வெள்ளி, 20 நவம்பர், 2015

    நம்பித் தயங்குதலும் ஆபத்தே!



Image result for suspicious minds



எத்தனை தடவைதான் இனிப்பினைச் சேர்த்தாலும்
எத்தனை அளவினிலும் பலசுவைகள் சேர்த்தாலும்
அத்தனை சுவைகளையும் விஞ்சிஉயிர் தனைபறிக்கும்
அத்தனைச் சுவைகளுக்குள் சிறிதளவும் நஞ்சிருந்தால்

இனிமையான வார்த்தைகளால் வர்ணித்தால், பரிந்துரைத்தால்
இனியுமிலை யெனுமளவில் சலுகைகளை அனுமதித்தால்
இனிநமக்குத் துன்பமிலை எனநினைக்கும் மூடமனம்
இனிஇலையாய் தமதுஇனம் இழிந்துவிடும், உணரல்நலம்

தமதுரிமை தாம்விழைதல் மனிதர்களின் இயல்உரிமை
தமதுஇனம் மட்டுமெனத் தலைதெறித்தல் இயல்பின்குறை
தமதுஎனும் சுயநலத்தை மறைக்கும் வழி தொடர்நிலைமை
தமதுகுறி தனைத்தவறாய் பிறர்விளங்கிடச் செய்கயமை

சிந்தனைகள் திசைதிரும்பும் சரிவழியில் மனம்தளர்ந்தால்
சிந்தனைக்குள் சரிபிழைபோல் தளம்பல்வரும் அறிவகன்றால்
நண்பர்போலும் நல்லவராய்க் காட்டிக்கொண்டும் வரும்கயவர்
நம்பிக் காட்டிக் கொடுப்பதற்கும் நெஞ்சம்நாடும் சுயமிழந்தால்

ஓடுகின்ற ஓடைநீரை நம்பிஅள்ளிக் குடித்திடலாம்
ஓடுகின்ற சாக்கடைக்குள் அள்ளிஎதை அருந்திடலாம்?
ஆடுபோல கத்திஓநாய் நெருங்குகையில் அதன்குரலை
தேடுதற்குக் கூடநம்பின் ஆடுஉயிர் தப்பிடுமா?

24 July 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக