வெள்ளி, 12 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் - 3






21.  பிழைசேரின் சரிகெடும் சரியாலே என்றும் பிழைமாறித் திருந்திடாது
     பிழையாகிப் போவரில் நல்லரே திருந்துவர். கெட்டவர் திருந்திடாரே!


22.சரியெனப்படுவதைச் சமுதாயம் புரிந்திடும் விதமதில் எழுதுதல்    
      எழுத்தாழம்
    சரியாக அதனையே மொழிவளம் அழகுற அமைத்தல் எழுத்தாளுமை     
    ஆகும்

23. சாதனை என்பது நடைவழிப் பாதையைத் தடுப்பதைத் தகர்ப்பதுதான்
      வாதனை வருவது நல்வழியமைக்கின்ற படிக்கல்லைத் 
      தகர்ப்பதில்தான்

24 .ஒருபந் தினையே இருபத்தி இருவர் திறம்பட உதைத்தாலும்
      ஒருவரே நடுவர் அவர் உரைக்காமல் முடிவது இருக்காது

25. ஏழ்மையை நீக்கிடற் குண்மையாய் உழைத்திடல் இறைவனை 
     அருகீர்த்தல்
     வாழ்க்கையில் வீழ்ந்தவர் கைதூக்கிஉயர்த்திடல் அவனையே நாம் 
     காணல் 

26. செய்வார் செய்யினும், சொல்வார் சொல்லினும், நல்வழி தொடரலைத்
       தவிர்க்காதீர்
      பொய்சேர் உயர்வுகள் மெய்யாய் இகழ்வுகள்; இதயத்தில் வைத்திட 
       மறக்காதீர்

27.   நோக்கத்தில் தெளிவது இல்லாத நடத்தைகள் இலட்சியம் தவற 
        வைக்கும்
        ஆக்கத்தின் ஆர்வம்தன் தூய்மையில்தளருமேல் அழிவினை   
        அருகிழுக்கும்

28..   ஒழுக்கத்தை அலட்சியம் செய்பவன் எண்ணத்தில் குற்றமும் 
         சரியாகும் 
         அழுக்கினைக் கூடநல் அமுதென மதித்திடும்; தாழ்மனம் உருவாகும்

29.  அடுத்தவர் நலமதை இதயத்தில் கொண்டால் தொடர்ந்திடும் 
       நற்குணங்கள்
        அடுத்தவர் நலமதில் காழ்ப்புணர்வுற்றால் தொடர்ந்திடும் 
        தீக்குணங்கள்

30.   அகமதை உணர்ந்தால் அனைத்திலும் இறைவன் இயங்குதல் 
        தெரிந்திடலாம்
        முகமது ஒன்றே எனின் அதன் வடிவம் பலஅது ஏனெனப்  
        புரிந்திடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக