சனி, 23 மார்ச், 2013

இறைவனும் மதங்களும்






இன்றைய உலக அமைதியின்மைகளுக்கான காரணங்களில் மதபேதங்களுக்கே பெரும் பங்கு இருப்பதுதான், நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டேயாக  வேண்டிய கருத்தாக வளர்ந்து கொண்டு வருகின்றது.


மனப்பயம் உருவாக்கிய ஒரு நம்பிக்கை,
 

அந்த நம்பிக்கை ஓர் உண்மைக்கான அடிப்படையைத் தொட்டு நிற்பதாக அந்நாளைய மக்களின் மனங்களில் எழுந்து, வளர்ந்த அனுமானம்,

அதனை மக்கள் மத்தியில் பரவலாக்குவது மனிதத்துக்கு நல்லது என உருவான ஒரு பிறர் நன்மை கருதி எழுந்த எண்ணம், படிப்படியாக ஆழ்ந்த ஆர்வமும் அவசரமும் அணுகுமுறைகளும் இலக்கணங்களாக அமைந்து வேதங்களாகி, அவற்றினடிப்படையில் ஏற்படத் துவங்கிய கருத்து வேறுபாடுகள்,  அவற்றின் விளைவாக தனித்துவங்களின் முக்கியத்துவம் கருதி தனிவழிகளுக்கு மதங்களென்ற பொது வழி கண்டு, தத்தமது நம்பிக்கை வழிகளுக்கு என வழங்கப்பட்ட தனித்துவ நாமங்கள் இவ்வாறாகவே மதங்களுக்கு அத்திவாரங்கள் இடப்பட்டன எனலாம்.

மிகவும் துரதிர்ஷ்டவிதமாக நல்வழிக்காக அமைந்த மதங்கள் தீய அணுகுமுறைகளுக்குள் இறங்கின என்பதை விடவும் திட்டமிட்டு சதி செய்யும் கள்ளமனக் கொள்ளைக்காரர்கள் அந்த வழிக்குள் வலிந்து தள்ளியமையே அதற்கு அடிப்படைக் காரணம் என்பதே உண்மையாக இருக்க வேண்டும். குழந்தைக்கு உணவூட்டிவிட தாய் தான் சொல்லும் கதைகளுக்கு உண்மையென வடிவம் கொடுத்து நல்வழிப்படுத்த முனைய அக்கதைகளை  வளர்ந்த பின்னும் நம்ப வைத்து ஏய்த்த அயலவன்  கதைதானிது.

நோக்கம் பிறழ்ந்து, சுயநலம் வளர்ந்து, அதுவே கட்டெறும்பாகிப் போன கழுதையாக ஆகிப்போனதன் விளைவாகி, இப்போது ஒருமையில் எழுந்த நம்பிக்கையானது ஒரே மதமாக இல்லாது மதங்கள் என்று பன்மை வடிவில் இறைவனை அறிதல் அல்லது உணர்தல் என்று முயன்று தவறானவர்களால் இப்படிப் பகைவளர்க்கும் கருவியாகத் தரமிறங்கிப் போயிருக்கின்றது.

மதவாத, சயநல வெறியர்கள் தாங்களே சரியென்றும் மெய்யென்றும் தம்மைத்தாமே நிலைநிறுத்துவதில் ஈடுபட்டதனால்தான் பொய்யான  நம்பிக்கையை  வைத்துப் பயமூட்டி மனம் வெல்லும் சிந்தனைக் கொலைக்கான பிரச்சாரங்களில் அவை ஈடுபடத் தொடங்கின எனலாம்.

எந்த மதமுமே முழுக்க முழுக்க அன்பை மட்டுமே வைத்து வளர்ந்ததாக வரலாற்றில் ஒரு „கொமா“ கூடக் கிடையாது. மாறாக, படுமோசமான படுகொலைகளையும் சித்திரவதைகளையும் கற்பழிப்புக்களையும் கொள்ளைகளையும் சுதந்திர சிந்தனைத் தடைகளையும் இரத்த வெறித்தனங்களையும் போர்களையும் அழிப்புக்களையும் அங்கீகரித்த மூலதனமாக வைத்தே அனைத்து மதங்களுமே வளர்ந்து வந்திருக்கின்றன.

அதனால்தான் இத்தனை மதங்களும் இன்றைக்கும் உதட்டளவில் ஒற்றுமையும் உள்ளத்தளவில் பகைமையுமாக இருந்து கொண்டே வருகின்றன. ஆங்காங்கே இந்த சன்னியாசிகள் அல்லது துறவிகள் அல்லது போதகர்கள் தமக்கு எதிரான மதத் தலைவர்களுடனே கட்டிக் குலாவி, ஒன்றாயமர்ந்து காட்சி கொடுப்பதுடன் சரி, மறந்தும் தங்களவர் மற்றவர் பக்கம் தாவிவிட மனமொப்புவதே கிடையாது.

தெரிந்தோ தெரியாமலோ இவர்களே தாங்கள் நம்புவதாகச் சொல்லும் கடவுளையே கூட பதவி இறங்கியவராகவே காட்டுவதுதான் பெரிய வேடிக்கை.

ஆண்டவனை இவர்கள் ஆள்பவன் என்று எங்காவது அழைப்பதாகவே தெரியவில்லை. அதாவது இவர்களைப் பொருத்த மட்டில் கடவுள் முன்பு ஆண்டவர் இப்போது அவர் „ரிட்டயர்ட்“ ஆகிவிட்டார். ஆகவேதான் அவர் இப்போது வெறும் ஆண்டவராகவும் ஆள்பவராக இல்லாதவராகவுமாக இருக்கிறார்.

அதனால்தான் வேதங்களும் புராணங்களும் ஆணித்தரமான, நடந்த சம்பவங்களாகக் காட்டி வந்த, வருகின்ற அந்நாளைய அதிசூரத்தனங்களும் அதிசயங்கள் பலவும் இப்போது எங்குமே நடைமுறையில் இல்லாமலிருக்கின்றன போலும்.

இருந்தொரு சமயங்களில சில சலசலப்புச் செய்திகள் வருவதும் வந்த வேகத்திலேயே அவை மங்கி மறைந்து போய்விடுவதும் அதனால்தான் போலும்.

ஆனால் ……….

அனைத்தையும் நடத்தும் ஓர் அடிப்படை சக்தியை மறுப்பதை மட்டும் ஏற்கவே முடியாமலிருப்பதுவும் உண்மைதான்.. அதாவது நாம் குறிபபிடும் இறைவன் என்னும் சக்தி பொய்யல்ல. ஆனால் அதற்கு உருவங்களும் கதைகளும் கொடுத்து, நோக்கத்தை துர்ப்பிரயோகம் செய்வதற்கும் அதற்கும் முடிச்சுப் போட்டால் அதனிடையில் மொட்டையும் முழங்காலும்தான் இருக்கும்.

அதாவது அனைத்தையும் இரு வழிகளில் இயக்கும் இயல்பு சும்மா வந்ததல்ல. அதுவே அனைத்துக்குள்ளும் அனைத்துமாக இருந்து இயக்கிக் கொண்டு இருக்கின்றது. அதனை நம்புவதை மடைமை என்பதுதான் மடைமை.

நமது மனித பலவீனங்ளை வைத்து நம்மை மீறிய சக்தியை மதிப்பிடுதல் அசாத்தியம் என்பதற்கு ஓர் நல்ல உதாரணமே இன்றைய உலக சூழ்நிலைகள்.

மனித அறிவும் கல்வியும் விஞ்ஞானமும் இன்றுவரை முழுமை பெறாதிருப்பதே அதற்குக் காரணம். அல்லவா?

சுனாமிகளுக்கும் காலநிலை மாற்ற பாதிப்புக்களுக்கும் நோய்களில் பல புதியவைகளுக்கும் நமது மித மிஞ்சிய அறிவின் இயற்கைக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கே பெரும் பங்கிருப்பதை மறுப்பதற்கு முடியுமா?

இன்றைய உலக வறுமைக்கும் பதற்றங்களுக்கும் யுத்த தீவிரங்களுக்கும் முழு உலகப் பந்தையே அடியோடு தகர்த்துத் தூள்தூளாக்குமளவிற்கு பல்லாயிரக்கணக்கான அணுகுண்டுகளையும் விஷகுண்டுகளையும் வெடிகுண்டுகளையும் பெருக்கி வைத்துக் கொண்டு இறைவனின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது யாரின் குற்றம்? இயற்கையின் குற்றமா அல்லது அதைத் தந்த சக்தியின் குற்றமா?


வாழும் உயிர்களுக்கென படைக்கப்பட்டவைகளைப் பணத்தைப் படைத்துப் பதுக்கி வைத்துக் கொண்டு, அந்தப் பணத்தைக் கொடுத்து இறைவனைக் கப்பம் பெற்று உதவிசெய்யும் ஒரு கோமாளியாக்கிக் கொள்ளையடிக்கும் (ஆ)சாமிகளுக்கும் அவர்களுக்குப் பலியாகும் பக்தி தெரியா மூடருக்கும் யார் பழி?

இதைத்தட்டிக் கேட்பது நாத்திகமா அல்லது ஆத்திகமா அல்லது……?

ஆகவே நாம்தான் சரியாக சிந்தித்துச் சரியாக உண்மையைத் தேட முயல வேண்டும். சரி எதுவெனத் தேடுவதை விட்டு எதையும் அது பிழையெனச் சொல்ல வழிதேடுவதால் தேடுதல் வழி பிறழ்வதற்கே வழி சமைக்கும் என்ப எனினும் நாம் கவனிக்க வேண்டும்.
 

ஒன்று நீரில் வாழும் ஒன்று நீருள்மூழ்கின் சாகும்
ஒன்று கல்லின் மேலிருக்கும் ஒன்றுஉள்ளுள் வாழும்
நன்று என்று ஒன்றுகொள்ள ஒன்றுஅன்று என்னும்
என்றும் கண்ணில் தென்படாது எனினும் உள்ளதுண்டு

அளவுஎன்று எதுவுமின்றி எதிலும்எதுவும் இல்லை
அளவுமீறி இயற்கைசீண்டின் அமைதிவருவ தில்லை
களவுசெய்து இயற்கைசக்தி  பயன்படுத்தும் எல்லை
அளவுமீறி அழிவுஆகி  நமைஅழிக்கும் பின்னை

மதத்தின்பின்னே ஓடுமுன்பு மனதைத்தொட்டுப்பாரு!
எதற்கு இந்தப்பேதமென்று  எதற்கும் எண்ணிப்பாரு!
பதமடையா மனங்களுடன்  மதத்தில்தேடும் தெய்வம்
எதற்குமுனக்கு உதவிடாத உண்மைதெரியும்.தேடு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக