திங்கள், 22 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் - 9






81. பணம்கூடினதரம்கூடும் எனுமெண்ணம் தவறாகச் சமுதாயம் ஏற்றதாலே
      பணம் தேடின் அதுபோதும் எனக் குற்றம் தனைஏற்கும் தனிநபர் 
      வளர்கிறாரே!


82. நோயுற்ற மனிதரைப் பட்டுடை போர்த்தியே சுகமாக்கல் நடக்குமென்றால்
      நாய்கூடப் புலித்தோலை அணிந்து தான்புலியென்று நடைபோடல் 
      உண்மையாகும் 

83. கட்டிலில் துயில்பவன் சடுதியாய்விழுந்திடல் சாத்தியம் பாயில்அது 
      நடந்திடாது
     தட்டியே தன்மனம் தளராது வாழ்ந்திடல் கடினமே ஆயினும் சறுக்கிடல் 
     நடந்திடாது

84.  நாயது இளிப்பதாய்ப் பல்காட்டின் கடிக்கவே எனக் கண்டு ஒதுங்க 
      வேண்டும்
     பேயொப்ப மனிதரின் உருவங்கள் இளிப்பதோ ஆபத்தென் றுணரவேண்டும்

85.   எவரெதைக்கேட்பினும் சட்டெனப் பதில்சொல்லும் பழக்கத்தைத் 
       தவிர்த்தல் நன்று
      அவசரம் பலவேளை தவறையே செய்திடும். சரியாகப் புரிதல் நன்று

86.  மலைமேலும் மாளிகை உருவாக்கல் சாத்தியம் தைரியம் துணை 
      இருந்தால்
     நிலைக் கேற்ப திட்டமும் உழைப்பதும் சரிவரும் சரியாக 
     இணைந்திருந்தால்

87. எல்லாம் நம் நன்மைக்கே எனநம்பி ஆயாமல் எதனிலும் இறங்க 
     வேண்டாம்
     பொல்லானும் நமைவைத்துப் பயன்தேடவிழையலாம் என்றைக்கும் 
     நம்பவேண்டாம்

88. பணிசெய்ய அமருமுன் எதற்காக என்று நாம் நன்றாக ஆய வேண்டும்
     துணிவாக உணர்ந்ததைச் சரியாக எடுத்துநாம் தயங்காமல் செய்ய 
     வேண்டும்

89.   புகழதும் பெயரதும் பெருமையும் என்றுமே நிலையாக நிற்பதில்லை
      அழகதும் இளமையும் நிலையென்று நிமிருதல் நிலைமாற்றும் 
      பொய்யுமில்லை

90.  உடலதில் வாய்மட்டும் இருவேலி கொண்டதாய் இயற்கையாய் 
      அமைந்ததென்ன?
      உள்ளுள்ள நாசொல்லும் வார்த்தையில் கவனம்வை எனச் சொல்ல. 
     வேறுஎன்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக