சனி, 4 ஆகஸ்ட், 2012

தளத்தைத் தகர்த்தால் குழிக்குள் விழுவோம்

ப்பலொன்று நடுக்கடலில் ஓடுகின்ற போது
   பயணிகளின் மகிழ்ச்சியதன் அடிப்படையில் அந்தக்
கப்பலதன் மாலுமியின் கடமையதன் சீர்மை
   பக்குவமாய் அதற்குதவி செய்வதுதான் உண்மை
எப்பொழுதும் நம்நிலையின் ஏற்ற இறக்கம் தன்னில்
   எது எதற்கு எப்படியெனும் இலக்கணத்தி னோடு
எப்பொழுதும் நமைநடத்தும் சக்தியொன்று உண்டு
   எள்ளளவும் பிசகிடாத இயற்கையதன் பங்கு.

சுயபலமாய் இவ்வுலகில் எதுவும் நடப்ப தில்லை
   சுதந்திரமாய் நமைஇயக்கும் சக்தி அதைச் செய்யும்
நடந்தவையும் நடப்பவையும் நடக்கவிருப்ப வையும்
   நமைக்கடந்து நம்மை வைத்து நம்மை நடத்திச் செல்லும்
இடமதனின் இயற்கைச்சூழல் வித்தியாசம் ஏற்ப
   இயற்கையது நமது நிறம், உடலமைப்பை மாற்றும்
உடலமைப்பை வைத்துஏற்றத் தாழ்வு சொல்லும் மூடர்
   உண்மையதன் உட்கருத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீரும் காற்றும் நெருப்பும் இன்றி வாழ்வுஎன்ப தில்லை
   மீறி அவை சினந்தெழுந்தால் வாழ்வேநமக்கு இல்லை
சீறுமட்டும் உயிர்களுக்கு இயற்கை உற்ற நண்பன்
   சிறுமதியால் சீண்டிவிடின் ஆகுமது பகைவன்
சிறுதுளியாய் நீரதற்கும் சிறுதுகளாய் மணலதற்கும்
   சித்திரமாய் அடிப்படையில் இயற்கை நோக்கமுண்டு
விருப்பமதற் கேற்பஅதனை மாற்றி, மீறி நடப்பின்
    விரும்பத்தகா விளைவுகளை வலிந்திழுத்து  அழுவோம்

விதிமுறையாய் அமைந்திருக்கும் அனைத்தினெதிர் நிலையில்
    விரைந்தியற்கை வென்றிடவே முயலுகின்ற தவறாய்
சதிவழியாய் விஞ்ஞானம் விழைவததன் விளைவே
    சடுதியதாய் சூழலதன் போக்கில் தோன்றும் மாற்றம்
பனிநிறைந்த துருவபுறம் படிப்படியாய் உருக
    இனியுமிலை எனுமளவில் உயிரினங்கள் அருக
துணிந்தினியும் மனிதஇனம் திருந்திடலைத் தவிர்த்தால்
    துணிக்கைகளாய் அனைத்துயிரும் சிதைந்தழிதல் நடக்கும்

பயமதனைத் தரும் விதத்தில் பணபலத்தை வகுக்கின்
    படுகொலைகள் அதிகரிக்கும் சூழ்நிலைகள் பிறக்கும்
கயமைமிகு வல்லரசார் கூட்டங்களின் சதியால்
    யுத்தங்களும் கடத்தல்களும் கொடுமைநிறை நிலையில்
பெயரளவில் சனநாயகம் என்று தீமை வளர
    இயற்கையதைப் பயன்படுத்தும் பிழைவிதங்கள் பலுகி
இயற்கையதை இயக்குபவன் வெகுண்டு எழும் விதத்தில்
   இயங்குதலைத் தடுக்கும்வழி இயற்கைதனை மதித்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக