சனி, 13 அக்டோபர், 2012

சாதனையில்..தொடர் நடையும் படர் நடையும் (கட்டுரை)




சாதனைகளின் அடிப்படையில் வேதனைகள் இருப்பது இயல்பானதும் அநேகமாகப் பலருக்கும் தெரிந்ததுமான ஓர் உண்மைதான். 

ஆர்வங்கள் முயற்சிகளாகி, 
முயற்சிகள் உழைப்புகளாகி, 
உழைப்புகள் அனுபவங்களாகி,
அனுபவங்கள் பாடங்களாகி, 
அப்பாடங்களிலிருந்து பெறும் அறிவு துணிச்சல்களாகி,
துணிச்சல்களின் வெற்றி நிலைகளே சாதனைகளாகின்றன.


சாதனைகளுக்கு ஒரு எல்லையோ கட்டுப்பாடோ வரையறையோ கிடையாது. எவரும் எதனையும் தத்தமது சக்திக்கேற்ப பொறுப்பேற்று முயன்றால் சாதனை படைப்பது சாத்தியமே!

எவரும் தம்மால் விருப்புடன் தொடரக் கூடிய முயற்சிகளை வரையறுத்து முடிவெடுக்காது விடின் எதிலும் எதையும் என்றைக்கும் அவர்களால் சாதித்துவிட முடியாது. காரணம், சாதனையின் முன் விளக்காகிய தன்னம்பிக்கையை மனத்தெளிவு மட்டுமே நிரந்தரப்படுத்தவல்லதென்ற உண்மையாகும்.

நமது தெளிவான சிந்தனையுடனான முடிவை எடுக்காமல் சாதனைகளில் இறங்குவது ஆழந்தெரியாமல் காலை விட்ட கதையாகி விடும். 

தென்னை, மாம்பழத்தைக் காய்க்க நினைப்பதும் கோழி பருந்தெனப் பறக்க நினைப்பதும் அசாத்தியங்களேயன்றி சாதனைக்கான சரியான திட்டங்களல்ல.

ஆனால் சரியாகவும் தெடர்ந்தும் முயன்றால் ஒரு குருடனால் இசைஞானியாக முடியும். பாடகனாக முடியும். இவ்விடத்தில் வெற்றி வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்கள் இருப்பதால் முயன்று வெல்லல் அசாத்தியமல்ல என்பது தெளிவு.

அது போலவே எழுத்தாற்றலிலும் சரியாய்ச் சரிவழி முயன்றால் நிச்சயமாக சாதனை படைக்க முடியும். புலம் பெயர்ந்த சூழலில் தமிழ் கூரு இலக்கிய உலகில் இருக்கின்ற மிகப் பெரிய துயரந்தரத்தக்க குறை என்னவென்றால்
எழுத்தாளர்களை விட எழுத்தலரல்களே அதிகமாக இருப்பதுதான்.

சுயநலத்தை உள் வைத்துப் பொதுநலம் போல் கடை விரித்து, தாம் வாழ்நாட்டின் அரசுகளின் சில அவசியங்கருதிப் பின்பற்றப்படும் சட்டங்களின் உதவிகளை மிகப் பக்குவமாகவும் தந்திரமாகவும் அக்ப்பட்டுக் கொள்ளாமல் அறுத்தெடுக்கும்  சில அசகாய சாதனைச் சூரர்கள் இருக்கிறார்கள்.

வெளிநாட்டு மக்களின் மொழி, கலை,மத, கலாச்சாரங்களை வளர்ப்பதற்கு உதவி செய்வதற்கான சில வசதிகள் இந்த நாடுகளில் இருப்பதை மிகவும் இரகசியமாக அறிந்து வைத்துக் கொண்டு, பத்திரிகை ஆசிரியர்களென்று எழும்பி நின்று வழுக்கி வழுக்கிப் பொய் இயக்கம் நடத்திப் பிழைக்கும் சாதனையாளர்களும்  இலவச கணனி இயந்திரங்களைப் பெறுவதற்கென்றே பொய்க் கையெழுத்துப் பத்திரிகை நடத்திப் பின் அதைக் காட்டி மொழி வளர்க்கப் பணி செய்யவென்று “பெட்டிஷன்” கொடுத்து இலவசக் கணனி பெற்று ஊர்ச் சொத்தில் இணைய வலயத்தில் உலகம் சுற்றும் வாலிப, கிழட்டுச் சாதனையாளர்களும் இருக்கிறார்கள். சில அறிஞர்களுக்கு உதவிப்பணம் கூட அவர்களின் இலக்கிய பணிப் பெயரில் வருகிறதாம். பெயர் மட்டும் இருக்கப் பணம் வந்து சேரும் பக்குவமாக அத்திவாரமமைக்கப்பட்டுப் பயன் பெறும் பெருமக்களும் ஆஙஇகாங்கெ இருக்கிறார்களாம்.

பெரும் இலக்கிய பணி ஆர்வலர்களைப் போல காட்டிக் கொண்டு, அறிந்த, தெரிந்த அரைகுறைகளையும் அப்பாவிகளான நல்ல சில எழுத்தாளர்களையும் திடீர் சாம்பார், திடீர் இட்லி பாணியில் திடீர் நூலாசிரியராக்கி உயர்த்தி வைக்கிறோம் என்று ஆசையை ஊட்டி கமிஷன் வைத்து இந்தியாவில் அடிப்பித்து அச்சடித்தவரையே வெளியீட்டு விழாவுக்கு அழைத்து, அரசிடம் காலச்சார விழாவுக்கு என்று இலவசமாகப் பெற்ற மண்டபத்துக்கு அங்கிருந்து வந்தவரிடமே கணக்குக் காட்டி காசு சுருட்டும் புஸ்பணிச் சாதனையாளர்களும் இருக்கிறார்கள்.

சூழ்நிலைக்கேற்ப பக்கம் சார்ந்து, உயர்ந்து நிற்க முயல்கின்ற இத்தகைய மகான்களும் இன்னும் பல சாதனைத் தோல்விகளும் தங்களின் தன்னம்பிக்கைத் தெளிவின்மையினால்தான் தகிடுதத்தங்களில் உயர்ந்து நின்று பார்த்திருக்கிறார்கள் என்பதைத்தான் அவர்களது இலக்கிய சேவையின் இன்றைய  இலையுதிர் காலம் காட்டிக் கொண்டு இருக்கின்றது.

சரியான கொள்கையுடன் சரியாகத் திட்டமிட்டு, சரியாக முயன்றவர்களால்தான் தோல்விகளிலும் சறுக்கல்களிலும் தளராது நின்று பிடித்துச் சாதனை படைக்க முயன்றிருப்பதைத்தான் சரித்திரம் வலியறுத்துகின்றது.

ஒரு நல்ல, பாரிய  முயற்சி படுதோல்வியில் முடிகின்றதென்றால் அது ஏதோவொரு விதத்தில் ஒரு தவறைச் சரியாக நினைத்து நடத்தி இருக்க வேண்டும். இது அனைத்து முயற்சிகளுக்குமே பொருந்தும்.

வெற்றிபோல தெரிந்ததுமே தலைகால் தெரியாது குதித்தால் தலைகுப்புற விழுவதுதான் நடக்கும். சிலர் சாதனையாக  நினைப்பது மற்றவர் புகழைக் கெடுப்பதற்கும் மற்றவர் வெற்றியைப் பறிப்பதற்கும் மற்றவர் பாதையை மறிப்பதற்கும் மற்றவர் வெற்றியைக் குலைப்பதற்குமென்றே இருப்பதைப் புலம் பெயர் மண்ணில் நம்மில் பலரும் கண்டிருப்போம். ஆனால் அவை காற்றுப் போன பலூன்களாக வந்த திசையே தெரியாமல் மறைந்தமையும் மறைந்து வருபமையும் இரகசியமா என்ன!

இது ஏன்? சுய பலம் அற்ற வேடம் பிறர் பலம் நாடி நின்றால், பிறர் பலம் தகரும்போது தானாகத் தகர்ந்து போகும் என்பதனால்தானே! இதைத்தான் சாதிக்கும் மனவுணர்வு நமக்குள் வந்தால் நாம் கண்டிப்பாகப் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நம்மால் நமக்காக நாம் பகிரும் நம் உழைப்பின் நன் விளைவுதான் நமது சாதனைகளின் அத்திவாரங்கள் என்பது நமக்குத் தெரிய வேண்டும்.
தனித்துவம் இல்லாதிருப்பவர் சாதனையில் நிழலிலும் நில்லார்.

நமது பணியில் நமது சிந்தையை முழுமைப்படுத்தி, ஈடுபடுத்தி பெறுகின்ற சிறுசிறு வெற்றிகளையும் அதையொப்ப பிறர் பணிகளின் மேன் நிலைகளையும் ஒப்பிட்டு, அதற்கான காரணிகளை வரையறுத்து, வகுத்து அறிந்து கொண்டு படிப்படியாக ஒவ்வொன்றாக வெல்ல முயன்று பார்த்தால்தான் கல் கற்சிலையென்பதும் மண்ணே மட்பாண்டமென்பதும் விறகினுள் நெருப்பிருப்பதும் நீரினுள் மினசக்தி இருப்பதும் புரியும். தெளிவாகும்.

புரியாத காரியம் விரிவாகாது. விரிவாகாத காரியம் வெற்றியைத் தராது.
ஒருவரின் சாத்தியம் மற்றவர்க்கு அசாத்தியம். ஒருவர்க்கு அசாத்தியம் மற்றவர்க்கு சாத்தியம்.

எல்லா சாதனைகளும் அறிந்ததில் புரிந்து, புரிந்ததில் தெளிந்து, தெளிந்ததில் தெரிந்து, தெரிந்ததில் முயன்று, முயன்றதில் தொடர்ந்து இயங்கி அடைவதுதான்.

இதை மனதில் வைத்து முயன்று பாருங்கள். வெற்றிக் கனியைப் பறித்து மகிழுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக