புதன், 10 அக்டோபர், 2012

காண மாட்டாய் ; கண்டு கொள்வாய்! (கட்டுரை)

உணர்ந்திரா இதயத்தில் உறுதியிருக் காது!
தெளிந்திரா சிந்தனை பலம் கொண்டி ராது!
தெரிந்திரா எதனிலும் உண்மை விளங் காது!
பலம்பெறா பக்திஇறை வனைஅறி யாது!


இறைவனை உண்டென்றும் இல்லையென்றும் வாதிடலை விடுத்து, சுயமாக நமது சிந்தனையை நாம் விரிவுபடுத்தினால்
எதுவுமே இயங்குவனவாக இல்லையென்பதையும் ஏதோ ஓர் அடிப்படையுடன் இயக்கப்படுவனவே என்பதையும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

கண்டதில் புரிவதே அறிவென்றால் புரிந்ததன் அடிப்படையை உணர்வதே தெளிவு ஆகும். அதாவது இறைவனைக் கண்டுவிடல் எவராலுமே இயலாது. ஆனால் அவனைக் கண்டுகொள்ள எவராலும் இயலும்.

நாமாக, நம்மோடு, நம்மூலமும் நமக்காக நமதாக,நமக்கான சூழலாகவும் குணங்களாகவும் தழலாகவும் குளிராகவும் உயிராகவும் உயிர்ப்பாகவும் இயங்கும் அவனுக்கு நமது சிற்றறிவு தரத்தக்க ஒரே அடையாளப் பெயர்தான சக்தி. அதையே நாம் இறைவன் என்கின்றோம்.

அந்த சக்தியை நம்பியமை சரி்தான் என்பதை நிரூபிப்பவையாகவே அனைத்து நாகரீகங்களினதும் கலை, இலக்கிய, சாதனைகளிலும் இறை நம்பிக்கையின் அன்றைய சரித்திரம் இன்றும் நின்று, ஆலயங்களாகவும் கோயில்களாகவும் தேவாலயங்களாகவும் சிலைகளாகவும் சிற்பங்களாகவும் பிரமிட்டுக்களாகவும் மனிதகுலம் இக்காலத்தில் சாதிக்க இயலாத பலவற்றையும் அன்றே சிறு வசதிகளுடன் பெருஞ்சாதனைகளாக நம்மைச் சூழவும் உலகின் பல திசைகளிலும் இருந்து மலைப்பூட்டி வருகின்றன.

இறைவன் நம்மில், நமது செயல்களில், நமது முயற்சிகளில் எவ்வண் இணைந்து இயங்குகின்றான் என்பதை வெறும் கற்பனையாகவன்றி தங்களது சொந்த அனுபவங்களில் உணர்ந்த முனனோர்கள் அவற்றின் நம்பிக்கையை சாதாரண மக்களுக்குள் பதிக்க விரும்பியதில் வியப்பதற்கு எதுவுமில்லை. எனெனில் அந்த நோக்கத்தில் தெளிவும் நேர்மையும் உண்மையும்  இரண்டறக் கலந்திருந்தன.

பாமரர்களுக்கு அவற்றை உணர்த்த அவர்கள கையெடுத்த கலைதான் கதைகளாகவும் புராணங்களாகவும் சன்மார்க்க வழிநடத்தல்களாகவும் உருவெடுத்தன. அவற்றை துர்ப்பிரயோகஞ்செய்து பொதுமக்களை ஏமாற்றி வளர்கி்ன்ற வஞ்சகத்துக்கும் அவற்றின் வரலாற்றின் நேர்மையான நோக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை.

எல்லாவற்றிலும் முழுமையாக இருந்து கெர்ண்டு, எல்லாவற்றையும் இயக்கிவரும் சக்திதான் கடவுள். அதனை உணராதவரைக்கும் நாம் சூரிய ஒளியின் கீழ் நின்றும் அதனொளியை உணராத குருடர்களாகவே இருப்போம்.

எனது சிறுவயதுப்பருவத்தில் எனக்கு அறிவூட்டிய ஓர் அனுபவம் இப்படி இருக்கின்றது:

சிறு வயதில்  எங்கள் தாயாரைச் சுற்றியமர்ந்து அடிக்கடி கதை கேட்பது வழக்கம்.

நாங்கள் ஐந்து பேர் அபபோது. நற்பண்புகள் பற்றிய அறிவுரைகள் பசுமையாகவும் ஆழமாகவும் பதிகின்ற வயது.

எப்போதும் அனைவரும் ஒன்றாக அமர்ந்தே உணவரு்ந்தும் பழக்கம்.

ஒரு நாள் மதிய உணவு அருந்த நாங்கள் ஆயத்தமாக அமர்நதிருக்க, அம்மா வராமல் தாமதித்தார்.சாப்பிட அமர்ந்தால் அனைவரும் முடி்க்கும் வரைக்கும் எழுந்துவிடக் கூடாது என்பதே பெற்றோர் கட்டளை.

எனவே காத்திருந்தோம். ஒரு கட்டத்தில் எனது அக்கா அம்மாவை சப்தமிட்டுச் சாப்பிட அழைத்தாள்.

"நான் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். நீங்கள் சாப்பிடத் தொடங்குங்கள்"

எங்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பகலுணவு தயாரிப்பைத் தவிர அந்த நேரத்தில் அப்படி என்ன வேலை என்ற ஐயம் எழுந்தது எங்களுக்குள். என் அக்கா மெதுவாகக் கண் சசாடையால் இரகசியமாக எட்டிப் பார்க்கப் பணித்தாள்.

அடிமேல் அடிவைத்து நகர்ந்த நான், சமையலறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தேன். அங்கே...

ஓர் ஏழைப் பெரியவர், தர்மம் கேட்டு வந்தவர் தமது கந்தலுடையுடன் அமர்ந்து உணவருந்திக்  கொண்டு இருந்தார்.

அந்தத் தட்டு?

அது அம்மாவின் தட்டு. எனக்குப் புரிந்துவிட்டது. அம்மா தமது உணவை அந்த ஏழைக்குக் கொடுத்து விட்டு இன்று பசியோடு இருக்க் தீர்மானித்து விட்டார்கள்.நெஞசுக்குள் எரிந்தது எனக்கு.

நான் மடமடவென்று திரும்பி வந்து என் அககா காதில் விடயத்தைச் சொன்னேன். உடனடியாக  எல்லாருமே சேர்நது முடிவெடுத்து ஒரு தனித் தட்டில் ஆளுக்கிரண்டு மூன்று பிடி சாதம் வைத்து இதர கூட்டுக்களுடன் அம்மாவுக்கு  தயாரித்து வைத்து விட்டுக் காத்திருந்தோம்.

சற்று நேரம் கழித்து வந்த அம்மா, நாங்கள் உண்ணாமல் காத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைய, நாங்கள் கண்ட காட்சியை விபரித்து எங்கள் முடிவெடுப்பையும் விளக்கி அம்மாவை எங்களோடே சாப்பிட அவர்களுக்கான  தட்டையும் வைத்து அழைத்தோம்.

அம்மாவின் விழிகளில் நிறைந்து வழிந்த கண்ணீரில் மனநிறைவும் பாசமும் கடவுளுக்கு நன்றியும் கலந்து வழிந்து கொண்டிருந்தன. அம்மா சொன்னார்கள்:

"உங்களுக்குச் சொல்வேனே! எப்போதும் மற்றவர்க்கு தர்மம் செய்யவும் நன்மை மட்டுமே செய்யவும் தயங்க்கூடாது. அப்போது கடவுள்  அதன் பலனை இரட்டிப்பாகத் தருவார் என்று சொல்வேனே! பார்த்தீர்களா? இப்போது நான் ஒரு சின்ன தர்மம்தான் செயதேன. ஆனால் அதற்கான பலனை எவ்வளவு விரைவாக, அதுவும் என்து பிள்ளைகளைக் கொண்டே தந்துவிட்டாரே! இங்கே, இப்போது நமது மத்தியில் இருக்கும் நமது கடவுளுக்கு முதலில் நாம் நன்றி சொல்வோம்"

எல்லார் கண்களிலும் நீர் நிறைந்து வழிய, அனைவரும் ஒன்றாகச் செபித்தோம். அன்று எங்களுணவை அனைவர்க்கும்  அம்மாவே ஊட்டி மகிழ, நாங்களும் மனம் நிறைந்து குதித்தோம்.

இது நடந்தது 55 ஆண்டுகளுக்கு முன். ஆனால் இன்றும் அன்று இறைவனை அங்கே உணர்ந்தமையை மறக்க முடியவில்லை. தயவு செய்து நீங்களும் உணர்ந்து பாருங்கள.புரியும்.

இந்த ஆக்கத்தை எழுத அமர்வதற்குச் சில மணித்தியாலஙகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பாருங்கள். நான் நீரிழிவு நோய் என்ற சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவன். இரத்தத்தில் சீனி கூடினால் கண்ணுக்கு ஆபத்து. மிகக் குறைந்தால் இதய ஓட்டமே நின்றுவிடும் ஆபத்து. இப்படிப்பட்ட எனது உடன் ஒட்டிய நண்பனுடன் நான் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிரு்தேன். பகல் மூன்றரை மணி. என்னையுமறியாமல் நான் அயர்ந்து தூங்கிவிட்டேன். அதன் காரணம் அலுப்பல்ல.

நான்கு மணியளவில் திடீரெனத் தொலைபேசி மணி அலறியது. திடுக்கிட்டு விழித்தவன். எடுக்க எழுகையில் தலையைச் சுற்றியது. அப்படியே விசாரிக்க, மறுமுனையில் தமிழமுதம் இணைய ஆசிரியர் தம்பி இராஜன் முருகவேல்.

கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அவசரமாக இரத்தத்தைப் பரிசோதித்தேன். 40 எனக் காட்டியது. எனக்கு ஆகக் குறையக்கூடிய அளவு 80. அதற்குக் கீழென்றால் ஆபத்து. இன்னும் அரை ஒரு மணிநேரம் தாமதித்திருந்தால் எனதுயிருக்கே ஆபத்து நேர்ந்திருக்கலாம். உண்மையில் ஒரு மயக்க நிலையையே நான் நெருங்கிக் கொண்டிருந்திருக்கிறேன்  என எனக்குப் புரிந்தது.

உடனே மனவியை அழைத்து ஆவன செய்தபின் இராஜனை அழைத்தேன்.அவருக்கு அன்றுலீவு என்றும் சும்மா எடுத்துப் பார்ப்போமே என்று எடுத்ததாகவும் சொன்னார். வழமைக்கு மாறாக அவர் அன்று அப்படி எடுத்தமை ஒரு தற்செயலான நிகழ்வுதான்.
 

ஆனால் அது என் உயிரைக் காத்ததே அது எவ்வாறு நடந்தது ? எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை என்பதும்    எதுவும் ஏதோ ஒரு திட்டப்படிதான் நடக்கின்றதெனபதும் உண்மைதானோ?

நான் என்னை இறைவ்ன் காப்பாற்றியதாகவே உணர்கிறேன். அதில் என்னை வழி நடத்தும் சக்தியைக் கண்டு கொள்ள என்னால் முடிகிறதை உணர்கிறேன்.

உணர்வுளைக் காண்பதற்கு இயங்கும் விதம் தேடு!
உள்ளமதைக் காண்பதற்கு இயங்கும் வீதம் பாரு!
உருவம் தேடல்விட்டு இறைவன் இயக்கும் விதம் நோக்கி
உன்னிலுமுன் னனைத்திலுமுண் டுணர்ந்து தேடிப் பாரு!

ஆழமில்லா பக்தி எதிர்பார்ப்புடன் கும்பிடும். ஆழமுள்ள பக்தி சக்தியின் சித்தமதை ஏற்று நன்றி சொல்லிக் கும்பிடு்ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக