சனி, 13 அக்டோபர், 2012

மூட நம்பிக்கையே நீ வாழ்க! (சிறுகதை)




திகாலை இளந் தென்றலில் அந்தக் கடற்கரையோரம் ஒரு விதமான குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தது.

மீனவர்களே அதிகமாக வாழ்ந்த பகுதியென்பதால் ஓலைக் குடிசைகளுக்குப் பஞ்சமே இல்லாத இடம். வறுமைதான் சூழ்ந்திருந்தாலும் சிறுமையென்பதே இல்லாத வெள்ளையுள்ளம் கொண்ட மக்களினால் நிறைந்திருந்தது அந்தக் கடற்கரையோரக் கிராமம்.



கடற்கரையோரமாகத்தான் ஓலைக் குடிசைகளே தவிர, சற்று உள் வாங்கிச் சென்றால் அப்பகுதிக்கேற்ற நாகரீகத்துடன் ஓரளவிற்கு பொருளாதார வசதி படைத்தவர்களின் கல் வீடுகளும் ஆங்காங்கே கவர்ச்சிகரமாக இருக்கவே செய்தன.

கல் வீடுகள், இடைக்கிடை சிறுசிறு பலகை வீடுகள், சில கற்கட்டிடச் சில்லறைக் கடைகள், அருகருகே ஓலைச் சிறு கடைகள் இவ்வாறாக வறுமையும் வசதிப் பெருமையும் வளைந்து, வளைந்து வீதிகளுக்கூடாக தெரிந்து கொண்டிருந்தாலும் வீண் சிறுமையில்லாத ஒரு பொதுவான பெருந்தன்மை நிறைந்த சின்னஞ்சிறு கிராம சமுதாயம் அங்கே உயர்வாகவே உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது எனலாம்.

ராஜன் தனது நண்பன் கணேசுடன் நடந்து கொண்டிருந்தான்.

"டேய் கணேஸ்!  உனது கிராமம் ஒரு ராஜ கிராமமடா. எங்கே பார்த்தாலும் ஒரே மாடமாளிகைகளும் கூட கோபுரங்களுமாக நிரம்பி வழிகின்றனவே!"

"மாட மாளிகைகளா? இங்கேயா? எங்கே?"

கிராமத்தின் வெகுளித்தனம் முகத்தில் வழிய, கேட்டு விட்டு விழித்தான் கணேஸ்.
கடகடவெனச் சிரித்தவாறே ராஜன் சற்றுத் தொலைவில் தெரிந்த ஒரு கடையைக் காட்டினான். 

வெறும் ஓலைக் கூரையும் ஆடி அசைந்தாடும் வாங்குகளுமாக ஒரு சின்னஞ் சிறிய உணவகம்.
அதன் பட்டறையிலிருந்த முதலாளியை சூப் வைத்தால் கூட பத்துப் பேருக்குத் தேறாது. அவ்வளவுக்கு நோஞ்சான். சுருங்கக் கூறினால்  அந்த உணவகத்தில் இருபது பேருக்காவது போதிய உணவிருக்குமா என சந்தேகிக்க வைக்குமளவிற்கு வறுமையின் கொடிக் கம்பமாகவே அது  இருந்தது.

அதை தனராஜ் காட்டியதும் கணேஸ் புரியாமல் " என்ன அண்ணா! அந்த ஓட்டலையா சொல்கிறீர்கள்? பாவம் அண்ணா! " என்றான்.

" கணேஸ், நான் பொய்யா சொல்கிறேன்? அந்தக் கடையின் 'போர்டை'ப் பார்"

"வசந்த மாளிகை ஓட்டல்"

"என்ன சொன்னாய்?" ராஜன் சிரித்துக் கொண்டே கேட்டான்.

" வசந்த மாளிகை...."

"ஸ்டாப்! மாளிகை! இப்போது புரிகிறதா? மாடமாளிகைகளும். கூட கோபுரங்களும்....ம்?"

"போங்களண்ணா! உங்களுக்கு சரியான நக்கல்"

பச்சைக் குழந்தைபோலச் சொல்லிவிட்டு முறுவலித்தான் கணேஸ்.

"வா வா! நாமிருவரும் அந்த மாளிகைக்குள் போய் மகாராசாவைப் பேட்டி கண்டுவிட்டு வருவோம்."

ராஜன் அந்த உணவகத்தை நோக்கி நடக்க, அவன் சொன்னது என்னவென்று சரியாகப் புரியாமலே கணேஸ் அவனைப் பின் தொடர்ந்தான்.

அந்த வசந்த மாளிகையின் வாசலை நெருங்கும் போதே எலும்புடம்பு மகராஜா எழுந்து வந்து வரவேற்றார்.

"வாங்க தொரே! வாங்க! வந்து உட்காருங்க"

பரவலாக ஆறு பலகை மேசைகளும் ஆசனங்களாகப் பாகுபாடு காட்டாமல் அனைவரையும் ஒரே வரிசையில் சமத்துவமாக அமரச் செய்யும் நீண்டு அமைந்திருந்த வாங்குகளும்.

இநத உணவக இராசா ஒரு சமத்துவ கொள்கையுடைய மக்களாட்சியை விரும்பும் ஜனநாயகவாதி போலும்.

வாங்கில் இருவரும் அமர்ந்ததும் வெற்றிலைக் காவி படிந்த ஒரு பல் வரிசை அவர்களுக்கு முன் வந்து நின்று சிரித்தது.

அட, உணவு பரிமாறுபவர் வந்திருக்கிறார்.

தனராஜ் சுற்றிலும் சிறிது வட்டமிட்டு நோக்கினான். இவர்களைத் தவிர ஏராளமான வாடிக்கையாளர்களாக  ஈக்கள் எனப்படும் இலையான்கள் மட்டும் வந்து மேசைகளிலமர்ந்து மொய்த்தவாறு உணவு தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவர்களிடமிருந்து உணவுகளைக் காப்பாற்ற பத்திரிகைத் தாள்களால் மூடி வைத்திருந்தார் முதலாளி.

"இரண்டு டீ போடுங்கள்"

ராஜன் சொல்ல, முதலாளியே டீ போட்டு எடுத்து வந்தார். அநியாயம் சொல்லக் கூடாது. டின்பாலும் சீனியும் நன்கு கலந்து டீ நன்றாக சுவையாகவே இருந்தது.

"ஊர் பார்க்க வந்திருக்கிறீர்களா தொரே?"

வாடிக்கையாளரே வராத நிலைபோலும். கடை முதலாளி கையில் அகப்பட்டவரைக் கைவிட தயாரில்லை போலத் தெரிந்தது.

"இவர்கள் வீட்டுக்குத்தான் வந்தேன். நாளைக்கு இங்கே ஒரு கலியாணம் நடக்க இருக்கிறது. அதற்காகத்தான்..."

முதலாளி குறுக்கிட்டார்.
"அந்த டெய்லர் திருமுருகனின் கலியாணந்தானே! இன்றைக்குப் பசி லேகியத்துக்கு அதிக ஓடர் கிடைத்திருக்கிறது.  காலையிலேயே பலர் வந்தார்கள்.  சாமான் இன்றைக்கு சாயங்காலமாகத்தான் வரும். ஆறுமணிக்கு மேலே வரச் சொல்லியிருக்கிறேன்."

ஓட்டல் மகாராசாவின் முகத்தில் ஏகப்பட்ட களை.
"பசி லேகியமா? அது என்னது"

முதலாளிக்கு முன்னதாக கணேஸ் முந்தினான்.

"அண்ணா! இங்கே விருந்துக்குப் போகு முன்பு அந்த லேகியத்தை சாப்பிட்டு விட்டுத்தான் எல்லாரும் போவார்கள். அப்போதுதான் நன்றாகப் பசிக்கும். நன்றாக வெட்டலாம்"

"உங்கள் வீட்டிலேயும் அதைத் தின்று விட்டுத்தான் விருந்துகளுக்குப் போவீர்களா? பலே!"

கணேஸ் வெட்கத்தால் கேள்விக் குறியைப் போல நெளிந்தான்.

"தொரே! அது ரொம்ப நல்ல சாமான். நீங்கள் கொழும்பிலிருந்து வந்திருக்கிறீர்கள். நன்றாக மொய் கொடுக்கும்போது நன்றாக சாப்பிட்டால்தானே நல்லது?"

முதலாளி மிகவும் பக்குவமாகத் தனது வாய் வானொலி விளம்பரத்தை ஆரம்பித்தார்.

"பார்ப்போம். மாலையில் எல்லாருக்குமாக சேர்த்தே வாங்கிவிடுகிறோம். எதற்கும் இவர்களின் வீட்டிலும் கேட்டுக் கொள்கிறேன். சரியா?"

முதலாளியின் முகத்தில் சிறிது வாட்டம் தெரிந்தாலும் சிரித்தவாறே தலையை ஆட்டினார். இருவரும் காசைக் கொடுத்து விட்டு, இறங்கி வீட்டுக்கு நடந்தார்கள்.

அந்தக் கிராமத்தில் இப்படி லேகியம் உண்டுவிட்டு, பசியைக் கூட்டிக் கொண்டு விருந்துக்குப் போகிற பழக்கம் இருக்கிற செய்தி ராஜனுக்கு ஒரு புதிய செய்தியாக வியப்பைத் தந்து கொண்டிருந்தது.

கணேசின் வீட்டுக்கு வந்த போது பகலுணவு தயாராயிருந்தது. எல்லாரும் உணவருந்திய பின் வாசலுக்கு முன்னாலிருந்த மர நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.            
                                                                            
                                                         .......................................

திருமுருகன் அந்தக் கிராமத்தில் இருந்த மிக வறிய குடும்பங்களிலொன்றைச் சேர்ந்தவன். அவனுக்கென்று தாய் மட்டுமே இருந்த இரண்டே உயிர்களே சகல உறவுகளாயும் சொந்தங்களாயும் இருந்து வந்த குடும்பம் அவனுடையது. 

வறுமையின் அடிமட்டத்தில் இருந்த திருமுருகனிடம் இரண்டே இரண்டு பெறுமதிமிக்க சொத்துக்கள்தான் இருந்தன.ஒன்று அவனுக்குத் தெரிந்த தையற்கலை. மற்றது ஒரு ஒரு பழைய தையல் இயந்திரம். அது அடிக்கடி இயங்க மறுத்தாலும் வறுமை தரும் விசேஷ திறமைகளினால் அதை மீண்டும் மீண்டும் இயங்க வைத்து அவன் தனது தொழிலை நடத்திக் கொண்டிருந்தான்.

கொழும்பிலிருந்த ராஜனுக்கு மீன் விற்பனை நிலையமொன்று இருந்ததால் அவனுக்குப் பல கரையோரப் பகுதிகளிலிருந்தும் தினசரி லொறிகளில் மீன் வருவது வழக்கம். கணேசின் குடும்பத்தினரும் அவனுக்கு மீன் அனுப்புபவர்களாகையினால் மாதத்துக்கு ஒரு தடவை கணக்கு முடிக்கவென்று அவர்களிடம் வந்து தங்கிச் செல்வது ராஜனின் வழக்கமாக இருந்தது.

திருமுருகனின் தாய் ஒரு கடுமையான நோயாளியாக இருந்தாள். அவளது வயிற்றில் புற்று நோய் படர்ந்து வருவதை அறியவோ உணர்ந்து, ஆவன செய்யவோ தக்க அறிவோ வசதிகளோ அற்ற சூழ்நிலையினால் திருமுருகன் அங்கே குறி சொல்லும் ஒரு பெண் சாமியாரை நம்பி அவளிடம் மட்டுமே சென்று வந்து கொண்டிருந்தான்.

அவளுக்குக் காணிக்கையாக அவன் செலுத்தும் ஓரிரு ரூபாய்களுக்கே அவன் பெரும் சிரமப்பட்டு வந்தான். என்றாலும் தனது தாய் மீதிருந்த ஆழமான பாசத்தினால் அதை அவன் பொருட்படுத்தியதே இல்லை.

இந்த நிலையில் ஒருநாள் கொழும்புக்குத் திருமுருகனுடன் கணேஸ் வந்து நின்றான். திடுதிப்பென்று கணேஸ் வந்ததைக் கண்ட ராஜனுக்கு எதோ அவசர நிலைமை உருவாகியிருப்பது மட்டுமே புரிந்தது.

இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரித்தான்.

"அண்ணா! திருமுருகனின் அம்மாவுக்கு போன கிழமை மிகவும் வருத்தமாகிப் போய்விட்டது. சாமியம்மாதான் அவர்களுக்கு இருக்கும் கடைசி ஆசையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னார்கள். அதனால்...."

ராஜன் விபரம் கேட்டான்.

திருமுருகனுக்கு உடனடியாகத் திருமணம் நடப்பதைத் தான் காண வேண்டும் என்று தாய் விரும்புவதாகவும் அந்த ஊரிலே இருக்கின்ற இன்னொரு குடும்பம் பெண் தர ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கலியாண ஏற்பாடுகளுக்கு எதுவித வசதிகளுமற்ற நிலையிலே கணேசின் குடும்பம்தான் ஏதாவது செய்து ஒத்துழைக்க முன் வந்து, கணேசையும் திருமுருகனையும் தன்னிடம் அனுப்பியிருப்பதாகவும்  ராஜன் அறிந்து கொண்டான்.

மணப் பெண்ணுக்கு உடைகளும் தாலியும் கூட திருமுருகனே வாங்கியாக வேண்டிய அளவிற்குப் பெண் வீட்டாரும் வறுமைப்பட்டவர்கள் என்று தெரிந்தது. ஒரு நல்ல செய்தி: மணப் பெண்ணுக்கும் தையல் தெரியும். எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும்.

அந்தக் கவலையான நேரத்திலும் ராஜன் " திருமுருகன்! பெண்ணும் மாப்பிள்ளையும் ஜாடிக்கு எற்ற மூடிகளாய்த்தான் இருக்கிறீர்கள் " என்று 'ஜோக்' அடித்தான்.

கணேஸ் தனது வீட்டின் சார்பாக அப்பா கொடுத்திருந்த முன்னூறு ரூபாவை ராஜன் கையில் கொடுத்தான்.

அந்த நாளில் தங்கம் ஒரு பவுன் முன்னூற்றி ஐம்பது ரூபா. ஒரு தாலி செய்வதாயின் குறைந்த பட்சம் இரண்டு பவுனாவது வேண்டுமே! உடுபுடவைகள் வேறு வேண்டும்.

ராஜன் யோசித்தான். தானும் சிறிது எடுத்துக் கொண்டு தனது மிக நெருங்கிய நண்பர்களிடமும் தொடர்பு கொண்டு சிறிது சேர்த்த பின் ஓரளவுக்கு நல்ல உடுபுடவைகளுடன் இரு பவுனில் ஒரு மெல்லிய தாலியும் சேர்ந்து விட்டது.

மாப்பிள்ளைக்கு சூட் வாங்குவது இலேசில்லை. ஆகவே இன்னொரு நண்பரை நாடினான். அவர் வெளிநாட்டிலிருந்து பாவித்த உடைகளை அக்காலத்தில் இறக்குமதி செய்து, பாவித்த உடை விற்பனைக் கடை நடத்திக் கொண்டிருந்தவர்.

'பேல்' என்று அப்பொதிகளைக் கொழும்பில் குறிப்பிடுவார்கள். அந்த பேல் முதலாளியிடம் ராஜன் சென்று நிலைமையைச் சொல்லி ஆதரவு கேட்டான்.

அநியாயம் சொல்லக்கூடாது. ஓர் அருமையான சூட் திருமுருகனுக்கு அமைந்து விட்டது.  அது சற்று பெரிதாக இருந்தது. தானே அதைத் திருத்தித் தைத்துக் கொள்வதாக திருமுருகன் சொன்னான்.

மொத்தத்தில் திருப்தியுடன் கணேசும் திருமுருகனும் தமதூருக்குத் திரும்பிப் போனார்கள். போன சில நாட்களில் ராஜனுக்கு ஒரு திருமண அழைப்பு வந்தது. மறுக்க முடியாதல்லவா?
அவனையே முன்னின்று நடத்த வேண்டும் என்று திருமுருகன் எழுதியிருந்தான். கூடவே கணேசின் அப்பாவின் சிபாரிசுக் கடிதத்தைப் போன்ற "நீங்கள் வந்து நடத்தினால்தான் சிறப்பாக இருக்கும். தயவு செய்து வந்து கலந்து கொள்ள வேண்டும்" என்ற வரிகளும் இணைந்து வந்திருந்தன.

நாளைக்குத் திருமணம் என்பதால் இன்றே ராஜன் வந்து விட்டு அந்தப் 'பசி லேகிய' செய்தியால் பிரமித்துக் கொண்டிருந்தான்.                         
                                                      ...................................

" யோ! ஐயோ! கோமதியக்கா போயிட்டாங்களே!"

யாரோ கணேசின் வீட்டுப் படலையருகிலிருந்து கதறியதைக் கேட்டு அனைவருமே எழுந்து வாசலுக்கு ஓடினார்கள். ராஜனுக்கு ஒன்றுமே  புரியவில்லை. கணேசின் அப்பாவிடம் அவசரமாக விசாரித்தான்.

"யார் கோமதியக்கா?"

"அதுதான் தம்பி மாப்பிள்ளையோடே அம்மா!"

அட ஆண்டவனே! என்ன கொடுமை இது?

வெண்ணெய் திரளும்போது தாழியை உடைத்தெறியும் உனது செயல்கள் உனது திருவிளையாடல்களா அல்லது..?

ராஜன் தன் மனதுக்குள் இறைவனைத் திட்டினான். இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த ஏழை தனது தாயை திருப்தி செய்வதற்காக ஒத்துக் கொண்டு ஏற்பாடு செய்த திருமணத்துக்கு இப்படியும் ஓர் இடி விழுவதா?

நினைக்கவே கடினமாக இருந்தது எல்லாருக்கும். திருமண களைகட்டிய அந்த ஏழையின் குடிசையில் அப்படியே முழுமையாக மரண களை கட்டத் துவங்கி விட்டது.

ராஜன் திருமுருகன் வீட்டிற்குள் நுழைந்த போது அவன் துடிதுடித்து அழுது கொண்டிருந்தான்.

"அம்மா உனக்காகத்தானே நான் இந்தக் கலியாணத்துக்கே சம்மதித்தேன். நீயே போயவிட்டாயே! இனி எனக்கு எதற்கம்மா கல்யாணம்? நானும் சீக்கிரமாக உன்னிடமே வந்து விடுகிறேனம்மா!. வந்து விடுகிறேனம்மா!"

ராஜனை இருதயமே கலங்கிப் பிழியப்படுவதைப் போன்ற கவலை துளைத்தெடுத்தது. அதற்கிடையில் யாரோ ஒரு கிழவியின் ஓட்டை வாய் ஒப்பாரி வடிவில் ஓர் அநியாயமான குற்றச்சாட்டை அந்த அவல வீட்டில் முன் வைத்தது.

 "அம்மா. உன் உயிரைப் பறிக்கவா இந்தப் புதுப் பெண் வந்தது. அது வந்த ராசி.உன்னையே பறிச்சிட்டுதே!"

கிழவியின் உளறலைக் கண்டிக்க முன்வராத அந்த மூட சனக்கும்பல் அவளுக்கு ஒத்துப் பாடுவதைப் போல புதுமணப் பெண்ணாலேதான். அவளது வரவில் இருந்த தீட்டினால்தான் திருமுருகனின் தாயே மரணிக்க நேர்ந்து விட்டதைப் போல ஒத்தூதி ஒப்பாரி வைக்கத் தொடங்கியதும் மிகவும் ஆபத்தான ஒரு புதிய சூழ்நிலை உருவாகத் தொடங்குவதை அவதானித்த ராஜனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.

போதிய கல்வியறிவில்லாத, வெறும் மத நம்பிக்கையை மட்டுமே ஏற்று நிற்கின்ற பாமர மக்கள் சந்தர்ப்ப மாற்றங்களை எப்படியெல்லாம் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளுகின்றார்கள்? இந்தக் கோமாளிகளின் ஏமாளித்தனத்தால்தானே மதத்தை வைத்து ஏய்க்கின்றவர்கள் உயர்ந்து கொண்டே போகின்றார்கள்?

சில நிமிடங்கள் தடுமாறிய ராஜனின் மனிதில் திடீரெனப் பளிசசிட்டது ஒரு புதிய "ஐடியா".
முள்ளை முள்ளாலேயே எடுத்துவிட்டால் என்ன?

"கணேஸ், இப்படி வா! அந்த மணப் பெண்ணின் வீடு எப்படி இருக்கிறதென்று பார்த்துவிட்டு வருவோம்." 

மிகவும் மெதுவான குரலில் கணேசிடம் குசுகுசுத்தான் ராஜன்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் இருவரும் மணப்பெண்ணின் வீட்டின் வாசலில் நின்றார்கள். அவர்களை வரவேற்ற மணமகளின் தாய் அழுது கொண்டே

 "பாருங்களய்யா! அந்த அனாதைப் பையனுக்கு உதவியாக இருப்பாளே என்று நாங்கள் நினைக்க, இவளுடைய ராசியானது அந்தக் குடும்பத்தையே கலைத்து விட்டதே!" 

என்று கதறியபோது ராஜனுக்குத் தலையே சுற்றிவிட்டது.
ஊர்தான் பழி சொல்கிறது என்றால் உள் வீடுமா?!
என்ன சமுதாய அறிவீனத்தின் கொடுமை இது?

"அம்மா! சும்மா அவசரப்பட்டு அந்தப் பிள்ளையைக் குறை சொல்லாதீர்கள். உண்மை என்னவென்று நாங்கள் கண்டு பிடிக்கிறோம். அந்த சாமியம்மாவின் வீடு எங்கே இருக்கிறது?"

அந்தத் தாய் ஒன்றுமே புரியாமல் விழித்தார். அதற்குள் கணேஸ் முந்திக் கொண்டான்.

"அண்ணா! எனக்குத் தெரியும். வாருங்கள் காட்டுகிறேன்."

அவர்களிடம் சும்மா பிள்ளையைப் பழி சொல்ல வேண்டாமென்றும் தாங்கள் பிறகு வருவதாகவும் சொல்லிவிட்டு ராஜன் கணேசுடன் புறப்பட்டான்.

மிக விரைவாக இருவரும் சாமியம்மாவின் வீட்டுக்குப் போனபோது, அங்கே ஓரிருவர் குறி கேட்கக் காத்திருந்தார்கள். வெளியூர்க்காரன் ராஜன் மட்டுமே என்பதாலும் காற்சட்டை அளித்த செயற்கை மதிப்பாலும்  அனைவருமே எழுந்து நின்று, அவனுக்கு மரியாதை செலுத்தி வழிவிட்டார்கள். அவனுக்கு முதலில் சாமியம்மாவிடம் போக அனுமதி கிடைத்து விட்டது.
காற்சட்டையே! நீ வாழ்க!

சாமியம்மாவின் அறைக்குள் நழைந்தார்கள் இருவரும். ஒரே எண்ணெய் மணமும் ஊதுவத்தி மணமும் பல வித கடவுள்களின் படங்களுமாக ஒருவிதமான பாமரர்களுக்குப் பயமூட்டும் செயற்கையான சூழ்நிலை உருவாக்கி வைக்கப்பட்டிருந்தது புரிந்தது.

வரும் வழியில் கணேசிடம் ராஜன் சொல்லிருந்த திட்டத்தை சாமியம்மாவிடம் கணேஸ் தெரிவித்தான்.

"சாமியம்மா இவர்கள் உங்களிடம் மட்டும் தனியாக ஒரு முக்கிய விசயம் பேச வேண்டும. முதலில் எல்லாரையும் அனுப்பி வைத்து விட்டு வாருங்கள்."

சாமியம்மா கிழவியின் முகத்தில் தனது பிழைப்பில் மண்போடப் பார்க்கின்றான்களே இவன்கள் என்று எழுதியிருந்தது ராஜனுக்குப் புரிந்தது.

இரண்டு பத்து ரூபா தாள்களை முதலில் எடுத்துக் கிழவி கையில் வைத்தான்.
ஒரு வாரம் குறி சொன்னாலும் சேராத பெருந் தொகை ஒரு நொடியில் தனது கைக்குள் வந்து விழக் கண்டதும் சாமியம்மாவின் முகம் முழுமையாக மலர்ந்த தாமரையாக விரிந்து விட்டது.

"கொஞ்சம் இருங்கள்."

கிழவி வெளியேறி என்னவோ சத்தமாகச் சொன்னது கேட்டது. மெதுவாக கணேஸ் எட்டிப் பார்த்தான். எல்லா பக்தர்களும் பயபக்தியோடே  சாமியம்மாவிடம் விபூதி பெற்றுக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

சாமியம்மா மீண்டும் வந்தமர்ந்து கொண்டதும் விசாரணை ஆரம்பமாகியது.

"என்ன கேட்க வந்திருக்கீறீர்கள் ஐயா?"

"உங்களால் ஒரு பெரிய உதவி நடக்க வேண்டும். உங்களால்தான் அது நடக்க முடியும். காளியாத்தா மீது பாரத்தைப் போட்டு விட்டு செய்வீர்களா?"

ராஜன் பேசிக் கொண்டே தனது இரு விரல்களுக்கிடையில் ஒரு ஐம்பது ரூபா தாளை அசைத்துக் காட்டினான்.

மிகவும் விபரமாகத் தனது திட்டத்தை எடுத்து விளக்கியபின் எல்லாம் சரியாக முடிந்தால் இன்னும் ஐம்பது ரூபா கிடைக்கும் என்னும் உறுதி மொழியையும் வழங்கி விட்டு, விடை பெற்றான்.

"எல்லாமே சரியாக நடக்கும். நீங்கள் பயமே இல்லாமல் போய் வாருங்கள்"

கணேஸ் திருதிருவென விழித்தான். வழமையாக சாமியின் அருள் வந்து ஆடுகின்ற சாமியம்மா இன்று ஐம்பது ரூபா நோட்டுக்கு சாமி வந்து ஆடுவதை அவனால் நம்பவே முடியவில்லை.

"டேய் கணேஸ்! இந்த இரகசியத்தை யாரிடமுமே சொல்லக் கூடாது. ஜாக்கிரதை. உன் வீட்டுக்கும் கூட இப்போதைக்கு வேண்டாம். என்ன?"

கணேஸ் தலையை ஆட்டினான்.

ரவு எட்டு மணி நெருங்குகையில் ராஜன் கணேசின் வீட்டாரனைவரையும் திருமுருகனின் வீட்டுக்குப் போய்வர அழைத்தான். முதலில் தயங்கினாலும் முகத்தை முறித்துக் கொள்ள முடியாமல் அவர்களும் புறப்பட்டார்கள்.

பிண வீடாக மாறியிருந்த மண வீட்டுக்குள் நல்ல கூட்டம். கிழவி வைத்த ஒப்பாரியின் தாக்கம் பரவலாகி, எல்லாருமே மணமகளைத்தான் குறி வைத்துத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

வெளியிலே மின் விளக்குகளே இல்லாத கிராமமாதலால் கடற்கரைக் காற்றும் கடற்கரை வெளியும் ஒரு வித மயான அமைதியையே தவழ விட்டுக் கொண்டிருந்தன. திடீரென "ஓடி வாருங்கள். ஓடிவாருங்கள். சாமியம்மா தீப்பந்தத்தோடே இந்தப் பக்கமாக சாமி ஆடிக் கொண்டே வருகுது"

யாரோ வீட்டு வாசலிலிருந்து கத்தினார்கள். அத்தனை அப்பாவி மக்களின் முகங்களிலும் ஒரே மரண பயம்.  சாமியம்மா என்ன அதிர்ச்சியான செய்தியுடன் வருகிறாளோ?

ஐந்து நிமிடம் கழிய, சாமியம்மாவின் திருவுருவம்  மரணவீட்டின் வாசலில் வந்து நின்று பயங்கரமாகக் கதறியது. கையில் தீப்பந்தம், கழுத்திலே பெரிய மாலை. அநியாயம் சொல்லப்படாது. பயங்கரமான "மேக்கப்."

"யாரடீ என் மகள் பிணத்தை வைத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு வந்த மருமகளைப் பழி சொன்னது? என் கிட்டே வந்த என் மகள், தன்னுடைய மருமகளைத் திட்டி நீங்களெல்லாம் ஒப்பாரி வைத்ததாலே என் கிட்டவே வர மறுக்கிறாளடி. நான் சாபமிடப் போகிறேன். அதற்குள்ளாக அந்த மருமகளைப் பழி சொன்னவளெல்லாம் உடனடியாக மன்னிப்புக் கேளுங்களடி. இல்லையென்றால் இன்றைக்கு ராத்திரியிலே இருந்து ஒவ்வொருத்தரா ரத்தம் கக்கிச் சாவீர்கள். சந்தேகமாக இருக்கிறதா? இன்னும் அரை மணித்தியாலத்திலே எனது முதல் பலியை எடுக்கிறேன். எவளடி அவளைப் பற்றி முதல் முதல் பழி சொன்னவள்? அவளைத்தான் முதல் பலியாக நான் இப்போது எடுக்கப் போகிறேன். அதற்குள் மன்னிப்பு கேட்டால் சரி. இல்லாவிட்டால்..."

சாமியம்மாவின் சத்தத்தினாலும் குலுங்கலினாலும் எல்லாருமே குலை நடுங்கி, நடுநடுங்க, சாபக் கலாச்சாரத்தைத் துவக்கி வைத்த கிழவி பாய்ந்தோடி வந்தாள்.

"அம்மா காளியாத்தா! நான்தாம்மா அந்த மாபாவி! என்னை மன்னித்து விடு தாயே! நான் பாவி. என்னைக் கொன்று விடாதே!"

கிழவியின் வரவைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல கிழங்கள் வந்து விழுந்து மன்னிப்புக் கேட்கத் துவங்கிவிட்டன. காளியாத்தா சாமியம்மா வடிவில் வந்து செய்த புதுமையால் கணேசின் குடும்பத்தினரும் அதிர்ந்து விட்டார்கள்.

எல்லார் தலைகளிலும் விபூதியைத் தெளித்துக் கொண்டே சாமியம்மா சொன்னார்.

"இந்த பெண் என் மகள் தன் மகனுக்காக தேர்ந்தெடுத்த செல்வமாக்கும். அவளில்லாத இடத்தில் என் மகனைக் காத்து வளர்க்கப் போகிறவளும் அவள்தான். அவளை சபித்த எல்லாருமே அவளை ஆசீர்வதித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த கலியாணம் என் மகள் விரும்பின படிக்கு நாளைக்கு இதே இடத்திலே நடக்க வேண்டும்.என் மகளின் பிணத்துக்கு முன்னாலேயே இருவரும் மாலை மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுத்த வாரமே தாலியும் கட்டிவிட வேண்டும். இதை யாராவது தடுத்தோ குறை சொல்லியோ ஏதாவது செய்ய முனைந்தால் அவர்களின் குடும்பத்தையே இரத்தப் பழியெடுத்து அழித்துவிடுவேன். இது காளியாத்தாவின் கட்டளை. மறந்து விடாதீர்கள்"

சாமியம்மா பெரும் ஆட்டமொன்று ஆடிவிட்டு, மீண்டும் தீப்பந்தத்தோடே தன் திசை நோக்கிச் சென்று விட்டார்.

திருமுருகனின் தாயாரின் சவத்துக்கு முன்னால் ஏற்கனவே திட்டி ஒப்பாரி வைத்த கூட்டம் இப்போது ஒரே மன்னிப்பு ஒப்பாரியாக வைத்து உயிருக்காக மன்றாடிக் கொண்டு இருந்தது.
அடுத்தவர் நாசமடைவதில் நா கூசாத சமுதாயம், தனக்கு நாசம் வருமென்றால்தான் கண் திறக்கும் போலும்.

அடுத்த நாள் மிக எளிமையாக திருமுருகனுக்கும் மணப்பெண்ணுக்கும் மாலை மாற்றும் வைபவம் சம்பிரதாயங்களை மீறி நடந்தேறியது. காளியாத்தாவின் கட்டளையை மீறும் சட்டமாவது சம்பிரதாயமாவது!

ராஜன் கொழும்புக்குத் திரும்பி விட்டு மீண்டும் ஒரு வாரம் கழித்துத் திருமுருகனின் பதிவுத் திருமணத்துக்காகத் திரும்பி வந்தான்.

சாட்சிக் கையெழுத்திடும் இருவரில் அவனும் ஒருவனாம். திருமுருகனின் அன்புக் கட்டளை. திருமணம் முடிய சாமியம்மாவிடம் இருவரையும் அழைத்துக் கொண்டு ராஜன் சென்றிருந்தான்.

"உங்கள் அருளால்தான் இந்தத் திருமணம் நடந்திருக்கின்றது. தயவு செய்து உங்கள் கரங்களால் ஆசீர்வதியுங்கள்"

சாமியம்மாவின் முகம் மலர ஆசீர்வாதமும் கிடைத்தது. மறைமுகமாக "என்னைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள் சாமி" என்ற வேண்டுகோள் அவரது கண்களிலும் தெரிந்து கொண்டிருந்தது.

திருமுருகனிடம் ராஜன் இன்னுமொரு ஐம்பது ரூபா தாளைக் கொடுத்து சாமியம்மாவுக்குக் காணிக்கையாக வைக்கச் சொல்லித் தனது ஒப்பந்தப்படி  மீதிக் கணக்கை கட்டி முடித்தான்.
பயபக்தியுடன் புதுத் தம்பதி அதனைக் கையில் வைத்ததும் விபூதி கொடுத்த சாமியம்மா ராஜனுக்கும் நீட்டினார்.

"பரவாயில்லை. அதை வேறு யாருக்காவது கொடுங்கள். தட்சிணை கிடைக்கும்."

"அப்படிச் சொல்லாதீர்கள். காளியாத்தா அருள் உங்களுக்கென்றே வருகிறது. பெற்றுக்கொள்ளுங்கள்."

ராஜன் மறுப்பு சொல்லாமல் பெற்றுக் கொண்டு, தானும் ஒரு பத்து ரூபாவை மேலதிகமாக வைத்தான். சாமியார் அதையும் எடுத்துக் கொண்டு அருள் பாலிக்கும் விதத்தில் முறுவலித்தார்.

விடைபெற்றுக் கொண்டு திரும்பும் வழியில் கணேசின் அப்பா சொன்னார்.

"தம்பி ராஜன். இந்த சாமியம்மா மட்டும் இல்லையென்றால் இந்தக் கிராமமே அழிந்து போயிருக்கும். அவர்கள்தானே காளிம்மா மூலமாக நன்மையாக எல்லாவற்றையும்  நல்லபடியாக செய்து தந்தார்? இப்போது திருமுருகனின் தாய்க்கும் நிம்மதி. இந்த ஊருக்கும் நிம்மதி. இல்லையா?"

ராஜன் தலையாட்டி பொம்மை போல ஆமாம் போட்டான்.

பின்னால் வந்த கணேசின் சின்ன விரல்கள் அவனைக் கிள்ளி விட்டு நகர்ந்து கொண்டன. அவனது உள்மனம் சொன்னது.

"நம்பிக்கையே! நீ வாழ்க!"
"முட நம்பிக்கையே! நீ வாழ்க!"
(இது நடந்த கதையென்றால் நம்புவீர்களா? நடந்ததுதான்)


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக