ஞாயிறு, 17 மார்ச், 2013

பாசக் கயிறு


                                                    



ண்மையான பாசத்தின் அழுத்தம் உயிரையே கூட அர்ப்பணிக்கத் தூண்டிவிடக்கூடியதாக அமைந்து விடுவது விதியின் கொடூர விளையாட்டுக்களில் ஒன்று.

எனது பள்ளி நண்பனொருவன். சிறந்த பேச்சாளன். இலக்கிய விமர்சகன். அநீதியை இடம் சூழ்நிலை பார்க்காமலே மூர்க்கமாக எதிர்த்து நின்று, அதனால் பலரிடமும் பகையைச் சம்பாதித்த உத்தமன்.

பள்ளி நீங்கிய பின் பலவருடங்களாய்த் தொடர்புகளேதுமே இல்லாதிருந்தபோது  ஒரு நாள் என் அலுவலகத்து வாசலில் அவன் வந்து நிற்பது கண்டு அவனை உள்ளே அழைத்தேன்.

இத்தனை காலமாக சந்திக்காதவன் எதிர்பாராமல் வந்திருந்ததற்கு ஏதோ காரணமிருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். எனது அறைக்குள் அழைத்துச் சென்று அமர்த்தியபின் விசாரித்தேன்.

ஒரு வேகமாக இயங்கும் இயந்திரத்தைப் போல அவன் தான் வந்த நோக்கத்தை என்னிடம் விபரித்தான்.

தனது காதலியின் வீட்டார் கச்சேரிக்குத் தனது காதலியுடன் வந்திருப்பதாகவும் இன்னும் அரை மணிநேரத்தில் அவளுக்கும் இன்னொருவனுக்கும் கச்சேரியில் திருமணம் நடக்கப்போவதாகவும் தான் அவளை மணமுடிக்க வேண்டும் என்றும் என்னால் அவன் சார்பில் கையொப்பம் வைக்க வர இயலுமா என்றும் கேட்டான்.

அதிர்ச்சியாகவிருந்தது. ஏன் அவன் தனது குடும்பத்தினருடன் வரவில்லை என்பதைக் கேட்டேன்.

பழைய குடும்பப் பகைமை காரணமாக இந்தக் கலியாணம் நடக்கக்கூடாது என்று வீட்டில் தடுப்பதாகவும் தனது அண்ணனே வீட்டுக்குப் பொறுப்பானவன் என்பதால் அம்மா அவன் சொல்லைத் தட்ட முடியாமல் தடுமாறுவதாகவும் தெரிந்தது.

பெண் வீட்டார்?

அவர்கள் இவர்கள் வீட்டுக்குப் பாடம் படிப்பிக்கவென்றே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிந்தது. இவன் நேரில் விசாரித்தபோது  அவர்கள் திருமணம் செய்து வைக்க முடியாது என்று மறுத்துரைத்ததாகவும் தெரிந்தது.

குடும்பத்தவர்களின் தனிப்பட்ட விறுப்பு  வெறுப்புக்களுக்கு இளம் உயிர்கள் பகடைக் காய்களாக நகர்த்தி விளையாடப்படும் கொடுமைக்கு அங்கீகாரமா?  சரி  பிழை இந்தப் பெரியவர்களுக்குப் புரியவில்லையா?

எனக்கோ மிகவும் அச்சமாக வேறு இருந்தது.

அவன் வெளிப்படையாகவே அழுதான்.
பிறகு சொன்னான்.

“ அம்மாவைப் பற்றித்தான் எனக்குக் கவலையாக இருக்கின்றது. ஆனால் இன்றைக்கு இது நடக்காவிடில் இனி என்னைக்குமே நடக்காது. நீதானடா எங்களைக் காப்பாற்ற வேண்டும்.”

எங்களை!
தனது வருங்கால மனைவியையும் சேர்த்துக் கொண்ட அவனுக்கு என்மீது இருந்த நம்பிக்கையை உதற முடியவில்லை என்னால்.

அன்று திருமணம் நடக்கப்போகும் விஷயத்தைக் கூட பெண்ணின் தம்பிதான் இவனிடம் சொல்லியிருக்கிறான். அவன் இவர்களுக்கு ஒத்தாம்.

அந்த மாப்பிள்ளை வருமுன் இவன் வந்து நுழைந்தால் அப்பெண்ணைக் காப்பாற்றிவிடலாம். அல்லது...

சிக்கலான நிலைமைதான்.

அவனது சிக்கலான நிலைமை எனக்குப் புரிந்தது. தீவிரமாக யோசித்துவிட்டு  மடமடவென்று காரியத்தில் இறங்கி விட்டேன்.

அந்த நாட்களில் பெற்றோர் முடிவை மீற முடியாத நிலைமைதான் சாதாரணமாகப் பெண்களுக்கு இருந்தது.

இவன் என்னை நம்பி வந்திருந்த காரணம். நான் சரியென்று சொன்னால் கடைசிவரை வாக்கு தவறமாட்டேன் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதனால்தான்.

நல்ல நண்பன். உண்மையாகப் பழகியவன்.

அந்தச் சந்தர்ப்பத்தில் நடப்பதன் விளைவுகளை நான்தான் எல்லா விதத்திலும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

முதலில் தலையைச் சுற்றியது. என்றாலும் மனம் துணிந்தது.

“சரி.. உன்னம்மாவிடம் போய் எப்படிச் சமாளிப்பாய்?”

“நீதான் அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் நீ சொன்னால் மட்டும்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். என் அம்மாவுக்கு உன்னிலே நிறைய அன்புண்டு. உனக்கும் அது தெரியும். நமது உண்மையான அன்பின் மேலே சத்தியமாய் நீ இதைச் செய்துதான் ஆக வேண்டும்.”

எதன் மீது சத்தியமாய்? உண்மையான அன்பின் மீது?
என்னை உண்மையாய் நேசித்தவன். இன்றும் அப்படியேதான் இருக்கிறான். பரவாயில்லையே!

மனதிற்குள் இனந்தெரியாத ஓர் உணர்வு. பாசமா, மகிழ்ச்சியா அல்லது திருப்தியா?

புரியவில்லை அப்போது.

எனது அலுவலகத்துக்கு எதிரேதான் கச்சேரி இருந்தது. அலுவலகத்தில் சொல்லிவிட்டு  அவனுடன் விரைந்தேன். ஓர் ஒதுக்குப்புறமாக நின்று கொண்டு அவதானித்தோம்.

கச்சேரிக்குள் பெண்ணின் குடும்பத்தினர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி இரண்டு மூன்று பேர் ஆஜானுபாகுவாக காவல் காத்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.

வருமுன் காத்திடும் மதியூகம்.
நமது மாப்பிள்ளை பெரிய சூரனல்லன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் நிலைமையின் அழுத்தத்தைப் பயன்படுத்தி எதையாவது இவன் ஏற்பாடு செய்து விட்டால்? என்ற அவர்களின் அச்சத்திற்கும் நியாயமிருந்தது.

சில வேளை அடிபிடி நடக்கும் அளவுக்கு எதுவும் நடந்தாலும் நடக்கலாமென்ற முன்னெச்சரிக்கை.

எனது நண்பனால் காரியம் தடைப்பட்டுவிடலாமோ என்ற அவர்களின் பயத்தில் எனக்கு இவனும் ஒரு வீரனாகவே தெரிந்தான்.

எனக்கு அங்கே பணியாற்றிய போலிஸ் உத்தியோகத்தர்களை நன்கு தெரியும்.

பத்து நிமிட நேரம் ஒருவருடன் விபரமாக எல்லாவற்றையும் சொல்லிப் பேசினேன்.

என் நண்பன்தான் உரிய மாப்பிள்ளை என்றும் பெண்ணிடம் நேரிலே கேட்டால் அவளே சொல்வாள் என்றும் விளக்கிக் கூறினேன்.

வழமைபோல ஒரு சின்ன மாமூல். செக்யூரிட்டி சார்ஜ் என்றுதான் வைத்துக் கொள்வோமே!

ஐயா கைக்குள் வந்துவிட்டார்.

குறிப்பிட்ட நேரத்துக்குச் சில நிமிடங்கள் முந்தி  மணப்பெண்ணின் தம்பிக்கு என் நண்பனுடன் வந்திருந்தவன் கண்ணால் சமிக்ஞை காட்ட   அவன் தனது அக்காவின் அருகில் சென்று நின்றான்.

காதலின் உத்வேகம் கடகடவென்று இயங்கத் துவங்கிவிட்டது.

மணப்பெண் பதிவாளர் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

யாரோ அவளிடம் ஏதோ கேட்க  அவள் ஏதோ பதில் சொன்னாள். அதிசயமாக யாருமே அவளைப் பின் தொடரவில்லை. தான்  பாத்ரூமுக்கு அவசரமாகப்  போவதாக சொல்லியிருக்க வேண்டும் போலும்.

என் நண்பனுடன் இன்னொரு பக்கமாக நான் பதிவாளர் அறைக்குள் நுழைந்தேன். அறைக்குள் இன்னொரு கதவு மூலமாக மணப்பெண் வந்தமர்ந்திருந்தாள்.

காதலுக்குத் தனி தைரியம் வரும் என்பது தெரிந்தது அப்பெண்ணின் துணிச்சலில்.

மடமடவென்று பதிவாளரிடம் விஷயத்தை விளக்கினேன். அதற்குள் வெளியிலே ஏதோ பரபரப்பாகத் தெரிந்தது.

மெதுவாக கதவினிடையால் எட்டிப் பார்த்தேன்.

நமது போலிஸ்காரர் பெண்ணின் முழுக் குடும்பத்தையும் இந்தப் பக்கமே வரவிடாமல் ஏதோ காரணஞ் சொல்லி  விரட்டிக் கொண்டிருந்தார்.

ஆஜானுபாகு ஐயாமார்கள் கைகளைப் பிசைந்து கொண்டு தடுமாறிக் கொண்டு நிற்பதும் தெரிந்தது.

சில நிமிடங்களுக்குள் ஒரு புதிய வாழ்க்கையின் அத்தியாயத்தை சின்னஞ்சிறு குழுவினராக நாங்கள் அனைவரும் எழுதி முடித்தோம்

கச்சேரிக்குள் வேலைபார்க்கும் எனக்குத் தெரிந்த ஒரு சிங்கள நண்பரும் நானும் கையெழுத்திட  திருமணப் பதிவு இனிதே நடந்தேறியது.

எனது நண்பனதும் அவனது புதுத்துணையினதும் நன்றியை அவர்கள் ஒரு நீண்ட புன்னகையால் தெரிவித்துக் கொண்டார்கள்.

அதற்குப் பிறகுதான் எனக்கு பயம் வந்தது.

இனி எப்படி வெளியே போவது?  சுற்றி வளைத்து வெளுவெளுவென்று வெளுத்தாலும் வெளுப்பார்களே! உடம்பு தாங்குமா?  உயிரேதான் மிஞ்சுமா?

கையெழுத்து வைத்த ஊழியர் உதவிக்கு முன்வந்தார். சற்று நேரம் வெளியே போனவர் திரும்பி வந்து “எல்லாம் ஓகே” என்றார்.

வெளியே எட்டிப்பார்த்தேன். நம்மவன் எதிர்ப்படை முற்றாகவே இல்லாமல் மற்றவர்களின் நடமாட்டத்துடன் ஏகுவழி சுபம் சொல்லிக் கொண்டிருந்தது.

பக்கத்து வழியால் அழைத்துச் சென்றார் அந்தச் சிங்கள நண்பர். வெளியில் ஒரு வாடகை வாகனம் காத்துக் கொண்டிருந்தது.

எங்கே “ஹனிமூன்”  போகப் போகிறாய்?

நண்பன் திகைத்தான்.
“தெரியவில்லையே, மச்சான்! எதையுமே ஏற்பாடு பண்ணவில்லையே மச்சான்?”

நான் பலமாகவே சிரித்துவிட்டேன்.
“அட மடையா! கல்யாணம் கட்டு முன்பே அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லையா? ஹனிமூனின் அவசியம் புரியாத அசட்டு மாப்பிள்ளையடா நீ. வெட்கம் வெட்கம்.”
நான் பலமாக சிரிக்க அவன் அசடு வழிய நின்றான். பிறகு சொன்னான்.

“இன்றைக்கு இவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்பட்டு இருந்ததே முந்தா நாள்தானே எனக்குத் தெரியும்? அந்த அதிர்ச்சியில் எதுதான் நினைவுக்கு வரும்?”

வசமாக மாட்டிக் கொண்டோம். இனி நமக்கு தற்காலிக மீட்புக்குக்கூட வழியே இல்லை.

“டக்”கென்று ஓடி அருகிலிருந்த பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து எனக்குத் தெரிந்த ஒரு உல்லாசப் பயணிகள் உணவகத்துக்குப் தொலை பேசி எடுத்தேன். என் அதிர்ஷ்டம் அங்கே அறையொன்று காலியாக  இருந்தது.

நல்ல பகலுணவுக்கும் அவர்களின் தேனிலவுக்கும் பதிவு செய்த பின் வாகன ஓட்டுனரிடம் சொல்லியனுப்பினேன். கையெழுத்து வைத்தவரும் நானும் அவனது கூட வந்திருந்த நண்பர்களுமாக இன்னொரு வாகனத்தில் தொடர்ந்தோம். பகலுணவில் பங்குபற்றினோம்.

அந்த எளிமையான இனிமையான திருமணம் என் நண்பனுக்கு திருப்தியாக அமைந்துவிட்டது.

டெலிபோன் பண்ணிச் சொல்லிவிட்டு  அன்று வேலைக்குப் போவதைத் தவிர்த்துக் கொண்டேன்.
முன்னெச்சரிக்கை தற்காப்பு முயற்சியில் முதன்மையானது என்பது தெரியுந்தானே!

சில நாட்கள் அஞ்ஞாத வாசம் தேனிலவாகக் கழிந்ததன் பின் அவன் வீடு திரும்பு முன் நான் அவனது தாயாரைச் சந்தித்து எல்லாவற்றையும் எடுத்துரைத்து  சமாதானப்படுத்தி வைத்தேன்.

முதல் இரண்டு வாரங்;கள் “வெட்டுவோம்; கொத்துவோம்” என்று கொதித்த பெண் வீட்டார்  பிறகு அடங்கிப் போய் விட்டார்கள்.

அதற்கிடையில் வந்த இடைஞ்சல்கள் பெரிதாக இருக்கவில்லை. எதிர்பார்த்ததற்கு மாறாக பெண் வீட்டாரே வழிக்கு வந்ததாகவும் இரு குடும்பங்களும் சமாதானமாகி விட்டனவென்றும் அடிக்கடி என்னை வந்து வந்து சந்தித்த என் நண்பன் தெரிவித்தான்.

ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்ட திருப்தி எனக்கு. அந்தக் கலியாணத்துக்கு எனது அரைமாதச் சம்பளம்தான் நட்டம். அதை அவனிடம் அடிக்கடி சொல்லிச் சொல்லிக் கேலி செய்வதில் எங்களுக்குள் பெரிய சந்தோஷம்.

உண்மையான அன்புக்காக ஏற்படும் நஷ்டமிருக்கிறத! அதுதான் உண்மையிலேயே ஆழ்ந்த மகிழ்ச்சிக்கு அத்திவாரம். அதைத் தெரிந்து கொள்ள, நீங்கள் இப்படி அனுபவப்பட்டால்தான் முடியும். வேறு வழியே இல்லை.

„டேய்! எனது அரைமாதச் சம்பளத்தைக் கொள்ளையடித்துக் கல்யாணம் செய்த கள்வா! வாடா வா! எப்படி இருக்கிறாய்?“ என்று நான் அவனை வரவேற்பேன்.

„உன் முழுமாதச் சம்பளத்தை அடிக்க முடியாமல் போச்சே என்று முழுக் கவலையில் மூழ்கியிருக்கிறேன். வெகுவிரைவில் உன் இரண்டு மாதச் சம்பளத்தை கபளீகரம் பண்ணுவது பற்றிய திட்டத்தைத்தான் வகுத்துக் கொண்டிருக்கிறேன். பொறுத்திரு!“ என்று அவன் பதிலடி அடிப்பான்;.

இரு குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்களாகி விட்டார்கள். அதற்கிடையில்தான் இனிய இலங்கையில் இனக் கலவரம் வெடித்தது. அந்தக் குடும்பத்தின் தொடர்பும் அறுந்து விட்டது.

நான் ஜெர்மனிக்கு வந்தபின்  ஒரு நாள் ஒரு செய்தி கிடைத்தது. அவனது தாய் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்டு  வீட்டுக்குப் போனவன் அம்மா என்று கதறியவாறே தனது உயிரை விட்டு விட்டானாம்.

இப்போது இரு குழந்தைகளுடன் அப்பெண்...தெய்வமே!

அந்தத் தாயின் அன்பை இழந்துவிடத் திராணியில்லாமல் என்னுதவியை நாடியவன் தன் தாய் இறந்ததைத் தாங்கவொண்ணாமல் அந்த அதிர்ச்சியிலேயே மாண்டு போன துயரம் அடிக்கடி இன்னும் நினைவில் வரும்போது சொன்னதைக் காப்பவன் என்று அவன் நம்பித் தந்திருந்த இதயபூர்வமான நற்சான்றிதழுக்காக என்னிதயம் அவனுக்கு நன்றி சொன்னாலும் வாழ வேண்டியவன் வாழ்வு மாயமான அதிர்ச்சி இன்றும்கூட குறைய மறுத்தபடி என்னை வதைத்துக் கொண்டுதானிருக்கின்றது.    

அன்பை ஆழமாக மனதில் வளர்த்ததால்தான் என் நண்பன் இந்த நிலைக்கு ஆளானானா?
நினைக்கவே கஷ்டமாயிருக்கிறதே!

தாயன்பின் தாக்கத்தினால் தாரத்தையே தவிக்க விட்டுவிட்டானே பாவி என்று திட்டுவதா?
புரியவில்லை எனக்கு. அவனது பாசமே பாசக் கயிறாகிவிட்டதை இன்று நினைத்தாலும் என் நெஞ்சை அடைக்கின்றது..    

இந்தப் பூமாதேவியின் மார்பில் இவனைப் போன்ற எத்தனை உயிர்கள் இன்னும் இருக்கின்றனவோ?
             
            தன்னையே ஈந்துதான் நம்மை ஈந்தாள்- அந்த
           அன்னையே சென்ற பின் வாழ்வ தாமோ?
           என்றவள் பின்சென்ற கதையைச் சொன்னேன்-இன்றும்
           என்னுள்ளம் பிழிந்திடும் உண்மை சொன்னேன்.

           அன்னையின் தந்தையின் எண்ணமற்று - வாழும்
           பன்னூறு உயிர்களுக் கொன்று சொல்வேன்
           நும்வாழ்வு நுமக்கென்று அவர்களின்றி - என்றும்
           நுமக்கில்லை என்பதை மறந்திடாதீர்!  

           நீர் ஊற்றா மரம் வாடி  மடிந்து போகும் - அன்னை
           பாலூட்டா விடிலுயிர் என்னவாகும்?
           பார்வீடு இல்லாமல் விட்டுப் போகும் - உண்மைப்
           பாசமோ உயிரோடே கலந்து வாழும்.
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக