சனி, 13 அக்டோபர், 2012

விழிக்குள் விழிக்கும் பழக்கம் வேண்டும் (கவிதை)




நாவிலே இனித்ததென்று நல்லவை கெட்டவற்றை
ஆயாமல் ஏற்றிடாதே! பின்வருந்தி அழுதிடாதே!
கோவிலுள் கிடக்குதென்று சிறுகுப்பை தனையெடுத்துக்
கண்களில் ஒற்றிடாதே! தூயதென் றதைஎண்ணிடாதே!


கற்றவர் நல்லவர்கள் மத்தியில் குள்ளர் பலர்
கற்றவர் வேடமிடும் காதையுண்டு நம்பிடாதே!
மற்றவர் பேரின்பின்னே ஒட்டியே வளர்ந்துகொண்டு
மற்றவர் வழிமறிப்பார் அலட்சியம் செய்திடாதே!

சொற்களைச் சொல்விதத்தில் சொல்அசை விடுவிதத்தில்
சொற்பொருளைப் பலவிதமாய் மாற்றிவிடுவர் மறவாதே!
மற்றவரின் உள்ளங்களில் நல்லவைபோல் படும்படியாய்க்
சொற்பொருளைத் திசைமாற்றும் தீயவரை நம்பிடாதே!

பாதையைக் கடக்குமுன்னே இருபுறமும் பார்த்துக் கட
வாதையைத் தவிர்க்கவேண்டின் வீண்வம்பைத் தவிர்த்துநட
சேவையாய்ச் செய்வதையும் தீமையாய்க் காட்டுபவர்
கோவையாய் நமைச்சூழ்ந்தே தீதிழைப்பார் பார்த்துநட

விழிதிறந்தால் எப்பொருளும் தடையின்றித் தெரிந்திருக்கும்
விழித்திருந்தால் எப்பொருளின் பொருளதுவும் புரிந்திருக்கும்
விளிக்கையிலே எவரிடமும் விழித்திருந்தால் நம்கவனம்
வழிவழுக்கா விதமதுவாய் நமதறிவுக் குதவிவரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக