சனி, 13 அக்டோபர், 2012

நிலைகள்





கனிதரற்கு மரமெதுவும் அனுமதிக்கு அலைவதில்லை
கண்கவரும் மலர்தரற்கும் செடிஅனுமதி கேட்பதில்லை
மலையடியில் வலம்வரற்கு நதியனுமதி கேட்பதில்லை
இலைஅறிவில் நமக்குஉயர் எனும்நமக்கோ எதுவுமில்லை


அருந்துதற்கு நீர்விழையின் அதற்குத்தடை விதிப்பதற்கும்
மருந்துயிரைக் காப்பதற்கும் தடைவிதித்தே மறுப்பதற்கும்
உயிர்இருக்கும் காலமதில் வாழற்கிடம் தடுப்பதற்கும்
உரிமைபறித் திடம்பறிக்கும் பாவங்களே மனிதரிடம்.

சக்திமிக்க தீயவரும் தலைவனெனும் மடைமைநிலை
புத்தியற்ற பேதைகளால் மேதையென்று ஆகும்நிலை
சுத்தமற்ற காகிதத்தில் புத்தகங்கள் தைத்ததுபோல்
எத்திசையும் உண்மை,நீதி, நேர்மைவாடும் கொடியநிலை

ஏய்ப்ப தற்குப் பாவிகளால் பஞ்சம்,பசி செயற்கைநிலை
காய்ப்பதற்கே எதுவுமின்றிச் சூழல்தேயும் துயரநிலை
வாய்திறந்தே நீதிகேட்கின் மரணம்வரும் சோகநிலை
நாய்களிலும் கேவலமாய் மனிதராக்கும் ஆட்சிநிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக