ஞாயிறு, 14 அக்டோபர், 2012

நான் கற்புடையவள் (சிறுகதை)









தனியின் இதயத்தில் இனந்தெரியாதவொரு படபடப்பு. தான் செய்தது சரியா பிழையா என்பதை அவளால் தீர்மானிக்க முடியாமலிருந்ததே அதற்குக் காரணம்.

"நானுந்தான் எத்தனை எத்தனை வழிகளிலெல்லாம் முயன்றேன். ஒன்றுமே சரிவரவில்லை என்பதால்தானே இதைச் செய்யத் துணிந்தேன். அதனால் இது தவறே அல்ல!"

அவள் மனதின் ஒரு பக்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தது.


"உன் போலவே மற்றவர்களும் முயன்றால்?
அதன் விளைவுகளை எண்ணிப்பார். தெரியாமல் செய்திருந்தால் அது பிழை.
நீ திருந்திக் கொள்ள வாய்ப்புண்டு. நீயோ தெரிந்து செய்துவிட்ட பிழையிது.
இதைப் பிழையென்றல்ல குற்றமென்று புரிந்து கொள்."

மனதின் மறுபக்கம் அவளிடம் வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தது.

தான் தங்கியிருந்த உணவகத்தின் சன்னலருகில் சென்று நின்று கொண்டாள். அப்போதைய அவளது மனநிலையில் அதில் ஏதோ ஆறுதல் கிடைக்கப் போவதாக ஓர் எண்ணம்.

மாடியிலிருந்து கீழே நோட்டம் விட்ட அவளது கண்களுக்குக் கவர்ச்சியான எத்தனையோ காட்சிகள். ஆனால் மனம் எதிலுமே இலயிக்கவில்லை. திரும்பவும் இருந்த இடத்திற்கே திரும்பினாளவள்.

                                                  ............................

பேங்கோக் நகர சூழ்நிலையில் அந்தச் சின்னஞ்சிறு அறைக்குள்ளே எத்தனையெத்தனையோ இளவயதுகள் வந்து தங்கிப் போய்விட்டன. இவளைத்தான் நாசமாய்ப் போகிற ஏஜென்;ற் ஜெர்மனிக்கு இன்னும் அனுப்பாமல் வைத்துக் கொண்டிருக்கிறான்.

ஏன்?
„அவனுக்கேற்றபடி....ஒரு தடவை மட்டும் நடந்து கொண்டால் போதுமே!“

இல்லவே இல்லை. நான் அப்படி நடக்கவே மாட்டேன்.

அப்படியானால் இன்னும் கொஞ்சம் தாமதமாகும்.

பரவாயில்லை. பிந்திப் போனாலும் போவேனே தவிர  இப்படிக் கறை படிந்தவளாகப் போகவே மாட்டேன்.

அவளது பிடிவாதமான தீர்மானம் ஆறு மாத தாமதத்தையும்  ஜெர்மனியிலிருக்கும் தமையனுக்கு சில ஆயிரம் மார்க் செலவையும் தொலைபேசித் தொடர்பின்மையையுமே சம்பாதித்துக் கொடுத்திருந்தன.

எல்லாவற்றிற்கும் மேலான அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் அவளது பள்ளி வயதுக் காதலனும் தற்போது "பெஃபூக்நிஸ் விசா"வுடன் இருப்பவனும் வெகு விரைவிலேயே காலவரையரையற்ற விசா கிடைக்க இருப்பவனும் தனக்காகவே காத்து இருப்பதாக வாரந்தோறும் வரிவரியாக எழுதிக் குவித்தவனுமான சந்திரனிடமிருந்து ஒரு செய்தியும் வராமல் நின்று விட்டமைதான்.

பலதடவைகள் டெலிபோன் எடுத்துப் பார்த்தும் பிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் தான் புதிதாக வந்திறங்கின சில இளசுகள். அவர்களைப் பார்த்துப் பார்த்து இவள் கொதித்துக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொன்றும் அவன் சொல்படி நடந்து கொண்டு இன்னும் சில நாட்களுக்குள் போய்ச் சேர்ந்துவிடும்.

ன்று மாலை...

வெளியில் சிறிது நேரம் போய்வரும் வாய்ப்பு கிடைத்தது அவளுக்கு. ஏஜெண்ட் கூட வந்தான். அதாவது பாதுகாப்புக்காக.

"வதனி! எப்போ ஜெர்மனி போவதாக இருக்கிறாய்?"

குப்பென்று கொதித்தது இரத்தம்.
பாவி! செய்வதையும் செய்து கொண்டு சம்பிரதாயமா!?

ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு வதனி பதிலளித்தாள்.
   
 "தயவு செய்து இந்தத் தடவையாவது என்னை அனுப்பி வையுங்கள் பிளீஸ்;"

"உன் தமையன் அனுப்ப வேண்டியதை அனுப்பாமலிருக்கிறான். நீயும் செய்ய வேண்டியதைச் செய்யயாமலிருக்கிறாய்... "

வேதாளம் பழையபடி முருங்கை ஏற முயல்வதை உணர்ந்து கொண்டவள் தொடர்ந்து சில காலம் இப்படியே சமையலறையில் வருபவர்களுக்கு சமைத்துப் போட்டுக் கொண்டே வேறு வழி பார்க்க வேண்டியதுதான் என்று முடிவெடுக்க முற்பட்டாள்.

அப்போதுதான்.....

அவன் மெதுவாக அவள் காதில் குசுகுசுத்தான். முதலில் அவள் எதுவுமே பேசாமல் இருந்தாள். அவனது வார்த்தைகள் ஒரு திடீர் மாற்றத்தை அவளிடம் ஏற்படுத்துவதை அவதானித்த அவனது முகத்தில் நரித்தனமான ஒரு நகை இழையோடியது.

"சரி..நான்..." அவள் சொல்லி முடிக்கு முன்  அவன் இப்படி முடித்தான்.

"இன்றைக்கே துவங்கிவிடு. அப்போதான் சீக்கிரம் சரியாகும். சரியா?"

"சரி  ; வதனியின் முகம் சிவந்திருந்தது. நாணத்தாலா? அல்ல அல்ல குற்றவுணர்வால்.

எதற்காக?

                                           -------------------------------------

ன் அறைக்குத் திரும்பிய வதனி அவசர அவசரமாகத் தன் சூட்கேசைத் திறந்து அதற்குள்ளிருந்த சில புகைப்படங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டாள்.

இலங்கையிலிருந்து அவளை வழியனுப்பி வைத்தவர்களினதும் ஜெர்மனியில் அவளை வரவேற்கக் காத்து இருப்பவர்களுமாக சிலரின் படங்கள்.

கண்களில் நீர் மல்கியதைத் தவிர்க்க முடியவில்லை அவளால். படத்தில் சந்திரன் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

"இன்னும் ஒரு மாதத்துக்குள் நான் வந்திடுவேன் கண்ணா!" என மனம் ஒலிப்பதை உணர்ந்து முறுவலித்துக் கொண்டாள்.

"டக் டக்"

அறைக் கதவை யாரோ தட்டுகிறார்கள். அவசர அவசரமாகப் படங்களை வைத்து மூடியவள் போய்க் கதவைத் திறந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே ஏஜெண்ட் நின்று கொண்டிருந்தான்.

"உள்ளே வாங்கோ!" மரியாதையுடன் அவள் வரவேற்றாள்.

வந்தவன் அமர்ந்து கொண்டான். இடக்கையிpலிருந்த வெண்சுருளில்  இருந்து அறை முழுவதும் புகை படர்ந்தது.

ஊரில் அப்பா சுருட்டுப் புகைப்பதையிட்டு சதா போராட்டம் நடத்தி வந்தவளுக்கு யாரோ ஓர் அன்னியன் சிகரெட் புகைப்பதைக் கண்டிக்கத் திராணி இல்லாத நிலை.

இப்படியும் ஒரு வெளிநாட்டு வாழ்க்கை தேவைதானா என்று மனம் போலித் தத்துவம் வேறு பேச முயன்றதை அவளே வேடிக்கையாக இரசித்துக் கொண்டாள்.

அவன் பேசத் துவங்கினான்.

"வதனி! அவவை நாளையிலேயிருந்து உன்ற ரூமிலேதான் தங்க வைக்கப் போறன். எப்படிச் செய்வியோ தெரியாது. மூன்றே நாட்களுக்குள் செய்து முடிக்க வேணும். அப்பத்தான் இரண்டு வாரத்திலே நீ....."

வதனியின் கனவுலகப் பயணம் தொடங்கிவிட்டது. பிராங்பேட விமான நிலையம் முதல் தமையனின் ஊர்வழிப்பாதைவரை அத்தனையும் ஏன் சந்திரன் வந்து வரவேற்பது வரைக்கும் காட்சிகள் மாறி மாறி வந்து மறைந்தன.

தான் கடந்து வந்த நாடுகளையெல்லாம் விஞ்சிய மாடிவீடுகளும் கூடகோபுரங்களுமாக என்னென்னவெல்லாமோ காட்சிகள். அப்பப்பா! ஜெர்மனி எவ்வளவு அழகான நாடு!

ஏஜெண்ட்  வதனியின் கனவைக் கலைத்தான்.

"என்ன நான் பேசுறேன். நீ சும்மா..."
     
 "எல்லாம் ஓகே. நான் பார்த்துக் கொள்கிறேன்.சரிதானே!"

அவன் எழுந்து கொண்டான். அவளது கன்னத்தில் செல்லமாக இலேசாகத் தட்டிவிட்டுப் புறப்பட்டான். அவனது அந்தச் செய்கை தன்னைச் சிறிதும் அதிர வைக்காத நிலையை அவள் உணர்ந்தாலும் அதன் காரணத்தை அவளால் உணர முடியவில்லை.

ஒரு பிழைக்கு உள்ளம் இசைந்துவிட்டால் தொடர்கின்ற பிழைகளையும் அது ஏற்றுக் கொண்டு விடுமோ? அப்படித்தான் போலும்.

அவள் தேனீர் போடுவதில் கவனஞ் செலுத்தத் துவங்கினாள்.

"வதனி அக்கா!"

பக்கத்து அறையிலிருந்து வந்த மூன்று பெண்கள்.                  

"இரவைக்கு என்ன சமைக்க?"

வதனியின் கவனம் சமையலிலல்ல... வேறு எதிலோ இருப்பதை அவர்கள் அறிவார்களா என்ன! ஏதோ அப்போதைக்கு மனதிற்குப் பட்டதைச் சொல்லியனுப்பிவிட்டு சற்று அமர்ந்து சிந்திக்க முற்பட்டாள்.

ரவெல்லாம் புரண்டு  புரண்டு படுத்தபடி யோசித்துக் கொண்டு இருந்தாள் வதனி.

நாளை இரவு அந்தப் பெண் சாந்தி அறைக்குள் தங்கியதும் எப்படி ஆரம்பித்தால் காரியம் சரி வரும் என்பதிலேயே அவளது சிந்தனை முற்று முழுதாக ஈடுபட்டிருந்தது. விடிய ஒரு நாழிகை இருக்கையில் அவளையும் அறியாமலே நித்திரை அவளை ஆட்கொண்டு விட்டது.

                            ...............................................................................

பொழுது விடிந்து விட்டது. எல்லா நாளையும் போல்தான் அன்றும் இருந்தது. ஆனால் அவளுக்குள் மட்டும் ஏதோ ஒரு மன அதிர்வு தொடர்ந்து இருந்து கொண்டு அலைக்கழித்தது.

தான் செய்யப் போகிற காரியம்  அதன் தாற்பரியம்  அதனால் தானடையப் போகும் இலாபம் அனைத்தையும் அவள் மனம் அசை போட்டுப் பார்த்துக்கொண்டே இருந்ததை அவளால் தடுக்கவே முடியவில்லை.

இரவு நெருங்கிவிட்டது. ஏழரை மணியளவில் கதவு தட்டப்படும் சப்தம்.
தனது புதிய வாழ்க்கையின் முதல் அத்திவாரத்தில் அடியெடுத்து வைக்க நேரம் வந்து விட்டதா?

கதவைத் திறந்தாள்.

"அக்கா! நான் இந்த அறையிலேதான் தங்க வேணுமாம். ஏஜெண்ட் சொன்னார்.“

சுமார் இருபது வயது மதிக்கத்தக்க உருவம். பேரழகியென்று சொல்வதற்கில்லை. ஆனால் எவரையும் கவர்ந்திழுக்கத்தக்க தோற்றம்.

மீன் வந்திருக்கிறது. தூண்டிலைச் சரியான இரையோடு போட வேண்டும். இல்லையேல் அது தப்பித்து விடும்.

தன் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக தன் மனம் இப்படியாக நினைப்பதையும் அதன் தாக்கத்தினால் தன் உடலே சற்று அதிர்வுறுவதையும் அவள் உணர்ந்தாள். என்றாலும் சமாளித்தால்தான் காரியம் சரி வரும் என்று ஏதோவொரு உணர்வு அவளை உந்திக் கொண்டிருந்தது.

"!உன்ற பேர் சாந்திதானே! வா..வா..பேக்கை அந்த மூலையிலே வைத்துவிட்டு வா!. முதலில் டீ குடித்துவிட்டு அதற்குப் பிறகு பேசலாம்."

அக்காவின் விருந்தோம்பலில் தங்கை மயங்கித்தான் போனாள்.

தனக்கு சீதனத்துக்கென்றிருந்த ஒரே நிலத்தை அடகு வைத்துப்  பெற்றோர் அனுப்பியதிலிருந்து தனக்குக் கூடப்பிறந்த ஒரேயொரு அக்கா மட்டுமே இருப்பதையும் அவளது கணவன் வெறும் குடிகாரன் என்பதையும்  அந்த அக்காவை நம்பித்தான் தான் ஜெர்மனி செல்ல விருப்பதையும் தெட்டத்தெளிவாக விளக்கமாகக் கூறி வதனி அக்காவின் அனுதாபத்தைத் தேட முனைந்த சாந்தி படுக்கையில் படுத்தபின்தான் மெதுவாக அந்த உண்மையை வெளியிட்டாள்.

"அக்கா! இந்த ஏஜெண்ட் எப்படி? தன்னோடே ஒழுங்கா நடக்காட்டில நேரத்துக்கு ஜெர்மனி போய்ச் சேர விடானாமே!"

மீன் தூண்டிலை நெருங்குவது வதனிக்குப் புரிந்தது. மெதுவாக ஆரம்பித்தாள்.

" சாந்தி நீ உலகத்தைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். புயலுக்கு வீராப்பு காட்டின மரம் வேரோடே சாய்ந்ததும் அதற்கேற்ப வளைந்து கொடுத்த சிறு செடி தப்பித்ததும் வெறும் கதையில்ல் உண்மை. வாழ்க்கையைப் படிக்க உதவும் அறிவுரை.தெரியுமா?“

"அப்படியெண்டால்?"

"நாம் சற்று விட்டுக் கொடுத்தால்தான் தப்பிப் போவது முடியும். இங்கே விசா முடிந்து பிடிபட்டால் சிறை  அல்லது விபசார விடுதிதான். அதைவிட ஒரு நாளோ இருநாளோ சமாளித்துவிட்டால் அடுத்த குழுவில் ஜெர்மனிக்குப் போய்விடலாம்“
                                                                   
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாமே! இங்கே  சாந்தியின் மனவுறுதியென்ற கல்லைச்  சிறிது சிறிதாகக் கரைத்துப் பார்த்தாள் வதனி.

"அக்கா! நீங்கள் எவ்வளவு காலமா இங்கே தங்கியிருக்கிறீர்கள்?"

கேள்வி சாதாரணமானதுதானே! பட்டென்று பதிலளித்தாள் வதனி.

"கிட்டத்தட்ட ஆறு மாதம்";

"ஏன்?"
மின்சாரம் பாய்ந்தது வதனியின் வயிற்றில்.

ஏன்? ஏன்? ஏன்?
அந்தக் கேள்வி  பலதடவைகள் அவள் காதுகளில் எதிரொலியாக விழுந்து குத்தியது.

எப்படி பதில் சொல்ல?

நெஞ்சையடைத்தது. ஆனால்...சரியான பதிலைச் சொல்லிச் சரியாக நம்பவைக்காவிட்டால் தனக்கே ஜெர்மன் பயணம் பிந்திவிட வாய்ப்பாகிவிடுமே!

ஆபத்துக்குப் பாவமில்லை. எதைச் சொல்லியாவது நாம் போகக் கிடைத்தால் சரி.   அவளது மூளை காட்டிய வழியில் வார்த்தைகள்.....

"சாந்தி நானும் உன்னைப் போலத்தான் பிடிவாதமாயிருந்தேன். கடைசியில் இப்பத்தான்..."

சாந்தியின் கண்களில் ஏதோ ஒருவித ஆர்வம் மிதப்பது வதனிக்குப் புரிந்தது. சரியான வேளை! சரியாக வளைத்துவிட வேண்டும்.

"இரண்டு வாரத்துக்கு முன்; ஓம் பட்டேன். வேறு வழி எதுவுமே சரி வராது என்று தெரிந்த பிறகு தான் உடன் பட்டேன். இப்போ அடுத்த குழுவில் போய்விட ஏற்பாடாகி விட்டது."

"மற்ற பிள்ளைகள்?"

"ஒன்றுமே நினைத்தபடி போக முடியாது தெரியுமா? நான்தான் பலருக்கும் வழி சொன்னேன். என் பேச்சைக் கேட்ட அத்தனையும் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்து  இப்போ குடியும் குடித்தனமுமாகிவிட்டதுகள். இங்கே நடந்த எதுவுமே அங்கே யாருக்கும்  தெரியப் போவதில்லை. அது மட்டுமல்ல...ஆபத்தில்லாதபடி எல்லாமே...."

வதனிக்கே தெரியவில்லை தான் எப்படி இந்த அளவுக்குத் தரந்தாழத் துணிந்தாளென்று. அடி மேல் அடி அடித்தாள். அந்த அம்மியும் தகர்ந்தது.                                  

அடுத்த நாள் மாலை....ஒரு வாழத் துவங்க வேண்டிய இளம்பயிர் தன் நன்மைக்காகத்தான் அக்கா புத்தி சொன்னாள் என்ற நம்பிக்கையுடன் தன்னையே அந்த அன்னியனிடம் கொடுத்துக் கொண்டது.

குற்றம் செய்யும் வரை பதறும் மனது குற்றத்தைச் செய்து விட்டால் அதைச் சரியாக்கிச் சமாதானந் தேடவும் முற்படுமென்பதை வதனி தனக்குத் தானே சமாதானஞ் சொல்லுவதன் மூலம் நடைமுறைப் படுத்திக் கொண்டாள்.

ஏஜெண்ட் தான் சொன்னபடி வதனியின் ஜேர்மன் பயணத்துக்கு ஏற்றதைச் செய்வதைக் கண்டதும் அது ஏன் என்று நினைக்க மறுத்தது அவள் மனம்.

அவள் அவனை நம்பிக்கைக்குரிய நாணயமான மனிதனாகவே கண்டாள். தன் காரியம் வெல்கிறதே அது போதும் என்ற நிலை.

                               --------------------------------------



தனி ஜெர்மனிக்குள் நுழைந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
குடும்பத்தார் பலரையும் சந்தித்தாகி விட்டது.

இனி தன் கல்யாணத்தை....

மெதுவாக தமையனிடம் சந்திரனைப் பற்றி விசாரித்தாள். அவன் சொந்தமாக ஓர் ஆசியன் கடை நடத்துவதாகவும் தான் கலியாணத்தைப் பற்றி விசாரித்ததாகவும் முதலில் ஓம் என்றிருந்தவன் இப்போது கொஞ்சம்....

வதனிக்குத் தலையைச் சுற்றியது. என்றாலும் ஒரு தடவை அவனைச் சந்தித்துப் பேச நினைத்தாள்.

அந்தக் கடை நம்பருக்கு டெலிபோன் பண்ணினால் யாரோ ஒருவர் அல்லது ஒருத்தி அவளது பெயரைக் கேட்டுவிட்டு  “அவரில்லை; அவரில்லை” என்றே சொன்னார்கள்.

தனக்குரியவனிடம் பேசவும்  இத்தனை கெடுபிடியா என்று  அவளுக்கு ஆத்திரம் வந்தாலும் நேரில் சந்திப்பது முக்கியமல்லவா! அதற்காக அடக்கிக் கொண்டாள்.

அண்ணா வேண்டாம். நாமே போய்க் கேட்டுவிடுவோம்!

ஒரு வரட்டு தைரியத்துடன் ஒரு நாள் அவள் தனக்குத் தெரிந்த குடும்பமொன்றுடன் அவனது கடைக்குச் சென்றுவிட்டாள்.

பெரிய கடையல்லவென்றாலும் பொருட்கள் நிறைந்து  சனம் நிறைந்து பார்க்க
நிறைவாகவே இருந்தது கடை.

சந்திரன் பட்டறையில் நின்று கொண்டிருந்தான்.

அடிக்கடி அவனிடம் அதை இதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு பெண். நகைப்பிரிவில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

அவள்....அவள்...

வதனியின் பாதத்தின் கீழே பூமி நழுவுவதுபோல இருந்தது.

மெதுவாக அருகில் சென்றாள்.

"நீ...சாந்திதானே?"

 அவள் பக்கம் திரும்பிய அந்தப் பெண் பளிச் சென்று சொன்ன வாசகங்கள்….

" நீங்கள் அந்த பேங்கோக் ஏஜெண்ட்டோட ஏஜெண்ட் வதனிதானே? எப்படி இருக்கிறீர்கள்?  அந்தத் தொழிலை இங்கேயும் தொடர்ந்து செய்கிறீங்களா?"

நல்ல தமிழில் நறுக்காகக் கேட்டாள் அந்தப் பெண்.

" எந்தத் தொழில்?"

வதனியின் முழு உடம்புமே நடுநடுங்கியது . பதட்டத்தில் முழு உதிரமுமே இறுகி வருவதுபோல இருந்தது அவளுக்கு.

"என்ன சொல்கிறாய் நீ?"

அவள் உட்பக்கமாகத் திரும்பினாள்.

"சந்திரன்! கொஞ்சம் வாங்கோ! இவங்களின்ற படந்தானே நீங்க எனக்குக் காட்டினது?"

எந்த வித பரபரப்புமின்றி வந்தான் சந்திரன்.

"இது வியாபாரம் நடக்கிற சீதேவியான இடம். இங்கே வந்து வீண் கதை பேச வேண்டாம்."

சைகை காட்டி  உள்புறத்துக்கு அழைத்தான். கயிறு கட்டப்பட்ட ஆடுபோல வதனி அவனைத் தொடர்ந்தாள். தன்னறைக்குள் நுழைந்ததும் அவன் அவளது படத்தை அவளிடமே  திருப்பிக் கொடுத்தான்.

"சந்திரன்...சந்திரன்....நான் கற்புடையவள்...கற்புடையவள்...அவள்தான்...."

"சாந்தி எல்லாம் சொன்னாள். நீ அங்கே எப்படித் தொழில் நடத்தினாய். ஏஜெண்ட்டுகளுக்குப் பெண்கள் சப்ளை எப்படி நடத்தினாய்? எந்த ஏஜெண்டுடன் தனிக்குடித்தனம் நடத்தினாய்?  ஆபத்தில்லாதபடி.. எதை...எப்படிச் செய்வது என்றெல்லாம்.....பாடம் படிப்பித்தாய் என்று எல்லாமே சொன்னாள்.நல்ல வேளை கடவுள் என்னைக் காப்பாற்றினார்".

"ஐயோ! பொய். பொய். என்னை நம்புங்கள்.என்னை நம்புங்கள்.";

 "சாந்தி எனக்கு தூரத்து உறவு. அவளைத் தான் நான் மணமுடிக்கப் போகிறேன். உனது  உண்மையான சொரூபம் இதுதான் என்பதை தெட்டத் தெளிவாக ஆண்டவன் சன்னதியில்  சத்தியம் செய்து  சாந்தி சொன்ன பிறகுதான் என் முடிவை மாற்றினேன்."

சந்திரனின் முகத்தில் தெரிந்த தெளிவும் நிதானமும் வதனியை நிலைகுலைய வைத்தன.

ஒன்றுமே செய்யாத நானா...கற்பிழந்து போன அவளா? எவள்....?

அவன் தொடர்ந்தான்.

நீ சந்தர்ப்ப வசத்தால் பிழையில் மாட்டியிருந்தால் நிச்சயம் நான் உன்னை மன்னித்து ஏற்றிருப்பேன். ஆனால் தெரிந்து  பல குடும்பங்களைக் கறைப்படுத்தி அனுபவித்த உன் அப்பாவித்தனமான தோற்றத்தின் பின்னணியில் மறைந்து கிடக்கும் அரக்கத்தனமான குணத்தை என்னால் மன்னிக்கவே முடியாது"  சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான்.

"உன்னைப்பற்றி நானோ  நாங்களோ  இங்கோ  எங்குமோ எவரிடமும் எதுவுமே  சொல்லப் போவதில்லை. அந்தப் பயம் உனக்கு வேண்டாம்.

ஆனால் உனது இந்தக் கற்பு நெறி தவறிய பாதையை மாற்றி விட்டு இனியாவது ஒழுங்காக வாழப் பார்!"

அவன் திரும்பவும் வியாபாரத்தில் ஈடுபட எதுவித சலனமுமற்றவனாய்ப் போய்விட்டான்.

அவள்?

அசையாமல்....நின்று கொண்டிருந்தாள்.

அவளது கொதிக்கும் இரத்த ஓட்டத்தில் இரண்டே சொற்கள் மிதந்தோடிக் கொண்டிருந்தன.

நான்..கற்புடையவள்..நான்..கற்புடையவள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக