவே ஆங்கிலத்தில் பேசிச் சமாளிப்பதே நல்லது என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

                                    ........................................................

டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

ஒரு பெரிய ஜீப் வண்டி வருவது தெரிந்தது.
அதனுள்ளே…. அவ்வட்டாரப் பொலீஸ் அதிபர்.

ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது. அவர் முந்திடும் முன் நாம் முந்துவதே சரியென்று இருவரும் என்று ஆயத்தமாகியபோது  சாரதி முந்திக் கொண்டு அவரை அணுகி விட்டார். அவர் என்ன சொல்வார் என்று இவர்களுக்குத் தெரியுந்தானே!

“குட் ஈவினிங் மிஸ்டர்…”  என்று வந்த பொறுப்பதிகாரியின் பெயரைச் சொல்லி அமலன் வரவேற்றான். இருவரும் சென்று கை குலுக்கிக் கொண்டார்கள்.

இந்த “குட் ஈவினிங”; இருக்கிறதே! அது அந்த இன்ஸ்பெக்டருக்கு ஒரு சம்மட்டி என்று அப்போதுதான் தெரிந்தது. ஐயா ஒரு தனிச் சிங்கள மாமேதையாக மட்டுமே இருந்தார்.

பண்டாரநாயக்கா வாழ்க!

அவருடைய தனிச் சிங்கள சட்டத்தினால் ஆங்கிலம் தேவைப்படவில்லை யென்று இவர் அதைத் துப்பிப் போட்டுவிட்டவர் என்று துல்லியமாகவே தெரிந்தது.

வெறும் “யெஸ் நோ”வோடே மட்டும் அவர் சுற்றிக் கொண்டு  சிங்களத்தில் அதிகம் பேசிப் பேசி  “நீயும் சிங்களத்திலேயே பேசேண்டா பாவி! எதுக்காக என் மானத்தை வாங்குகிறாய்?” என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதுவொரு மிகவும் பின் தங்கிய பகுதி. பெரும்பாலும் படிப்பறிவற்ற மக்களே நிறைந்த பகுதியென்றும் தெரிந்தது.

அதனால் அப்பகுதி மக்களுக்கும் காடையர்களுக்கும் காக்கிச் சட்டைகள் மேல் அதீத மதிப்பிருந்தது தெரிந்தது. அது சகஜம்தானே!

அவர் தனது கௌரவத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் தங்களையே காத்துக் கொள்ள வேண்டும். அப்படியொரு வித்தியாசமான வேடிக்கையாக இருந்தது நிலைமை.

அந்த நல்ல சாரதிதான் பாதுகாப்புக் கவசமாக முன்னின்று உதவிக் கொண்டிருந்தார்.

ஜீப்புடன் பிணைக்கப்பட்டு  வாகனம் போலிஸ் நிலையத்துக்கு இழுத்து வரப்பட்டது. கடைசிவரை வண்டிக்குள்ளிருந்து சிறு முனகல் கூடக் கேட்கவில்லை.

லூயி புத்திசாலி. சாதுரியமாக செயல்பட்டான். அந்த இளைஞர் இயக்கத்திலேயே ஓர் அச்சாணி மாதிரி இயங்கிய இளைஞன் லூயிதான்.

ஸ்டேஷனை அணுகியதும் இன்ஸ்பெக்டரிடம் உடனடியாகத் தொலைபேசியில் பேச வேண்டுமே என்று ஆங்கிலத்தில் கேட்டதும் பொறுப்பதிகாரி “ஆளை விடுடா சாமி. டெலிபோனை எடுத்துக்கோ!” என்ற மாதிரி உடனடியாகவே அனுமதித்து விட்டு  அறையை விட்டு அகன்று கொண்டார்.

“எங்கே இவன்கள் யாரிடமாவது ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே நம்மையும் இழுத்து விடுவான்களோ?” என்று அஞ்சினார் போலும்.

லூயி மடமடவென்று கண்டிக்கருகிலிருந்த மடத்துக்குப் பேசினான். நடந்துவிட்ட விபத்து பற்றியும் வாகனத்துக்குள்ளிருக்கும் இளைஞர்கள் பற்றியும் எடுத்துச் சொல்லி தக்க எற்பாடுகளைச் செய்தான்.

இரண்டு மணி நேரத்தில் ஒரு பெரிய வாகனம் வந்து நின்றது. இளைஞர்கள் அனைவரும்  ஏறிய பின் அமலன் லூயியையும் கூடப் போய்விடும்படி சொன்னான்.

ஆனால் லூயி அதை முற்றாக மறுத்து  கூடவே தங்கிக் கொண்டான். தோளோடு தோள் சேர்ந்து உயர்ந்து விட்டு  காலை இழுத்து விழுத்திவிடும் நமது சமூகத்தில் நூறில் ஒன்றிரண்டுதான் இப்படி மனிதத்தின் பிம்பங்களாகத் தப்பிப் பிறக்கின்றன.

லூயியை அந்த நல்ல வட்டத்துக்குள் பயமின்றி வைத்து விடலாம்.

இரவு முழுவதும் தூங்கவே இல்லை அவர்கள். அவர்களுக்காக அந்த சாரதி உருவத்தில் வந்திருந்த மனித தெய்வமும் கண் விழித்துக் காத்திருந்தது.

எதிர்பாராமல் ஒரு தொலைபேசி கொழும்பிலிருந்து வந்தாலும் போதும். கூண்டோடு கைலாசம்தான் என்ற அளவிற்கு ஆபத்து வியூகமெடுத்துக் கொண்டிருந்த நேரமல்லவா அது!
                 
                            .................................................

பொழுது ஒருவாறு விடிந்தது. அவர்களுக்காக அந்த நிலையத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குப் போன போது  கூண்டுகளில் எராளமான பேர் அடைத்து வைக்கப் பட்டிருந்தார்கள்.

அனைவரும் கடந்த சில நாட்களுக்குள் அப்பகுதித் தமிழர்களை வதைத்தவர்களும் கொளுத்தியவர்களும் கொன்று குவித்தவர்களும் கொள்ளையடித்தவர்களும்தான்.

ஒருவர் முகத்திலாவது…கவலையா? அது மருந்துக்கும்கூட இல்லை.

சட்டம் அவர்களைத் தண்டிக்கவல்ல. பாதுகாக்கத்தான் என்று அவர்களின் அகங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிந்திருந்தது என்பதை அவர்களின் முகங்கள் திரைப்படமாகக் காட்டிக் கொண்டிருந்தன.

ஒரே சிரிப்பும் கும்மாளமும்தான்.

மனம் எரிந்தது. என்றாலும் புன்முறுவலால் அதை மறைக்க வேண்டிய கட்டாயமான நிலைமை. வேறென்னதான் செய்ய முடியும்?

வாகனத்தைப் பழுது பார்த்து எடுத்துச் செல்ல ஆட்கள் இன்னும் வரவில்லை. எனவே அதுவரை கொஞ்சம் அந்தப் பக்கத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று இருவரும் நடந்தார்கள். ஒரு சில்லறைக் கடை தெரிந்தது. உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு முஸ்லீம் சகோதரரே கடைக்காரர் என்று தெரிந்தது. அவர் இவர்களில் என்ன கண்டாரோ, இவர்களைக் கண்டதுமே

“வாங்க தொரே” எனத் தமிழில் வரவேற்றார்.

இருவருக்குமே ஒரு “சுருக்”

ஒரே தடவையில் நம்மை யாரென்று இவர் அடையாளம் காட்டி அழைத்து விட்டாரே! ஏன் இந்த மற்றவர்களுக்கு அது புரியவில்லை? இருவருக்குமே அது புரியவில்லை. வந்து நுழைந்த பாவத்துக்காக  ஒன்றிரண்டு பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.

அப்போது…
ஒரு சின்னஞ் சிறுவன் கடைக்குள் வந்து, கொஞ்சம் சில்லறையைக் காட்டிக் கொண்டு  ஓர் உணவுப் பண்டத்தைக் கேட்டான். அதன் விலைக்கு அந்தச் சிறுவனிடமிருந்த சில்லறை போதாது. ஆனால் அதற்காக அந்தச் சிறுவனை அவர் ஏன் மிகவும் கடுமையாக இப்படி ஏசி விரட்டுகின்றார்?

அந்தக் குழந்தையை அவர் விரட்டிய விதம் அமலனை என்னவோ செய்தது. ஒரு நாயை விடவும் கேவலமாக ஏசி, அந்தப் பையனை அவர் விரட்டிக் கொண்டிருந்தார்.

இரக்கமே  இல்லாமல் அவர் நடந்து கொள்வதாக அமலனுக்குப் பட்டது. அருகில் சென்று  அந்தப் பையனிடம் எவ்வளவு குறைகிறது என்று கேட்டுவிட்டு  அவன் அந்தத் தொகையைக் கொடுத்து குழந்தை கேட்பதைக் கொடுக்கச் சொன்னான்.

அந்த ஒரு கணத்தில் அவர் அவனைத் திரும்பிப் பார்த்தாரே ஒரு பார்வை!

“சீ! நீயும் ஒரு மனிதனா?” என்று கேட்பதைப் போலிருந்தது.
அமலனுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அந்தச் சிறுவன் சிரித்துக் கொண்டே பண்டத்துடன் ஓடிவிட்டான். அவன் மறைந்ததும் அமலன் அவரிடம் கேட்டான்.

“ஏன் சாச்சா! சின்ன பாலகன் என்றும் பார்க்காமல் அப்படி நடந்து கொண்டீர்கள்? பாவமென்று உதவி செய்த என்னையும் ஏன்  அப்படி முறைத்துப் பார்த்தீர்கள்?”

அவர் சொன்னார்:

“சொல்றேனேன்னு கோவிக்காதீங்க. நீங்க செஞ்தது புண்ணியமில்லை. பெரிய பாவம். தெரியுமா?”

அமலனுக்குப் புரியவில்லை. அவரே சொன்னார்.

“இப்ப வந்த அந்த மூதேவியோடே வாப்பாக்கார நாய்தான் இங்கே முப்பது வருசமா சுருட்டுக்கடை வைச்சிருந்த ஒரு நல்ல மொதலாளியையும் அவருடய பிள்ளையையும் பொண்டாட்டியையும் குடும்பத்தோடே போன கிழமை தீ வைச்சு எரிச்சுக் கொன்னான். தெரியுமா? அந்த மொதலாளியோடே சின்னப் பிள்ளை இந்த, வந்துட்டுப் போற சனியனை விடவும் சின்னக் கொழந்தை; தெரியுமா?

அந்த நாய் அவர் கிட்டே கடன் எடுத்துத்தான் அவனுக்கு ஒரு சொந்த வீடே  கட்டிக்கிட்டான். அந்தக் கடனைக்கூட இன்னும் ஒழுங்காக் கொடுத்து முடிக்கயில்லை அந்த நாசமாப் போறவன்.

நான் கூட அந்த ஐயா கிட்ட கடன் வாங்கியிருக்கேன். எப்படி என்றைக்குத்தான் அந்தக் கடனைக் கொடுத்து முடிக்கப் போகிறேனோ?”

கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வருவது தெரிந்தது. துடைத்துக் கொண்டே அவர் தொடர்ந்து சொன்னார்.

“அவன் இந்தப் போலீசிலதான் இருக்கான் இப்போ. ஒண்Nணுமே நடக்காது. சும்மா வந்திடுவான். இது மட்டும் எங்க ஏறாவூரிலே நடந்திருக்கணும். ஊரே சேந்து கொத்தி சம்பல் போட்டிருக்கும்”

அவரும் வேற்றூர்வாசிதான். தமிழ்தான் பேசுகிறார். ஆனால் அவரது மதம் அவரைக் காப்பற்றியிருக்கிறது.

அவரே தொடர்ந்தார்:
“மாடு குட்டி போட்டா மாடுதான் போடும். பண்டி குட்டி போட்டா? பண்டிதான் பொறக்கும். மாடு பொறக்காது. பொறக்கவே முடியாது. அப்படீன்னா அந்த ஷைத்தான் பெத்த புள்ளை மட்டும்…? அதனாலேதான் குடுக்காமே வெரட்டிக்கிட்டிருந்தேன்;” என்று சொன்னவர் கடைசியாக ஒன்றைச் சொன்னார்.

“தருமம் செய்றது நல்லதுதான். ஆனா அது தர்மமா இல்லாட்டி அதுவே ஹறாமா ஆயிடும். மறந்து போவாதீங்க.”

அமலனினதும்  லூயியினதும் நெற்றிகள் சுருங்கின. அவரே தொடர்ந்தார்:

“மாங்கா மரத்துக்கு வெறும் பச்சத் தண்ணிய மட்டும் ஊத்துங்க. போதும். அது பழம்பழமா அள்ளித் தரும். அதுட நல்ல கொணம் அப்புடி. நாகப் பாம்புக்கு பாலை ஊத்தி ஊத்திக் குடுங்க. குடிச்சதுக்குப் பொறவு ஒரு நாளைக்கி ஒங்களையே கொத்திக் கொன்னு போடும். ஏன்னா அதுகளோட ரத்த கொணம் அப்புடி. சிங்கமும் ஆடும் என்னிக்குமே சவோதரங்களா ஆவாது. அது எயர்க்கை. இதுவளுக்கு செய்ற ஒதவியெல்லாம் பாம்புக்கு செய்ற மாதிரி. மறக்காதீங்க.”

அமலனின் கண்களுக்குள் அந்த பௌத்த சிங்கள சாரதி வந்தார். இந்தப் பாம்புகளுக்குள் அவரை எப்படி நுழைக்க முடியும்?

வெளியில் ஏதோ சப்தம். எட்டிப் பாhத்தான். பழுது பார்ப்பவர்கள் வந்திருந்தார்கள். கூடவே இவர்களை அழைத்துப் போகவும் ஒரு வாகனம் வந்திருந்தது.

போலீஸ் பொறுப்பதிகாரி வீட்டுக்குப் போயிருந்தார்.
அது போதாதா?

மூவரும் தங்களுக்குரிய வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். மற்ற வாகனம் மற்றதை இழுத்துக் கொண்டு பின் தொடர்ந்தது.

அவர் சொன்னதும் சரிதான். தமிழரின் உதவியோடுதானே முழு இலங்கையும் சுதந்திரம் பெற முடிந்ததாம்? அதற்கு நன்றிக் கடனாகவா அவர்களுக்கு இருந்த உரிமைகளையும் இருக்கிற உரிமைகளையும் பறிக்கப் பார்க்கிறார்கள்?

ஒருவேளை அந்த முஸ்லிம் கடைக்காரர் சொன்ன மாதிரி நன்றி மறப்பதும் கழுத்தை அறுப்பதும் இவர்களின் பிறவிக் குணங்கள்தானோ?

யோசித்து முடிவெடுக்கும் நேரமில்லை. தலைக்கு மேல் வேலை காத்துக் கொண்டு இருக்கும்போது
கவனம் அதில்தான் இருக்க வேண்டும். வழிநெடுக அமலனின் காதுகளில் இரைச்சல் போல…
 
         தர்மமெல்லாம் தர்மமில்லை…தர்மமெல்லாம் தர்மமில்லை!



ஆற்றிலே கொட்டினும் பார்த்துக் கொட்ட  ஆன்றோர்கள் சொன்னதில் 
                   உண்மையுண்டு
சேற்றிலே கொட்டிடின் நல்ல நீரும் சேறாகிப் போதலே ஆகிப்போகும்
நாற்றுநாம் நடுவதாய் நன்நிலத்தைக் கடலோர மணலிலே தேடலாமோ?
வேற்றுமை புரியாமல் நலம் புரிந்தே விட்டு வேதனை நமை வாட்டக் 
                 கலங்கலாமோ?

புண்ணியம்செய்வதாய் எண்ணிக் கொண்டு புல்லருக் குதவுதல்    
                தவறுஆகும்
எண்ணத்தில் நன்மையே எண்ணலற்றார் நல்லாரை மறத்தலே நடந்து 
              போகும்
நன்மைக்காய் நாம் செய்யும் பயனிருக்கும் ஆயினும் அதன் பலன் 
             வீணில்சேரும்
எந்நாளும் நன்மைநாம் செய்யும்போது நல்லவர்க் காயினால் நன்மை 
             சேரும்
    



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக