திங்கள், 17 செப்டம்பர், 2012

ஜயவேவா! ஜயவேவா!! (வெற்றி! வெற்றி!) (சிறுகதை)

1983-ம் ஆண்டு. புதிய லங்கா தகனம் ஆரம்பமாகியிருந்தது.

பட்டப்பகலின் பச்சை வெய்யிலுக்குப் போட்டியாக, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது இலங்கைத்தீவின் கொழும்பு மாநகரம்.

பலியாகப் போகின்ற ஆடுகள் பரிதவித்துக் கொண்டு தப்பிவிடப் பாய்ந்தோடுவதுபோல தமிழ் மக்கள் அன்றைய சிங்கள இனவெறிக்குத் தப்பித்துக் கொள்ளவென எங்கெங்கெல்லாமோ
எப்படியெப்படியெல்லாமோ மருண்டோடிக் கொண்டிருந்தார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்த மக்கள்  அடைக்கலம் தேடி, அங்கிங்கு ஓடி, பூனையின் கடிக்குப் பயந்து பதுங்கும் எலிகளென பதைபதைப்பொன்றையே தமது இதயத்துடிப்பாய் அனுபவித்துத் துடி துடித்துக் கொண்டிருந்தார்கள் அப்போது.

பாதிக்கப்படாத பகுதி மக்களோ கேள்விப்படும் வதந்திகளை நம்பிப் பதறுவதும் தாமே வதந்திகளைப் பரப்புவதுமாக பரபரப்பில் நிம்மதி தேடி அலைந்து கொண்டிருந்தார்கள்.

மனித நேயம் நசுக்கப்பட்டு, மிதிக்கப்பட்டுக் கொண்டிருந்த கொடிய நேரம் அது.

வழிந்தோடிக்கொண்டிருந்த தமிழர் இரத்தத்தினால் இலங்கையின் வரலாற்றுப் புத்தகத்தில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. அந்நூலின் ஓரங்களில் தீப்பிழம்புகள் தொற்றிக் கொண்டிருந்தன.

இலங்கைத் தமிழர்களின் தலைவிதிக்கே விலைவிதித்த  அந்த நாள் எரித்தழித்த அப்பாவித் தமிழ் உயிர்களின் கணக்கு சட்டபூர்வத்தை விட்டு விலகி வேறெங்கோ நீண்டுபோய்க் கொண்டிருந்தது.

கணக்கெடுப்பார் யார்?

இரக்கத்தை ஒதுக்கிவிட்டு கொலைகளில் குதூகலம் கொண்டலைந்த காடையர் கூட்டங்களுக்கு மட்டும்தானே அந்த உரிமை அப்போது இருந்தது?

செய்தால் அவர்கள் மட்டுமேதான் அதைச் செய்யவேண்டும் என்ற நிலைமையே எங்கும் பரவி இருந்ததனால் உண்மை என்பது ஊமையாகிவிட்டது ; நியாயங்கள் இருளுக்குள் அவர்களால் பதுக்கி வைக்கப்பட்டுவிட்டன.

அந்த நாட்களின் ஒவ்வொரு நிமிடத்துளியும் அங்கே எங்கோ ஓர் இடத்தில் தமிழரின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் மானத்துக்கும் மரணத்துக்கும் விலைவைத்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களின் ஆங்கார ஓங்கார அட்டகாசத்தினால் அதிர்ந்து தகர்ந்து கொண்டிருந்தது.

தலைநகரின் மேலே வானம் பெரும்பாலும் இருண்டே இருந்தது. அது கரிய மழை மேகங்களால் அல்ல சிங்களத் தீவைப்பின் கரும்புகை மண்டலத்தால்.

ஆம் பகைமையுணர்வும் பழிவாங்கும் எண்ணமும் வானையே இருள வைத்துக் கொண்டிருந்தன.

எங்கோ ஒரு தமிழரின் வீடோ கடையோ கொழுந்து விட்டெரியத் துவங்கியிருக்கிறது என்று ஒவ்வொரு புகை மண்டலத்தைக் கண்ட போதும் தமிழ் மக்கள் தங்களுக்குள் ஏதோ பெரிய கண்டுபிடிப்பைப் போல ஒருவர் மற்றவருக்குச் சொல்லிச் சொல்லித் தமக்குத் தெரியாத செய்தியை தமக்குப் புரியாத நிலையில் மற்றவர்க்குப் புரிய வைக்க முனைந்து கொண்டிருந்தார்கள்.

தந்திகளாய்ப் பரவிக் கொண்டிருந்தன வதந்திகள்.

பயம். பயம். பயம்.
அதுவொன்றே தமிழ் மக்களின் நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாக அப்போது அப்பட்டமாக எங்கும் படர்ந்து கொண்டிருந்தது.

ஒவ்வொருவரும் அதை உணர்ந்தேதான் இருந்தார்கள் என்றாலும் ஏனோ எதற்காகவோ அர்த்தமே இல்லாமல் அவர்கள் சிரித்தும்  பேசிக் கொண்டிருந்தார்கள்.

மனம் பதைக்கும் வேளைகளில் பொய்யாய்ச் சிரிப்பதிலும் ஓர் ஆறுதலைத் தேட விழையும் மனித பலவீனம்தான் என்ன?

தனது கடையில் பட்டறையில் அமர்ந்தவாறு அமலன் தனது பங்காளியான செல்வனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

"கோட்டையில் கலவரமாம். கடைகள் உடைக்கப்படுகின்றதாக எதிர்த்த கடையில் பேசிக் கொண்டார்கள். நாமும் மூடிவிட்டுப் போய்விடலாமா?"

அமலன் செல்வனைக் கேட்டான்.
செல்வன் சிரித்தார்.

"நிலைமை இன்னும் கட்டுமீறிப் போய்விடவில்லை. இந்த முஸ்லீம் காடையன்கள்தான் ஆங்காங்கே நிலைமையைப் பயன்படுத்திக் கடையுடைத்துக் கொள்ளையடிக்கிறான்களாம். புறக்கோட்டை பொலீசிலிருந்து போயிருக்கிறார்களாம். ஆகவே நிலைமை சரியாகிவிடும்."

எதிர்க்கடை ஓர் உணவகம். சரஸ்வதி கபே என்ற பெரிய அடையாளத்துடன் இருந்தது. அடிக்கடி அங்கேதான் தேநீர் ஆர்டர் கொடுப்பது வழக்கம்.

வழமைபோல அன்றும் டீ வரும்போது அமலனது நண்பன் ரகுநாதன் வந்து நுழைந்தான்.

அமலனின் மிக நெருங்கிய நண்பனவன். யாரிருந்தாலும் பார்க்க மாட்டான். 'டேய்' பாணியில்தான் பேசுவான்.

“என்னடா! ஊரே பற்றி எரியுது. இந்த வேளையிலேயும் என்னடா வியாபாரம் வேண்டியிருக்கு? கடையை மூடிவிட்டு வீட்டுக்குப் போய்த் தொலையாமல்.... இப்போது கோட்டை பகுதியில் பரவிவிட்டது. இன்னும் சில மணிக்குள் புறக்கோட்டை வரைக்கும் பரவி வரும். பேசாமல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குப் போகிற வேலையைப் பாருங்கள். உனக்குத் தெரியாது கலவரம் இந்தப்பக்கமும் திடீரென்று பரவிவிட்டால் அப்புறம் வீட்டுக்கு உயிரோடே போகமாட்டாய். கவனம்.”

அவன் குரலில் இனந்தெரியாத ஒருவித பதட்டம் இருந்தது. துணி மில் நடத்தும் முதலாளி அவன். எப்போதுமே ஒரு ராஜ கம்பீரத்தோடுதான் நடமாடுவான். தங்கமான குணம். எப்போதுமே  சிரித்த முகம்.

அமலனிடம் துணிகளுக்கான சாயம் மற்றும் இரசாயனப் பொருட்கள் வாங்குபவன். அவனால் நல்ல வருமானம்  இருந்தது. நல்ல நண்பன் மட்டுமல்ல நல்ல வாடிக்கையாளனும்கூட. வசதி மிக்கவனென்றாலும் இதயசுத்தியுடன் மற்றவர்க்குதவிடும் ஒரு நல்ல கொடையாளி.

ஒரு சமயம் அங்குள்ள மக்கள் மத்தியில் நடமாடும் தீய நோயான சீதனப் பிரியத்தால் மணமுடிக்க முடியாமல் தவித்த இளம் பெண்களைப் பற்றி அமலன் அவனுடன் பேசியபோது சந்தோஷமாகவும் தாராளமாகவும் அவன் உதவி செய்ய முன் வந்தான். அவனது உதவியால் பல குடும்பங்கள் வாழ்வு பெற்றிருந்தன.

தர்மம் இரகசியமாகவே இருக்க வேண்டும் என்று அமலன் அவனிடம் கேட்டுக் கொண்ட போது அந்த வார்த்தைகளை அவன் அப்படியே ஏற்றுக் கொண்டதுடன் அப்படியே கடைப்பிடித்தும் வந்தான்.

அவனால் கரையேறிய ஏழைக் கன்னிப் பெண்கள் பலருக்கும் கூட அவனால்தான் தங்களுக்கு நல்வாழ்வு கிடைத்தது என்ற உண்மை தெரியாது. அந்தளவிற்கு தர்மத்துக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்து வந்தான் அவன்.

அமலன் மணியைப் பார்த்தான். பத்தரை.

பங்காளியைப் பார்த்தான். அவர் வெளிறிப் போயிருந்தார்.

ஏன்?

கடையின் உட்பக்கத்திலிருந்து பேச்சு சப்தம் வந்து கொண்டிருந்தது.

அவர்களோடே உள்கடை வைத்திருந்தார் ஒரு சிங்களவர்.

இவர்களின் கடை சற்றுப் பெரிதாயிருந்ததால் உள்பகுதியில் ஒரு பக்கத்தை அவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள். எப்போதும் ஒரே புன்முறுவல் தவழும் முகம். மிகவும் நட்பாகப் பழகுபவர்.

அன்று அவரைத் தேடி வந்திருந்த அவரின் இன நண்பர்களுடன் அவர் அடுத்த அறையில் உரையாடிக் கொண்டிருந்தார்.

அந்தக் குழுவினரின் உரையாடல் சப்தம் தான் தனது பங்காளியை முகம் வெளிற வைத்திருக்கின்றது என்பது அமலனுக்குப் புரிய அதிக நேரம் எடுக்கவில்லை.

"யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று நமது ஆமியைக் கொன்றதற்கு நாம் பதின்மூவாயிரம் தமிழரை இங்கே கொல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தைத் தரை மட்டமாக்க வேண்டும்."

வெளிவந்த குரல்கள் கம்மியாக இருந்தனவே தவிர மிகவும் அழுத்தமாக இருந்தன.

அமலனும் பங்காளியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

பங்காளி வெள்ளவத்தையிலிருந்து வருபவர்.

அவரும் உட்கடைச் சிங்களவரும் சேர்ந்துதான் வழமையாக வெள்ளவத்தைக்கு அவரது வேனில் போவார்கள். இன்றும் போகவேண்டும் ஆனால்... இன்று அது சாத்தியமா?

ஆத்திரப்படுவதா?
தெரியவில்லை.

பயப்படுவதா?
புரியவில்லை.

ரகுநாதனின் முகத்தில் எச்சரிக்கையைக் குறிக்கும் முறைப்பு தெரிந்தது. வழமையாக வந்தால் பத்துப் பதினைந்து நிமிடங்களாவது அரட்டையடித்துவிட்டுச் செல்பவன் அன்று வழமைக்கு மாறாக வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டான். நாட்டின் நடப்பை அவன் உணர்ந்து நடந்து கொண்டது நன்றாகவே புரிந்தது அமலனுக்கு.

கடையை மூடிவிட முடிவெடுத்தவர்களாய் இருவரும் எழுந்து கொண்டார்கள்.

உட்கடை சிங்கள முதலாளியும் தமது பரிவாரம் புடை சூழ வந்தார். அவர்கள் விடைபெற்றுச் சென்று விட்டார்கள். அவரும் புறப்பட்டார். செல்வன் அவருடனேதான் போனார்.

இவர்களுடன் வழமைபோலவே புன்முறுவலுடன் பேசிய அவரை நம்பலாமோ இல்லையோ வேறு வழியே இல்லை என்ற நிலையில் பங்காளி அவருடன் அவருடைய வாகனத்தில் தொற்றிக் கொண்டார்.

கடையை மூடிவிட்டுப் புறப்பட்ட அமலன் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது மணி பகல் 12.30 ஆகிவிட்டது.

ஊரே அல்லோலகல்லோலப்பட்டாலும் நிதானம் தவறாதவன்போல அமைதியாக சாப்பாட்டு மேசைக்கு முன் அமர்ந்த போது அமலனின் வீட்டுத் தொலைபேசி திடீரென்று அலறியது.

"ஹலோ! யார் பேசுறது?"

"நான் பாய் பேசுறேன் தொறே"

எதிர்த்தரப்பில் கேட்டது. (வட இந்திய வியாபாரிகளைத்தான் பாய் என்பார்கள் கொழும்பில்)

அட.. நம் ரஹீம் பாய்.

"என்னா பாய். ஊரெல்லாம் ஒரே குழப்பமாயிருக்குது. இன்றைக்கும் டை வேணுமா?"

அமலன் ஜோக் அடித்தான்.

"இல்லே தொறே. ஒங்கட கூட்டாளி அவர்தான் மிஸ்டர் ரகுநாதன். அவரை சாவகாட்டிப் போட்டாங்களாம். கடைக்கு டெலிபோன் வந்துது. ஒங்களுக்கும் செய்தி கெடச்சதா?"

என்னது? கொலை செய்து விட்டார்களா?

அமலனுக்கு நெஞ்சுக்குள் பக்கென்று அடைத்தது.

"பாய்! என்னா கேலியா பண்ணுறீங்க. இப்ப ரெண்டு அவருக்கு முந்திதானே அவன் கடைக்கு வந்து பேசிக்கிட்டிருந்திட்டுப் போனான்? "

"ஐயோ தொறே. இப்ப ஒரு அவர் (மணி) முன்னாடிதான் நேவி கொண்ணு போட்டுதாம்."

அமலனின் உடம்பு கிடுகிடுவென நடுங்கத் தொடங்கியது.

பாய்க்குப் பிறகு எடுப்பதாகக் கூறிவிட்டுப் போனை வைத்தவன் தனது நண்பர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு விசாரித்தான்.

ரகுநாதனின் வீட்டுத் தொலைபேசி இயங்குவதாகத் தெரியவில்லை. எடுத்தவர்களில் பலருக்கும் விபரங்களேதும் தெரியவில்லை.

கடைசியாக இன்னொரு நண்பரின் தொலைபேசி அவனுக்கு வந்தது. அவர் அவனுக்கு அச்செய்தியைத் தெரிவிக்கவே தான் எடுத்ததாகச் கூறி அவனது சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார்.

அவர் சொன்ன விபரத்தை அமலனின் மனம் போனை வைத்தபின் மீண்டும் அசைபோட்டு முழுமையான செய்தியாக வடிவமைக்க முற்பட்டது.

பசாரிலிருந்து வீட்டுக்கு வந்த பிற்பாடு பகலுணவுக்கு தயாரான ரகுநாதன் சிறிது விஸ்கியை அருந்திவிட்டு உணவு வரும்வரை தொலைக்காட்சியில் ஏதாவது விசேஷ செய்தி வருமா என்று அவதானித்துக் கொண்டு முன் வரவேறையில் அமர்ந்திருந்திருக்கிறான்.

அப்போது திடீரென்று வெளிப்பக்கத்திpல் சனங்கள் பதறி ஓடும் சப்தம் பலமாகக் கேட்கவே கதவைத் திறந்து பார்த்திருக்கிறான்.

அவ்வேளையில் ஓடிவந்த சிலர் அடுத்த தெருவிலிருந்து சிங்களக் காடையர் கூட்டமொன்று தமிழர் வீடுகளையும் கடைகளையும் ஆட்களையும் தாக்கியவாறே வந்து கொண்டிருப்பதாகச் கூறியிருக்கிறார்கள்.

அந்த இடம் தொண்ணூறு வீதம் தமிழர் மட்டுமே வாழுமிடம். அதற்குள் நுழைந்து வாலாட்ட விடுவதா என்று இவன் கொதிக்கவே வந்தவர்கள் சிலரும் சேர்ந்து திருப்பி அடிக்க முடிவெடுத்து விட்டார்கள்.

ரகுநாதன் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே வரவும் ஒரு பெரும் காடையர் கூட்டம் எதிர்த் திசையிலிருந்து ஓடி வரவும் சரியாயிருந்திருக்கிறது.

ரகுநாதன் தனது துப்பாக்கியினால் ஒரு தடவை சுட்டிருக்கிறான். அந்தச் சத்தத்தில் வந்த கூட்டம் திரும்பி ஓட இவன் பக்கத்திலிருந்த கூட்டம் உற்சாகமாகக் கத்திக்கொண்டு அவர்களைத் துரத்திக் கொண்டோடத் துவங்கியிருக்கிறது.

இதனால் சற்று குஷியாகி இவனும் மீண்டும் சுட்டவாறே அவர்களைத் துரத்தியிருக்கிறான்.

யாரோ ஒருவனின் காலில் சூடுபட்டு விட்டிருக்கிறது. அவன் சுருண்டு விழுந்து விட்டான்.

இரத்தம் வழியக் கிடந்த அவனைச் சிலர் தூக்க முயன்று கொண்டிருந்த வேளையில் ஒரு ஜீப்பில் நேவிக்காரர்கள் வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

அவர்களின் விசாரணையில் தமிழரால் சிங்களவர்கள் தாக்கப்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழர் நிறைந்த பகுதியாக இருக்கலாம். அதற்காக?
தமிழன் சிங்களவனைத் தாக்க அனுமதிக்க முடியுமா?

உடனே அந்த ஜீப்பின் தலைமையில் காடையர் கூட்டம் திரும்பி வந்திருக்கின்றது.

ஜீப்பின் வரவைக் கண்டதும் இவனைச் சுற்றி நின்ற கூட்டமெல்லாம் ஓடிவிட்டது. அவர்கள் சுட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இவன் வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திவிட்டு எல்லாரையும் பின்பக்கத்தால் ஓடச் சொல்லவும் வீட்டுக்குள் சரமாறியாகத் துப்பாக்கிச் சன்னங்கள் பாயவும் சரியாயிருந்திருக்கிறது.

பெண்கள் குழந்தைகளெல்லாம் பின்பக்கத்தால் பக்கத்து வீட்டுக்குள் ஓடிவிட, வீடு உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

இவன் தப்பியோட வேறு வழிதெரியாமல் மாடிக்கு ஓடி சன்னலால் அடுத்த தெருவுக்கு இறங்க முயன்றபோது குறுக்கே தொங்கிக் கொண்டிருந்த தொலை பேசிக் கம்பியில் கால் மாட்டிக் கொள்ள அப்படியே கீழே விழுந்துவிட்டான்.

நேவி ஜீப் சில யார் தூரத்துக்கப்பால் நின்று கொண்டிருந்திருக்கிறது. காடையர் கூட்டம் “அதோ அவன்தான்” என்று கத்தியிருக்கிறது.

அவ்வளவுதான்.
“போய்க் கொல்லுங்கள்” என்று கூறிவிட்டு நேவி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க, கம்பிகளாலும் தடிகளாலும் கைகால்களாலும் விழுந்து கிடந்த ரகுநாதனை அடித்துத் துவைத்து அட்டகாசம் செய்திருக்கிறது காடையர் கூட்டம்.

இறந்து விட்டான் என்று அவர்கள் நினைத்து ஜீப்புக்குள் இழுத்துப் போட்டபோது, ரகுநாதன் இன்னும் இறக்கவில்லை என்று தெரிந்திருக்கிறது.

"டுமீல்"

அவனது முடிவை ஓர் இராணுத்தினனின் துப்பாக்கி உறுதி செய்த பிறகு ஜீப் பிணத்துடன் பறந்திருக்கிறது.

அதன் பிற்பாடு அவனது சகோதரர்களும் பிடித்துச் செல்லப்பட்டார்களாம்.

தான் கேள்விப்பட்ட செய்தியின் சாராம்சத்தைத் தனது மனைவிக்குத் தெளிவுபடுத்தியபின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த அமலனுக்கு நெஞ்சுக்குள் அடக்கிக் கொள்ளவே முடியாத பெருங்கவலையும் இனந்தெரியாத ஆத்திர உணர்வுமாக பெரும் பதைபதைப்பாக இருந்து கொண்டிருந்தது.

தனது மனைவியுடன் தனது நண்பனைப் பற்றிச்  சொல்லச் சொல்ல அவனது இதயம் படபடத்தது.

எத்தனை நல்ல காரியங்களுக்கெல்லாம் முன்னின்று உதவி செய்தவன்? தான் செயலாளனாகப் பணியாற்றும் ஒரு சங்கத்தின் சார்பாக ஏழைகளுக்கு இலவசமாகப் பால் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்த அமலன் முனைந்தபோது அவன்தானே தனது அரசியல்கட்சி அறிமுகத்தைப் பயன்படுத்தி மேலிட அனுசரணையைப் பெற்றுத் தந்து அதை வெற்றிகரமாக நடத்த வழி செய்து தந்தான்?

எல்லாவற்றுக்கும் மேலாக  இந்தக் கொலை எந்த ஆட்சியில் நடந்திருக்கின்றதோ அந்த கட்சிக்காகத்தானே அவன் முன்னின்று தேர்தலில் வேலை செய்தான்?

தான் அந்தக் கட்சியின் ஆதரவாளன் என்பதை மறைக்காமல் பெருமையுடன் சொல்லிக் கொண்டவன். அந்தக் கட்சி வேட்பாளர்களுக்கெல்லாம் மாலை சூட்டி மரியாதை செய்வதிலும் மற்றவர்களைத் தூண்டி செய்விப்பதிலும் அவன் தனது நாட்டுக்காக ஏதோ பெரிய சேவை செய்வதாகக் கூட நம்பிக்கொண்டிருந்தானே!

ஒரே நொடிக்குள் அவன் தெரிவு செய்த ஆட்சியின் கீழேயே அவனது ஆவி அடக்கப்பட்டுப் போயிற்றே! என்று அமலன் தணலில் விழுந்துவிட்ட புழுப்போல மனதுக்குள் புலம்பித் துடித்துக் கொண்டிருந்தான்.

தொலைபேசி மீண்டும் அழைத்தது.

"இருபத்திநான்கு மணிநேர ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறதாம். உடனடியாக வாங்க வேண்டியதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்."

மறு பக்கத்திலிருந்து அமலனின் அக்காதான் பேசினாள்.

அமலன் தனக்குத் தெரிந்த சில கடைகளுக்குப் போன் செய்து விட்டு அதற்குமேல் எதைச் செய்வதென்றுகூட புரியாதவனாக பத்திரிகையை எடுத்துக்கொண்டு அமர்ந்து கொண்டான்.

கண்கள் வாசித்தன. ஆனால் தலைக்குள் எதுவுமே ஏறுவதாகத் தெரியவில்லை.

சூழ்நிலையின் தாக்கந்தான் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கப் பார்க்கின்றது என்பதை நினைக்க நினைக்க அவனுக்குள் இலேசான சிரிப்பும் எழுந்தது.

வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தமிழர்களை ஏதோ கிள்ளுக்கீரைகள் போலவும் வந்தேறு குடிகளெனவும் தமது இனத்துக்கு உண்மையான எதிரிகள் அவர்கள்தான் எனவும் அவர்களுக்கு எது தேவையோ அதுதான்  சரியாக வழங்கப்படுகின்றது எனவும் தம்மின மக்களுக்குத் திரும்பத் திரும்ப இனத்துவேஷ உரையாற்றி எரியும் இல்லத்துள் எண்ணெய்யை ஊற்றிவிடும் பாதகத்தை அமைச்சர்களும் சனாதிபதியுமே செய்து கொண்டிருந்தமை தமிழ் மக்களை உயிரோடு சாகடித்துக் கொண்டிருந்தது.

பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மரண அழைப்பிதழை அரசாங்கமே அனுப்பிக் கொண்டிருந்தது அந்த அவலமான நாட்களில் எனலாம்.

காக்க வேண்டியவர்களே மூட வேண்டிய கதவுகளைத் திறந்து விட்டுக் கொண்டிருந்தார்கள்.

தமிழர்களைக் கொல்வதும் கொள்ளையடிப்பதும் பௌத்த தர்மம்தானென சிங்களம் பௌத்தம் அதர்ம இலக்கணம் எழுதிக் கொண்டிருந்தது.

வானொலி முழு நேர ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதாக அறிவித்து இரண்டு மணித்தியாலங்கள் கடந்திருக்கும்.

அமலனின் வீட்டுக்குச் சில வீடுகள் தள்ளியிருந்த ஒரு வீட்டிலிருந்து திடீரென்று ஓலம் எழுந்தது.

சன்னலால் வெளியில் எட்டிப்பார்த்தான் அமலன்.

பாதை வெறிச்சோடிக் கிடந்தது. ஆமி நடமாட்டமும் இல்லை. இதற்கிடையில் அவன் வீட்டு மணியை யாரோ அழுத்தவே கதவைத் திறந்தானவன்.

அட, நம் ரமணிப்பாட்டி!

"என்னா பாட்டி இந்த நேரத்திலே? முதலில் உள்ளே வாருங்கள்."

அமலன் கதவைத் திறந்து வழி விட்டான். உள்ளே நுழைந்த பாட்டி மடமடவென்று அழத் தொடங்கிவிட்டாள்.

“ஐயோ தம்பி  அந்த  சுதர்சனாவோட மகளுக்கு ரொம்பவும் சொகமில்லாமே போயிருக்கு தம்பி. ஜன்னி கண்டாற்போலே வேறே இருக்குது. எப்படியாவது டாக்டர் கிட்ட கொண்டு போக உதவி செய்யுங்க தம்பி."

அமலனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்ன செய்வதென்றும் புரியவில்லை.

"பாட்டி... வந்து..."

“தம்பி கடவுள் ஒரு ஆபத்தும் வராம ஒங்களக் காப்பாத்துவார் தம்பி. சத்தியமா நான் சொல்றேன்.” 

பாட்டி அமலனின் கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சினாள்.

“தயவு செஞ்சு ஒதவி செய்யுங்க தம்பி. இல்லேன்னா அந்தப் பொண்ணு செத்தே போயிடும் தம்பி."

மளமளவென்று வழிந்தோடும் கண்ணீரைத் தன் சேலை முந்தானையால் பாட்டி துடைத்துக் கொண்டபோது அமலனின் மனைவி வந்து குறுக்கிட்டாள்.

"உங்களுக்குப் போலீசில் இன்ஃபுளுவன்ஸ் உண்டுதானே! ஏதாவது செய்யப் பாருங்களேன்! இதுவே உங்க சொந்த தங்கச்சியாயிருந்தா நாம பார்த்துக் கிட்டிருப்போமா? ஏதாவது செய்யத்தானே செய்வோம்?"

உலகம் தெரியாத அவளிடம் ஊர் நிலவரத்தைப்பற்றிய உன் அறிவு இவ்வளவுதானா என்று கேள்வி கேட்கிற நேரமா அது?

பாட்டி நன்றியோடே தன் மனைவியைப் பார்ப்பதைக் கண்டதும் வேறு வழி தெரியவில்லை அமலனுக்கு.

அடுத்த தெருவிலிருந்த ஜமுனா ஸ்டோர்ஸ் முதலாளி சங்கரப்பிள்ளைக்குப் போனெடுத்தான். தமது காரை உடனே அனுப்புவதாகவும் கடைப்பையனைத் துணைக்கனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்ல மனித இதயங்கள் எங்கேயும் இருக்கத்தான் செய்கின்றன.

டாக்டர் குகராஜன் அவனது நண்பர். எனவே அவருக்கு, அவரது வீட்டுக்கு எடுத்தான். உடனே அவர் வரும்படி சொன்னார். ஆனால் அவரது குரலில் ஒருவித நடுக்கமிருப்பதை அவனால் உணர முடிந்தது.

"என்ன டாக்டர் ஏதாவது பிரச்சினையா?"

"நேரில் நாம் பேசிக்கொள்வோம்."

டாக்டர் போனை வைத்துவிட்டார்.அதே சமயம் அமலன் வீட்டு மணி மீண்டும் அடித்தது. கார் வந்திருந்தது. கடைப்பையனே ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.

பாட்டியை வீட்டிலேயே இருந்து கொள்ளும்படி சொல்லிவிட்டு சுதர்சனாவின் வீட்டுக்குப் போனான்.

சுதர்சனா ஒரு விதவை. அவளது கணவரும் ஒரு வர்த்தகர்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்துவிட்டார். அவருக்குப்பின் அவரது மூத்த மகள்தான் கடையை நடத்தி  வந்தாள். இரண்டாவது மகளுக்குத்தான் சுகமில்லை என்று தெரிந்தது.

அதிகம் பேசிக்கழிக்கும் நேரமல்ல அது என்பதால் முக்கிய விபரங்களை மட்டும் தெரிந்து கொண்டு பிள்ளையையும் தாயையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.

போலிஸ்  நிலையத்தில் அவனுக்குத் தெரிந்த முகங்களே இருந்தன.
விஷயத்தை விளக்கிக் கூறிவிட்டு ஒரு பாஸ் வேண்டும் எனக் கேட்டான்.

அது முக்கியமல்லவென்றும் வழியில் நிறுத்தப்பட்டால் தமது ஸ்டேஷனைச் சொன்னால் போதும் என்றும் திரும்பி வந்ததும் ஒரு தடவை தெரிவித்துவிட்டால் போதும் எனவும் பதில் வந்தது.

நம்பிப் போகவே அச்சமாயிருந்தது. என்றாலும் வேறு வழியும் தெரியவில்லை.

வண்டி புறப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக வழி முழுவதும் இடைஞ்சலேதும் இருக்கவில்லை.

டாக்டர் குகராஜனின் வீட்டு கேற் திறந்தபடியே இருந்தது. வாகனத்தை உள்ளே செலுத்தி நிறுத்தியதும் அமலன் விடுவிடென்று அவர் வீட்டுக்குள் நுழைந்தான்.

உள்ளே...
இருபதுக்கு மேற்பட்ட நோயாளிகள். அத்தனை பேர் கைகளிலும் கால்களிலும் பலவிதமான காயங்கள். டாக்டர் மருந்து போட்டுக் கொண்டிருந்தார்.

அவதானித்தான் அமலன். அத்தனைபேரும் சிங்களவர்கள். அந்த வட்டாரத்திலுள்ள வீடுகளை உடைத்துத் தகர்த்துக் கொள்ளையிட்டவர்கள். அவர்களின் காயங்களுக்குத்தான் அவர் மருந்து போட்டுக் கொணடிருந்தார்.

அமலனைக் கண்டதும் சிலரின் கண்கள் தீவிரமடைந்தன.
அமலனின் மூளையும் சுறுசுறுப்படைந்தது. அவர்களில் ஒருவனை நெருங்கினான்.

"மல்லி! சரத் இன்னவாத?" (தம்பி சரத் இருக்கிறானா?)
சடக் கென்று திரும்பிய அவன் கேட்டான்.

"சரத் ஒயாட்ட கவுத?" (சரத் உமக்கு யார்?)

"மம சரத்கே மாஸ்டர். எயாட்ட பொட்டக் கத்தாகொராண்ட புலுவாந்த?" (நான் சரத்தின் ஆசிரியர். அவனைக் கொஞ்சம் அழைக்க முடியுமா?)

அமலனின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது.

"மம சரத்கே மஸ்ஸினா. மஹாத்தயா மே என்ட" (நான் சரத்தின் மைத்துனன். ஐயா இந்தப் பக்கம்  வாருங்கள்.)

அவன்தான் அந்தக் கூட்டத்தையே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

சரத் அவ்வட்டாரத்தின் பிரபல சண்டியனின் மகன். அமலன் படித்து முடித்த புதிதில்  சிலகாலம் ஆங்கிலம் படிப்பித்ததுண்டு. அந்த நாட்களில் அந்த சரத் அவனிடம் பாடம் கற்றிருந்தான். அதுவே அங்கே அவனுக்கு உதவி செய்தது.

மடமடவென்று இவன் கொண்டு சென்றிருந்த நோயாளிக்கான சிகிச்சை நடந்து முடிந்தது.

டாக்டர் அமலனிடம் குசுகுசுத்தார்.

"மிஸ்டர் அமலன் எப்படியாவது என்னையும் எனது குடும்பத்தையும் இங்கிருந்து அழைத்துச் சென்றுவிட முடியுமா?"

அமலன் அவர் முகத்தைக் கூர்ந்து அவதானித்தான். மிகவும் குறைந்த தொனியில் அவர் பேசினார். ஆழ் கிணற்றினடியிலிருந்து எழும் எதிரொலி போல ஒலித்தது அவரது குரல்.

"எனது மகள் மிகவும் பயந்துபோய்க் கடும் சுகவீனமுற்றிருக்கிறாள். இங்கு வைத்து அவளை என்னால் கவனிக்க முடியாது. மருந்துகள் முடிந்து கொண்;டு வருகின்றன. இவன்களுக்கு நான்  தேவை என்பதால் மட்டுமே வைத்திருக்கிறான்கள். மருந்துகள் முடிந்ததும்...."

அமலனின் கரத்தை அவர் பிடித்துக் கொண்டார். பிடித்த வேகத்திலேயே எடுத்தும் கொண்டார். மற்றவர்கள் கவனித்து விடக்கூடாதே என்ற ஆதங்கம் அவரது செயலில் இருந்தது. அவரது கரங்களும்... ஏன் முழு உடம்புமே கடகடவென்று நடுங்கத் தொடங்குவது தெரிந்தது.

என்ன செய்யலாம்?

சிந்திக்க நேரமில்லை. மடமடவென்று மூளை இயங்கி உதவி செய்தது.

சரத்தின் மச்சானான சண்டியனை அழைத்தான் அமலன். மருந்துகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அதனால் உடனே தமது மருத்துவமனைக்குப் போய் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வரவிருப்பதாகவும் அதுவரை வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை (திறப்பை) அவனிடம் தந்து செல்வதாகவும் வீட்டைத் திரும்பி டாக்டர் வரும்வரை பார்த்துக் கொள்ள முடியுமா என்றும் கேட்டான். அவன் உடனே சம்மதித்து விட்டான்.

அதிர்ஷ்டம்தான்.

உடுத்த உடையுடன் மனைவியையும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு தமது காருக்கு டாக்டரை விரையச் சொன்னான் அமலன். தொடர்ந்து  மற்றவர்களுடன் அவன் புறப்பட்டான்.

டாக்டருக்கு அவரது கிளை மருத்துவமனைக்கு அருகிலேயே இன்னொரு வீடு இருந்தது. அதை நம்பித்தான் அவர் புறப்பட்டார்.

டாக்டரின் வண்டி முன்னே போக, அமலனின் வாகனம் பின் தொடர்ந்தது.

வண்டிகள் சந்தியில் திரும்பிய போது...

இராணுவ ஜீப்பொன்று...

"ஜயவேவா... ஜயவேவா“

அமலன் உரத்துக் கத்தினான். அவர்கள் கையசைத்தது தெரிந்தது.

ஆபத்துக்குப் பாவமில்லை என்பார்களே.. அது இதுதானோ?
தெரியவில்லை.

பாவந்தானில்லை. போகட்டும்.  மானம்?

தமிழனைக் கொல்லவும் குதறவும் ஒத்துழைத்து ஒத்தோடும் இராணுவத்துக்குப் பச்சைக் கொடி காட்டித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருப்பதை எண்ணியபோது அமலனுக்கு அவமானத்தால் தன் மேலேயே ஒருவித வெறுப்பு எழுந்தது.

அதே சமயம்.... இன்னுமொரு இராணுவ வாகனம் நகர்ந்து வந்து கொண்டிருந்தது.

அமலன் என்ற அந்த நடைப்பிணம் தற்காப்புக்காகத் தன் வெட்கத்தை மறந்து மீண்டும் அதே உத்வேகத்துடன் கத்தியது.

"ஜயவேவா!  ஜயவேவா!"

இராணுவ வீரர்கள் அவனைப் பார்த்து முறுவலித்தார்கள்.
அமலனது முகம் பதிலுக்குச் சிரித்துக் கொண்டிருந்தது. உண்மையாகவா?

மனம் கூனிக் குறுகிக் கொண்டிருந்தது.
தன்மானம் அவனைப் பார்த்துக் கெக்கலித்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

டாக்டரின் வீட்டருகிலிருந்து ஒரு பெரிய சிங்களக் கூட்டம் கத்தியது:

"ஜயவேவா! ஜயவேவா!"

தலைகுனிந்தவாறே பயணித்துக் கொண்டிருந்த தமிழ் நடைப்பிணங்களின் வாகனங்கள் வேகமாக தத்தம் திசைகளை நோக்கி பயந்தவாறே ஓடிக் கொண்டிருந்தன.
     
        தாய் மண்ணில் நின்றிருந்தும் தாய் மொழியில் பேச அஞ்சித்
        தாய் மொழியை அழிப்பவனை "வாழ்க நீ!“ என்று சொல்லி
        தன்னுயிரைக் காத்திடுமோர் இழிய நிலை வந்ததென்ன?
        தன்னுரிமை இல்லாமல் தலைகுனிந்தே நின்றதென்ன?
      
        பொன் பொருளால் சேராத நன்னுயிரின் பெறுமதியை
        இன்றெடுத்தே அழித்திடுவோம் என்று அவன் வருகையிலே
        தன்னுணர்வே அற்றவராய் அன்னியராய்ப்பொய் புகன்று
        தன்னுயிரைக் காத்துவிட்ட இழிவு மனம் கண்டதென்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக