வெள்ளி, 19 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் - 8








71. வளர்பவர் கண்டு மனம் நிறைவதுதான் மனிதத்தில் முதன்மைப் பண்பு
      தளர்வதும் காழ்ப்பிலே வெறுப்பதும் தகுதியைத் தாழ்த்திடும் தீய பண்பு


72. பார்வையின்ஊடே வருகின்ற தாக்கம் மனதினை ஊடுறுவும்
     நேர்மையை அதனோ டிணைத்ததைத் தொடர்ந்தால் நட்பினில் தூய்மை 
      வரும்

73. உதவிட விழைந்தும் இயலா நிலைவரின் உதவிக்கு அது சமமே!
      எதுவித தீமையும் செய்யா திருப்பதும் நன்மைசெய் புண்ணியமே!

74. ஆடம் பரத்தில் உயர்விருப் பதுவாய் அறிவிலிதான் நினைத்திருப்பான்
     ஓடம் நீரில் இருக்கிற வரைதான் பெருமை என்பதை என்றும் அவனுணரான்

75. அயல் நாட்டுச் சுகத்திலே தாய்நாட்டு மக்களின் துயரத்தை நினைக்கா தவர்
      அயல்நாட்டி லிந்த சுகம் பெறற்கத்திவாரம் அவரென உணர்ந்திட்ட்டும்

76.  நல்லவராக நடிப்பவர்  அதிகம் நல்லவர் மிகச் சிலரே!
      வல்லவரின் நிழலில் வல்லவர் போல்வரும் போலியர் மிகப் பலரே!

77.வறுமையில் வாழ்கையில் பொதுத்தொண்டு என்று பசிபற்றி பேசி நின்றோர்
    பெருமையாய் அயல்மண் சுகத்தினால் இன்று வறுமையை இகழுகின்றார் 

78.தீமையை விலக்கியே ஒதுங்கிடல் கண்டு பயமெனச் சொல்வருண்டு
    ஆனையும் பன்றியின் சிலிர்ப்பினைத் தவிர்த்திடல் பன்றிக்குப் பயந்துஅன்று

79. வெள்ளைதான் என்பதால் சுண்ணநீர் பாலென நம்பியே பருகுவர் யார்?
      மென்மையாய்ப் பேசுவார் என்பதால்தீயரை நண்பராய்க் கொள்பவர் யார்?

80. அற்பர்கள் ஆடையும் அணிகலன் காட்டியும் அவைகளில் முன் நடந்தால்
     கற்காத மூடரும் அவருண்மை உணர்ந்திடில் பற்காட்டிச் சிரித்து நிற்பார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக