புதன், 17 அக்டோபர், 2012

ஜனநாயகமா ஜனசாவகமா? (கவிதை)







யார்யாரோ வந்துநின்று பார்பார்பார் என்றுகத்தி
ஊர் ஏய்க்கும் நாடகமா ஜனநாயகம்?
பார் எங்கும் பரவுதற்காய் போர்பரப்பும் நாடுகளே!
யார் காக்கப் பசப்புகிறீர் ஜனநாயகம்?


மதம்காட்டி மொழிகாட்டி வெறியூட்டின் என்னஅது?
இதமாக மொழிபேசி இடம்பறித்தால் என்னஅது?
மதங்கொண்ட மனிதர்களை அநியாயம் செய்யவிட்டு
அதற்கென்று அறிக்கைவிிட்டால் அதுதானா ஜனநாயகம்?

நியாயமாகச் சுயவுரிமை கேட்பவரை அடக்குவதும்
நியாயமல்ல வேஅதுவென நிமிர்பவரை ஒடுக்குவதும்
பாதிக்கப் பட்டவரை பயங்கர வாதிகளாய்
பயங்கரம் செய்பவரே சொல்லுவதா ஜனநாயகம்?

ஓரினம் தன்மைமட்டும் உயர்வாக வைத்திருக்க
வேறினம் வளர்ந்துவிடா நிலைவளர்க்கும் தீமைதனை
யாரிடமும் சொல்லுவதோ வினவுவதோ குற்றமெனும்
பாரேய்க்கும் பம்மாத்தா ஜனநாயகம்? சொல்லிடுங்கள்

இடம்கொடுத்தால் மடம்அமைக்கும் இழிகுணத்தார் இயங்குவதை
உடன்இருந்தே அறிந்திருந்தும் அதன்துணையாய்ச் செல்லுவதை
கடன்எனவே தடுத்துச்சரி சார்வதனை விட்டுவிட்டு
உடனறிக்கை விட்டுவிட்டு உறங்குவதா ஜனநாயகம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக