ஞாயிறு, 14 அக்டோபர், 2012

அலட்சியம் ஆபத்துக்கும் அடிகோலலாம் (கவிதை)









தாகத்தைத் தீர்த்திடும் நீரதும் கூட
தாக்கியே உயிர்கொல்லும் வெள்ளமாய் மாறின்
இனிப்பினும் இனிப்பான நன்நட்பும் கூட
இதயத்தை உடைத்திடும் தீநட்பை நாடின்


மிகநல்ல கல்விகள்  பயிற்சிகள் கூட
மிகப்பெருந் தீமைகள் உருவாக்கல் கூடும்
உதவிக்குப் பயன்படும் கத்தியும் கூட
உயிருக்கே ஆபத்தாய் மாறிடல் கூடும்

வார்த்தைகள் இனிமையில் மிதந்திடும் போது
வார்த்தைக்குள் கபடங்கள் மறைந்திடில் தீது
நேர்மையாய் நடந்திடும் நிலையிலும் நம்மை
நேர்மைபோல் கவிழ்ப்பரை உணராமை தீமை

பத்தோடு பதினொன்று என்றொன்று இல்லை
பத்தின்பின் பதினொன்று என்பதே உண்மை
சொத்துக்கும் சுகத்துக்கும் பின்தொற்றும் சொந்தம்
எத்திக்கும் இருப்பதால் விழித்தேயிரு என்றும்

சிறுஊசி யென்றாலும் அதுகுத்தின் யாரும்
சிலிர்த்தலறி துடிப்பதே இயற்கையில் ஆகும்
சிறுதவறு தானேயென அலட்சியமாய் விட்டால்
சிறுதவறே பெருந்தவறின் வித்தாக மாறும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக