வியாழன், 11 அக்டோபர், 2012

கானலை நீராக்க வருகிறாயா?

தயங்கள் பொய் சொல்லா நிலை நிலைத்தால்
           இகமெங்கும் அமைதிக்கு இடம் கிடைக்கும்
சதமென்று சுயநலம் தனை விழைந்தால்
          சந்ததி கள்கூடப் பழி சுமக்கும்
உதவிடற் கியலாமை இருந்த போதும்
         உளம்உதவ நினைத்திடின் புண்ணியம்தான்!
எதனையும் எதிர்பார்ப்பு இன்றி நன்மை
         பிறர்நன்மை விழைவதும் தர்மமேதான்!

உண்மையாய் உண்மையை ஏற்று நின்றால்
         உண்மைபோல் தெரிவதை நம்பமாட்டோம்
வெண்மையாய் வெண்மையை மட்டும்ஏற்கும்
         திண்மையை நாமென்றும் இழக்கமாட்டோம்
பன்மையாய்ப் பலமூடர் ஒன்றுகூடி
         என்னதான் பீற்றினும் ஏற்க மாட்டோம்
நன்மைசெய் விதமதில் தீமை செய்யும்
        நல்லபாம் பொப்பரை நம்ப மாட்டோம்.

சமுதாயம்தனில் நன்மை செய்வதாகச்
         சதிகாரர் நிறைந்துமே கெடுத்துவிட்டார்
அமுதாக அவர்பேசி, இனிப்பும் சேர்த்தே
        அழிவதை வளர்ச்சியாய்க் காட்டிவிட்டார்
பொல்லாத அவர்குணம் மறைத்துவிட்டே
         பொய்யாகப் புத்தகம் எழுதுகின்றார்
இல்லாத நன்மையாய்ச் சொல்லிச் சொல்லி
         இகமதைப் பொய்மையால் நிறைத்தும் விட்டார்.
       
இதமதே இல்லாத விதங்களில்தான்
          இறைவனில் நம்பிக்கை ஊட்ட வந்தார்
மதமதே பெரிதென்று வலியுறுத்தி,
         மதங்கொண்ட மனிதரை வளர்த்தும்விட்டார்
கதைகதை ஆகவே பொய்கள் சொல்லிக்
         கடவுளை மாயையாய்க் காட்டிக் காட்டி
கதைவிட்டுப் பணம்பண்ணும் கலையில் தேர்ந்தே
         கானலில் நமைவிட்டு அவ ருயர்ந்தார்.

கட்டிடம் அமைய வோர் அத்திவாரம்
         வெட்டினால் மட்டுமே அதுநிலைக்கும்
வெட்டியாய் பக்தியாய் நம்பி நாமும்
         வீணாகல் தவிர்க்கவே துணிவு வேண்டும்
பொய்மைகள் உண்மையை மூடவிட்டால்
         மெய்யதும் பொய்மையாய் மாறிக் காணும்
மெய்யாக மெய்யைநீ பற்றிக் காட்டிக்
         கானலை நீராக்கும் நிலையை ஆக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக