திங்கள், 25 மார்ச், 2013

சிந்தனைக் கூறுகாய் 14




                                                               






131.ஏமாளி யாகநாம் இருக்கின்ற வரைக்குமே தெரிந்தெம்மை ஏய்த்து நிற்பார்
       நாமாக நம்தன்மை சரியாக உணர்ந்திடில் எதிரியும் மதித்து நிற்பார்

132.நாளைக்கும் சாவரும் இன்றைக்கும் சாவரும் வாழ்கையவாழ்ந்து                 கொள்வோம்
      நாளைக்கு வரவுள்ள சந்ததிக் குதவிடற் கெதுநன்று என்று செய்வோம்

133.எல்லாமும் தெரிந்தவன் எனவெந்த மனிதனும் உலகிலேஎங்குமில்லை       
இல்லையே தெரியாமல் ஒன்றுமே என்றுமே எவனுமே உலகிலில்லை

134.புல்தின்று பலம் கொள்ளும் குதிரையை நம்பிநாம் புல்தின்று பலம்வராது
சொல், செயல், ஆற்றலில் பிறர் தொற்றி நடிப்பதால் சுயபலம் வளர்ந்திடாது

135.பொய்யென்றும் மெய்யென்றும் வாதிட்டுத் தவிப்பதால் உண்மைக்கு ஒன்றுமில்லை
செய்வினை தொடர்ந்துநம் வாதைக்கும் நன்மைக்கும் செயற்கேற்ப பயன்தரும் பொய்யுமில்லை.

136.அருகிலே இருந்தாலும் அறிவிலார் நல்லதை அடையாளம் காணமாட்டார்
பெருமையைப் போலியில் தேடியே அலைவதால் அறிவாலும் உயரமாட்டார்

137.தரையிலே வாத்துடன் கோழியும் சமமாக இரைதேடல் நீரிலும் சரியாகுமா?
தரணியில் மனிதரின் சமத்துவம் தகுதியில் தகைமையில் வேறன்று!  தவறாகுமா?

138.கடன்வாங்கும் முன்பதாய்த் திருப்பிக் கொடுப்பதைத் திட்டத்தில் வைக்கவேண்டும்
கடன்தந்தார் மனம்புண்ப டாவண்ணம் நாணயம் காத்ததைச் செலுத்த வேண்டும்

139.அழகதை நம்பியே கடதாசிக் கப்பலில் கடலேறத் துணிபவர் யார்?
அழகாகப் பேசினார் என்பதை வைத்துத் தம் இரகசியம் பகிர்பவர் யார்?

140.அழகான இயற்கையின் காட்சிகள் வானத்தில் நிலையில்லை என்னத்திற்காய்?
அழகது இதயத்தின் தெளிவதே! மற்றவை இலையென்று உணர்த்துதற்காய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக