வியாழன், 14 மார்ச், 2013

சிந்தனைக் கூறுகாய் 10

                                                          See full size image


91. அதிர்வே இல்லாத இதமான வாழ்க்கைக்கு முதன்முதல் நல்லவழி
  எதிர்பார்ப்பை முன்வைத்து நட்புறவுகொள்ளாமை என்கின்ற நல்லவழி.

92. முத்தோடு முத்தாகக் கலந்துள்ள போலிகளை தரம்தேர்வோர்  
   கண்டுகொள்வார்
   பத்தோடே பதினொன்றாய் பழகவரும் போலியரை அனுபவங்கள்  
   காட்டித்தரும்.

93. தற்காப்பை எண்ணாமல் வேட்டைக்குக் கிளம்புபவன் ஆபத்தில் 
   சிக்கல்கூடும்
   கற்காமல் பயிலாமல் தேறாமல் முயற்சியில் இறங்குபவர் தோற்றல் 
   கூடும்.

94. மலையுச்சி அடைந்தபின் வெற்றியில் துள்ளுவோர் வழுக்கிவீழ் 
   ஆபத்துண்டு
   தலைக்கனம் கொண்டுதுள் அற்பர்கள் அருகில்தான் தோல்விக்குப்  
   படிகளுண்டு.

95. உடலிலே சுத்தமும் உள்ளத்துள் அசுத்தமும் கொண்டவர் உலகில் 
   கோடி
   உணராமல் அவர்நாடி உள்ளதும் உள்ளமும் நைந்தவர் அதிலும்கோடி.

96. முழுமையாய் உணராமல் செய்தியாய்ச் சொல்கையில் அதன்பெயர்
   வதந்தியாகும்
       முழுமையாய் உணராது தடுத்துண்மை மக்களை ஆள்தலே அரசியல் 
       கலையாகும்.

97.  பிழைசெய்யும் கள்வரின் கண்ணுக்கு எப்போதும் என்றைக்கும் நீதிதான் 
      பெரிய தீது
       பிழைசெய்யா மனிதர்க்கு அதனாலேதானவர் செய்கிறார் என்றும்தீது.


98.  மீன்நாற்றம் பழக்கத்தால் மீன்விற்போன் நாசிக்குப் புரியாது; பழகிப்போகும்
        வீண்நாட்டம் தீயவை தெரியாமல்நாடிடத் தவறாது செய்துபோடும்.

99.  இயலாத நிலையிலும் முயன்றுநாம் பிறர்நன்மை பெறற்காகச் செய்யும்   
       தர்மம்.
       இமயம்போல் பின்னாளில் ஆபத்தில் நமைக்காக்கும் கவசமாய்த்
      துணைக்கு நிற்கும்.

100. ஏற்றதை எதுவென்று உணராது உழைப்பதால் வெற்றிக்கு உறுதிஇல்லை.
         கற்றதில் வழிகண்டு உழைத்திடில் எவருக்கும் எதிலுமே தோல்வி
        இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக