சனி, 13 அக்டோபர், 2012

கடி வலியிலும் பாடம் படி! (கவிதை)






பாலருக்குப் படிப்பிக்கப் பாதகர்க்குப் பதவிதந்தால்
பாலபாடம் ஆகஅவர் பாதகத்தைப் படிக்க வைப்பார்
ஞாலமறி யாதவொரு மூடனைநாம் வலிந் தழைத்து
ஞானியவன் எனமதித்தால் நியாயமென்று நமைமிதிப்பான்


பயங்கர வாதமதன் கருத்துணராக் கயவர்களை
பயங்கர வாதமதில் நின்றுமீட்க நாமழைத்தால்
பயங்கர வாதமொன்றே சுயநினைவில் கொண்டஅவர்
பயங்கர வாதம்செய்தல் மக்களைக் காக்கவென்பார்

கோழிக்குக் கொண்டை வைத்தே சேவலென்று சொல்வதற்கும்
பாழடை மண்டபத்தை மாளிகையாய் மதிப்பதற்கும்
மூளையில் நஞ்சுகொண்டோர் முத்திரை குத்தநின்றால்
மூளையில் லாதவர்தாம் அவர்கருத்தில் நம்பிநிற்பார்

வேளைக்கு வேளைமாறும் காலமும் மீண்டும்மீண்டும்
வேளைக்கு வந்ததைப்போல் வருவதே நியதியென்றால்
மாலையில் வந்தஇருள் காலையில் மறைவதைப்போல்
வாழ்க்கையில் தளர்ந்தநிலை மீண்டுநீதி எழுந்துவிடும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக