திங்கள், 17 செப்டம்பர், 2018

உணர மறுப்பின் உதிர்வது திண்ணம்

உணர மறுப்பின் உதிர்வது திண்ணம்


நடக்கும் எதற்கும் எதிரென் றொன்று
நடப்பதே இயற்கையின் மார்க்கம் - அதுவே
இணைந்து நின்று இயங்கிடும்போது
பிணைந்து பலனினைக் காட்டும்.

தென்றலும் புயலும் ஒன்றிலிருந்தே
தென்படும் இருவகை மாற்றம் - அதுபோல்
குளுமையின் இன்பம் கடுங்குளிராயின்
குருதியின் உறுதியை; மாற்றும்

வார்த்தைகளின்றி உலகி னியக்கம்
யாவரி னாலே கூடும்? - எதிலும்
வார்த்தையின் சக்தி ஆக்கிடும் மாற்றம்
ஆக்கலும் அழித்தலும் கூடும்.

மனித முன்னேற்றம் இயற்கையை மீறும்
மமதையில் செய்கிற மாற்றம் - உலகின்
அழிவுக்கு மட்டும் உதவிடும் என்றே
அழிவுகள் வரும்விதம் காட்டும்.

செய்பவை எல்லாம் சரிவழி என்றால்
செய்பவவை வெற்றியில் சாரும் - திமிரில்
அறிவினை வைத்து இயற்கையை மிதித்தால்
அழிவதே இறுதியில் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக