திங்கள், 15 அக்டோபர், 2012

அத்திவாரங்கள் (கவிதை)






இருட்டிடனுள் இருப்பவை எதுவெனத் தெரியாமை
மருண்டிடும் மனநிலைக் கத்தி வாரம்
புரிந்திடும் சக்தியைச் சிந்தையில் கொள்ளாமை
பிழைக்குள் விழும்வழியின்  அத்தி வாரம்


கேட்கின்ற அனைத்தையும் கேட்டதும் நம்புதல்
கேட்டுக்குள் விழவைக்கும் அத்தி வாரம்
கேட்பதைப் பார்ப்பதை ஐயத்தில் வைத்தவை
உட்பொருள் புரிதலறி வத்தி வாரம்

சூழலுக்கேற்பவே பிழை சார்ந்தும் வளருதல்
ஊழலை ஏற்கும்மன  அத்தி வாரம்
வாழலை முன்வைத்துச் சுயநலம் நாடாமை
வாழ்க்கையில் தகைமைக்கு அத்திவாரம்

துன்பத்துக் கஞ்சியே ஓடலும் நடுங்கலும்
இன்பத்தை இழப்பதன் அத்திவாரம்
துன்பத்தை எதிர்கொண்டு வழிகண்டு வெல்லுதல்
இன்பத்தின் படிக்கட்டுக் கத்திவாரம்

சுயநலம் வைத்துநல் நட்பினை விழைந்திடல்
சுயகேட்டிற் கமைத்திடும் அத்தி வாரம்
பயமின்றிச் சரிபிழை சுட்டிடும் தகைமைதான்
பயன்மிக்க சரிநட்பின் அத்திவாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக