திங்கள், 15 அக்டோபர், 2012

உள்ளங்கை உண்மைகள் (கவிதை)



சிறுவிதையை மண்ணுள் வைத்தால்
பெருமரமாய் வளர்ந் தது காட்டும்
தருணத்தில் உதவிநீ செய்தால்
பெரும்பலனாய் அதன்வழி காட்டும்



இடம் பொருள் ஏவல் பார்த்துத்
தடம்வைத்து பணியைச் செய்தால்
இடம் வலம் சூழும் தீமை
தடம்விட்டுத் தானே ஓடும்

கரம் செய்யும் தர்மம் கூட
தரம் கண்டு சரியாய்ச் செய்தால்
உரம் விட்டு வளர்ந்தே காட்டும்
மரம் போன்று உயர்வில் சேர்க்கும்

மனம் சொல்லும் எல்லாம் செய்தே
மனம்போல வாழ்தல் தீது
மனதுக்குள் இருக்கும் சாட்சி
மனம் ஏற்பின் குறைதீண் டாது!

வெளிச் சத்தில் நிற்கும் போது
நிழல் கூட நிற்கும் பாரு!
தெளிவோடு நின்றால் கூட
தீ நிழல் உண்டா? தேடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக